அசோக் சக்ரா விருது பதினோரு பேருக்கு கொடுக்கப்படுவதான அறிவிப்பில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கசாப் நிகழ்த்திய கோரத்தை எதிர்த்த போது உயிர் விட்ட இன்ஸ்பெக்டர் ஷிண்டே நிராகரிக்கப்பட்டிருப்பது ரொம்ப அபத்தமாக தெரிகிறது. கீர்த்தி சக்ரா விருது இவருக்கு . என்ன அளவுகோல் இது ?
பிரதமர் கலந்து கொள்ளாத குடியரசு தினம் நாளை . இந்திய சரித்திரத்தில் இது தான் முதல் தடவை . ரோபோட் மாதிரி மன் மோகன் சிங் கூட்டத்தினரை பார்த்து கையாட்டும் அழகு நாளை காணக்கிடைக்காது . ஆபரேசன் முடிந்து அடுத்த ஒரு மாதம் முழுக்க ஒய்வு .இருபத்து ஐந்து வருடமாக பிரணாப் முகர்ஜி யின் முன் ' பிரதமர் நாற்காலி ' நடத்தும் பகடி கொஞ்சநஞ்சமல்ல . இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன் ராஜீவிடம் ' நான் தானே இப்ப பிரதமர் ' என்று வெகுளித்தனமாக கேட்டு ராஜீவ் கேபினெட்டில் அங்கம் வகிக்கும் வாய்ப்பையே இழந்தவர் !பிரதமரின் நிதித்துறையை மட்டும் இப்போது பிரணாப் நிர்வகிப்பார் . நாளை டெல்லியில் நடக்க இருக்கும் குடியரசுதின கொண்டாட்ட மரியாதை உதவி ஜனாதிபதிக்கு என்று முதலில் சொல்லி அப்புறம் ராணுவ மந்திரி ஏ. கே. ஆண்டனி ( யந்திர துப்பாக்கி யின் இனிசியல் தான் இவருக்கும் ) தான் குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரதமருக்கு 'டூப்'என்று முடிவு செய்திருக்கிறார்கள் .
இலங்கை பிரச்சினை முழுக்க தமிழக அரசியல்வாதிகளால் மீண்டும் நையாண்டி செய்யப்படும் அவலம் தொடர்கிறது. இவர்களின் வினோத கூட்டணிகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் இனி காட்ட முடியாது .
திமுக குடும்பம் ' பொதுக்குழுவை ,செயற்குழுவை கூட்டி முடிவெடுக்கும் ஜனநாயகம் பற்றிய அக்கறை மிகுந்துதன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாதே என்று நொந்து தவிக்கிறது.( பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக நாளும் இல்லை !) அடடே ! பொதுக்குழு ,செயற்குழு உறுப்பினர்கள் ' அது எப்படி ? கருணாநிதி சுயமாக எங்களை கேட்காமல் முடிவெடுக்கலாம் . தாட் பூட் தஞ்சாவூர் ' என்று மீசையை முருக்குவார்களோ ?தொடையை தட்டி உண்டு இல்லை என்று பார்த்து விடுவார்களோ ?
அண்ணா திமுக - மதிமுக கூட்டு இன்னும் தொடர்கிறது . ஜெயலலிதாவின் ' இலங்கை இராணுவம் ' வக்காலத்து அறிக்கை கூட மதிமுகவை சுரனையடைய செய்யவில்லை . கம்யுனிஸ்ட்கள் ஜெயலலிதா கைவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் ' அது அவரது சொந்த கருத்து ' என்று நழுவுகிறார்கள் .
திருமா வளவனுடன் பிஜேபி தலைவர்கள்இலகணேசனும் ,திருநாவுக்கரசரும் போஸ் கொடுக்கிறார்கள் . பேஷ் , பேஷ் . ரொம்ப நன்னா இருக்கிறது . திருமாவுக்கு சவால் விட தமிழக காங்கிரஸ் அவசர அவசரமாக தன் கட்சிக்குள்ளே தலித் அரசியல்வாதியை தேடிக்கொண்டிருக்கிறது .
'சத்யம் ' பற்றி அன்றாடம் எல்லோரும், சகல தரப்பினரும் அளவளாவி களிப்பெய்துகிறார்கள்.
சென்னை தமிழ் சங்கம நிகழ்வில் ' பாட்டெழுதி 'வாசிக்கப்போன புலவர்கள் அவமானபடுத்தப்பட்டதாக செய்தி . உண்மையா ? என்னடா இது சோதனை .
We live at the edge of the miraculous.
All that matters is that the miraculous become the norm.
- Henry Miller
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.