Share

Sep 22, 2009

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

கிருஷ்ணா நீ பேகனே பாரோ - இந்த யமுனா கல்யாணி ராக கீர்த்தனை பகவான் கிருஷ்ணனை உடனே,உடனே உடனடியாக வரும்படி இறைஞ்சுகிறது . ஆனால் அழைப்பின் அவசரத்திற்கு நேர் மாறான Slow Tempo வில் பாடப்படுவது இந்த கீர்த்தனையின் விசேஷ அம்சம் .

பாலசரஸ்வதியின் தம்பி டி.விஸ்வநாதனின் சீடன் அமெரிக்கரான ஜான் ஹிக்கின்ஸ் நல்ல வெள்ளை வேட்டி கட்டி,குர்தா அணிந்து தான் உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார் . ஆனால் அவருடைய ரொம்ப வெளுத்த நிறம் வெளிநாட்டவர் என்பதை காட்டிகொடுத்து விட்டது. ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது . பல நூற்றாண்டுகளுக்கு முன் கனகதாசா ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டபோது அதே கோவிலில் எங்கே நிறுத்தப் பட்டாரோ அதே இடத்தில் ஜான் ஹிக்கின்ஸ் நிறுத்தப்பட்டார் .

'கோவில் பூசாரி தெய்வத்துக்கும் அஞ்சான் . பக்திக்கும் பணியான்' - தெரிந்த விஷயம் தான் . ஆனால் உண்மையான பக்தியுள்ள ஜானை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அவருடன் வந்த ஏனைய சாஸ்த்ரீய சங்கீத குழுவினர் உள்ளே செல்ல மறுத்து அவருடனேயே நின்று விட்டார்கள் . அப்போது ஜான் கன்னட மொழியில் அமைந்த இந்த யமுனா கல்யாணி ராக கீர்த்தனையை உருக்கமாக பாட ஆரம்பித்தார் . கூட்டம் கூடிவிட்டது . கோவில் பூசாரிகள் ஆச்சரியப் பட்டு நெகிழ்ந்து போய் ஜான் ஹிக்கின்சை கெஞ்சி கேட்டு கோவிலினுள் வரும்படி வேண்டினார்கள் .தலித் கனகதாசாவுக்கு மறுக்கப்பட்ட அந்த மரியாதை இந்த அமெரிக்கனுக்கு அப்போது கிடைத்தது .

பத்மா சுப்பிரமணியம் பல வருடங்களுக்கு முன் Sun TV பேட்டியொன்றில் தனக்கு வந்த பரிசுகளில் மிகவும் உயர்ந்தது ஆக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார் . கலிபோர்னியாவில் ஒரு நாட்டிய நிகழ்ச்சி ."கிருஷ்ணா நீ பேகனே பாரோ " நாட்டியத்தின் முடிவில் யசோதையாக நடித்த பத்மா கையில் (இல்லாத ) கிருஷ்ணனைத் தோளில் சாத்திக்கொண்டு உள்ளே செல்வதாக அபிநயம் பிடித்தாராம் . நிகழ்ச்சி முடிந்ததும் இவரை பாராட்ட வந்த கன்னட மொழி பேசும் குடும்பம் ஒன்றில் இருந்த மூன்று வயது குழந்தை ' கிருஷ்ணரைத் தூக்கிட்டுப் போனீங்களே , எங்கே அந்த கிருஷ்ணா ?' என்று கேட்டதாம் . தன் அபிநயம் அத்தனை தத்ரூபமாக இருந்ததை அறிந்து சிலிர்த்து , 'அப்போது ஏற்பட்ட சந்தோசத்தைப் போல எப்போதும் ஏற்பட்டதில்லை ' என்றார் பத்மா சுப்பிரமணியம் .

1 comment:

  1. உங்களின் வலைமனைக்கு ஏதோ ஒரு கூகுள் தேடல் மூலம் தற்செயலாக வந்தேன். இப்போது தங்களின் வலைமனையை தினமும் படித்து வருகிறேன்.மிக சுவாரஸியமான தகவல்களை சொல்லும் தாங்கள், ஏன் உங்களது வலைமனையை தமிழ் திரட்டிகளில் இணைக்கக் கூடாது? தங்களின் மன திருப்திக்கு எழுதினாலும், இதை எல்லோரும் படித்தால் அவர்களுக்கு பயனாகுமே? முடிந்தால் ஏதேனும் திரட்டிகளில் இணையுங்கள். மிக அருமையான பதிவு. கனகதாஸா பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் மேலே சொல்லப் பட்ட அமெரிக்கரின் சம்பவம் புதுசு. தகவலுக்கு நன்றி...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.