Share

Oct 25, 2008

கவிஞர் கே டி சந்தானம்

'என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் ' பாட்டில் 'அங்கே என்னம்மா சத்தம் ' என கேட்டு கடைசியில் தானும் ' ஆஹா என்ன பொருத்தம்' எனபரவசமாகும் பெரியவரை யாரோ துணை நடிகர் என்று தான் எல்லோரும் நினைப்பர். ஆனால் அவர் ஒரு கவிஞர் . கவிஞர் கே .டி . சந்தானம் .
'காவேரி ஓரம் கவி சொன்ன பாடல் கதை சொல்லி நான் பாடவா ,
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா '
என்ற சுசிலா பாடிய ' ஆடிபெருக்கு ' படப்பாடலை ஏ .எம் .ராஜா இசைக்கு எழுதியவர் .
'கண்காட்சி 'என்ற ஏ பி நாகராஜன் படத்தில் குன்னக்குடிவைத்யநாதன் இசையில் கே .டி .சந்தானம் எழுதிய பாடல் தொகையறா ஏபிநாகராஜனே தன் மென்மையான குரலில் சொல்வார் .
'வெண்ணிலவை குடை பிடித்து , வீசு தென்றல் தேர் ஏறி
மென் குயில் தான் இசை முழங்க ,மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி , கனகமணி பொற்பாவை
அன்னநடை ரதியுடனே , அழகு மதன் வில்லேந்தி
தன்முல்லை , மான் , தனிநீலம் , அசோகம் எனும்
வண்ண மலர் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே !'
ஏ பி நாகராஜன் முடித்ததும் சந்தபாடல் ஆரம்பிக்கும் .
"அனங்கன் அங்கஜ்ஜன் , அன்பன் , வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா , மன்னுயிர்க்கின்பம் வழங்கும் உன் கதை சொல்லவா ?
கதம்பம் , செண்பகம் தங்கும்ம் கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயற்கண்ணியே , அன்பெளுந்து அங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே !"
கவிஞர் கே டி சந்தானம் பாசமலர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் . தர்ம சங்கடம் என்ற உணர்வை அழகாக பாசமலரில் வெளிப்படுத்துவார் .
இவரை கதாநாயகியின் தந்தையாக இரண்டு காட்சிக்கு நடிக்க தேர்ந்தெடுத்திருந்தார்கள் . முருகாலயா ஸ்டூடியோ வில் ஷூட்டிங் .நான் அந்த படத்தின் உதவி இயக்குனர்.
அவருக்கு மேக்கப் போடும்போது நான் அவரிடம் சென்று அவர் பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தேன் .
அந்த நேரத்தில் மற்றொரு உதவி இயக்குனர் வந்து ' உங்கள் பேர் என்ன சார் ?' என பேடை வைத்துக்கொண்டு எழுத நின்றான் . அவர் பதில் சொல்லுமுன் நான் ' கவிஞர் கே டி சந்தானம் ' என்றவுடன் அவன் மண் மாதிரி எழுதிக்கொண்டு திரும்பி போனான் . தொடர்ந்து அவர் சொன்னார் . ' இந்த தலைமுறைக்கு என்னை யாரென்று தெரியாது . நீ தெரிந்து வைத்து என் பாடல்கள் பற்றி பேசுவது ஆச்சரியாமாய் இருக்கிறது . இதே மாதிரி பல வருடங்களுக்கு முன் நீ பேசுவது போலவே என் பாடல்கள் பற்றி 'அம்பிகாபதி ' படத்தின் போது ஒரு பையன் என்னிடம் பேசினான் . கண்ணதாசனின் அண்ணன் மகன் . ' அப்புச்சி பாட்டில் கூட உங்கள் சந்தம் மாதிரி வருவதில்லையே ' - ஆச்சரியபட்டான் . அந்த பையன் பஞ்சு அருணாசலம் மாதிரி நீயும் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவாய் ' -
என்னை ஆசிர்வதித்து இப்படி சொன்னார் .
அவரிடம் பேசிய போது மேலும் பல விஷயங்கள் பற்றி சொன்னார் . 'அந்த காலத்தில் நாடக கம்பெனியில் சேர சிவாஜி கணேசன் , காக்கா ராதாகிருஷ்ணன் இருவரையும் பாலகர்களாக அவர்கள் இருவரின் தாயார்கள் கூட்டி வந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது' என்றார் .
பி டி சம்பந்தம் தான் எல்லோருக்குமே ஆசிரியர் . அவர் ரொம்ப கண்டிப்பானவர் . என் .எஸ் .கிருஷ்ணனுக்கே அவர் தான் ஆசிரியர் . என்ற இந்த செய்தியை அவர் தான் என்னிடம் முதலில் சொன்னார் .
எம்ஜியார் படம் ரகசிய போலிஸ் 115 ல் நடித்த பின் அந்த காலத்தில் இவர் மார்கெட் காய்கறி வாங்க போனால் இவரை பின்தொடர்ந்து சிறு பிள்ளைகள் கூட்டமாக " என்ன பொருத்தம் , ஆஹா என்ன பொருத்தம் " என்று பாடிகொண்டே வருவார்களாம்!

4 comments:

 1. Thank you for posting on K.D. Santhanam! I didn't know that he was a major writer. I do know one song written by him "Pattu venuma" and sung by TR Mahalingam, but that's it.

  If I remember right, he was also a pre-freedom congressman, who went to jail.. Is this correct? I am never sure of this, sometimes I wonder whether I am confusing him with a different Santhanam...

  ReplyDelete
 2. Sir,

  In the following link, K.D.Santhanam is described as the disciplinarian 'Vaathiyar' of Sivaji Ganesan et al.

  http://www.sangam.org/taraki/articles/2005/12-19_Lesson_in_Gratitude_from_Sivaji_Ganesan.php?uid=1382&print=sangam

  Regards,

  N.Ramakrishnan

  ReplyDelete
 3. நல்ல செய்தியும் பதிவும்.

  நன்றி

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.