Share

Aug 29, 2008

ஹாலிவுட் சுவாரசியங்கள்


ரொனால்ட் ரீகன் ஒன்றும் ஹாலிவுட்டில் சாதித்தவரல்ல. சில சாதாரணப் படங்களில் கதா நாயகன். பல படங்களில் துணைப் பாத்திரங்கள் என்றாலும் ஒரு நடிகனின் அதிக பட்ச சாதனை அவருடையதுதான். உலகின் முதல் மனிதன் என்ற அந்தஸ்துடைய அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைய முடிந்த ஒரே நடிகன் ரொனால்ட் ரீகன் மட்டுமே. ஹாலிவுட் படங்களில் நடித்ததை விட T.V. சீரியல்களில் தான் ரீகன் மிக அதிகமாக நடித்தவர் என்பதும் முக்கியமான விஷயம். அவருடைய முதல் மனைவி ஜேன்வைமன், இரண்டாம் மனைவி நான்ஸி இருவருமே அவருக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்தவர்கள் தான். ஜேன்வைமன் வெறுத்துப் போய் ரீகனை விவாகரத்து செய்தபோது குறிப்பிட்ட காரணம் ‘ ரீகனின் தீவிர அரசியல் ஈடுபாடு ‘. ஆனால் இந்த காரணமே அவரை அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தியது. இன்னொரு தனித்துவத்தையும் ரொனால்டு ரீகனுக்கு ஏற்படுத்தி விட்டது. விவாகரத்து செய்யப்பட்ட ஒரே ஜனாதிபதி அமெரிக்க சரித்திரத்தில் ரொனால்ட் ரீகன் மட்டுமே.



க்யூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும் ‘ டென் கமாண்ட்மெண்ட்ஸ் ‘ படத்திற்கும் ஒரு சம்பந்தம் உண்டு. அது வதந்தியா இல்லையா என்று தெரியவில்லை. டென் கமாண்ட்மெண்ட்ஸ் படத்தில் ஒரு சிப்பாயாக காஸ்ட்ரோ நடித்தார். ஒரு எக்ஸ்ட்ராவாக காஸ்ட்ரோ நடித்தது உண்மை தான் என்றால் ஒரு எக்ஸ்ட்ரா நடிகர் ஒரு நாட்டுக்கே அதிபரானார் என்பது சரித்திர ஆச்சரியம். ஆனால் ஷெர்லி மக்ளீன் ( ‘ அபார்ட்மெண்ட்’ படத்தில் ஜாக் லெமன் உடன் நடித்தவர். ‘ வாரன் பீட்டி ‘ யின் உடன் பிறந்த சகோதரி ) எழுதிய ‘ மை லக்கி ஸ்டார் ‘ என்ற நூலில் காஸ்ட்ரோவிடம் ‘அந்தப் படத்தில் நீங்கள் extra வாக நடித்தது உண்மைதானா?‘ என்று தான் கேட்டபோது காஸ்ட்ரோ தெளிவில்லாத குழப்பமான பதிலைச் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நேரடியான கேள்வி. ‘ஆம்’ , ‘இல்லை’ என்று காஸ்ட்ரோ சொல்லாமல் ‘புரிந்து கொள்ள முடியாத பதிலை’ ஏன் சொல்ல வேண்டும். IT CAN’T ALL BE SMOKE WITHOUT FIRE.



இரண்டாம் உலகப்போரைப் பற்றிய ‘ த லாங்கஸ்ட் டே’ படம் தயாரானபோது போரில் ஜெனரல் ஐசனோவராக பங்கேற்றிருந்தவர் அமெரிக்க அதிபர் ஐசனோவராகியிருந்தார். அமெரிக்க அதிபராக அவருக்கு எட்டாவது ஆண்டு.. அப்போது ( 1953 ஜனவரி முதல் 1962 ஜனவரி வரை ஐசனோவர் அமெரிக்க அதிபர் ) ஜெனரல் ஐசனோவராக அதிபர் ஐசனோவரையே நடிக்க வைக்கலாமா என்று ஒரு யோசனை படக்குழுவுக்குத் தோன்றியது. ‘ நானே நானாக நடிக்கிறேனே ‘ என்று ரொம்ப ஆர்வத்துடன் அமெரிக்க அதிபர் ஐசனோவரே ஹாலிவுட் படத்தில் நடிக்க ‘சான்ஸ்’ கேட்ட அதிசயம் நடந்திருக்கிறது. பலத்த ஆலோசனைக்குப் பிறகு ‘ஜனாதிபதி ஐசனோவரை இரண்டாம் உலகப்போர் காலத்து ஜெனரல் ஐசனோவராக மேக்கப் மூலமாக மாற்றுவது இயலாத காரியம் ‘ என்று முடிவு எடுக்கப்பட்டு ஐசனோவராக நடிக்கிற ‘சான்ஸ்’ நிராகரிக்கப்பட்டுவிட்டது. சினிமாவில் நடிக்க ஒரு யோகம் வேண்டுமே ! POOR EISEN HOWER ! 1962 ம் ஆண்டு வெளியான ‘ த லாங்கஸ்ட் டே’ படத்தில் ஹென்ரி க்ரேஸ் என்ற ஆர்ட் டைரக்டர் ஜெனரல் ஐசனோவராக நடித்திருந்தார். ஹென்ரி க்ரேஸ் நடிகரல்ல என்றாலும் ஐசனோவரைப் போலவே இருந்தார் என்பதால் அந்தப் பாத்திரம் அவருக்கு கிடைத்தது.



‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தில் இதற்கு எதிர்மறையான விசித்திரம் நிகழ்ந்தது. இந்தப் படத்தில் நடிகர் டாம் ஹேங்க்ஸ் உடன் ஜான் கென்னடி, லிண்டன் பி.ஜான்சன், நிக்சன் ஆகிய ஜனாதிபதிகள் நடித்த காட்சிகள் இடம் பெற்றன. 1994ம் ஆண்டு அந்தப் படம் வெளிவந்த நேரத்தில் நிக்சனும் மறைந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. கதை நாயகன் ஃபாரஸ்ட் கம்ப் மந்த நிலையான, புத்திசாலித்தனம் மிகக் குறைந்த, குழந்தை மன நிலை படைத்தவன். ஆனால் தற்செயலாக அமெரிக்காவின் மிக முக்கிய பிரபலங்கள் சிலரை, அவர்களின் முக்கியத்துவத்தை அறியாமலே அவன் வாழ்வில் சந்திக்கிறான். அவனுடன் ஜான் கென்னடி, லிண்டன் ஜான்சன், நிக்சன் முதலியோர் அமெரிக்க அதிபராகவே பங்கு பெறும் காட்சிகள் மிகுந்த சுவாரசியமானவை.



ஜோர்டான் நாட்டில் ஒரு ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அந்தப்படம் ஜோர்டான் நாட்டின் சரித்திரத்தை மாற்றப் போகிறது என்று எவரும் அறிந்திருக்கமாட்டார்கள். ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்ற அந்தப் படத்தில் நடிகர் பீட்டர் ஒட்டூல் லாரன்ஸாக நடித்திருந்தார். ‘ஹன்ட்ரட் கிரேட்டஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்’ பட்டியலில் முதல் ரேங்க் அமெரிக்க ஃபில்ம் இன்ஸ்ட்டிடூட்டால் பீட்டர் ஒட்டூலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் இந்தப் பெருமையை அவ்ருக்கு பெற்றுத் தந்தது.
இந்தப் படப்பிடிப்பில் டோனி கார்டனர் என்ற பெண் ஸ்விட்ச் போர்ட் ஆபரேட்டராக பணி புரிந்து கொண்டிருந்தார். ஜோர்டான் மன்னர் ஹூசேன் இந்த வெள்ளைக்காரப் பெண் மீது தீவிர காதல் கொள்ள ஆரம்பித்து திருமணமும் செய்து கொண்டார். இன்றைய ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் தாயார் தான் டோனி கார்டனர். லாரன்ஸ் ஆஃப் அரேபியா 1962இல் வெளிவந்தது. 1962க்கு பிற்பட்ட ஜோர்டான் சரித்திரத்தை இந்தப் படத்தின் ‘தயாரிப்பு’ மாற்றி மன்னருக்கு பட்டத்து வாரிசை ஏற்படுத்திவிட்டது.



ஆலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்த 2 படங்கள் ஆலிவர் ஸ்டோன் இயக்கி 1991ல் வெளிவந்த ஜே.எப்.கே ஜான் கென்னடியின் கொலை மர்மங்களை மறு விசாரணை செய்த படம். ஆலிவர் ஸ்டோன் இயக்கி 1995ல் வெளிவந்த ‘ நிக்சன் ‘ படத்தில் ஆந்தனி ஹாப்கின்ஸ் ரிச்சர்ட் நிக்சனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் சீனியர் ஆகிய அமெரிக்க அதிபர்கள் இடம் பெற்ற காட்சிகள் உள்ளன. ஜே.எப்.கே யில் ஐசனோவர், லிண்டன் பி.ஜான்சன், நிக்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
* * * * *

Pathivukal.com ல் பிரசுரமாகியுள்ளது

Aug 28, 2008

புதுவைக்கு வைத்திலிங்கம் மீண்டும் முதல்வர்

புதுவையில் வைத்யலிங்கம் மீண்டும் முதல்வர் ஆகிறார் .இவரை 18வருடத்திற்கு முன்னே சந்தித்திருக்கிறேன் . அங்கே தொழிற்சாலை ஒன்றை நிறுவிய காலம் . என் உறவினர் ஒருவர் , எங்க வெள்ளை முடி மாமா வின் மகளை திருமணம் செய்துள்ள எசக்கி முத்து அண்ணன் அப்போது கடலூரில் Spic regional manager ஆக இருந்தார் . அவர் தான் என்னை யும் என் தகப்பனாரையும் அழைத்துக்கொண்டு ,கூட ஆனந்த பாஸ்கர செட்டியார் அப்போது புதுவை எம்.எல்.ஏ ஆக இருந்தார் .(பின்னால் இவரும் மந்திரியானவர் தான். வைத்தியலிங்கத்தை பின்னால் எதிர்க்கவும் செய்தார் .புதுவை அரசியல் !) கல்வி மந்திரியாயிருந்த வைத்திலிங்கம் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் . அறிமுகமானவுடன் சம்ப்ரதாய உபசரிப்பு முடிந்த பின் எனக்கு சுவாரசியம் அங்கு நடப்பவற்றை கவனிப்பது என்று ஆனது . அவரை சந்தித்த ஒவ்வொருவரையும் , அவர்களின் பிரச்சினைகளை அவர் கேட்ட விதமும் . திடீரென்று ஒரு கூட்டம் ஆணும் பெண்ணுமாக கதறிகொண்டே அறையில் நுழைந்து வைத்திலிங்கம் காலில் விழுந்தது . கட்சிக்காரர்கள் .உதவியாளரை பார்த்து "என்ன , என்ன " பதறாமல் கேட்டார் .போலீஸ் கேஸ் . விசாரிக்க சொன்னார் .சற்று மென்மையாக பேசினார் . கொஞ்சம் பெண்மை தெரிந்தது . அவர் அப்பா வும் புதுவை முதல்வராக இருந்தவர் தான் என கேள்விப்பட்ட ஞாபகம் . ( வாரிசு அரசியல் பிரபஞ்ச யதார்த்தம் )
அவரோடு இருந்த போது அதிகாரத்தை அருகிலிருந்து பார்த்த உணர்வு , அதிகாரம் எவ்வளவு கவர்ச்சியானது என்பது புரிந்தது . அதிகாரத்தின் பவுசு பவுசு தான் .
மத்திய அமைச்சர் கூட புதுவையில் தாக்கபடுகிறார் . எப்படியோ மீண்டும் வைத்திலிங்கம் அரசியல் சதுரங்கத்தில் இந்த முறை ,அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார் . முன்னாள் முதல்வர் ஒதுங்கி அடுத்த சாணக்கியம் பற்றி சிந்தித்து கொண்டு இருப்பார் . பதுங்கும் ரங்கசாமிக்கும் கோயில்,சாமியார் ,ஜோஷியம் இவற்றிலெல்லாம் அதீத நம்பிக்கையுண்டு .இதற்கெல்லாம் கொஞ்ச காலம் விச்ராந்தியாக செலவிடுவார் .அதன் பின் பாய்ச்சல் . மீண்டும் குதிரை பேரம் ...அதிகாரம் , அதிகாரம் , அதிகாரம் .

Power is not an institution, and not a structure: neither is it a certain strength we are endowed with; it is the name that one attributes to a complex strategical situation in a particular society .
- Michel Foucault

No Regrets !

27-Aug-2008 15:47:00
நாகார்ஜுனன் said...
ராஜநாயஹம்! (இப்போது சரியாக எழுதியிருக்கிறேன்).உங்கள் blog நான் அவ்வப்போது வாசிப்பதுதான். பதிவுகள் சட்டென்று முடிந்துவிடுவதுதான் வருத்தம். நீங்கள் நிறைய எழுத வேண்டும். குறிப்பாக, வாசித்த புத்தகங்கள்-கால கட்டங்கள் பற்றி...

நாகார்ஜுனன் !

இதற்கு நான் பதில் எழுதுவதென்றால் நிஜமாகவே ஒரு சுய இரக்க புராணமே பாட வேண்டியிருக்கும் . பிலாக்கணம் சகிக்க முடியாது .

என்ன செய்ய .

எனக்கு ஆசை இருக்கிறது தாசில் பண்ண . அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க .

I have no regrets
I must accept my life unconditionally.

இன்னொரு விஷயம் . பத்தி எழுத்து எனக்கு பிடிக்கும் . Column writing என் Favourite .

வள வள என்று செக்கு மாட்டு விமரிசனம் செய்யக்கூடாது என்பதும் என் கொள்கை .

இதில் உள்ள குறிப்புகளை நான்கு, ஐந்து சேர்த்து படித்துப்பார்த்தால் ஒரு பத்தி கட்டுரை யாக அமைந்திருப்பதை அறிய முடியும் .

என்னுடைய நீண்ட கட்டுரை "ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை " கூட பகுதி பகுதியாக அடுத்தடுத்து பிரித்து பார்த்தால் நான்கைந்து" பத்தி எழுத்து " ஆகவே அமையும். வேறு எப்படி சென்சார் செய்து போட்டாலும் அப்படிதான் . அதனாலேயே திண்ணை, காலச்சுவடு , தமிழ் சிறகு , பதிவுகள் என வேறு வேறு இதழ்களிலும் வெவ்வேறு மாதிரியாக அமைந்ததை அனைவரும் அறிவார்கள் .

அப்போது திண்ணையில் வெளியான பகுதி, காலச்சுவடில் வெளியான பகுதி இரண்டையும் படித்து விட்டு , இவை இரண்டுமே ஒரே கட்டுரையின் இரு வேறு பகுதிகள் என தெரியாமல் ஒரு ஞான சூனியம் " திண்ணையில் வெளியான எதிர்வினைக்கும் காலச்சுவடு இதழில் வெளியான குறிப்புகளுக்கும் பாட பேதம் இருக்கிறது " என முட்டாள் தனமாக எழுதியிருந்தது !

Aug 27, 2008

இலட்சிய நடிகர் S.S.R

பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள் . அண்ணன் மதுரையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறார் .போன் இப்ப வந்தது ." என்றார் . எனக்கு சந்தோசம் . சென்னை இலிருந்து மதுரைக்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவர் பெரியகுளத்தில் இருக்கும் அப்பா வையும் தம்பி யையும் பார்க்க S.S.R வருகிறார் . அவரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு.

மதியம் 12 மணிக்கு ஆபீஸ் PERMISSIONபோட்டு விட்டு பாஸ்கர் வீட்டுக்கு போய் விட்டேன் . S.S.R தகப்பனார் சேடபட்டி சூரிய நாராயண தேவருக்கு அப்போது வயது ஒரு 75 இருக்கும் . என்னிடம் நன்றாக பேசுவார் .

ஓவியர் TROTSKY MARUDHU வின் தம்பி திலகர் மருது என் பால்ய நண்பன் . ஓவியர் மருது ஒரு முறை பெரியகுளம் வந்திருந்த போது S.S.R உடைய இன்னொரு தம்பி கதிர் வேல் மகன் பாண்டியன் உடன் என் அறைக்கு வந்து என்னிடம் பேசிகொண்டிருந்திருக்கிறார் . உண்மையில் ஓவியர் மருது வின் அப்பா மருதப்பனும் ( இவர் ஒரு ஞானி ) நானும் மதுரையில் தல்லாகுளத்தில் ரோட்டில் சந்தித்தால் கூட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருப்போம் . அவர் தான் எனக்கு என் பதினெட்டு வயதில், ரஸ்ஸல் எழுதிய “WHY I AM NOT A CHRISTIAN” நூலை படிக்க கொடுத்தவர் . மருது வீட்டில் ஒரு நூலகம் உண்டு . "இயேசுவின் மரணம் காஷ்மீரதிலே " என்ற ஒரு விசித்திரமான நூல் கூட அவரிடம் இருந்து வாங்கி நான் படித்திருக்கிறேன் . S.S.R க்கு இவர் சித்தப்பா . அதனால் தான் பெரியகுளத்தில் பாஸ்கர் எனக்கு அறிமுகம் . ஓவியர் மருதுக்கு S.S.R அண்ணன் முறை .

விஷயத்திற்கு வருகிறேன் . பாஸ்கர், அண்ணன் S.S.R வரபோகிறார் என்ற பதற்றத்தில் இருந்தார். சூரிய நாராயண தேவர் குழந்தை போல . நான் பாஸ்கர் கேட்பதற்காக HITS OF S.S.RAJENDRAN ஆடியோ கேசெட் கொடுத்திருந்தேன் .கேசெட்டை போட்டு கேட்பதற்காக என் டேப் ரேகார்டரையும் கொடுத்திருந்தேன் S.S.R காக டிஎம் எஸ் பாடிய பாடல்கள் தனி சிறப்புடையவை . அந்த பாட்டு எல்லாம் கேட்கும் போதே S.S.R அதற்கு பாவத்துடன் வாயசைப்பதை உணர முடியும் . "ரொம்ப நல்லா இருந்தது.இது மாதிரி ஒரு டேப் ரேகார்டேர் ஒன்னு வேணும் " என்று சூரிய நாராயண தேவர் சொல்லிகொண்டிருந்தார் . ஒரு போன் வந்தது அப்போது . பாஸ்கர் ஏமாற்றத்தோடு என்னிடம் " அண்ணன் அவசரமாக சென்னை திரும்பி போகிறாராம் . அடுத்த முறை பெரியகுளம் வருகிறேன் என்று சொல்லிவிட்டார் தம்பி " என்றார் .

அன்று தவறிபோனவாய்ப்பு ! காலம் ஓடி விட்டது .

அதன் பிறகு இன்று வரை இலட்சிய நடிகரை நான் பார்த்ததில்லை . பார்க்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை . இப்போது S.S.R வயது 86.

இந்த விஷயங்களை ஓவியர் மருது இங்கே திருப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு வருடம் முன் வந்திருந்த போது நான் மத்திய அரிமா சங்க மேடையிலேயே பேசினேன் . எம்.எல்.ஏ . கோவிந்தசாமி அவர்கள் மருது பற்றி நான் பேசிய விஷயங்கள் பிரமிப்பாய் இருப்பதாக குறிப்பிட்டார் .

ரைம்போவும் ஆத்மாநாமும்


One evening, I took “Beauty” in my arms.
I found her bitter and I insulted her
- Arthur Rimbaud

In “ A season in Hell”

நாகார்ஜுனன் Blog ல் ஒரு சின்ன சுவாரசியமான விவாதம்

"நரகத்தில் ஒரு பருவம் - ஆர்தர் ரைம்போ - 1"
2 Comments -

ஆர். பி. ராஜநாயஹம் said...
"ஒரு மாலை "அழகு" என் கையில் அமர்ந்தாள். அவள் கசப்பாய் இருக்கக் கண்டேன். அவளை அவமானப் படுத்தினேன்" என்ற ரைம்போவின் வரிகள் ஒருவேளை ஆத்மாநாமுக்கு inspiration-ஆக இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. கவனிக்க: நான் ஆத்மாநாம் காப்பியடித்ததாகச் சொல்லவில்லை. வரிகள் ஏறக்குறைய இவைதாம்: "கடவுளைப் பார்த்தேன். எதுவும் கேட்கத் தோன்றவில்லை. புன்னகைத்தார். போய்விட்டார்."
26-Aug-2008 12:59:00
நாகார்ஜுனன் said...
சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. ஆத்மாநாம் வரிகள் நான் வாசித்தவைதாம். ஆனால் ரைம்போவைத் தமிழாக்கும்போது உறைக்கவில்லை. அந்த அளவு போதலேரும் ரைம்போவும் புதுக்கவிதைக்குள் நுழைந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது...
26-Aug-2008 13:04:00

Aug 26, 2008

ழார் பத்தாய் .... ழான் ஜெனே ......

ழார் பத்தாய்(Georges Bataille) எழுதிய Story of the Eye நாவலை பற்றி ஒரு சின்ன குறிப்பு எழுதலாமா என நினைத்ததுண்டு . இதை படித்த போது தோன்றியது .பத்தாய் நல்ல வேளை இதை புனை பெயரில் எழுதினார். சும்மா தொண்ணூறு வருடத்திற்கு முன் பிரான்சாகவே இருந்தாலும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் .அப்போது புனை பெயர் அவசியம் தான். பத்தாய் மீது தூற்றுதல் , அருவருப்பு எல்லாம் இருந்தது தான் .
இந்த நாவலை யாரோ eureka (?!)தமிழில் மொழிபெயர்த்து தொடராக நாகார்ஜுனன் இணையத்தில் வெளி வருகிறது . உண்மையில் மொழிபெயர்ப்பு என்றால் இது தான் மொழிபெயர்ப்பு . தமிழில் Story of the Eye வருகிறது என்றால் Miracles never cease in this world ! ஒரு பெரிய புரட்சி !
சென்ற 17 தேதி யில் கௌதம சித்தார்த்தனை சந்தித்தேன் ! ழான் ஜெனே(Jean Genet) யின் “Thief Journal” நாவலை தேவ தாஸ் மொழிபெயர்ப்பில் பிரசுரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் . நான் 1989 ல் அதை படித்த சுவாரசியமான கதையை சொன்னேன் . ஆமாம் அந்த நாவலை நான் படித்ததை பற்றியே ஒரு கதை எழுதலாம் .
ழார் பத்தாய் - story of the eye
ழான் ஜெனே - “Thief Journal”
இரண்டு பிரஞ்சு நாவல்கள் தமிழில் வரப்போகின்றன . கலாச்சார காவலர்கள் வெந்து நூலாகபோகிறார்கள் பாவம்.
"கற்றது தமிழ்" பட விமர்சனத்தில் ழார் பத்தாய் மேற்கோள்கள் பலவற்றை சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார். ராசலீலா நாவலில் பத்தாய் பற்றி சாரு வின் குறிப்புகளை காணலாம் .
கௌதம சித்தார்த்தனை சந்தித்த போது அவருடன் கற்றது தமிழ் இயக்குனர் ராம் இருந்தார் . அந்த படம் சம்பந்தமான நிகழ்ச்சிக்காகத்தான் இருவரும்
திருப்பூர் வந்திருந்தார்கள் . நான் இன்னமும் "கற்றது தமிழ் " பார்க்கவில்லை .கட்டாயம் பார்ப்பதாக உத்தேசம் . இயக்குனரின் பேச்சு இந்த முடிவுக்கு வர வைத்திருக்கிறது .
குற்றவுணர்வை சொல்லாமல் இருக்க முடியவில்லை .FELLINIயின் eight and half வாங்கி வைத்திருக்கிறேன் . இன்னும் அதை பார்க்க முடியவில்லை . திரைப்படம் பார்க்க நேரம் வேண்டும் . மன நிலையும் ஓரளவு சீராக இருக்க வேண்டும் .


கௌதம சித்தார்த்தன் திரைப்பட முயற்சியிலிருக்கிறார் .
"புதுமைப்பித்தன் துவங்கி கௌதம சித்தார்த்தன் வரை" கோடம்பாக்கம் முயற்சி தொடர்கிறது ....."
நீட்ஷே யின் “The eternal recurrence of the same events” நினைவிற்கு வருகிறது. சரி
கௌதம சித்தார்த்தனாவது ஜெயிக்க வேண்டும் .

Aug 25, 2008

பிரபலமான இரு வீடுகள் !

இல்லாதவனுக்கு பல வீடு .
நான் திருச்சியில் குடியிருந்த இரு வீடுகள் சற்றே விஷேசமானவை .

1986 ல் பீமநகர் ராஜா காலனியில் நான் குடியிருந்த வீடு பின்னால் ஒரு பதினான்கு வருடத்தில் சரித்திர புகழ் பெற போவது எனக்கு அப்போது தெரியாது . அந்த வீடு தான் பின்னால் கார்கில் யுத்த தியாகி மேஜர் சரவணனின் வீடு . பத்து வருடங்களுக்கு முன் பல பெரிய அரசியல்வாதிகள் அந்த வீட்டிற்குள் நுழைந்து சரவணனின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன போது மிகவும் popular!ஒரு ஜெருசலேம் , ஒரு மெக்கா போலாகியிருந்தது . அந்த வீடு பிரபலமான கால கட்டத்தில் நான் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்தேன்..
புதுவையிலிருந்து கிளம்பி 1990 டிசெம்பெர் ல் திருச்சியில் எடமலைபட்டி புதூர் ஸ்டேட் பேங்க் காலனி யில் நான் குடியேறிய வீடு அதற்கு ஏழு வருடங்களுக்கு முன் குடி இருந்த ஒருவரால் ஏற்கனவே பிரபலமாயிருந்தது . 1990 ல் அதற்கு சிலவருடம் முன்னரே அவர் பெரிய பணக்கார சாமியாராகி பாத்திமா நகரில் பெரிய ஆசிரமம் அமைத்து கோலோய்ச்சிகொண்டிருந்தார் . அப்புறம் நான் ஸ்ரீவில்லி புத்தூர் போன பின் தான் 1994ல் அவர் அரசாங்க விருந்தாளியானார் . 1983 ல் அவர் அகதியாக வந்த போது குடியேறிய வீடு பின் எனக்கு 1990 ல் வீடாகி இருந்தது .அக்கம் பக்கம் இருந்த அவருடைய பக்தர்கள் என் வீட்டை பற்றி அப்போது "சுவாமி குடியிருந்த வீடு எங்களுக்கு ஜெருசலேம் " என என்னிடம் சொல்வார்கள் .
ஒரு நாள் நான்காவது வீட்டில் குடியிருந்தஅவருடைய உப சாமியார் கமலானந்தா வின் தகப்பனார் இறந்த போது ,இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அந்த சாமியார் நடந்து வந்த போது என் வீட்டையும்(Nostalgia ! அவர் குடியிருந்த வீடல்லவா ) அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த என்னையும் உற்று பார்த்தார் .
நான் உடனேயே " பன்றி போல இருக்கிறான் . இவனை சாமியார் ன்னுறாங்களே " என்று வாய் விட்டே சொன்னேன் . அது உண்மையென்றே ஆகிபோனது !
அந்த சாமியார் பிரபலமான பிரேமானந்தா .

Aug 24, 2008

குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைகள்

க.நா.சு க்கு 1.12.1988 அன்று ஒரு கடிதம் எழுதினேன் .அமரர் தி.ஜானகி ராமனை பற்றி அலட்சியமாக , முன்றில் பத்திரிகையில் சேறு தெளித்து எழுதிவிட்டார். அதற்கு பதிலாக ஒரு கோபமான rejoinder அவருடைய சென்னை விலாசம் , டெல்லி விலாசம் ,முன்றில் மற்றும் அந்த நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலக்கிய பத்திரிகைகள் , புத்தக பதிப்பாளர்கள் ,எழுத்தாளர்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிட்டி ,ஜெயந்தன் துவங்கி கோணங்கி வரை , மேலும் பேராசிரியர்கள் பலர், வாசகர்கள் ,என் நண்பர்கள் பலருக்கும் zerox நகல் நூறுக்கும் மேல் தபாலில் அனுப்பி வைத்தேன் .
16.12.1988 அன்று க.நா.சு இறந்துவிட்டார் .டெல்லி வானொலியில் காலை ஒலிபரபபில் தமிழ் செய்திகளில் கேட்டு அதிர்ந்து போனேன் .
க .நா. சு . நல்ல படைப்பாளி .அவருடைய பொய்த்தேவு ,ஒரு நாள் , அவருடைய முதல் நாவல் சர்மாவின் உயில் , அசுர கணம் ....சொக்க வைக்கும் படைப்புகள் . உண்மையில் "உரைநடை விறுவிறுப்பு" என்றால் முதலில் க . நா .சு அடுத்து தி. ஜா .. தொடர்ந்து சுஜாதா . இப்படித்தான் . அசோக மித்திரன் , சுந்தர ராம சாமி பிரத்யேக நடை தனி விஷேசம் . கி .ரா . எப்போதும் தனிக்காட்டு ராஜா ! இ.பா . சுஜாதாவுக்கே வாத்தியார் !
கொஞ்சம் தடம் புரண்ட திறனாய்வாளர் க .நா. சு .
பொய் சொல்வார் .தன் தந்தையிடம் இருந்து இந்த பொய் சொல்லும் பழக்கம் தன்னை தொற்றிகொண்டதாக அவரே எழுதியிருக்கிறார் .
இப்ப உள்ள வில்லன்கள் அவரை ரொம்ப நல்லவர் ஆக்கிவிட்டான்கள் !
க .நா. சு . மரண செய்தி ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார் . மறு நாள் எனக்கு கிடைத்தது .
சிட்டி எழுதியிருந்தார் .
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."
கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார் ."
_________________________________
1991 ல் "மேலும் " பத்திரிகையில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மைஎன கொண்டாயோ ?"- இந்த தலைப்பில் நான் எழுதி ஒரு கட்டுரை வெளியானது . புதுமைப்பித்தன் சர்ச்சை பற்றியது.
உடன் பொதியவெற்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் .
" மரணபடுக்கையில் இருக்கும் கமலா விருத்தச்சலத்தை புண் படுத்தி விட்டீர்கள்"
கமலா விருத்தாசலம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவியார் .
இதற்கு ஒரு கார்டில் நான் எழுதிய பதில் .
“My intentions are genuine. I don’t see the need to retaliate .”

Aug 23, 2008

துன்பக்கேணி

உண்மையில் நரகலை விட அருவருப்பான விஷயம் என்ன ? மலத்தை விட மோசமானது - "குடிகாரனின் வாந்தி "

ஒருபெண் . அப்பா கிடையாது . அம்மாவையும் இவளையும் சுமக்க முடியாத அண்ணன் திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி விட்டான் .( நான் சம்பாரிப்பது என் குடும்பத்துக்கே போதாது..ன்னு அர்த்தம் ) வேறு வழி இல்லை . ரெடிமேட் கடையில் வேலைக்கு சேர்ந்தவள் . தினமும் வீட்டிலிருந்துஒரு கிலோமீட்டர் நடந்து பிச்சை பிள்ளை சாவடியிலிருந்து மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் மேல சித்திரை வீதிக்கு நடந்து காலை எட்டரை மணியிலிருந்து இரவு எட்டரை மணி வரை வேலை .

ஒரு நாள் இரவு வேலை முடிந்து ஒன்பது மணி போல பஸ்ஸில் ஏறிவிட்டாள்.சரியான கூட்டம் . டவுன் பஸ் சாதாரணமாகவே பெண்களுக்கு துன்பக்கேணி தானே ? எவ்வளவு அரவங்களுக்கு இடையே எவ்வளவு நேரம் ஒரு பெண் நின்று கொண்டே ...திடீரென்று ஒரு குடிகாரன் எடுத்தான் வாந்தி . இவள் பின்னால் நின்று கொண்டிருந்தவன் .ஒரு சொட்டு கூட கீழே சிந்தாமல் இவள் தலை , சேலை , ஜாக்கெட்டில் மொத்த வாந்தியும் அபிஷேகம் .

இறங்கிவிடலாம் என்றால் எங்கே போய் கழுவுவது . நேரம் வேறு இரவு .விதி ! எல்லோரும் பரிதாபபட்டார்கள் .குடிகாரனை திட்டினார்கள் . அவனுக்கு அடி கூட விழுந்தது . அவன் மயங்கியது போல் நடித்து இறங்க மறுத்து அப்படியே உட்கார்ந்தான் . இவள் விதியற்று ,நிர்கதியாக ....நின்று கொண்டே ஒரு மணி நேரம் , பல ஸ்டாப்.. கடைசியில் பிச்சை பிள்ளை சாவடி . அம்மா எப்போதும் பஸ் ஸ்டாப் வந்து விடுவாள் . இறங்கியவள் அம்மாவிடம் சொல்லிகொண்டே நடக்கிறாள் . வீடு வந்து குளித்து முழுகி விட்டு சாப்பிட பிடிக்காமல் படுக்கிறாள் .

ஒமட்டிக்கொண்டு வருகிறது . அம்மா வும் சாப்பிடவில்லை .நள்ளிரவில் ஒரு மணிக்கு மேல் அம்மாவை திரும்பி பார்க்கிறாள் .குமுறி அழும் அம்மா . இவள் உடல் குலுங்கி சத்தமின்றி ....விம்மி விம்மி ...

மலத்தை விட மோசமானது குடிகாரனின் வாந்தி .

Aug 21, 2008

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ....

இன்றைக்கு காலையில் செய்தித்தாள் பார்த்தேன் . ரொம்ப சந்தோசம் . அப்பாடா !என்ன ஒரு ஆசுவாசம் ! அற்புதமான செய்தி .

முதல்வருக்கு தி.மு.க விருது .

அவரது கட்சி அவருக்கு விருது அளிக்கிறது . "பெரியார் விருது " உடனே உங்களுக்கு கோபம் வரும் . எங்கள் ஸ்டாலினுக்கு விருது இல்லையா ?... பொறுங்கள் . ஸ்டாலினுக்கு " கலைஞர் விருது " . இப்போது திருப்தியா ? அவசரபடுகிறீர்களே. சரி கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்த ஆற்காடு வீராசாமி க்கு "அண்ணா விருது "

எப்போ எப்போ குடுக்கிறார்கள் என்று பறக்கிறீர்கள் . வருகிற செப்டம்பர் மாதம் 21தேதியில் திருச்சி தி.மு.க முப்பெரும் விழாவில்இந்த விருதுகளை கட்டாயம் கொடுத்து விடுகிறார்கள் . இனி நமக்கெல்லாம் ஒரு கவலை இல்லை . நிம்மதியாய் வாழலாம் .

சரி . ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மட்டும் நமக்கென்ன கவலை ? மன்னார்குடிக்காரர்கள் சகல கௌரவங்களும் பெறுவார்கள் . அவர் கட்சி என்ன குடும்ப கட்சியா ? பிள்ளையா குட்டியா .அதெல்லாம் இல்லை . தன் உடன் பிறந்த அண்ணன் குடும்பத்தை கூட கவனிக்க மாட்டார் .

சரி விஜய காந்த் கட்சி வந்தால் கூட நாம் பயப்பட தேவையே இல்லை . உறுதியாக அவரது துணைவியாருக்கும் , துணைவியின் தம்பியும் சிறப்பான முறையில் பல பெருமைகளை அடையப்போவதில் எந்த சந்தேகமும் கிடையாது .

பாட்டாளி மக்கள் கட்சி பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன ? நமக்கு கூடவே போனசாக தாலிபன் ஆட்சியின் கீழ் வாழும் பெருமையும் கிடைக்கும் மகிழ்ச்சியை இப்போதே அனுபவிக்க தயாராகிவிட்டீர்கள் என்பதை சொல்லவே வேண்டியதில்லை .

காங்கிரஸ் ஆட்சி தப்பித்தவறி அடுத்து வரும்பட்சத்தில் பல குட்டி சமஸ்தானங்கள் , கோஷ்டியாக வளர்ந்து நாட்டை செழுமைப்படுத்தி விடுவார்கள் .

இப்படியே.... சரி போதும் .

Aug 18, 2008

Incomplete "DON JUAN"........Fractional "HYPERION".....

ஓரு கனவு ... ஓரு பயம்...ஒருவேளை இது தான் வாழ்க்கையோ - ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான் .

பைரன் எழுதிய கடைசி காவியம்" டான் ஹூவான் " . அவனுடைய மரணம் இதை முடிக்க விடாமல் சதி செய்து விட்டது .கீட்ஸ் கூட "ஹைபீரியன்" காவியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் அதற்கு காரணம் "மில்டன் பாணியில்"இருப்பதாக எண்ணி கீட்ஸ் பயந்து , திருப்தி இல்லாமல் நிறுத்தினான் . மரணமும் அவனுக்கு அப்படி ஒன்றும் அப்போது ரொம்ப தூரத்தில் இல்லை என்பது வேறு விஷயம் .

டான் ஹூவான் கரு என்ன ?வரையறை செய்வதென்றால் ஹூவானின் அப்பா அவனுக்கு சொல்லுவதில் தான் ." பெண் உனக்கு மூன்று விஷயங்களை தருகிறாள் . உயிர் , ஏமாற்றம் , மரணம் ."

ஹூவான் பெண்களால் துரத்தப்படுகிறான் ......தமிழில் கொச்சையாக சொல்வதென்றால் பல பெண்கள் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள் .....

"Truth is stranger than fiction!"- இந்த பிரபலமான மேற்கோளை டான் ஹூவானில் தான் பைரன் சொன்னான் . அப்புறம் எல்லோரும் உபயோகித்து தேய்ந்து போன வரி இது .

ஹைபீரியன் காவியத்தில் பின்பகுதியில் அப்பல்லோ சூரியக்கடவுள் ( இலாகா - இசை, கலாசாரம் ) பீச்சில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பான் . பெண் கடவுள் நிமொசின் ( இலாக்கா ஞாபக சக்தி ) வந்து இவனிடம் விசாரிப்பாள் . தன் சக்தி தெரிந்தும் உபயோகிக்க அறியாமல் இருப்பதற்காக அழுது கொண்டிருப்பதாக அப்பல்லோ சொல்வான் . நிமொசின் கண்களுக்குள் தன் பார்வையை செலுத்துவதன் மூலம் அப்பல்லோ தன் இலாக்காக்களுக்கான அதிகாரத்தை அடைகிறான் . சக்தி உபயோகம் ஆரம்பம் . இந்த இடத்தில் Celestial..என்று கீட்ஸ்

அரைகுறையாக அந்தரத்திலேயே வாக்கியத்தை முடிக்காமலே .....................நிறுத்தி இருக்கிறான் .

ஆனால்நிறைவு பெறாத இந்த இரண்டு காவியங்களுமே சாதனைகள் தான் என்பது தான் இவற்றின் சிறப்பே.

Perhaps life is Just that….a dream and a fear ....

Aug 16, 2008

விம்மியழவும் திறம் கெட்டு .....

இவள் பார்க்காத சீரழிவே இல்லை . கட்டிய கணவன் குடிபோதையில் ஆற்றுவெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனதை நேரடியாய் பார்த்தவள் . விதவையான பின் வேறு சாதிக்காரனோடு ஓடிபோய் பத்து வருடத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றாள். இரண்டாவது கணவன் முதல் கணவன் போலவே மொடாக்குடியன் . ரேசன் கடையில் பொருள் வாங்கி விற்று ,இன்னும் பலவகையில் போராடி தான் ஒன்பது பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊற்றினாள்.நான்காவது இரட்டைபிள்ளைகள். ராமன் லக்ஷ்மணன் என்று தான் பெயர் வைத்தாள்.
எட்டு வயது நடக்கும்போது ராமனுக்கு உடம்பு ரொம்ப முடியாமல் அரசு மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினாள்.ஆனால் பிள்ளை இறந்துவிட்டான் . டாக்சியில் பிணத்தை கொண்டு போக முடியுமா?
டவுன் பஸ்ஸில் பிணத்தை தூக்கிக்கொண்டு ஏறினாள் . பொங்கி வரும் அழுகையை சிரமப்பட்டு அடக்கிகொண்டாள் . அழுதால் அவ்வளவு தான் . 


திருச்சி பெரிய ஆஸ்பத்திரியிலிருந்து எடமலைபட்டி புதூர் வரை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடும் . பஸ் ஸ்டாண்டில் இருபது நிமிடம் பஸ் நின்று பிறகு தான் கிளம்பும் .பஸ் ல் நல்ல கூட்டம் . இவள் நின்று கொண்டு கையில் பிணத்துடன் . பக்கத்தில் நிற்பவர்கள் எரிச்சலுடன் 'எம்மா , பிள்ளையை இறக்கி விடும்மா . இந்த நெரிசல்லே இவனை தூக்கிகிட்டு . பத்து வயசு பய நிக்க மாட்டானாக்கும் ."
" தூங்கிறவனை எழுப்பிவிட்டு நிறுத்தும்மா . "உடம்பு சரியில்லைங்க "
"உடம்பு சரியில்லையா " - ஆளாளுக்கு , கண்டக்டர் உள்பட திட்டுகிறார்கள் .இவள் பதிலே பேசவில்லை .
எடமலைப்பட்டி புதூர் ஸ்டாப் வந்ததும் நெரிசலில் இருந்து இறங்கி தரையில் பிள்ளையை போட்டு விட்டு வெடித்து அழ ஆரம்பிக்கிறாள் .

"விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே !
துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத குரல் மீட்டும் உரையாயோ ?
அவர் விம்மியழவும் திறம் கெட்டு ப்போயினர். "






கமல் அடித்த ஒரு பழைய ஜோக்

நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் "ராசுக்குட்டி '" படத்தின் சூட்டிங் இடைவேளை யில் என்னிடம் சொன்ன விஷயம் இது .
கமல் ஹாசன் அடித்த கமெண்ட் ஒன்று .ரொம்ப பழசு . எழுபதுகளில்.

"எந்த பெண்ணை தொட்டாலும் அம்பரிஷ் வாடை அடிக்கிறதே! "

கமலுடைய ஜோக்கேல்லாமே இப்படி பூசினாற்போல் தான் ஒரு தனித்தன்மை யோடு இருக்கும் . அந்த ஒரு வரி எத்தனை கதை சொல்லிவிடுகிறது .
இதில் கமல் , அம்பரிஷ் இருவரின் ஆளுமை பற்றியும் என்ன அழகாக தெரிய வந்து விடுகிறது ! TWO CASANOVAS !!

அம்பரிஷ் கொஞ்ச நாள் முன் மத்திய அமைச்சராயிருந்து ராஜினாமா செய்த கன்னட நடிகர். ரஜினியின் நண்பர் . நடிகை சுமலதாவின் கணவர் .

நடிகை சுமலதா நான் உதவி இயக்குனராய் பணிபுரிந்த "அழைத்தால் வருவேன் " படத்தின் கதாநாயகி . படத்தில் இரண்டு காட்சிகளில் நானும் வருவேன். கதை நாயகியை கடத்தி முதல் முதலாக கற்பழித்து விடும் ஒரு கதாபாத்திரம் என்னுடையது . தொடுவதெல்லாம் கிடையாது . படத்தில்
Suggestive ஆகவே காட்டியிருப்பார்கள்.

Aug 15, 2008

OK YOUNG MAN ! I AM LEAVING!

திருச்சி பெமினா ஹோடேலில் வரவேற்பாளராக நான் இருந்த போது சிவாஜி கணேசன் அங்கு வந்து தங்கி பின் அறையை காலி செய்வதாக அவர் அறையிலிருந்து தகவல் வந்தது . அவர் கீழே லாபிக்கு வரப்போகிறார் என்ற விஷயம் அங்கு வந்திருந்த பல பேருக்கும் தங்கியிருந்த சில விருந்தாளிகளுக்கும் தெரிந்த உடன் எல்லோரும் அவரை பார்க்கிற ஆவலில் லாபி யில் லிப்ட்ஐ பார்த்துக்கொண்டு அங்கே வேலை பார்த்துகொண்டிருந்த ஊழியர்களும் கூட வந்து நின்று கொண்டார் கள்.

லிப்ட் திறந்தது ,. மனைவி கமலா வுடன் வெளியே வந்த சிவாஜி கணேசனுக்கு அந்த இடத்தில் கூட்டமாக பலரை பார்த்தவுடன் புன்னகையுடன் என்னை பார்த்தார் . அந்த இடத்தில் அவர் தான்
CENTRE OF ATTRACTION

அவரை அனைவரும் ஆர்வத்தோடு பரபரப்போடு கவனிக்கும் போது அவர் ஏதேனும் A CLEVER MANEUVER

GIMMICKSசெய்தாக வேண்டும் . நான் தான் அந்த இடத்தில் அவருக்கு SUPPORTING ACTOR !என்னருகில் வந்தார் . என் கன்னத்தில் தட்டுவது போல ஒரு நளினமாக அவர் கை வந்தது . தொடர்ந்து பெருமிதமாக என்னைப்பார்த்து சிரித்து 'OK YOUNG MAN ! I AM LEAVING! '

அவருடைய ஸ்டைல் நடையுடன், மனைவி கமலா பின் வர நடந்து போய் காரில் ஏறினார் .

அவர் அப்புறம் 9 வருடம் கழித்து இறந்த போது என் காதில் அந்த வார்த்தைகள் அவர் குரலில் ஒலித்தது ..

OK YOUNG MAN ! I AM LEAVING!

DEATH IS BUSY EVERY WHERE !

உறவினர் ஒருவர் ( என் மாமனார் தான் )இறந்தபோது கடைசி கிரியை செய்ய சுடுகாட்டை அடைந்த போது , அப்போது அங்கு ஏற்கனவே எரிய ஆரம்பித்திருந்த ஒரு பிணத்தின் அருகில் வெட்டியான் வேலை செய்யும் இருவரில் ஒருவர் அவருடைய Colleague இடம் எரியும் பிணத்தை சுட்டிக் காட்டி சொன்ன விஷயத்தை கவனிக்க நேர்ந்தது .

" ஏலே , இவன் "சயம்"வந்து செத்தவன்லே . ராத்திரி எந்திரிச்சி கிட்டே இருப்பான்லே .தூக்கம் போச்சி . கம்பால அடிச்சி அடிச்சி படுக்கபோட்டு நமக்கு தாவு தீர்ந்திடும் . எழவு , சவத்துகூதி யாவாரம் சனியன் பிடிச்ச பொழைப்புலே ."

THIS CYCLE OF LIFE REALY STINKS!

Aug 14, 2008

'டூன்' திரைப்படமும் ஹோடோரோவ்ச்கி விழலுக்கு இறைத்த நீரும்

ஒரு நாவல் திரைப்படமாக வருவதற்கு முன் அது காண நேரும் போராட்டங்களை DEVELOPMENT HELL என்று சொல்வார்கள் . "டூன் " என்ற FRANK HERBERT எழுதிய நாவல் பற்றிய சோகம் இது .
ஹோடரோவ்ச்கி இதை 10 மணி நேர திரைப்படமாக்க முயற்சி ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் மேற்கொண்டார் . துணைக்கு யார் யார் தெரியுமா ? சிடிசன் கேன் ஆர்சன் வெல்ல்ஸ் ,ஓவியர் சால்வடார் டாலி . கதையில் வரும் சக்கரவர்த்தி பாத்திரத்திற்கு சால்வடார் டாலி க்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லக்ஷம் டாலர் !
TOO MANY COOKS SPOIL THE CAKE
ஹோடரோவ்ச்கி க்கும் சால்வடார் டாலி க்கும் பணம் விஷயமாக சர்ச்சை,சண்டை,சச்சரவு ஆரம்பித்து விட்டது . நாவலாசிரியர் HERBERT வந்து பார்த்த போது படத்துக்கான பட்ஜெட் ட்டில் ஐந்தில் ஒரு பகுதி , ஆயத்த வேலைகளிலேயே காலியாகியிருந்தது .
மகத்தான கலைஞன் ஹோடரோவ்ஷ்கி அந்த படத்திற்க்கான ஸ்கிரிப்ட் பதினான்கு மணி நேர படமாக வரும்படி தயாரித்திருந்தார். ஸ்கிரிப்ட் பார்ப்பதற்கு டெலிபோன் டிரெக்டரி புத்தகம் அளவிற்கு இருந்திருக்கிறது .
பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்ட போதும் ஹெர்பெர்ட்ட்டுக்கு ஹோடோரோவ்ஷ்கி யுடன் சுமுகமான உறவு இருந்திருக்கிறது . ஹோடரோவ்ஷ்கி வாழ்வில் கூட இந்த மோசமான அனுபவங்களுக்கு பின் ஒரு மாற்றம் ஏற்படவே செய்தது .

பின்னால் எட்டு வருடம் கழித்து டேவிட் லின்ச் இயக்கத்தில் "டூன் " படம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நான்கில் வெளி வரத்தான் செய்தது . அது வேறு விஷயம் .
ஹோடரோவ்ச்கி படமாக "டூன் " படம் பார்க்க கிடைக்கவில்லையே .
டூன் பட முயற்சியில் "வென்றிலன் என்ற போதும் "....
EL TOPO(1970) துவங்கி இப்போதும் வரும் 2009 வருடம் KING SHOT வரை
(Alejandro Jodorowsky ) ஹோடோரோவ்ச்கி பற்றியே ஒரு 24 மணி நேரப் படம் எடுக்கலாம் .
THE RAINBOW THIEF படம் 1990 ல் இவர் இயக்கத்தில் PETER OTOOLE , OMAR SHARIF, CHRISTOPHER LEE
இவர் இயக்கத்தில் நடித்து வெளிவந்தது. படத்தின் தயாரிப்பாளர் 'ஸ்கிரிப்ட் ல் ஏதேனும் ஹோடோரோவ்ச்கி மாற்றம் செய்ய முயன்றால் , உடனே அப்போதே சுட்டுகொன்றுவிடுவேன் ' என மிரட்டினார் .
இப்போது தயாரிப்பிலிருக்கும் KING SHOT படம் gangstermovie
MARILYN MANSON
என்ற நடிகர் இதில் 3ooவயது போப் வேடத்தில் நடிக்கிறார்.

ஹோடோரோவ்ச்கி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள Charuonline.comபார்த்தால் அதில் சாரு நிவேதிதா இவருடைய அற்புதமான பேட்டி உள்பட பல அபூர்வ தகவல்கள் தந்துள்ளதை பார்க்கலாம் .

Aug 12, 2008

தோழர் நல்லகண்ணு


அன்று வீட்டை விட்டு வெளியே கிளம்பிய போது அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திருச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாக இடைதேர்தல் பிரச்சாரம் சூடு பரத்திகொண்டிருந்தது. புத்தூர் நாள் ரோட்டில் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம். நாடோடி பாடல்கள் நிகழ்ச்சியும் இருந்ததால் அங்கே போனேன். பாடல்களை கேட்டுக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.

ஒரு கார் வந்தது. தோழர் ஆர் .நல்லகண்ணு இறங்கினார்.
தொடர்ந்து தோழர் வீ.ந.சோமசுந்தரம் இறங்கினார். சோமசுந்தரம் என்னை பார்த்து விட்டார்.
உடனே என்னை கையை பிடித்து அழைத்து தலைவர் நல்லகண்ணு விடம்
" இவர் தான் R.P. ராஜநாயஹம்" என்று உணர்ச்சி பூர்வமாக என்னைப்பற்றி பெருமைபடுத்தி கொஞ்சம் சொல்லி,
தலைவர் நல்லகண்ணு வும் "R.P. ராஜநாயஹம் " என்று ஒரு முறை சொல்லி புன்னகைத்தார்.

இதோடு முடியவில்லை. தலைவர் அருகிலேயே என்னை தோழர் சோமசுந்தரம் வற்புறுத்தி உட்கார வைத்துவிட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நாடோடி பாடல் நிகழ்ச்சி அதன் பின்னும் நடந்தது. வேறு பல கட்சி அரசியல்வாதிகள் பலரும் அங்கு
வந்த போதும் என்னை எழ விடவில்லை.

ஜீன்ஸ் பாண்ட், டி ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்தேன். பாதுகாப்பு போலீஸ் அதிகாரி" யார் இவர் "என்று என்னை பற்றி விசாரித்துகொண்டிருந்தார்.
ஜே ஜே டிவி காரர்கள் படம் பிடித்துக்கொண்டார்கள்.

இடையில் நல்லகண்ணு கண்ணில் சிறு பூச்சி விழுந்து விட்டது. நான் தான் ஊதி விட்டேன்.


நாடோடி பாடல்கள் முடிந்து தலைவர் மேடையேறிய போது தான் வீ.ந.சோமசுந்தரம் சொன்னார் " இந்த இடத்தில் அவருடன் உட்கார தகுதியானவர் நீங்கள் மட்டுமே. வேறு எவனாவது அவர் அருகில் அமர்ந்துவிடக்கூடாது என்று தான் உங்களை அமர்த்தினேன்! "


அபினவ் பிந்த்ரா சாதனையும் கருணாநிதியின் சோதனையும்

ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா( இலுப்பம்பூ சக்கரை! )இந்தியா வுக்கு தங்கம் வாங்கித்தந்த சந்தோசத்தை அனுபவித்த அதே நேரத்தில் ஒரு சோக செய்தியையும் கேட்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பழைய பல்லவி தான்.ஆனால் பாவம் இந்த முறை இவர்களிடம் ஷேக்ஸ்பியர் சிக்கி விட்டார். 
தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா  'திரு. கருணாநிதி அவர்கள் ஷேக்ஸ்பியரை தாண்டிபோய்விட்டார். அதனால் அவருக்கு உடனே நோபெல் பரிசு உடனே உடனே தந்தேயாக வேண்டும்' என்று பிரகடனபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட நோபல் கமிட்டிக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்!

The possession of power , unavoidably spoils the free use of reason
-Immanuel Kant


எதிர்காலத்தில் எப்படியெல்லாம்கருணாநிதி மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அதற்கு சில டிப்ஸ் தர விரும்புகிறேன் .
நோபல் கமிட்டீ பரிசு கொடுக்க தவறிய எழுத்தாளர்கள் வரிசையில் கருணாநிதியையும் சேர்த்து நோபல் கமிட்டீ யின் திறமையின்மையை, மெத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவரது மகத்துவத்தை வெளிப்படுத்தும்.
லியோ டால்ஸ்டாய், ஜாய்ஸ், போர்ஹே ஆகிய மகத்தானவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்காததை சுட்டிக்காட்டி கருணாநிதியை அவர்கள் தோளோடு நிறுத்தி கழக கண்மணிகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.

இவ்வளவு ஏன் ? மஹாத்மா காந்தியின் பெயர் அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், நாற்பதுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை சிபாரிசு செய்யப்பட்டும் நோபல் கமிட்டீ காந்தியாருக்கு பரிசு தர மறுத்த அவலத்தை சுட்டிக்காட்டி கழகத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களும், மூன்றாம் மட்டமான தலைவர்களும் தங்களை தேற்றிகொள்ளலாம்.

Aug 10, 2008

தூமைத்துணி

பழனியில் என் பெயரே "தவிட்டு எண்ணெய்க்காரர்" ! அதோடு நான் இருந்த தெருவில் என் வீடு தான் பெரிய வீடு என்பதால் தெருவிலுல்லோர் " பெரிய வீட்டுக்காரர்" என்பார்கள் . அந்த தெருவில் என் வீடு போல் சிலவீடுகள் தவிர்த்து மற்ற வீடுகள் அனைத்திலும் எடுப்பு கக்கூசு தான் . சக்கம்மா - அப்போது 80 வயதிருக்கும் . இந்த கிழவி தான் வந்து அந்த வீடுகளில் பின்புறமாக வந்து மலம் அள்ளிக்கொண்டு போவாள் . என் வீட்டின் இடது பக்கம் ஒரு காம்பௌண்டில் சந்தில் மலம் அள்ளிக்கொண்டிருந்த சக்கம்மா பயங்கர கூப்பாடு போட ஆரம்பித்தாள். தெரு கூடிவிட்டது . ஒரு வீட்டில் கக்கூசில் எதோ பிரச்சினை . என்னவிஷயம் ?
"தூமை த்துனி பீயோட கிடக்கு . எனக்கு இப்படி இந்த கன்றாவியெல்லாம் பாக்கனும்னு தலையில் எழுதியிருக்கே . தூ தூ கருமம் தூ இன்னைக்கு சோறு எனக்கு எப்படி இறங்கும் . நான் என்ன பாவம் செஞ்சேன் . ஐயோ நான் இப்படியெல்லாமா சீரளியனும் . தூமை துணியை பீயோடு போட்டு கேவலபடுத்திட்டாளே. ஒமட்டிக்கிட்டு வருதே.தூ உவ்வே. " சக்கம்மா தலையில் தலையில் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் . பார்க்க சகிக்கவில்லை .
எனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையில்லாமல் அந்த நேரம் பார்த்து பாரதி தான் ஏனோ ஞாபகத்தில் வந்து தொலைந்தான் .
"விம்மிவிம்மி,விம்மிவிம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே !
எங்கள் பெண்கள் அழுத குரல் மீட்டும் உரையாயோ ?
அவர் விம்மி அழவும் .........."
அப்போது அங்கே அந்த தெருவில் எல்லோர் முன்னும் அந்த மாதவிடாய் துணிக்கு சொந்தக்காரி , சிறுமைப்பட்ட சிறு பெண் அவள் குமுறி சேலையால் முகம் மறைத்து அவமானம் தாங்காமல் விம்மிவிம்மி அழுவதை காண நேர்ந்தது .

தவிட்டு எண்ணெய்

பழனியில் பலவருடங்களுக்கு முன்னால் Harvest rice oil agency எடுத்திருந்தேன் .தவிட்டிலிருந்து தயாரான உணவு எண்ணெய். தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் , நல்ல எண்ணெய் எல்லாம் சமையலுக்கு பயன்பட்ட காலம் ."தவிட்டிலிருந்து எண்ணெயா ? என்னய்யா அநியாயம் ? அது injurious to health இல்லையா ?தேங்காயை கொடுத்தா சாப்பிட முடியும் . நிலக்கடலையை ருசிச்சு சாப்பிடலாம் . அதனாலே தான் சமையல் ருசி . தவிட்டை கொடுத்தா நீங்க சாப்பிடுவீங்களா.தவிட்டு எண்ணையை விக்க வந்துட்டிங்களா ? காலம் கெட்டுபோச்சே." - இந்த டயலாக் தான் எலலா ஹோட்டல் முதலாளிகளும் அப்போது சொன்னது .

RiceBran oil சுத்திகரிக்கப்பட்டு refined oil ஆக்கப்பட்டது என விளக்கினாலும் புரியவைக்க ஆரம்பத்தில் படாத பாடு பட வேண்டியிருந்தது .

ஒரு பெரிய பலசரக்கு கடையில் ஒரு டின் oil முதலில் கொடுக்க சொன்னார் அந்த கடைக்காரர் . ஒரு வாரம் கழித்து வசூலுக்கு போன போது அவர் சத்தம் போட்டு சொன்னார் ." வெள்ளை கலர்லே இருக்கும் . வேறு எண்ணையிலே ஊத்தி கலந்துக்கலாம்நு பாத்தா மஞ்சளா இருக்கு . தேங்காயெண்ணைஇலே இதை எப்படி கலப்படம் பண்ண முடியும் சொல்லுங்க . எண்ணெய் வேண்டாம் திருப்பி எடுத்துக்கங்க " இத்தனைக்கும் அப்போது பல வாடிக்கையாளர்கள் அந்த கடையில் எண்ணெய் ,மிளகாய் , பெருங்காயம் எல்லாம் வாங்கிகொண்டிருந்தார்கள் ஜடம் போல .

Aug 8, 2008

பிரம்ம சூத்ரம்

"கலைமகள் சரஸ்வதி யின் அடக்க சுபாவம் அவளுடைய சாஸ்த்ர ஞானத்தால் தானே. அலைமகள் லக்ஷ்மியும் மலைமகள் பார்வதியும் சற்றே adamant ஆக தோற்றம் தருகிறார்கள் . மிடுக்கு தோரணை கர்வம் எல்லாம் கலந்த தெய்வங்கள் . படிப்பு எப்போதும் ஒரு முதிர்ச்சியை தருகிறதால் தான் சரஸ்வதி அமைதியாகவும் மென்மையாகவும் இருக்கிறாள் "
- நண்பர் Angel ராஜ்குமார் (இவர் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர் ! கலைவாணியின் மேல் அபிமானம் கொள்வது இயல்பு தானே. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி யின் உறவினர். )ஒரு அம்மையாரிடம் இப்படி சொல்லியிருக்கிறார்.
அந்த அம்மணி இதை உடனே மறுத்து சொன்னாராம் . " சரஸ்வதியின் சாந்தமும் அடக்கமும் சாஸ்த்ர, கலை தேர்ச்சி யினால் வந்ததல்ல . அவள் கணவன் பிரம்மன் விஷேசமான சக்தி, அந்தஸ்து உடையவனல்ல என்பதனால் தான் . விஷ்ணுவும் பரமசிவனும், தேஜசும் அந்தஸ்தும் எட்டுக்கண்ணும் விட்டெரிகிற பராக்கிரமமும் உடையவர்கள் . அதனால் தான் லக்ஷ்மியும் , பார்வதியும் கர்வமும் , படாடோபமும் , தோரணையும் கொண்ட பெண் தெய்வங்களாக மிளிர்கிறார்கள் . சரஸ்வதியின் softness அவளுடைய கணவன் பிரம்மனின் அந்தஸ்து சார்ந்த விஷயம் ."


அரசியல் அதிகார பதவியில் , அரசு உயர்பதவியில் உள்ளவர்கள் , மிகப்பெரிய செல்வந்தர்கள் இவர்களுடைய மனைவிமார்களின் உளவியல் பின்னணி , சாதாரணர்களின் துனைவியர்களின் மன இயல்பையும் பற்றி என்ன ஒரு யதார்த்தமாக ,மிக அழகாக அந்தஅம்மையார் அனுபவநோக்கில் Angelராஜ்குமார் அவர்களுக்கு விளக்கியிருக்கிறார் .

ஒரே குடும்பத்தில் சகோதரர்களுக்கு வாழ்க்கை படும் ஓரகத்திகளிலேயே அந்தஸ்து , பொருளாதாரம் வேறுபடும்போது பார்வதி,லக்ஷ்மி , சரஸ்வதி அம்சங்களாக நமக்கு பார்க்க கிடைக்கிறார்களே .

Aug 6, 2008

திருப்பூரில் பத்மா சுப்பிரமணியம்

பத்மா சுப்ரமணியத்தின் பரதநாட்டியம் பார்க்க இதுவரை கொடுத்து வைத்ததில்லை. சென்ற ஞாயிறு தான் இங்கே வாய்த்தது.
"சுகி எவ்வரோ" - தியாகபிரும்மம் கேட்டார் . இதை விட என்ன சுகம் இருக்கிறது . சுகவாசி க்கு தானே சங்கீதமும் பரதமும் கேட்க ,பார்க்க கிடைக்கிறது .

பத்மா திருமணமே செய்துகொள்ளாதது,டைரக்டர் சுப்ரமணியம் அவர்களின் மகள் என்பது எல்லாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். கன்னடத்து பைங்கிளி ,அபிநய சரஸ்வதி என்ற பெயர் பெற்ற நடிகை சரோஜாதேவி க்காக, திரைப்பட வாய்ப்புகளுக்காக பலரிடமும் சிபாரிசு செய்து 195o க்களில் அவரை நடிகையாக்க அரும்பாடு பட்டவர் .
அவருடைய மன்னியின் தாயார் M.S.சௌந்தரம் எழுதிய "சங்கீத நினைவு அலைகள்" ரொம்ப சின்ன புத்தகம் என்றாலும் மிகுந்த மன அவஸ்தை யை ஏற்படுத்திய சுய சரிதை ."அரியக்குடி "யின் மறுபக்கத்தை வெளிப்படுத்திய நூல் .

"விராலிமலை குறவஞ்சி" நாட்டிய நாடகமாக பத்மா சுப்ரமணியத்தின் குழு வினர் நிகழ்த்தி காட்டினர் .
நடனம் என்பது பாதம் எழுதும் கவிதை . பரதநாட்டியத்தில் முகம் ,கண் ,கைகள் என சகல அங்கங்களும் கவிதை எழுதுவது பெரும் சிறப்பு .
பத்மாவுக்கு வயதாகிவிட்டது .இப்படி ஆட வேண்டுமா ?இனிமேல் ஆட வேண்டுமா ? என்று கேட்பதில் நியாயமே கிடையாது . இன்னும் ஒரு முப்பது வருடம் ஆடி பின் உட்காரட்டும் .
'முன்பு போல் இப்போது இல்லை' -உதட்டை பிதுக்குவது சரியாக தோன்றவில்லை .
மேலும் பாடிய வாயும் ஆடின காலும் ஓயாது அல்லவா ?

பத்மா சுப்ரமணியத்திற்கு ஏன் திருமணம் நடக்கவில்லை.அன்று நடன அரங்கத்திலேயே ,திருமணம் நடக்காததற்கு காரணம் என்ன ? என்று என் காதிலும் ஒரு விசித்திர செய்தி விழுந்தது .
ஒவ்வொரு பிரபல பிரமுகரும் " புகழ் விலை" கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது .
There is an optical illusion about every celebrity!


Aug 4, 2008

EVERY HERO BECOMES A BORE ATLAST!

ஹோகனேக்கல் - வீரக்கனல்

AN IMMENSE DIFFERENCE ------குசேலன் -சரணாகதி - பெங்களூர் வசூல்

SLIP OF TONGUE --------------- " இனிமே வார்த்தையை விடும்போது கவனமா இருப்பேன் . வாழ்க்கையில் புது பாடம் கத்துக்கிட்டேன் "
-ரஜினி காந்த்

EVERY HERO BECOMES A BORE ATLAST!
ஆனால் எப்போதுமே ரஜினிகாந்த் தத்துவ காமெடியன் என்பது தெரிந்ததே.
சத்யராஜ் ,சரத்குமார்,விஜயகாந்த் போன்ற ஏனைய "தமிழ்" காமெடியன்களின் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் கொஞ்ச நாளைக்கு .

Aug 2, 2008

நீலாம்பரியுடன் ஷேக்ஸ்பியர்

இந்த வார குமுதத்தை (ஆகஸ்ட் ஆறு , 2008 ) புரட்டினேன் . திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் தனக்கு பிடித்த விஷயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார் . ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது . ரம்யா கிருஷ்ணனுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று

ஷேக்ஸ்பியர் நாவல்கள். எனென்றால் அவருக்கு பிடித்த நாவலாசிரியர் : ஷேக்ஸ்பியர்
எல்லோரும் ஜோரா ஒரு தடவை தலையை பிச்சிக்காம கையை தட்டுங்க .
பாவம் நீலாம்பரி ! அவருக்கு ஹாம்லெட், மாக்பெத் ,கிங் லியர் எல்லாம் நாவல்கள் . குமுதம் தான் தவறுதலாக அப்படி பிரசுரித்து விட்டது எனில் குமுதம் ஆசிரியர் குழு பரிதாபம் .
They must hold a candle to their shame .

அருந்ததியருக்காக இலக்கிய வெளிவட்டம் நடராஜன்

அருந்ததிய இனம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் . மற்ற தலித் இனங்களில் ஊடுருவிய கிறித்துவ மதம் இவர்களை அசைக்கவே முடியவில்லை . சொல்லப்போனால் பிராமணர் துவங்கி அனைத்து ஜாதியினரிலும் கிறித்துவ மதம் ஊடுருவி பலரை மதமாற்றம் கடந்த நூற்றாண்டுகளில் செய்திருக்கிறது. அப்படி ஒரு வைராக்கியம் அருந்ததிய மக்களிடம் இருந்திருக்கிறதே . இதைப்பற்றி அறிய வந்தபோது "நிஜமாகவா நிஜமாகவா " - ஆச்சரியமாக இருக்கிறது .

1996 ம் வருடம் ராஜபாளையத்தில் ஜஸ்டிஸ் மோகன் கமிசன் முன் இந்த அருந்ததிய மக்களுக்காக ஆஜர் ஆகி தன்னையே ஒரு அருந்ததிய பிரஜை ஆகவும் அதனால் அவர்களின் பிரதிநிதி எனவும் முன்னின்று இலக்கிய வெளி வட்டம் நடராஜன் அண்ணாச்சி ( ஜனகப்ரியா )பேசினார் - "அய்யா! வணக்கமுங்க .ஊருலே 18 ஜாதி இருந்தா அந்த பதினெட்டிலும் கீழானவங்க நாங்க . நீங்க கீழ்சாதின்னு சொல்றவங்க கூட எங்களுக்கு தண்ணி குடுக்க மாட்டங்க . பள்ளர் பறையர் எல்லாம் எங்களுக்கு எஜமான் தானுங்க .

எல்லோரிடமும் நாங்க அனுபவிக்கிற கொடுமை கொஞ்சநஞ்சமா . பீ அள்ளுறதை நாங்க செய்றோம் . ஊரிலே யாரும் செத்தா நாங்க தான் வெட்டியானா நின்னு எரிக்கிறோம் .எங்க மேல வீச்சம் அடிக்குதன்னா எப்படிங்க .

நாங்க சோப் போட்டு குளிக்கிறது கிடையாதுன்னா ? சோப் குடுங்க வீடு கொடுங்க எங்க பிள்ளைகளை படிக்க வையுங்க " இப்படி ஆரம்பித்து வாங்கு வாங்கு என்று அருந்ததிய இனத்து அவமானங்களையும் , சிறுமை ,வாழ்க்கை போராட்டங்களையும் பிட்டு பிட்டு வைத்த போது நீதிபதி அருகில் இருந்த தாசில்தாரும், சப் - கலக்டர் இருவரும் சில விஷயங்களை ஆட்சேபிக்க முயன்ற போது ஜஸ்டிஸ் மோகன் அவர்களை கடிந்து கொண்டு " அவர்கள் பிரச்சனைகளை பேச விடுங்க "என நடராஜனை தொடர்ந்து பேச அனுமதித்து இருக்கிறார் .

அருந்ததிய இனத்துடன் நெருங்கிப்பழகி அவர்களின் உறவினராகவே ஆகி விட்டவர் நடராஜன் அண்ணாச்சி . சிலவருடம் முன் மாற்கு உடன் பணியாற்றி அருந்ததிய மக்களின் குழந்தை களுக்கு கல்வி கற்பித்த போது அவர்களின் பிரச்சினை அனைத்தையும் அறிய அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் தன்னையே அருந்ததியர் மக்களில் ஒருவர் ஆக்கி மோகன் கமிசன் முன் ஆஜர் ஆனார் .

Aug 1, 2008

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான் . குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன் . 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன் .

ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான் . Baby of the poets !26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .

இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும் "கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்

ரைம்போ , கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான் ?

"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனதில வச்சுகிட்டு

தவிக்கிறேன் யா . அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம் ."

என்று

அல்லாடுறான்களே . சான்சே இல்லை .