Share

Sep 8, 2009

புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார் .
' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது . அல்லது புல்லுக்கு நகை தருகிறது .பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '. அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண் . என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள் . மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது . காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "

விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."
எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள் !"

மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை
'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'
மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder,lightning or in rain

3 comments:

  1. " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."

    beautifully written line.

    jigopi

    ReplyDelete
  2. " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."

    அத்தனையிலும் பிடித்த வரி!

    ReplyDelete
  3. மிகவும் நன்று

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.