Share

Dec 2, 2008

எம்பார் விஜயராகவாச்சாரியார் ஹரிகதை

சுவாமிநாத ஆத்ரேயன் குபராவின் சிஷ்யர்.' மாணிக்க  வீணை 'என்ற நல்ல கதை எழுதியவர். இவர் இசைகட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார். அவர் எழுதிய விஷயம் ஒன்று ஹரி கதா 'எம்பார்' பற்றியது.

கும்பகோணத்தில் ஒரு பாகவதர். இவர் பெயர் பற்றி சுவாமிநாத ஆத்ரேயன் குறிப்பிடவில்லை.  அரியக்குடி யின் சிஷ்யர். திருவையாறு அண்ணா சாமி பாகவதரிடம் ஹரி கதை பயின்றவர். வித்வத் வேறு பிராபல்யம் வேறு அல்லவா. குடத்திலிட்ட விளக்கு.

கும்பகோணத்தில் ஒரு பெரிய பணக்காரர். அவர் மகளுக்கு கல்யாணம். அந்த பெண் இந்த குடத்திலிட்ட விளக்கிடம் தான் இசை பயின்றவள். கல்யாண பெண் தன் திருமணத்தில் தன் இசை ஆசிரியர் தான் ஹரிகதா செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாள். ஆனால் அவர் தந்தை மறுத்துவிட்டார். அன்று பிரபலமான எம்பார் தான் ஹரிகதை செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். இந்த உள்ளூர் பாகவதரை கூப்பிட்டு " உமக்கு சம்பாவனை உண்டு. பத்துக்கு ஆறு சோமன் உண்டு. ஆனால் எம்பார் ஹரிகதை தான் என் பெண் கல்யாணத்திற்கு. " என்று சொல்லி விட்டார்.


இந்த பாகவதர் புறப்பட்டு எம்பாரை போய் பார்த்தார்.அழாக்குறையாக விம்மினார்.இது தனக்கு அவமானமாயிருக்கிறது என்றார். எம்பார் தீர்க்கமாக சொன்னார் " உம்முடைய ஹரிகதை தான் அந்த கல்யாணத்தில் நடக்கும். நான் பார்த்துகொள்கிறேன். உம்முடைய மகள் பின் பாட்டு தானே. என் தம்பி நரசிம்மன் மிருதங்கம் வாசிப்பான். கவலைப்படாமல் போய் வாரும்." என்றார்.


கல்யாணத்தன்று எம்பார் தன் தம்பிகளுடன் வந்தார் .ஹரிகதை மாலை ஐந்து மணிக்கு. எம்பார் மூன்று மணியிலிருந்து பலமுறை பாத்ரூம் போய் வந்தார்.
ஐந்து மணிக்கு பாயில் கால் நீட்டி மல்லாந்து படுத்துவிட்டார்.
பெண்ணின் தகப்பனார் " என்ன இது ?" என்றார். எம்பார் சொன்னார் " எனக்கு உடம்பு படுத்தறது. என் நண்பர்பாகவதர் உங்கள் குடும்ப வித்வான் தானே. அவர் சொற்பொழிவு செய்யட்டும். அவர் மகள் பின் பாட்டு. என் தம்பி நரசிம்மன் மிருதங்கம் " என்றார்.
கல்யாண பெண் னுடைய தகப்பனார் எரிச்சலுடன் பாகவதரை கூப்பிட்டு சபையில் நிறுத்தினார். குடும்ப வித்வான் உற்சாகமாக பஞ்சபதீ பாடினார். அரைமணி நேரத்தில் எம்பார் வந்து சபையில் அமர்ந்தார்.ஹரிகதா பிரமாதமாய் நடந்தது. பணக்காரர் எம்பாரின் சம்பாவனையை கொண்டுவந்தார். அதை வாங்கி பாகவதரிடம் கொடுத்து பொன்னாடையையும் அவருக்கு போர்த்தி விட்டார் எம்பார் விஜயராகவாச்சாரியார்!

1 comment:

  1. ராஜநாயஹம்: உங்கள் வாழ்க்கை அனுபவங்களும், ஞாபகசக்தியும் என்னை பிரமிக்கவைக்கின்றன.

    இன்னொரு முக்கிய குணம் இப்போது பரவலாக நிறைந்திருக்கும் பார்ப்பனத்துவேஷம் உங்களிடம் அறவே இல்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜாதிவெறியை அரசியல் லாபங்களுக்காக கையாண்டு வரும் இக்காலத்தில் உங்கள் பரந்துபட்ட பார்வை மகிழ்ச்சியை அளிக்கிறது.

    Keep it up. God bless you!

    பாரதி மணி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.