உலகெங்கும் தமிழ்ச்சமுதாயத்தில் நடப்பதைக் காணும்போது, ஹெகல் கூறியதுபோல வரலாறு நம்மை ஏமாற்றிவிடும் சாத்தியங்களே அதிகம். இப்படி விளிம்பில் நிற்கும்போது வரலாற்றை ஓசையுடன் நிர்ணயித்த சிலர் சட்டென்று மறைவது முன்பும் நடந்திருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். வீழும் கடவுளர் போல அவர்.. ஆனால் அவர் வீழ்வதும் சப்தமின்றி. Not a whimper.
- நாகார்ஜுனன் " வரலாறும் ஓசையும் மௌனமும் " பதிவில்.
....................................................
ஆயிரக்கணக்கான மக்கள் சொல்லமுடியாத துக்கத்தில் வாழ முடியாமல் அல்லல்படும்போது தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக ஒரே குரலில் உரிமைகேட்கும் தலைமை இல்லையென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ...
..இன்று இந்தியாவின் நிலை இதுதான் - இலங்கைக்கு அந்நாட்டுத்தமிழர்களுக்கெதிரான போரில் உதவாவிட்டால் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கை அரசின் நண்பர்களாகி விடுவார்கள். ....
..இந்திய வெளிவிவகாரத்துறையினர், தனது இலங்கைக்கொள்கையைப் பற்றிக் கூறும்போது இரட்டைச்சாலைக் கொள்கை ((double-track policy) என்று கூறுகிறார்கள். எதிரும் புதிருமான போக்கைக்கூட இந்தக்கொள்கை கொண்டிருக்கும் என்பது இதன் பொருள். தமிழகம் ஒரேயடியாய் எதிர்த்தால் தமிழகத்தைத் திருப்திப்படுத்தும் கொள்கையைக்கூட இந்தியா எடுக்க முடியும்...
..2007 நவம்பர் மாதம் இலங்கைக்கப்பற்படையின் வைஸ்-அட்மிரல் வஸந்த கரன்னகோட என்பவர், பத்தாயிரம் டன் ஆயுதங்களுடன் வந்த புலிகளின் ஆதரவுக்கப்பல் இந்தியக் கப்பற்படையின் உதவியுடன் அழிக்கப்பட்டது என்றார். அதன்பிறகு இந்தியக் கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா இவ்விஷயத்தை ஒத்துக்கொண்டார். இது இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கெதிரான யுத்தத்தைச் செய்கிறதென்பதற்கான சான்றுதானே.
இது மட்டுமல்ல. 2007 ஆம் ஆண்டு, இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இலங்கையிடம் உங்களுக்கான யுத்தத்தளவாடங்களை நாங்கள் தருகிறோம், சைனாவிடமும் பாகிஸ்தானிடமும் போகாதீர்கள் என்று வாக்குக்கொடுத்தார். அது எப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தெரியுமா? கருணாநிதி அவர்களை நாராயணன் சந்தித்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அதாவது 2007-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி.அன்றிலிருந்து இந்தியா தொடர்ந்து இலங்கை நடத்தும் தமிழ்மக்களுக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவிபுரிந்துகொண்டேயிருக்கிறது....
...ஊடகங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியாதபடி இந்தியா, ராஜபக்ஷ அரசுக்கும், ராஜபக்ஷவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஜே.வி.பி. என்ற இலங்கை தேசியவாத இடதுசாரிக்கட்சியின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கும் உதவி செய்கிறது. ஜே.வி.பி. இந்தியாவை எதிர்க்கிற கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் இருபோக்குகள் உண்டு. ஒன்று நட்புநாடாக இந்தியாவைப் பார்க்கும் போக்கு. இன்னொன்று பகைநாடாகப் பார்க்கும் போக்கு. பிரேமதாசா பகைநாடாக இந்தியாவைப் பார்த்த நேரடி அரசியல்வாதி. ஜெயவர்த்தனே பகை நாடாகப் பார்த்தாலும் அகில உலக ராஜதந்திரம் தெரிந்தவர். எனவே நட்பு நாடுபோல் கூறிக்கொண்டே பகைநாட்டை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தியவர். பிரபாகரனும் பிரேமதாசாவைப் போன்றவர். ராஜதந்திரம் பயன்படுத்தத் தேவையில்லை என்று கருதுகிறவர். பிரேமதாசாவும் பிரபாகரனும் ஒத்த நிலை அரசியல் நடத்தியவர்கள். ஆனால், அனைத்துலக ராஜாங்க விஷயங்கள் அன்றைய இலங்கையின் இந்தியத்தூதர் தீட்சித் கூறியதுபோல் ஒழுக்கப்பார்வைக்கு அப்பாற்பட்டு நடப்பவையாகும். தீட்சித் பயன்படுத்திய ஆங்கிலச் சொல் amoral. உண்மையைப் புரிந்து கொள்ள இச்சொல் மிகவும் பயன்படும்.
தமிழ்மக்களிடையில் இந்த அறிவைக் கொண்டு வந்து சேர்த்த அறிவுத்துறையின் பெயர் அமைப்பியல். அமைப்பியலும் ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டு அகில உலகமும் தனிமனித அகமும் இயங்குகின்றன என்று கூறுகிறது. மனித விழுமியங்கள் அமைப்பின் விழுமியங்களாகப் பரிமாற்றம் பெற்று சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டன. மனிதப்பரிதவிப்பும் பிரலாபமும் உயிரழிவும் உண்மைகளல்ல. இவை அமைப்பின் ஒழுக்கமாகப் பரிமாற்றம் செய்யப்படும்போதுதான் கவனிக்கத்தக்க விழுமியமாக மாறுகின்றன. எனவே தன்னை அழித்துக்கொள்கிற முத்துக்குமார்களை யாரும் கவனிக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக உயிருடன் இருந்து செயல்படுகிறவர்களை சமூகம் கவனிக்கும். தற்காலச்சமூகம் கவனிக்கிற முறையில் ஈழ அவலத்தை அமைப்பாக்கம் சார்ந்த கவனிப்பாக மாற்றுகிறவர்களே இன்று தேவை. தமிழ்ச்சமூகம் பிழைக்க வேண்டுமென்றால் இத்தகைய அறிவுமுறையாக, நிகழ்ச்சிகளையும் பேரவலங்களையும் மாற்ற வேண்டியிருக்கிறது. உலகம் வேறுமுறையில் செயல்படுகிறதென்று தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலகின் எல்லா அறிவையும் கொண்டுவந்து தமிழ்மொழியை அகில உலக அறிவுள்ள மொழியாக ஆக்குவதே இதற்கான தேவை. பாரதி, வரலாறு திரும்பிப்படுக்கிற ஒருகணத்தில் வாழ்ந்து மறைந்ததால் இதைப்பற்றி யோசித்திருக்கிறான்.
- தமிழவன் " தமிழர்கள் உலகை புரிந்து கொள்ளவேண்டும் ."பதிவு
தமிழவன் குறிப்பிடும் இரட்டை சாலை கொள்கை பற்றி நாகார்ஜுனன் காட்டும் சரித்திர விளக்கம் கீழே :
1989-91 காலகட்டத்தில் இலங்கை ஜே.வி.பி. அமைப்பு இனவாத அரசியலைக் கையிலெடுத்து இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தும் இந்திய விஸ்தரிப்பு வாதம் எனக்கூறியும் ஆயுதமேந்திக் கலகம் செய்தது. இந்த அமைப்பின் தலைவர்கள், ரோஹண விஜயவீர உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அரசுசார்புக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். அதே சமயம் அந்த அமைப்பின் துணைத்தலைவர் சோமவம்ஸ அமரசிங்க இலங்கையிலிருந்து தப்பினார் - இந்திய உதவியோடு, திருவனந்தபுரம் வழியாகத்தான். இதைத்தான் இரட்டைச்சாலை அயலுறவுக்கொள்கை என்பது. இன்னும் இதுபோலப் பலதைக் காட்ட முடியும்.
திணை இசை சமிக்ஞை
.................................................................................
நாகார்ஜுனனின் தீர்க்க தரிசனம் ,தமிழவனின் நிதர்சனம் இரண்டும் சேர்ந்து
R P ராஜநாயஹம் நினைவில் கொண்டுவந்த கவிதை கீழே :
நட்சத்திரங்களை விட அதிகம் பேசுவது
இடையே உள்ள இருள்
- பிரமிள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.