தெலுங்கு நடிகர் காந்தா ராவ் இறந்துவிட்டாராம் .தமிழக மக்களுக்கு டப்பிங் படம் மூலம் அறிமுகமானவர் .
இவருடைய படங்களின் ட்ரைலர் சுவாரசியமாயிருக்கும் .
இவருக்கு வில்லன் ராஜநளா என்ற தெலுங்கு நடிகருக்கு தமிழ் டப்பிங் கே ஆர் ராம்சிங் தான் குரல் கொடுப்பார் .கே ஆர் ராம்சிங் நாடோடி மன்னன் , ஆசைமுகம்,துணிவே துணை படங்களில் நடித்திருக்கிறார் .
இப்போது மாய மோதிரம் ட்ரைலர் !
கே ஆர் ராம்சிங் குரலில் ராஜ நளா " வெண்ணிலா காற்று வீசும் இந்த நேரத்திலே .. ஆ ..( ஏப்பம் விடுவது போல இந்த ஆ ..) விவேகம் இல்லாமல் பேசி விட்டீர்கள் மன்னா !.. ஆ .. "
அரசர் : மந்திரியாரே ! நாம் இப்போது என்ன செய்யவேண்டும் ?
ராஜ நளா :" ஆ ..(தாடியை நீவி விட்டு ) நாம் உடனே வானவீதியிலே பறந்து , மாயாஜால வித்தைகளை கற்று வந்த மாமுனியை அழைத்து வரவேண்டும் ."
டிங் ..டிங் ..டிங்
மாயாஜாலங்கள் காண வாருங்கள் விட்டலாச்சாரியாவின் " மாய மோதிரம் "
..
காந்தாராவ் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அரச அவையில் கண்ணை உருட்டி ,புருவத்தை தூக்கி ஒரு பார்வை அரசரை பார்த்து " மன்னா ! நீ இந்நாட்டின் அரசன் ! நான் இந்நாட்டின் குடிமகன் !"
டிங் ..டிங் ..டிங்
கனல் தெறிக்கும் வீர வசனங்கள் !
..
காந்தாராவ் அழுதுகொண்டே தன் தாயை பார்த்து " அம்மா ! நீங்கள் என் தாய் ! நான் உங்கள் மகன் !"
டிங் ..டிங் ..டிங்
நெஞ்சை உருக்கும் பாச வசனங்கள் ! பார்க்க தவறாதீர்கள் விட்டலாச்சாரியாவின் 'மாய மோதிரம் '
..
ஜோதிலக்ஷ்மி தொடையை காட்டிகாட்டி ஆட்டி ஆட்டி ஆடும் பாட்டு " இத்தனை நாளாச்சா ? பக்கத்தில் வந்தாச்சா ?" எல் ஆர் ஈஸ்வரி குரலில்.
டிங் ..டிங் ..டிங்
கண்ணை கவரும் நடனங்கள் !
...
காந்தாராவ் நடிகை பாரதியை பார்த்து பாடும் பாடல் ( ஜாப்பான் !லவ் இன் டோக்கியோ! மெட்டு )
' பெண்ணே ! பருவ வயது பெண்ணே !
கண்மலர் தோட்டம் !கண்ணுக்குள் ஆட்டம் !'
டிங் ..டிங் ..டிங்
குதூகலம் ஊட்டும் காதல் காட்சிகள் நிறைந்த படம் 'மாய மோதிரம் '
..
சிரிப்பு நடிகர் ரேலங்கி கிணற்றுக்குள் . மேலே துணை சிரிப்பு நடிகர் .
' ஐயய்யோ நான் கிணத்துக்குள்ள விழுந்துட்டேன் . காப்பாத்துங்க .."
மேலே உள்ள சிரிப்பு நடிகர் " நீ பேயி ! பயமா இருக்கு "
" இல்ல நான் மனுஷன் !"
" இல்லே நீ பேயி !"
ரேலங்கி அழுதுகொண்டே " நான் மனுஷன் .. பயமா இருக்கு ..காப்பாத்துங்க "
" இல்லே நீ பிசாசு ..எனக்கு பயமா இருக்கு "
" ஐயய்யோ நான் மனுஷன்"
"ஐயய்யோ நீ பிசாசு "
டிங் ..டிங் ..டிங்
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் !
விரைவில் இந்த திரையரங்கில் விட்டலாச்சாரியாவின் " மாய மோதிரம் "!
..
காந்தாராவ் கத்தியுடன் ரொம்ப கோபமாக வில்லனிடம் இன்னொரு கத்தியை தூக்கி போட்டு
" இன்று நீயா ? நானா ? பார்த்து விடலாம் . சதிகாரா ! வா என் வாளுக்கு பதில் சொல்.தேச துரோகி !நாட்டை கொள்ளையடித்த சண்டாளா ! வா "
டிங் ..டிங் ..டிங்
பயங்கர கத்தி சண்டைகள் நிறைந்த படம் விட்டலாச்சாரியாவின் ' மாய மோதிரம் '
ட்ரைலர் முடிகிறது
..................................................
என் டி ராமாராவ் ஜனவசியம் ,ராஜ வசியம் மிக்க நடிகர்.தேவுடுகாரு !
நம்ம அமலாவோட மாப்பிள்ளை நாகர்ஜுன் அப்பா நாகேஷ்வர் ராவ் பெரிய ஜனவசியம் இல்லாவிட்டாலும் நல்ல சொத்து ,மக்களிடம் நல்ல நடிகர் என்ற அந்தஸ்து பெற்றவர் .
ஆனால்
பாவம் காந்தாராவ் .
சொந்தபடங்கள் எடுத்து இருப்பதை தொலைத்த துரதிர்ஷ்டசாலி .
இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த கவலையில் வாழ்ந்தவர் .
சினிமாவில் இருந்த என் நண்பன் ஒருவன்(எப்படியாவது கவிஞர் , இயக்குனர் ,நடிகர் ஆகிவிட மிகவும் முயன்று தோற்று விட்டவன் ) சினிமாவில் கைரேகை பார்ப்பதாக பாவலா செய்து கையை நீட்டுபவர் வாயிலிருந்து வருவதையே ஜோசியமாக சொல்லி விடுவான் . சினிமாக்காரர்களின் ஜோதிட மோகம் இவனுக்கு ஒரு விளையாட்டு . பல பேரை நிஜமாக அசத்தியிருக்கிறான் . இவனிடம் இருபது ஆண்டுகளுக்கு முன் காந்தாராவ் சிக்கிய போது அவர் இவனிடம் தன் கதையைதெலுங்கு கலந்த தமிழில் சொல்லி ,இழந்த சொத்துகளை சொல்லி அழுது புலம்பினாராம் .இவர் துணைவியாரும் அழுது ' இழந்ததை மீண்டும் பெற வழியேதும் உண்டா ? கை ரேகை என்ன சொல்லுது ' என ஏக்கத்துடன் கேட்டாராம் .


பயங்கர மொக்கைகள் நிறைந்த ப்ளாக்
”R P ராஜநாயஹம்” படிக்க வாருங்கள்
டிங் டிங் டிங்
சும்மா லுலுலாயிங்கோவ்!