நாகார்ஜுனன் ப்ளாகில் தமிழவனின் ' சமூகமும் இரட்டை நிலையும் ' என்ற கட்டுரை( 'உயிரோசை 'யில் பிரசுரமானது ) வெளியிடப்பட்டுள்ளது . அதில் இருந்து ஒரு நான்கு பாரா மட்டும் இங்கே தருகிறேன் . முழு கட்டுரையும் படிக்க Nagarjunan.blogspot.com பார்க்கவும்
"மிக மோசமான மன்னராட்சியின் கூறுகள் நமது நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றன. இந்திய மக்களாட்சிக்கு முன்னின்று உழைத்த ஜவகர்லால் நேரு இறந்ததும் மன்னராட்சி முறையில் பின்பற்றும் வாரிசு ஆட்சி தொடங்குகிறது. அதாவது நமது தலை (அறிவு) நாடாளுமன்ற அரசியலை அறிந்தாலும் நமது இதயம் (உணர்வு) மன்னராட்சிக்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறது. ஓர் அடுக்கை இன்னோர் அடுக்கு அமுக்கி வைக்கிறது.
.....
சமீப நாட்களில் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு வீர வணக்கம், பம்பாய் தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் புரிந்த கமாண்டோக்களுக்கு வீரவணக்கம் என்று புதியதோர் உணர்வலையில் கம்யூனிஸ்டுகளும்கூட விழுந்ததைப் பார்த்தோம். அரசுகள் உதிரும் (States will wither away) என்பதுதான் கார்ல் மார்க்ஸின் கருத்து. ஒரே அரசாங்கம், ஒரே தேசம், உலகம் முழுவதும் என்பதுதான் மார்க்ஸின் கருத்து. தேசம் பற்றிய விஷயத்தில் மார்க்ஸ் ஒரு அனார்க்கிஸ்ட்; அதாவது அனார்கிஸம் என்பது ஒரு தத்துவம். அவர்களுக்குச் சில சித்தாந்தங்கள் உண்டு. அதிமுக்கியமான சித்தாந்தம், அனார்க்கிஸ்டுகள் அரசுகளை, தேசங்களை ஆதரிப்பதில்லை. எனக்குப் பல வேளைகளில் தோன்றும், நாம் இன்னும் போர்களைக் கைவிடப்பயிலாததால் காட்டுமிராண்டிகள்தாமே என்று. ஃப்ராய்டைப் படித்த பிறகுதான் 'சாவு உணர்வுக்கான' அகில உலக வடிவமே, போர், யுத்தம், என்று பட்டது.
'கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்' என்ற வரியை எழுதிய பாரதிதாசனை நினைத்து நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது. வினோபா பாவே, பாகிஸ்தானும் இந்தியாவும் யுத்தம் செய்து கொண்டிருந்தபோது "இருபக்கமும் சாகிறவர்களை நினைத்து அவதிப்படுகிறேன்" என்று சொன்னபோது எனக்கு ஒருகணம் உலகம் அமைதியாகி ஸ்தம்பித்தது என்று பட்டது. ஆனால் இன்று இப்படி ஒரு குரலை பாரதத்தில் கேட்க முடியவில்லை. எனது இந்தியா என்ற உளறலைத்தான் கேட்க முடிகிறது. லங்கேஷ் என்ற எழுத்தாளர் கன்னடத்தில் எழுதினார். இப்போது அவர் உயிருடன் இல்லை. அவருடைய ஒரு கவிதையின் தலைப்பு: "தேஷபக்தி சூளேமகனே" என்பது. (சூளே-விபச்சாரி; மகனே-புதல்வனே) இது அனார்க்கிஸத்தின் உள்ளுந்துதலில் இருந்து வரும் வரி. ஆனால் பரிதாபம், நமது மார்க்ஸிஸ்டுகள் தேச பக்தியால் தலையில் கொடி எடுத்து ஆடுகிறார்கள்.ஆனால் சற்று ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது கேரளத்தில் அய்யப்பனுக்கு நேர்ந்து சபரிமலை போகிறவர்கள் கம்யூனிஸ்டாகவும் இருப்பதுதான் நேர்மையான காரியம்; தன் கலாச்சாரத்தை விட்டுவிடாத குணம் இது. தன்னுடைய மன்னர்களை மறக்காமல் நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் கொண்டு வருவதுதான் ஒரு வகையில் பாரதக் கலாச்சாரத்தின் பண்பு. இதில் காணப்படும் இரட்டை முகம், நமது இயல்பு.
....
தேசம் என்ற எதார்த்தம் பற்றிய கருத்துகளின் தொகுப்பை தேசியம் என்கிறோம். இது ஒரு கற்பனை என்று தொண்ணூறுகளில் சிலர் பரப்பினார்கள். ஆனால் இந்தக் கருத்தைப் பற்றி முதன்முதலாக நூல் எழுதியவரின் பெயர் பெனடிக்ட் ஆண்டர்ஸன். அவர் நூலில் எங்கும் இந்தக்கருத்து இல்லை; ஆங்கிலத்தில் Imagined Communities என்ற பெயரில் பெனடிக்ட் ஆண்டர்சன் எழுதிய நூலில் வரும் கருத்து - தேசியம் என்பது பல நிலைப்பாடுகளால் உருவாகிறது; நமக்குத் தெரியாத மனிதர்களோடு நாம் வைக்கிற உறவு, ஒரு எல்லையால் அல்லது மொழியால், அல்லது ஒரேவகை சீதோஷ்ணநிலையால் தீர்மானிக்கப்படுகிறது; நமக்குத் தெரியாதவர்களோடு உள்ள உறவு பழைய சமூகங்களில் இரத்த உறவு சார்ந்ததாய் இருந்தது; வேறுசில சமூகங்களில் மதம் சார்ந்ததாய் இருந்தது; புதிய தேசியம் இத்தகைய பல்வேறு தன்மைகளால் உருவாகிறது என்பதுதான் இந்த நூலின் கருத்து. நாம், உறவு இருக்கிறது என்று யூகித்துக்கொள்வதன் அடிப்படையில் தேசியம் உருவானதென்று கூறுவது வேறு; கற்பிதம் என்று பொய் போல் அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது வேறு. தேசியம் எந்த அடிப்படையும் அற்றதல்ல. மூல ஆசிரியன் பயன்படுத்தாத கருத்தை அகில உலகக் கருத்து என்பதுபோல் சிலர் கருதினர்."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.