கொழந்தை

அந்த காலம் . அவர் பேர் கொழந்தை . 'மலை சாய்ந்து போனால் விலையாகலாம்' என்று உருக்கமான டிஎம்எஸ் பாடலை அழகாக பாடுவார் . ஆள் குள்ளம் .முப்பது வயசு அப்ப. கால் ஊனம் என்றாலும் எவ்வளவு தூரம் என்றாலும் நொண்டி,நொண்டி நடப்பார் . பழைய படம் பார்க்க ரொம்ப ஆசைப்படுவார் . ஏழுமணிக்கு ஆரம்பிக்கும் தத்தனேரி டூரிங் டாக்கீஸ் போக நண்பர்களுடன் கிளம்புவார் . ஒரே ப்ரொஜெக்டர் என்பதால் டூரிங் டாக்கீஸ் மூணு இண்டெர்வல் விடுவார்கள் . படம் இரவு பன்னிரண்டு மணிக்கு முதல் ஷோ முடியும் . கொழந்தை சலிக்க மாட்டார் .

ஆறு மணி போல குழந்தை , ஆட்டு மூக்கன் , சோலை எல்லோரும் கிளம்புவார்கள் . கஞ்சா அக்கரையில் தான்வாங்கணும் .' டே ஆட்டு மூக்கா , எங்க அப்பா கிட்டே போற வழியிலே சொல்லிட்டு போவோம். '

கொழந்தைக்கு அம்மா கிடையாது . சித்திகண்டபடி ஏசியதால் சடவுடன் அப்பா திண்ணையில் எரிச்சலுடன் உட்கார்ந்திருக்கிறார் . கொழந்தை தந்தையை அப்ரோச் செய்கிறார் .

" அப்பா , நான் தத்தனேரி படத்துக்கு போறேன் . எம்ஜியார் படம் . பழைய படம் . மதுரை வீரன் . வர எப்படியும் ராவு ஒரு மணி யாகும் . மூணு இண்டெர்வல் பாருங்க . நீங்க சித்தி கிட்டே சொல்லி எனக்கு தயிர் சாதம் ... இல்லே .. அது வேண்டாம் .. சூடா சுடு சாதத்திலே சுட சுட பசும்பாலை ஊத்தி , நிறைய சீனி போட்டு ...இல்லைன்னா நீங்க ஒன்னு செய்யுங்களேன்...உரிச்ச வாழைப்பழம் ரெண்டு நல்லா பிணைஞ்சு சுடு சோருல மிக்ஸ் பண்ணி ..."

வேதனை முகம் எல்லாம் பரவ , வலி தாங்க முடியவில்லை என்பது போல இரண்டு கண்ணையும் மூடி இரண்டுகைகளால் காதுகளையும் மூடி கொழந்தை யோட அப்பா குத்த வைத்து திண்ணையில் உட்கார்ந்த நிலையிலேயே அழுத்தமா சொல்வார்

" கொழந்தை .... ரொம்ப கொஞ்சாதப்பா ... ரொம்ப கொஞ்சாத "

கொழந்தை இந்த முகரடி பற்றி சட்டையே செய்யமாட்டார் . ' நான் வர்ரேன்பா ! டாட்டா .. டாட்டாப்பா ..'

வைகையாற்றிலே சின்ன கச்சேரி நடக்கும் . " மலை சாய்ந்து போனால் " கொழந்தை உருக்கமாக பாடுவார் . ஆட்டு மூக்கன் வாயாலே தாளம் போடுவான் , சோலை இரண்டு கல்லை எடுத்து தட்டி ரிதம் கொடுப்பான் . பாட்டு முடிந்ததும் அக்கரைக்கு போய் கஞ்சா வாங்கி கொண்டு மாருதி டூரிங் டாக்கீஸ் நோக்கி போகும்போது தியேட்டரில் " திரள் மணி கதிர்கள் வீசி திசை ஆளும் ஆதவன் " பாட்டு கேட்கும் . படம் போடபோகிறான் .கடைசி பாட்டு .

ஆட்டு மூக்கன் , சோலை எல்லோரும் ஓடுவார்கள் .

'சீக்கிரண்டா . டிக்கெட் எடுங்க ' கொழந்தை வேகமாக நொண்டிக்கொண்டே சொல்வார் .

1 comments:

  1. senthils said...:

    sir,
    tiruppur book fair 09 kku poningala?

Post a Comment

Followers