Share

Sep 28, 2009

வைகறை

நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்தர் ரைம்போ கவிதைகளில் ஒன்று.
ரைம்போ வைகறையை கனவிலும் கண்டிருக்கிறான்!
'' முத்தமிட்டேன் வேனில் வைகறையை "
சூரியன் உதயமாவதற்கு முன் அந்த அதிகாலை வைகறை.
"இறந்து கிடந்தது நீர் " அப்போது .
'தன் பெயரை இயம்பிய மலர்' பற்றி ரைம்போ குறிப்பிடுகிறான்.
" அவளை(வைகறையை ) சேவலிடம் காட்டிக்கொடுத்தேன் " (அப்புறம் தான் 'அடடே அப்படியா. நல்லவேளை!கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேனே' சுதாரித்து சேவல் கூவியிருக்கும்! "கொக்கரக்கோ")

குழந்தை சேக்ஸ்பியர் ரைம்போ ''கண்விழிக்க ஆனது உச்சிப் பொழுது."

கனவில் வைகறை. யதார்த்தம் உச்சிப் பொழுது. அதனால் தான இருபது வயதை எட்டியவுடன் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டான் போலும் !ரைம்போ தன் பதின்பருவத்தில் மட்டும் தான் கவிதை எழுதினான்.


வைகறையில் இருட்டு பிரிந்து சூரிய உதயம் செய்யும் எழுச்சி விந்தையை பாரதி குயில் பாட்டில் விவரிக்கிறான் :
"புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி
மண்ணைத்தெளிவாக்கி,நீரில் மலர்ச்சி தந்து
( இறந்து கிடந்த நீருக்கு மலர்ச்சி!)
விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதி.. "

பாரதி " வைகறையின் செம்மை இனிது " என்று ரசித்து வசன கவிதையில் சொன்னவன் அல்லவா!


சூரிய வெளிச்சம் இருட்டிய பூமி மீது விழுகிற கணங்களை பிரமிள் தன் படிமங்கள் கொண்டு படம் பிடிக்கிற அழகு அபூர்வமானது.
" பூமித்தோலில் அழகுத் தேமல் "

" பரிதி புணர்ந்து படரும் விந்து "

"கதிர்கள் கமழ்ந்து விரியும் பூ "

" இருளின் சிறகைத் தின்னும் கிருமி "

"வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி "


2 comments:

  1. அருமைத்தலைவரே...உங்கள் பழைய பதிவுகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன்.(அறிமுகப்படுத்திய ரமேஷ்வைத்யாவிற்கு நன்றி)

    ReplyDelete
  2. ஆமாம், பிறகு அவன் (ரைம்போ)கள்ளக் கடத்தலிலும் கூட்டிக் கொடுத்தலிலும் கூட ஈடுபட்டு வாழ்ந்தான் என்று கேள்வி. உண்மை என்றால், அவனது உச்சிப் பொழுது விழிப்பின் எதார்த்தம்! தாங்காது நமக்கெல்லாம் அவ்வளவு திறந்துபட்டு வாழ்தல்.

    'இறந்து கிடந்தது நீர்', 'அவளை சேவலிடம் காட்டிக் கொடுத்தேன்' - என்ன சொல்லாடல் பாருங்கள்!

    அவன் பதின்பருவத்துக்குப் பிறகு கவிதை எழுதாததை உச்சிப் பொழுதோடு முடிச்சுப்போட்டது உங்கள் கவித்துவம் என்று காண்கிறேன்.

    - ராஜசுந்தரராஜன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.