Share

Sep 19, 2009

ந.சிதம்பர சுப்பிரமணியம்

மணிக்கொடி எழுத்தாளர் ந.சிதம்பர சுப்பிரமணியம் வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தார். மணிக்கொடி கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் கதை இலாக்காவில் வேலை பார்த்தவர் . அடுத்த தலைமுறை அசோகமித்திரனும் கூட கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் இருந்த காலத்தில், அதற்கு பின்னும் அங்கே ஜெமினியிலேயே குமாஸ்தா உத்தியோகம் பார்த்திருக்கிறார் .

எழுத்தாளர் நிறைய சம்பாதிப்பது அபத்தமாக தோன்றலாம். ஆடிட்டிங் வேலை பார்த்த ந.சிதம்பர சுப்பிரமணியம் சம்பாதித்தார் என்று தான் சொல்லவேண்டும். ஒரு எழுத்தாளர் சினிமா தியேட்டர் விலைக்கு வாங்கினார் என்றால் அதிசயம் தானே . அதுவும் மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில் .ஓடியன் தியேட்டரை ந. சிதம்பர சுப்பிரமணியம் வாங்கினார் . ஆனால் அவர் ஓடியன் தியேட்டரை வாங்கிய பின் தான் தெரிந்தது . அதில் நிறைய வில்லங்கம் . ஆமாம். ஏமாந்துவிட்டார். அன்றைக்கே ரியல் எஸ்டேட் பிசினஸ் பிராடு வேலைகள் உச்சத்தில் தான் இருந்திருக்கிறது . ந.சிதம்பர சுப்பிரமணியம் அவருடைய ஆயுட்கால சேமிப்பை தொலைத்தது இப்படித்தான் . அவரே எழுதியது போல " மனம் கோட்டை கட்டிக் கொண்டே வரும். ஆனால் காலம் அவைகளை தகர்த்துக் கொண்டே வரும்."

'சக்ரவாகம்' சிறுகதை தொகுப்பும் 'இதய நாதம் ' நாவலும் அவரை நினைவில் வைக்க உதவுகின்றன . தி.ஜா வின்' சிவப்பு ரிக் ஷா' சிறுகதை தொகுப்புக்கு ஒரு முன்னுரை எழுதினார் .


1978ல் டெல்லியில் இருந்து திஜா வந்திருந்த போது அசோகமித்திரனுடன் இவரை தேடி தி.நகரில் அலைந்திருக்கிறார் . சரோஜினி தெருவில் ந.சி . இருப்பதாக தி.ஜானகிராமன் தான் கேள்விப்பட்டதை வைத்து சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக கதவை தட்ட வேண்டிய நிர்பந்தம் . ஆனால் பலிக்கவில்லை. அன்றே திஜா டெல்லி திரும்பவேண்டிய சூழல் . ரயிலில் ரிசர்வ் செய்த பின் பயணத்தை எப்படி மாற்றமுடியும் . அலைந்த பின் திஜா அன்று மோரும் சாதம் சாப்பிட்டார் என்பதை அசோகமித்திரன் இன்றும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். ஆனால் அப்போது ந.சி. இவர்கள் தேடியலைந்த சரோஜினி தெருவில் குடியிருக்கவில்லை . அடுத்த தெருவில் அதாவது மோதிலால் தெருவில் குடியிருந்த விஷயம் அப்புறம் தான் அசோகமித்திரனுக்கு தெரிய வருகிறது . இவர்கள் தேடியலைந்ததற்குஅடுத்த வாரம் ந.சிதம்பர சுப்பிரமணியன் இறந்து விட்டார்.

"சுவர்க்கம் நம் முன்பாக இருந்தாலும் அதை நாம் அடைவதில்லை . ஏனென்றால் நம்முடைய முயற்சிகள் அதை நரகமாக்குவதிலேயே கழிந்து விடுகின்றன ."

- ந.சிதம்பர சுப்பிரமணியம்.

3 comments:

  1. ந‌.சி போன்ற அபூர்வமான எழுத்தாளர் பற்றிய விரிவான பதிவு எழுதப்பட வேண்டியது அவசியம்.அவரது புகைப்படம் இருந்தால் வெளியிடலாம்.

    ReplyDelete
  2. சுவர்க்கம் நம் முன்பாக இருந்தாலும் அதை நாம் அடைவதில்லை . ஏனென்றால் நம்முடைய முயற்சிகள் அதை நரகமாக்குவதிலேயே கழிந்து விடுகின்றன ."

    எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

    ReplyDelete
  3. ஒரு எழுத்தாளர் சினிமா தியேட்டர் என்ன தமிழ் நாட்டையே விலைக்கு வாங்கிவிடுவார். சமீபத்தில் அவர் ஒரு சினிமாவுக்கு கதை,வசனம் எழுத ஒரு கோடியே அம்பது லட்ச ரூபா சம்பளம் வாங்கியுள்ளார் (இன்கம்டாக்ஸ் செளுதினார இல்லையா என்பதை இன்கம்டாக்ஸ் அலுவலகம் விசாரிக்குமா என்பதே சந்தேகம் தான்). தன் அயராத உழைப்பால் மூன்று பெண்களுக்கு துணைவராகவும், மகன்கள், மகள் மற்றும் பேரன்மார்ர்களை செட்டில் செய்வதில் பலே கில்லாடியகவும் விளங்கி வருகிறார். சினிமா வசனகர்த்தா என்றால் சும்மாவா ?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.