Share

Aug 2, 2008

அருந்ததியருக்காக இலக்கிய வெளிவட்டம் நடராஜன்

அருந்ததிய இனம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் . மற்ற தலித் இனங்களில் ஊடுருவிய கிறித்துவ மதம் இவர்களை அசைக்கவே முடியவில்லை . சொல்லப்போனால் பிராமணர் துவங்கி அனைத்து ஜாதியினரிலும் கிறித்துவ மதம் ஊடுருவி பலரை மதமாற்றம் கடந்த நூற்றாண்டுகளில் செய்திருக்கிறது. அப்படி ஒரு வைராக்கியம் அருந்ததிய மக்களிடம் இருந்திருக்கிறதே . இதைப்பற்றி அறிய வந்தபோது "நிஜமாகவா நிஜமாகவா " - ஆச்சரியமாக இருக்கிறது .

1996 ம் வருடம் ராஜபாளையத்தில் ஜஸ்டிஸ் மோகன் கமிசன் முன் இந்த அருந்ததிய மக்களுக்காக ஆஜர் ஆகி தன்னையே ஒரு அருந்ததிய பிரஜை ஆகவும் அதனால் அவர்களின் பிரதிநிதி எனவும் முன்னின்று இலக்கிய வெளி வட்டம் நடராஜன் அண்ணாச்சி ( ஜனகப்ரியா )பேசினார் - "அய்யா! வணக்கமுங்க .ஊருலே 18 ஜாதி இருந்தா அந்த பதினெட்டிலும் கீழானவங்க நாங்க . நீங்க கீழ்சாதின்னு சொல்றவங்க கூட எங்களுக்கு தண்ணி குடுக்க மாட்டங்க . பள்ளர் பறையர் எல்லாம் எங்களுக்கு எஜமான் தானுங்க .

எல்லோரிடமும் நாங்க அனுபவிக்கிற கொடுமை கொஞ்சநஞ்சமா . பீ அள்ளுறதை நாங்க செய்றோம் . ஊரிலே யாரும் செத்தா நாங்க தான் வெட்டியானா நின்னு எரிக்கிறோம் .எங்க மேல வீச்சம் அடிக்குதன்னா எப்படிங்க .

நாங்க சோப் போட்டு குளிக்கிறது கிடையாதுன்னா ? சோப் குடுங்க வீடு கொடுங்க எங்க பிள்ளைகளை படிக்க வையுங்க " இப்படி ஆரம்பித்து வாங்கு வாங்கு என்று அருந்ததிய இனத்து அவமானங்களையும் , சிறுமை ,வாழ்க்கை போராட்டங்களையும் பிட்டு பிட்டு வைத்த போது நீதிபதி அருகில் இருந்த தாசில்தாரும், சப் - கலக்டர் இருவரும் சில விஷயங்களை ஆட்சேபிக்க முயன்ற போது ஜஸ்டிஸ் மோகன் அவர்களை கடிந்து கொண்டு " அவர்கள் பிரச்சனைகளை பேச விடுங்க "என நடராஜனை தொடர்ந்து பேச அனுமதித்து இருக்கிறார் .

அருந்ததிய இனத்துடன் நெருங்கிப்பழகி அவர்களின் உறவினராகவே ஆகி விட்டவர் நடராஜன் அண்ணாச்சி . சிலவருடம் முன் மாற்கு உடன் பணியாற்றி அருந்ததிய மக்களின் குழந்தை களுக்கு கல்வி கற்பித்த போது அவர்களின் பிரச்சினை அனைத்தையும் அறிய அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் தன்னையே அருந்ததியர் மக்களில் ஒருவர் ஆக்கி மோகன் கமிசன் முன் ஆஜர் ஆனார் .

2 comments:

  1. Hope you have seen this - http://www.keetru.com/visai/apr08/asokan.php

    Regards
    Venkatramanan

    ReplyDelete
  2. Thank you venkatramanan. I have read that article of Asokan now

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.