Share

Aug 16, 2008

விம்மியழவும் திறம் கெட்டு .....

இவள் பார்க்காத சீரழிவே இல்லை . கட்டிய கணவன் குடிபோதையில் ஆற்றுவெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனதை நேரடியாய் பார்த்தவள் . விதவையான பின் வேறு சாதிக்காரனோடு ஓடிபோய் பத்து வருடத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றாள். இரண்டாவது கணவன் முதல் கணவன் போலவே மொடாக்குடியன் . ரேசன் கடையில் பொருள் வாங்கி விற்று ,இன்னும் பலவகையில் போராடி தான் ஒன்பது பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊற்றினாள்.நான்காவது இரட்டைபிள்ளைகள். ராமன் லக்ஷ்மணன் என்று தான் பெயர் வைத்தாள்.
எட்டு வயது நடக்கும்போது ராமனுக்கு உடம்பு ரொம்ப முடியாமல் அரசு மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினாள்.ஆனால் பிள்ளை இறந்துவிட்டான் . டாக்சியில் பிணத்தை கொண்டு போக முடியுமா?
டவுன் பஸ்ஸில் பிணத்தை தூக்கிக்கொண்டு ஏறினாள் . பொங்கி வரும் அழுகையை சிரமப்பட்டு அடக்கிகொண்டாள் . அழுதால் அவ்வளவு தான் . 


திருச்சி பெரிய ஆஸ்பத்திரியிலிருந்து எடமலைபட்டி புதூர் வரை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடும் . பஸ் ஸ்டாண்டில் இருபது நிமிடம் பஸ் நின்று பிறகு தான் கிளம்பும் .பஸ் ல் நல்ல கூட்டம் . இவள் நின்று கொண்டு கையில் பிணத்துடன் . பக்கத்தில் நிற்பவர்கள் எரிச்சலுடன் 'எம்மா , பிள்ளையை இறக்கி விடும்மா . இந்த நெரிசல்லே இவனை தூக்கிகிட்டு . பத்து வயசு பய நிக்க மாட்டானாக்கும் ."
" தூங்கிறவனை எழுப்பிவிட்டு நிறுத்தும்மா . "உடம்பு சரியில்லைங்க "
"உடம்பு சரியில்லையா " - ஆளாளுக்கு , கண்டக்டர் உள்பட திட்டுகிறார்கள் .இவள் பதிலே பேசவில்லை .
எடமலைப்பட்டி புதூர் ஸ்டாப் வந்ததும் நெரிசலில் இருந்து இறங்கி தரையில் பிள்ளையை போட்டு விட்டு வெடித்து அழ ஆரம்பிக்கிறாள் .

"விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே !
துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத குரல் மீட்டும் உரையாயோ ?
அவர் விம்மியழவும் திறம் கெட்டு ப்போயினர். "






2 comments:

  1. இது என்ன நிகழ்வு.. உண்மையில் நடந்ததா.. என்ன..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.