Share

Dec 10, 2009

ஒரே மெட்டு ரெண்டு பாட்டு

'தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே ' என்ற எம் கே தியாகராஜ பாகவதர் பாடிய பெஹாக் ராக பாடலின் மெட்டில் அப்படியே மாற்றம் இல்லாமல் மதுரை வீரனில் எம்ஜியாருக்காக
டி .எம் .எஸ் " ஏச்சு பொழைக்கும் தொழிலே சரி தானா " என்று ஒரு பாட்டு பாடியிருக்கிறார் .

இப்படி மெட்டு சுலபமாக கண்டு பிடிக்கும் விதமாக அப்படியே போடாமல்,சில பாடல்கள் கொஞ்சம் புரியாதபடி திரும்ப போடப்படுவதுண்டு.

அப்படி ஒரு பாடலை மெலடியாக, மென்மையாக தன்னால் போடப்பட்ட பாடலை பின்னால் சரியான டப்பாங்குத்தில் போட்டு செம ஹிட் ஆக்கியிருக்கிறார் கே .வி . மகாதேவன். 1965 ல் வந்த படம் ' எங்க வீட்டுப் பெண் '. ஜெய்சங்கர் ,
ஏ .வி.எம் ராஜன் நடித்த படம் .அதில் இந்த பாடல் -

" கால்களே நில்லுங்கள் . கண்களே சொல்லுங்கள் .
காதல் என்பது காவியமா ? இல்லை கண்ணீர் வரைந்த ஓவியமா ?"

இந்த பாடல் அவ்வளவாக பிரபலமாகவில்லை .
அதே படத்தில் பி .பி .எஸ் பாடிய நல்ல பாடல் " சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி ".
பி.பி .எஸ் பாடினாலே எந்த பாட்டும் ஹிட் தானே !

1970ல் வந்து சக்கைப் போடு போட்ட எம்ஜியார் படம் " மாட்டுக்கார வேலன் ".
ஹிந்தியில் ஜிதேந்திரா நடித்த 'ஜிக்ரி தோஸ்த் ' படத்தின் ரீமேக் . அந்த படத்தில் மகாதேவன் ஹிட் ஆகாத தன் ' கால்களே நில்லுங்கள்,கண்களே சொல்லுங்கள் ' மெட்டை நல்ல டப்பாங்குத்தில் போட்டு ஹிட் ஆக்கி காட்டினார்.
"பட்டிக்காடா ?பட்டணமா ?ரெண்டுங்கெட்டான் லட்சணமா !"

இசையமைப்பாளர் வி குமார் ( ஏ .ஆர் .ரஹ்மானின் அப்பா சேகர் இவரிடம் உதவியாளராக இருந்தவர் ) பாலச்சந்தரின் படம் ' நூற்றுக்கு நூறு ' படத்திற்காக போட்ட பாடல்
" நித்தம், நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடுவேன் .
இளமை பொங்கும் எழில் தலைமை தாங்கும் உனை என்றும் நாடுவேன் "

இந்தப் பாடலின் மெட்டில் தான் ' ரயில் பயணங்களில்'
டி .ராஜேந்தர் பாட்டு _
"வசந்தம் பாடி வர, வைகை ஓடிவர ஆராதனை செய்யட்டுமா ?"


கமல் ஹாசன் -குட்டி பத்மினி ஆடிப்பாடும் பாடல் தேவரின் ' மாணவன் ' படத்தில் சங்கர் -கணேஷ் இசையில்
டி .எம் .எஸ் - எல் .ஆர் ஈஸ்வரி பாடியது
" விசிலடிச்சான் குஞ்சுகளா ! குஞ்சுகளா ! வெம்பிப் பழுத்த பிஞ்சுகளா! பிஞ்சுகளா!"

இந்தப் பாடல் மெட்டு மீண்டும் எவ்வளவு வருடங்கள் கழித்து,உலகநாதன் பாடி ஹிட் ஆகி, ஊரே பாடிக்கொண்டு திரிந்தது !

" வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் "

6 comments:

  1. தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

    ReplyDelete
  2. Very interesting information .. !!

    ReplyDelete
  3. எங்கள் தங்கம் படத்தில் வந்த "தங்க பதக்கத்தின் மேலே" என்ற பாடல். "என்ன விலை அழகே" என காதலர் தினத்தில் வந்தது.

    ReplyDelete
  4. இதே மாதிரி "பேசும் மணி முத்து ரோஜாக்கள், பிள்ளைகள் ...." பாட்டும் "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, சிவந்த கண்ணங்கள் ..." பாட்டும் ஒண்ணுதான்.

    ReplyDelete
  5. மியா மியா பூனைக்குட்டி/ஒன்னா இருக்கக்கத்துக்கணும்.

    வெண்ணிலா முகம் பாடுது கண்ணிலே/ கண்ணம்மா என்னைப் பாரம்மா... ஆகியவற்றை நினைவில்கொண்டேன்.
    -க.சீ.சிவகுமார்

    ReplyDelete
  6. தூங்காதே தம்பி தூங்காதேவில் “என்ன வேணும் தின்னுங்கடா டோயும்”, அபூர்வ சகோதரகளில் வாழ வைக்கும் காதலுக்கு ஜே வும் ஒரே மெட்டு (பல்லவி மட்டும்)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.