Share

Dec 12, 2009

குமுதம் 'அந்த நாள் Black & White’

குமுதம் பத்திரிகையில் ' அந்த நாள் --> -->Black & White’என்று ஒரு பகுதி சுவாரசியமானது .ஏனென்றால் மிகப் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதனுடன் சம்பந்தப் பட்டவரிடம் அந்த புகைப்படத்தின் கதையைக் கேட்பதும்,பிரசுரிப்பதும் சுவையான விஷயம் தான். -->
Every Picture tells a story!
இந்த வாரம் வியாழக்கிழமை வந்த குமுதம்
(16.12.2009 தேதியிடப்பட்டது )இதழில் ஒரு பழைய புகைப்படம். காலா காந்தி காமராஜர் உடன் அவர் வீட்டில் எம்ஜியார் , சிவாஜி , சந்திரபாபு ,எம் .எஸ் .விஸ்வநாதன் ஆகியோர் இருக்கிறார்கள் . மிக அபூர்வமான புகைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை . அந்த காலகட்டம் பற்றிய தகவல், எந்த சூழல் என்பதில் தான் தவறு இருக்கிறது . எம்.எஸ் .விஸ்வநாதன் அந்த புகைப்படம் 1971ல் இந்திய -பாகிஸ்தான் போர் நடந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறார். போர் வீரர்களுக்கான கலை நிகழ்ச்சிக்காக கிளம்பு முன் காமராஜிடம் ஆசி வாங்க சென்றிருந்த போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத எம்ஜியாரும் மேக் அப்புடன் வந்திருந்தார் என்கிறார் .எம்ஜியார் அந்தப் படத்தில் போலிஸ் அதிகாரி உடையில் மேக் அப் பில் இருக்கிறார் . எம்ஜியார் அந்த காலகட்டத்தில் வெளி வந்த குமரிக்கோட்டம் ,ரிக் ஷாக்காரன் படங்களில் போலிஸ் அதிகாரியாக நடிக்கவில்லை . சரி அந்த வருடம் படப்பிடிப்பு நடந்து அடுத்த 1972ல் வந்த ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் , இதயவீணை படங்களிலும் போலிஸ் அதிகாரி வேடம் செய்யவில்லை . அவர் 1963 ல் சாவித்திரியுடன் நடித்த ' பரிசு ' படத்திலும் 1964 ல் வெளி வந்த ' என் கடமை ' படத்திலும் தான் போலிஸ் அதிகாரியாக நடித்தார் . இந்த புகைப் படத்தில் உள்ள சிவாஜி கூட1971 ல் வெளி வந்த 'சுமதி என் சுந்தரி ' 'மூன்று தெய்வங்கள் ' ' சவாலே சமாளி 'அல்லது 1972ல் வெளி வந்த ' ராஜா ' 'வசந்த மாளிகை ' படங்களில் நடித்த காதோரம் கிருதா வைத்த சிவாஜி அல்ல என்பதை தமிழ் திரை பற்றி அறிந்தவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 'பந்தபாசம் '(1962),இருவர் உள்ளம்' (1963), அதற்கு அடுத்த வருட 'நவராத்திரி ' ஆண்டவன் கட்டளை'காலங்களின் சிவாஜி ! ( சிவாஜியின் முக , உருவ அமைப்பு காலத்திற்கு காலம் மிகவும் மாறுபட்டிருக்கிறது! )

இந்த புகைப் படம் இந்திய - சீனா யுத்த காலத்தில் எடுக்கப்பட்டது என்று வேண்டுமானால் ஓரளவு பொது அறிவுள்ள எவருமே சொல்லிக் கொள்ளமுடியும் . அப்போது எம்ஜியார் நீங்கலாக மற்ற கலைஞர்கள் சிவாஜி , சந்திரபாபு ,எம் .எஸ் .வி போன்றவர்களுடன் கண்ணதாசனும் போர் வீரர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்த வடக்கே போனார்கள் . கண்ணதாசன் இது பற்றி தன் " மன வாசம் '' நூலில் விரிவாக எழுதியிருக்கிறார் . தன் வாழ் நாளில் சூரியோதயத்தை ஒரு தடவை கூட பார்க்காத சந்திரபாபு அங்கே சூரியோதயத்தை பார்த்தது , சீனாவுடன் யுத்தம் நடத்திய போர் வீரர்களை கலை நிகழ்ச்சிகளால் மகிழ்வித்த தமிழ் திரைக்கலைஞர்களுக்கு ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் விருந்து கொடுத்தது, சந்திரபாபு ' பிறக்கும்போதும் அழுகின்றான் , இறக்கும்போதும் அழுகின்றான் ' பாட்டு பாடியவுடன் ராதாகிருஷ்ணன் ரசித்து சிலாகித்த போது, சட்டென்று சந்திரபாபு ஜனாதிபதி மடியில் உட்கார்ந்து கன்னத்தை தடவி ' ரசிகன்டா கண்ணு நீ!' என்று சொல்லி எல்லோரையுமே திகைக்க வைத்தது போன்ற விஷயங்கள் .

எம்.எஸ் .விஸ்வநாதனுக்கு முதுமை காரணமாக இப்போது ஞாபகக்குழப்பம் ஏற்பட்டிருக்கிறதில் அவரை குற்றம் சொல்லக்கூடாது . அதோடு இசை தவிர பொது அறிவு விஷயங்களில் அவர் ரொம்ப ,ரொம்ப வீக் .அவர் உலகமே இசை மட்டும் தான். கண்ணதாசனிடம் வெள்ளந்தியாக விஸ்வநாதன் " ஏண்ணே! ஊமைத்துரை வெள்ளைக்காரனா ?" என்று கேட்டவர் . அவருக்கு சீனாக்காரனோடு நடந்த சண்டைக்கும் பாகிஸ்தான்காரனோடு சண்டைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நாம் ஆச்சரியப்படத் தேவையே இல்லை .


ஆனால் குமுதம் பத்திரிகையில் தரவுகள் பற்றி ஆராய்ந்திருக்க வேண்டாமா ? அங்கே ஆசிரியர் குழு , உதவி ஆசிரியர்கள் , நிருபர்கள் முதலியோருக்கு கூடவா இந்த படம் எந்த காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது புரியவில்லை? 

யுத்த காலத்தில் தான் இந்த புகைப்படம் எடுக்கப் பட்டது என்று கூட எப்படி சொல்லமுடியும்? சிவாஜி பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய போது எடுக்கப்பட்டது என்றும் சொல்ல முடியும்.

உறுதியாக 1971ல் எடுக்கப்பட்டதல்ல என்பது மட்டுமே உண்மை.




3 comments:

  1. வாவ்!
    காலத்தின் பிரவாகத்தில் எதிர் நீச்சல் போட்டு, நினைவிலிருந்து கழன்ற பூவைக் பத்திரமாகக் கொண்டு வந்த காலத்தின் காவலாளி நீங்கள்..! நினைவுகளின் நூலகம்!
    எத்தனை சம்பவங்கள்...! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. I too felt some thing WRONG about the TIMINGS of the PICTURE, but NOT very SURE like YOU to prove it. You are an LIVING ENCLYOPEDIA and a LEGEND to dare anybody for the sake of of the FACT.

    ReplyDelete
  3. குமுதம் சொன்ன பொய்யும் நீங்கள் கூறும் உண்மையும் அட, தலைப்பு அட்டகாசமாகப் பொருந்துகிறது. குமுதம் அந்தநாள் black & white.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.