Share

Dec 5, 2009

ஐயப்ப மாலை போட்ட கல்யாண் குமார்

டிசெம்பர் மாதம்! நிறைய பேர் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள்.

'நெஞ்சில் ஓர் ஆலயம் ' கல்யாண் குமார் தான் அய்யப்பனுக்கு மாலை போட்ட அனுபவம் பற்றி என்னிடம் சொன்னார்.

எங்கும் சுற்றி ரங்கனைச் சேர் என ஒரு பழமொழி உண்டு. ஆனால் கல்யாண்குமார் எப்போதுமே ஸ்ரீரங்கம் கோவில் பக்தர். இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர் கன்னட ஐயங்கார். இவருக்கு ஐயப்பனுக்கு மாலை போட வேண்டும் என்ற எண்ணம் நம்பியார் சுவாமி மூலம் ஏற்பட்டிருக்கிறது . முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவர் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு போக ஆயத்தமாகிவிட்டார் . 41 நாட்கள் விரதம் முடிகிற நேரம் . மறுநாள் காலை மலைக்கு கிளம்பும் குழுவுடன் கிளம்ப வேண்டும் . கையில் பைசா காசு இல்லை. சொத்துக்களை இழந்து அசதியாகி விட்ட காலம் அது .ஐநூறு ரூபாய் தேவைப் பட்டதாம் . சரி தான். நாளை ஐயப்ப தரிசனம் இல்லை தான் போல என சோர்ந்து விட்டாராம் . இரவு தூக்கம் இல்லாமல் புரண்டிருக்கிறார் . அசந்து தூங்கிய நேரம் இரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டுக் கதவை யாரோ தட்டியிருக்கிறார்கள் . கதவை திறந்தால் இவருடன் நாடகங்களில் கதாநாயகியாய் நடிக்கும் நடிகை . கலைந்த தலையுடன் அவரும் சோர்வாகத்தான் இருந்திருக்கிறார் . 'என்னம்மா ?'
நடிகை சொன்னாராம் ." அண்ணே இன்னைக்கு விடிஞ்சா நீங்க ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பனும் . உங்களிடம் காசும் இல்லை . எனக்கு தெரியும்ணே.அதுக்காக நான் ஒரு காரியம் செஞ்சேன் . " ஒரு வி வி ஐ பி பெயரை அந்த நடிகை சொல்லி " அவருட்ட போய் படுத்து எந்திரிச்சி அவர் கொடுத்த காசை வாங்கிக்கிட்டு வந்திருக்கேன் அண்ணே . இந்தாங்கண்ணே . கோவில் காரியத்திற்கு வச்சிக்கங்க . மலைக்கு போயிட்டு வாங்க . "

கல்யாண்குமார் திகைத்துப் போய் நின்றிருக்கிறார்.

"யோசிக்காதீங்க.. நாய் வித்த காசு குரைக்காது. தைரியமா போயிட்டு ஐயப்பனை சேவிச்சிட்டு வாங்க . வாங்கிக்கங்க அண்ணே "

கல்யாண் குமார் என்னிடம் சொன்னார் ." அவ அந்த வி வி ஐ பி யோட பஜனை பண்ணி வாங்கிட்டு வந்த காசிலே அன்னைக்கு மலைக்கு போயிட்டு வந்தேன் . ஆனா தரிசனத்தின் போது ஐயப்பன் ஜோதி யாய் என்னிடம் '' எங்கடா வந்தே ! எப்படி வந்தே ?" என்று என்னைப் பார்த்து கேட்டதாக எனக்கு ஒரு பிரமை .
" சத்தியமா இனி உன்னைப் பார்க்க நான் வரவே மாட்டேன் . என்னை மன்னிச்சிக்க " என்று சொன்னவன் அதன் பிறகு ஐயப்பனுக்கு மாலை போடவேயில்லை. "

கல்யாண் குமார் மேலும் சொன்னார் . "சில சாமி சிலருக்கு Vibrateஆகும். சில தெய்வங்கள் அதே சிலருக்கு Vibrate ஆகாது. எனக்கு ரங்கநாதன் தான். ஐயப்பன் ஒத்து வரலே."

ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கும் திருப்பதி பெருமாளுக்கும் உள்ள விஷேச குண நலன் பற்றி கல்யாண் குமார் சொன்ன சுவாரசியமான விஷயம் - ஸ்ரீரங்கப் பெருமான் பக்தர்கள் சொல்லும் கஷ்ட நஷ்டங்களுக்கு காது கொடுத்து கேட்பார் . ' சரி . அதனாலே என்ன . கஷ்டப்படத்தானே மனுஷப்பிறப்பு.சொல்லிட்டே .போயிட்டு வா ' என்பாராம் . திருப்பதி சாமி கொஞ்சம் வித்தியாசமானவர் . பக்தன் தன் துயரத்தை சொல்லி அழுதவுடன் ' அப்படியா . இந்த கஷ்டம் சிரமாயிருக்கோ . சரி இனி இந்த வழி உனக்கு ' என்று ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விடுவார் . பழைய கஷ்டம் போய்விடும் . புதிய திருப்பு முனையில் புதிய பிரச்னை, சிரமம் காத்திருக்கும்! '

3 comments:

  1. அங்க இங்க தொட்டு.. இப்ப சாமியையும் தொட்டுட்டீங்க.. நடத்துங்க... நல்லாதான்யிருக்கு..

    ReplyDelete
  2. RPR sir, have you thought about bringing out your fantastic collection of anecdotes in a book form ?

    ReplyDelete
  3. ஐயா, அருமையான பதிவு, தொடர்ந்து எழுதுங்க..

    என்னுடய கோரிக்கையான கேள்வி‍ பதில் பகுதிய பத்தி ஏதாவது யோசித்தீர்களா?

    தங்கள் அன்பு வாசகன்‍, திருச்சி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.