Share

Sep 23, 2009

Contempt, disdain,scorn

"குஷ்பு இட்லி" தமிழ்நாட்டு உணவு விடுதிகளில் பிரபலமாய் இருந்தது .

குஷ்பு அப்போது சொன்னாள்:'தமிழ்நாட்டு உணவுகளில் எனக்கு பிடிக்காத ஒரே ஐட்டம் இட்லி தான் . நான் சாப்பிட்டதே இல்லை.'

குஷ்புவின் துவேசம் இட்லி மீது.

..

அடையாளம் , அறிமுகம் , Resume, Bio-data இவற்றிற்கு எதிரான துவேசம் எப்படியெல்லாம் வெளிப்படும் ?ஆத்மாநாம் இந்த துவேசத்தை கவிதையாக்கியது இப்படித்தான் !

"நான் யாராய் இருந்தால் என்ன ?

நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?

அனாவசிய கேள்விகள்

அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்."

ஜெயகாந்தன் தன்னைச்சுற்றி சக மனித நடவடிக்கைகளின் மீதான அருவெறுப்பு ,துவேசத்தை உமிழ கவிஞர் தமிழ் ஒளியின் கவிதையை பயன்படுத்துகிறார் .

" சிக்குப் பிடித்துச் சிரங்கு ,சொறி , கோல் பிடித்து

நக்குப் பொறுக்கிகளாய் நாறுகிறார் -கொக்கர(க்)

'கோ 'வென்று கூவி நிதம் கோழிப் பருக்கைக்கும்

'தா'வென்று தாவுகிறார் ."

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற திருக்குறள் படித்து அதன் படி நடந்து பார்த்து சலித்து எரிச்சலாகி எஸ்.வைத்தீஸ்வரன் எழுதிய கவிதை :

"அப்படியே

மேலும் மேலும்

நன்னயங்கள் செய்து வருகிறேன்

வழக்கமாக.

எவனும்

நாணுகிற வழியாய் காணோம் !

மீண்டும் மீண்டும்

நன்மையே கிட்டட்டுமென்று

இன்னா செய்கிறான் , அயராமல்

இந்நாள் மனிதன் .

வள்ளுவனே , எனக்கொரு

மாற்றுக் குறள் கொடு

இன்று என்னைப் போல் நல்லவர்கள்

தோற்றுப் போகா வகையில் "

வெங்கட் சாமிநாதன் தமிழ் கலாச்சார குழு சூழல் பற்றிய துவேசத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் ? "தமிழ் நாட்டில் எந்த மடத்தனமான நிலைப்பாடும் ,கட்சி சார்பில் , குழு சார்பில் வைக்கப்படுமானால் அது செல்லுபடியாகிறது .பலம் பெறுகிறது .அந்த மடத்தனங்கள் , மடத்தனங்கள் என்று வாதிட்டால் அது பெர்சனல் தாக்குதல் ஆகிவிடுகிறது "

கொடூர மனிதத்தனங்களை கண்டு நொந்து தி.ஜானகி ராமன் காட்டும் மனித துவேசம் - " எந்தக் கைக்குட்டையால் நெஞ்சு ஈரத்தை ஒற்றி எடுத்துக் கொள்கிறார்கள் இந்த மனிதர்கள் ! நரகத்தில் நெய்த கைக்குட்டையா ?!"

2 comments:

 1. ஆழமான அர்த்தம் நிறைந்த உள்வாங்கல். மனம் பாராமாகிவிட்டது நண்பரே. ஜெரி என்பவர் எழுதும் படைப்புகளை மின் அஞ்சல் வசதி இருப்பதால் பதிந்து காத்து இருங்கள். உங்களது வார்த்தைகள். அவரது கவிதை.


  சவுக்குக்கு வலித்தது.

  வழிந்த ரத்தத்தில்

  மொய்த்த ஈக்களும்

  குதுகலித்த மனதும்

  அடுத்த வேட்டையை தொடங்கியது?


  வேறு ஒரு குறள் கேட்டவரை பார்த்ததும் எனக்குத் தோன்றியது இது.

  ReplyDelete
 2. அன்புள்ள ராஜநாயகம்!
  உங்களுக்கு விபீஷணாழ்வார் என்று பட்டப்பெயர் சூட்டப் போகிறார்கள் புதுப்பார்ப்பனர்கள்.
  எச்சரித்துவிட்டேன்!
  அன்புடன்
  கிருஷ்ணமூர்த்தி

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.