Share

Jan 28, 2009

ப்ரோமோத் முத்தலிக்

ப்ரோமோத் முத்தலிக் - ஸ்ரீ ராம் சேனா தலைவன் .


நாற்பத்தெட்டு கிரிமினல் கேஸ் . இவற்றில் பெரும்பான்மையான கேஸ் இவர் பஜ்ரங் தளத்தில் இருக்கும்போதே பதியப்பட்டவை . இப்படி இவ்வளவு கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆள் எப்படி சிறையில் இல்லாமல் வெளியே இருக்க முடிகிறது . ஸ்ரீராம் சேனா அமைப்பை எப்படி நிறுவிட அனுமதி கிடைக்கிறது . 'பெண்களை காக்க வேண்டியது , கலாச்சாரத்தை காக்க வேண்டியது எங்கள் கடமை. ஹிந்து கலாசாரத்தை காக்க வேண்டாமா ' என்று மார் தட்டி, மங்களூர் ரெஸ்டாரன்டில் இளம்பெண்கள் மீது ஈவு இரக்கமில்லாமல் மிருகத்தாக்குதல் நடத்திய பின்னும் பெருமிதம் கொள்ள முடிகிறது .


ஒரு அமைப்பு தரும் திமிர் , வக்கிரம் இப்படி பிரவகிப்பதை கட்டுப்படுத்த என்ன வழி ?


இந்தியா முழுவதும் இப்படி அமைப்புகள் , கட்சிகள் பிரதான கட்சிகளின் விஷேச பராமரிப்புடன் கிளம்பி விட்டன .


அபத்த விகார நோய்க்கூறு , மதம் , இனம் , மொழி,கட்சி சார்ந்து குணப்படுத்த முடியாத கொள்கைஒனாய்களை வெறி பிடித்து அலைய விட்டிருக்கிறது .


அவரவர் வெறிக்கு தக்க சட்டதிட்டங்களை சமூகத்தில் திணித்து ' ஒழுங்கு ', 'சீர் ', என்று கூக்குரல் இட்டு மிரட்டுகின்றார்கள் . ஒற்றை பரிமாண பார்வையுடன் உலகை மாற்றி விட ஆவேச அழிச்சாட்டியம்!


முத்தலிக் கைது நடவடிக்கை மிகப்பெரிய கண்துடைப்பு . சிரித்துக்கொண்டே மீடியா விளம்பரம் கிடைத்து விட்ட பூரிப்புடன் அந்த ஆள் கிளம்புகிறார் . காவல் துறை ஏதோ சொந்தபந்தம் போல் அவருடன் !

மறுநாள் கோர்ட்டுக்கு வரும்போது முத்தலிக் மூஞ்சில் லேசாக கலவரம் தெரிகிறது . உள்ளே சில மனசாட்சியுள்ள போலீஸ் கவனிப்பு பலமாய் இருந்திருக்கும் போல .அல்லது நிலவரத்தின் தீவிரம் புரிந்து ' ஏலி ஏலி லெமா சபக்தானி ' என்று கர்நாடக ஆளுங்கட்சி கைவிட்டு விட்டதை புலம்புகிறார் .

'ஹிந்துத்வா பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு என்னை இப்படி கைவிடலாமா '

சமரசமாக எடியுரப்பா ' ஹோட்டல் நடன கலாச்சாரத்தை ஒழிப்பேன் ' என்று இருண்ட முகத்துடன் 'மங்களூர் அம்னிசியா ஓட்டலை , அங்கு கூடிய பெண்களை' சாடுகிறார் .

'ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி விட்டார்கள் அரசியல் எதிரிகள் . ஒரு சாதாரண லோக்கல் நிகழ்வு இது' - எடியூரப்பா சொல்வது !


'காண்டாமிருகங்களை ஈர்குச்சிகள் காயப்படுத்தாது .' - சுந்தர ராமசாமி சொன்னது !

1 comment:

  1. "காண்டாமிருகங்களை ஈர்குச்சிகள் காயப்படுத்தாது" 100% உண்மை

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.