Share

Jan 10, 2009

கல்பற்றா நாராயணன்

ஒரு மலையாளி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் . நல்ல இலக்கிய ரசிகர் . மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணன் கவிதைகள் இரண்டு சொன்னார் . மனதில் அந்த இரண்டு கவிதைகளும் அப்படியே 'பச்சக்' என்று ஒட்டிக்கொண்டன . அவர் எனக்கு தமிழில் மொழிபெயர்த்து சொன்னதை என் நினைவிலிருந்து சொல்கிறேன் . இந்த இரண்டு கவிதைகளில் ஒன்று குழந்தையையும் , அடுத்தது இறந்த பிணத்தையும் முன் வைத்து கல்பற்றா நாராயணனால் எழுதப்பட்டு இருப்பது ஒரு முரண் நகை .
ஆயாசம் , பிடிவாதம் என இரண்டை தொடுகிறார்.

1. சிறு குழந்தைகள் கொட்டாவி விடுவது பார்க்க அழகு தான் இல்லையா ?
அந்த கொட்டாவிக்கு அர்த்தம்- ' இந்த உலகம் சுவையாக இல்லை .'
கொட்டாவி விட்ட பின் அந்த குழந்தைகள் ரொம்ப ஆயாசத்துடன் இந்த போரடிக்கும் உலகத்திற்கு முதுகை காட்டி குப்புற படுத்துக்கொள்கிறார்கள்
..
2. உயிரிழந்தவர்கள் ரொம்ப பிடிவாதமானவர்கள் .
அவர்கள் வாயில் கங்கை நீரை விட்டாலும்
குடிக்க மறுப்பார்கள் .
செத்தவர்களை பார்த்து நாம் முட்டி தேம்பி அழுதாலும் அவர்கள் சட்டையே செய்யமாட்டார்கள் .
செத்தவர்களின் மடங்கிய கை விரல்களை உடைத்தால் தவிர விரித்து விட முடியாது .
இறந்தவர்களை மண் மூடும்போது கூட ,அல்லது நெருப்பு அவர்களை சுட்டு எரிக்கும்போதும் சரி கொஞ்சம் கூட முகம் சுண்டவே மாட்டார்கள் .
அவர்கள் மாட்டோம் மாட்டோம் என்ற முடிவில் பிடிவாதம் மிக்கவர்கள் .

1 comment:

  1. RP Sir, இதே கவிதைகளை நானும் படித்து மகிழ்ந்தேன். ஜெயமோகன் அவர்கள் இதே கவிதைகளை இன்னும் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். மிகவும் அருமையான கவிதைகள்.
    முரண்டு
    ======

    இறந்தவர்கள்
    பிடிவாதக்காரர்கள்.
    கங்கைநீர் வாயில் விட்டாலும்
    விழுங்க மாட்டார்கள்.
    நாம்
    சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும்
    அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
    அவர்களின் மடக்கிய விரல்களை
    உடைக்காமல் பிரிக்க முடியாது நம்மால்.
    மண்ணால் விழுங்கப்படுகையில்
    தீ எரிந்து ஏறுகையில்
    சற்று முகம் சுளிப்பதுகூட இல்லை.
    அவர்கள் செய்யமாட்டோம் என்று முடிவெடுத்தால்
    முடிவெடுத்ததுதான்.

    வந்து ரொம்ப நேரமாகவில்லை
    ========================

    கைக்குழந்தைகள் கொட்டாவி விடுவது
    எனக்குப் பிடிக்கும்.
    ‘ஒரு ருசியுமில்லை இவ்வுலகுக்கு’.
    அதன்பின் அவர்கள்
    பெரிய சலிப்புடன்
    உலகுக்கு முதுகைக் காட்டி
    திரும்பிப் படுக்கிறார்கள்.

    ****

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.