Share

Feb 18, 2009

டூரிங் டாக்கீசும் அமெரிக்கன் சென்டரும்

அந்த காலத்தில் டூரிங் டாக்கீஸ் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் . கழுத்தில் தங்க செயின் ,மோதிரம், உடை - ஜீன்ஸ் பேன்ட் ,டி ஷர்ட் தரை டிக்கெட்டில் மணலில் உட்கார்ந்து தான் பார்ப்பேன் . டூரிங் டாக்கீஸ் என்றாலே மணலில் திரை முன்னால் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பது தான் சுகம் . அப்படி ஒரு முன்னூறு தடவை கல்லூரி நாட்களில் , அதன் பின் கூட பல பழைய படங்கள் தத்தனேரி மாருதி , விளாங்குடி ரத்னா டூரிங் டாக்கீஸ் ரெகுலர் தரை டிக்கெட் கஸ்டமர் நான் .

அப்படி விளாங்குடி ரத்னா தியேட்டர் ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படம் பார்க்க போயிருந்தேன் . இந்த படம் ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான்.பழைய படங்களில் வருகிற துணை நடிகர்கள் சாதாரணமாக மக்களுக்கு தெரியாத நடிகர்களை கூடயார் எவர் என நன்கு நான் தெரிந்து வைத்திருப்பேன் . உதாரணமாக பூபதி நந்தாராம் அந்த அலிபாபா படத்தில் ஒரு துணை வில்லன் . இவர் பின்னால் 'லாரி டிரைவர்' என்ற ஆனந்தன் நடித்த படத்தில் கூட துணை வில்லன் . அப்போது நான் விளாங்குடி தியேட்டர் போயிருந்த போது 'இவர் உயிருடன் இல்லை . இவர் மகன் சுரேந்தர் என்பவர் 'சுதாகர் ' போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்' என்பது வரை எனக்கு தெரியும் .

தரையில் அமர்ந்து படம் பார்த்துகொண்டிருந்த போது அப்போது அறுபது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் அந்த படத்தின் காட்சிகள் பற்றி விளக்க ஆரம்பித்தார் . சாதாரணமா ' சும்மா பேசாம படத்தை பாரு பெருசு . நாங்க பார்த்த படம் தான் . எங்களுக்கே கதை சொல்றியா போய்யா ' என்று தான் மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள் . ஆனால் நான் அந்த பெரியவரை கனப்படுத்த விரும்பி விட்டேன் . தங்கவேலு வரும்போது பாமரன் போல ' இவன் நம்பியாரா ' என்பேன் . அவர் குஷியாகி விட்டார் . 'இல்லே . இவன் சிரிப்பு நடிகர் தங்கவேலு ' என்று எனக்கு அறிவுறுத்தினார் . வீரப்பாவை வரும்போது ' இந்த ஆள் யார் ' என்பேன் . அவர் புளகாங்கிதமாக ' இவனை தெரியாதா . வில்லன் வீரப்பா . நீ வஞ்சிகோட்டை வாலிபன் பார்த்ததில்லையா ? நாடோடி மன்னன் பார்த்ததில்லையா ?' மடையனை பார்ப்பது போல என்னை கேட்டார் .வீரப்பாவுக்கும் எம்ஜியாருக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும் செயற்கையாய் பதட்டத்துடன் ' எம்ஜியார் செத்துடுவாரா ?அயோக்கியன் எம்ஜியாரை கத்தியால குத்திடுவானா ' என அவரிடம் என் சந்தேகத்தை கேட்டுக்கொண்டே தான் இருந்தேன் . அவர் ' எம்ஜியார் எப்பவுமே சாக மாட்டார் . கடைசியா வில்லனை கொன்று விடுவார் . கவலைபடாதே . பேசாம படத்தை பார் ' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கதையை முன்னதாக சொல்லிகொண்டிருந்தார் . பானுமதியை 'யார் ஜெயலலிதாவா இது ?' -நான் அவரை வினவினேன் . அவர் ரொம்ப குஷியாகி எனக்கு பல பாலபாடங்கள் சொல்ல ஆரம்பித்தார் . சக்ரபாணி எம்ஜியாரின் கூட பிறந்த அண்ணன் என அவர் சொன்ன போது நான் 'அப்படியா கூட பிறந்த அண்ணனே படத்திலும் அண்ணனா வர்றானே !' என அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு கதை சொன்ன பெரியவருக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்து விட்டேன் . என் கூட வந்த நண்பர்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை . நான் ' காரியத்தை கெடுத்து விடாதீர்கள் . அவருக்கு இந்த சந்தோசம் தருவது என் கடமை ' என்று எச்சரிக்க வேண்டியிருந்தது .

கடைசி சண்டை போது ' எம்ஜியார் செத்துடுவாரா ' என்று மீண்டும் பதற ஆரம்பித்தேன் . ' சாக மாட்டார் . இப்ப வேடிக்கையை பாரு . வீரப்பா ஆள் காலி ' பெரியவர் தேறுதல் சொன்னார் .

படம் முடிந்தவுடன் விளக்கை போட்டவுடன் பெருமையாக என்னை பார்த்தார் . அவர் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தயாரித்து இயக்கியவர் போல பெருமிதமாக சொன்னார் " நான் இல்லையின்னா உனக்கு இன்னைக்கு இந்த படம் தலையும் புரிந்திருக்காது . வால் கூட தெரிஞ்சிருக்காது ."

வெளியே வரும்போது சொன்னார் " பழைய படம் நிறைய பார்த்தேன்னா புது படங்களே பார்க்க மாட்ட "

அதற்கு மறு நாள் சென்னை சென்றேன் . அமெரிக்கன் சென்டெரில் Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் இரண்டாம் நாள் பார்க்க கிடைத்தது . அந்த படத்தையும் என்னால் இன்று வரை மறக்க முடியாது . ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து The Sugarland Expressபடத்தை பார்த்தார் என்பதால்.

அவர் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு இருநூறு தடவையாவது பாடியிருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரிமரத்தடி ,வைகையாற்று மணல் , பூங்காக்கள்இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை ஒரு ஆயிரம் தடவை பாடியுள்ளேன் . இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது என நண்பர்களும் உறவினர்களும் இன்று கூட சொல்கிறார்கள் .

பி பி ஸ்ரீநிவாஸ்பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போதுபுன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார். படம் பார்க்கும்போது அவர் என்னிடம் அதிகம் பேசவில்லை.The Sugarland Express படத்தை பார்ப்பதில் இருவருமே ஒன்றி போய்விட்டோம் என்பது தான் உண்மை .

.......

இந்த பதிவின் பின்னூட்டங்களுக்கு என் பதில் .

1 .டோண்டு சார் ! ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ' படத்தில் எம் ஆர் ராதா முடி திருத்தும் கலைஞராக வந்து சலூனில் வாடிக்கையாளருக்கு முடி வெட்டியபடி " சொந்தமும் இல்லே ! ஒரு பந்தமும் இல்லே ! சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் ! நாங்க மன்னரும் இல்லே , மந்திரி இல்லே , வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார் ." என்று முடி திருத்தும் தொழிலை கௌரவித்து அதன் மகத்துவத்தை பற்றி வெங்கடேஷ் குழுவினர் பாடிய பாடலுக்கு நடித்திருக்கிறார் . இந்த படத்தில் அவருக்கு இந்த ஒரு பாடல் மட்டுமே .இது டூயட் பாடல் அல்ல கோரஸ் உண்டு .

."காதல் நிலவே , கண்மணி ராதா " ஜெமினி கணேசன் சாவித்திரியை பார்த்து பாடும் பாடல் .

இன்னொரு பாடல் " இளமை கொலுவிருக்கும் " ஜெமினிக்கு ஸ்விம்மிங் பூலில் .

சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் டூயட் ' Hello Mr! jaminthaar how do you do?Ok teacher! Ok ! How do you do?"

ஒரு உபரி தகவல் ! எம் ஆர் ராதா செய்த ரோல்களில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஹலோ மிஸ்டர் ஜமிந்தாரில் ராதா அவர்களின் கதா பாத்திரம் தான் ! அவர் இதை என்னிடம் பரவசத்தோடு சொன்னார் ! எழுத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாலையா இந்த படத்தில் ட்விஸ்ட் டான்ஸ் ஆடுகிறாரா ? எனக்கு சரியாக நினைவில்லை .

2 .இங்கே இந்த பதிவில் கிண்டலாக வஞ்சபுகழ்ச்சி பின்னூட்டம் இட்டுள்ள அனானி அவர்களுக்கு ஒரு செய்தி !

சில வருடம் முன் இயக்குனர் மகேந்திரன் -விடுதலை புலி தலைவர் பிரபாகர் சந்திப்பு பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது . அதில் விடுதலை புலி பிரபாகர் அவர்கள் பாரதி ராஜா , மகேந்திரன் படங்களின் ரசிகர் மட்டுமல்ல . அப்போது சமீபத்திய தமிழ் படங்களை கூட டி வி டி deckமூலமாக உடனுக்குடன் பார்த்து விடும் ரசிகர் .அது மட்டுமல்ல ஹாலிவூட் ஆங்கில திரைப்படங்கள் பலவற்றை பற்றி புட்டு புட்டு வைத்தார் என்பதை முள்ளும் மலரும் மகேந்திரன் புளகாங்கிதமாக குறிப்பிட்டிருந்தார் .பிரபாகரன் சினிமா அதி தீவிர ரசிகர் என்பது பற்றி மகேந்திரன் ரொம்ப பதிவு செய்திருந்தார் . அப்போது கூட இலங்கை போரில் உயிர் நீத்த பல விடுதலைப்புலி தியாகிகள் , பிரபாகரனால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல தலைவர்கள் ,இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்மக்கள் , வாழ முடியாமல் வீடு ,தொழில் இழந்து அகதிகளாக இந்தியாவிலும் ,உலகநாடுகள் பலவற்றிலும் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களும் தான் என் நினைவுக்கும் வந்தார்கள் .

போராளி பிரபாகரனை என்னால் உளவியல் ரீதியாக அனுதாபத்துடன் புரிந்து கொள்ளமுடியும் .சுந்தர ராமசாமி சொல்வார் : " மனிதன் விசித்திரமான ஜீவராசி . வாழ்க்கை போராட்டத்தில் தன் ஓட்டை படகில் பயணம் செய்யும்போது உள்ளே வந்து வழிந்து விட்ட நீரை கோரி வெளியே ஊற்றி கொண்டே அபாயமான பயணம் செய்யும் போது கூட சூழலுக்கு பொருத்தமே இல்லாத கனவுகளில்,பொழுது போக்குகளில் அவனால் ஆழ்ந்து போய் விட முடியும். மனிதன் விசித்திரமான ஜீவராசி ."

7 comments:

  1. ராஜநாயஹம் சார்,

    நான் பக்கா மெட்ராஸ்காரன் ஆதலால் எனக்கு டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த அனுபவம் ஒன்றே ஒன்றுதான் உண்டு! 1967 இல் தி.மு.க. ஜெயித்துக் கொண்டிருந்த நேரம், மதுரையில் உறவினர் வீட்டுக்கு விடுமுறையில் சென்றிருந்த போது , அரசரடி 'வெள்ளைக்கண்ணு' தியேட்டரில் பெஞ்சு டிக்கெட்டில் 'சபாஷ் தம்பி' என்ற ஜெய்சங்கர் படம் பார்த்தேன்! (இந்தத் தியேட்டரை டூரிங் டாக்கீஸ் என்று சொன்னால் மதுரைக்காரர்கள் கோபிக்க மாட்டீர்களே?!)

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  2. // "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு"//
    இந்தப் பாடல் சமீபத்தில் 1965-ல் வெளிவந்த “ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்”-ல் வந்தது எனநினைக்கிறேன். பை தி வே அப்படம் ஆங்கில எழுத்தாளர் P.G. Wodehouse எழுதிய "If I were you" என்னும் நாவலை சுட்டு எடுக்கப்பட்டது.

    எம்.ஆர். ராதாவுக்கும் ஒரு டூயட் உண்டு. பாலையா ட்விஸ்ட் ஆடுவார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. ராஜநாயஹம் சார்,

    ஒரே நாளில் ரெண்டு மூணு வாட்டி பதிவை touch up பண்ணி revise பண்றீங்க! ( காலை முதல் மாலை வரை பதிவின் பரிமாண வளர்ச்சியும் பார்க்க நல்லாத்தான் இருக்கு!)

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  4. நீங்கள் சொல்லும் சலூன் பாடலும் எனக்கு நினைவிருக்கிறது.

    டூயட் அவரது முறைப்பெண்ணுடன் இருக்கிறது. அப்போதே நான் நினைத்தேன், அட இதப்பாருடா நம்ம ராதா அண்ணனுக்கும் டூயட் சான்ஸ் என்று. ஆகவேதான் உறுதியாகக் கூறுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.