உலகின் உன்னத கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் ! ஏ ஆர் ரஹ்மானின் இசை திறமையை கேள்விக்குள்ளாக்குகிறார் . வெகு ஜனங்களும் , சினிமாக்காரர்களும் 'இவன் யார் எங்கள் ரஹ்மானின் இசையை விமர்சிக்க? கேள்வி கேட்க ? எங்கள் ரஹ்மான் உலகையே கலக்கி விட்டவர் ' என ஆவேசப்படுவார்கள் . ஆனால் நான் இந்த ரஹ்மான் பரவசத்திற்கு ஆட்படவே மாட்டேன் .
ஜக்ஜித் சிங் கஜல் பற்றி உண்மையான ஞானம் உள்ளவர்களும் , உண்மையான இசை ஆர்வம் உள்ளவர்களும் ஜக்ஜித் சிங்கின் தார்மீக கோபத்தை அங்கீகரிப்பது , செவி சாய்ப்பது தவறே கிடையாது . ஏ ஆர் ரஹ்மான் பெற்ற பெரும்புகழ் அவரை கடவுளாக்கினால் அது ஏற்றுக்கொள்ளவே முடியாது . சினிமாக்காரன், சினிமா மெல்லிசை ரசிகன் எப்போதும் ஜால்ரா தட்டி மிகுந்த பரவச போதையில் தான் இருப்பான்.
இது சாஸ்த்ரீய சங்கீத கலைஞர்களின் இசையை கனப்படுத்தும் பதிவு . ஏதோ இளையராஜா ரசிகர்களுக்கு குஷிப்படுத்துவதாக என நினைக்க வேண்டாம் . இளைய ராஜா ரசிகர்கள் பலர் குஷியாகி பின்னூட்டம் அனுப்புகிறார்கள் ! ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களின் கோப பின்னூட்டங்களை பற்றி சொல்ல தேவையில்லை . ரஹ்மானுக்கு ஆதரவாக 'தேச பக்தி ' பின்னூட்டங்கள் கூட !
இளைய ராஜா , ஏ ஆர் ரஹ்மான் சினிமா இசைக்கும் சாஸ்த்ரீய சங்கீதத்துக்கும் எந்த ஸ்நான பிராப்தியும் கிடையாது . சினிமா இசை பல தழுவல்கள், ஒப்பனைகள் கொண்டது .
கர்நாடக சங்கீத கலைஞர்கள் , ஹிந்துஸ்தானி கிளாசிகல் கலைஞர்கள் எவருடைய இசை அந்தஸ்தையும் ஏ ஆர் ரஹ்மானின் பிம்பம், வேறு எந்த சினிமா இசையமைப்பாளனின் புகழ் பிம்பமும் பாதிக்காது.
வித்வத் வேறு , பிராபல்யம் வேறு .