Share

Sep 1, 2009

நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது!?

கரிச்சான் குஞ்சு எழுதிய "பசித்த மானிடம்" நாவலில்
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேசனில் தனியிடம் பார்த்து அமர்ந்து கணேசன் பணத்தை தன் பையில் இருந்து எடுக்க முயற்சி செய்யும்போது போலீஸ் பசுபதி பார்க்கிறார் . கணேசன் குஷ்டரோகி .
" இந்த ஊருக்கு நான் புதியவன் . பிச்சையெடுத்து சாப்பிட்டு பிச்சைக்காரர்களுடன் கலந்து வாழ முடிவு செய்திருக்கிறேன் " என்கிறான் .
பசுபதி தீவிர ஆன்மீகவாதி ." எவ்வளவு பழுத்த ஞானம் இருந்தால் இந்த முடிவுக்கு வர முடியும் !" புல்லரித்து ,செடியரித்து, மரமரித்து சிலிர்த்துப் போகிறார் .
கணேசன் உள்ளதை உள்ளபடி சொல்கிறான் "அப்படி கிடையாது நான் ஒரு அழுகல் , எச்சிக்கலை நாய் . மலத்தில் மகிழும் பன்றி."
பசுபதி விடுவதாய் இல்லை . மேலும் சிலிர்த்து " நாய் போல் பன்றி போல் , நாணம் இல்லா நக்கனுமாய் , பேய் போல் ,பித்தனைப்போல் பிரம்மவித்து தோன்றிடுவான் !" ஒரு செய்யுள் எடுத்து விட்டு கணேசனை வழிபடுகிறார் .
கணேசன் " நான் உதவாக்கரை . காசுபணம் சுகபோகம் கண்டவன் .பண்ணின பாவத்தால் அழுகிச்சொட்டுகிறது உடம்பு .நான் ரொம்ப நல்லாயிருப்பேன் முன்னெல்லாம் . அந்த உடம்பு செத்துப்போயிடுச்சி ; இது புது உடம்பு " யதார்த்தமாய் இப்படி சொல்வதையும் பசுபதி தத்துவார்த்தமாக எடுத்துக்கொண்டு "கொஞ்சமா பேசினீங்க . ஆனால் நிறைய சொல்லிட்டீங்க . அதிலேயும் ரத்தினச்சுருக்கமா , பழைய உடம்பு செத்துப்போயிடுச்சின்னு சொன்னீங்களே ! இதுவரை எனக்கு புரியாத ஞானங்கள் எல்லாம் புரியுதுங்க !" வியந்து கணேசனை சித்தன் என்றே நம்புகிறார் .
பசுபதி பின்னால் போலீஸ் வேலையிலிருந்து ரிட்டயர் ஆனதும் சேத்ராடனங்களுக்கு சாமி கும்பிட கிளம்பும் முன் " சாமி ! நல்லா பாருங்க என்னை . கண்ணால் வரும் ஞானம் பொன்னாலும் வராது .உங்க கண்பார்வை பட்டதால் நீங்க காட்டிய எல்லா தத்துவங்களும் எனக்கு நல்லா புரியது "
இல்லாத ஒன்றை இருப்பதாக பாவித்து சாதாரண சராசரி அல்லது சராசரிக்கும் கீழானவர்களை மகான் ஆககாட்டும் வறட்டு ஆன்மீகத்தை கரிச்சான் குஞ்சு சத்தமில்லாமல் ,கோஷமே இல்லாமல் பசித்த மானிடத்தில் மட்டுமல்ல
"குச மேட்டு சோதி " சிறுகதையிலும் காட்டுகிறார் .
கோவில் கோபுரத்தடியில் விவாதம் செய்யும் நண்பர்களில் ஒருவன் சொல்கிறான் " இந்த நவீன காலத்திலும் வீண் பிரமைகள் . நம்புவது நல்லது என்றால் நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது " என்று இந்த மூட குருபக்திப் பற்றி சொல்கிறான் . ஒரு வேடிக்கையை அப்போதே நடத்தி காட்டுகிறான் .அங்கே இருக்கிற ஒரு பைத்தியத்தைக் கிளப்பி கடைவாசலில் ஒரு சீப்பு பழம் வாங்கி தருகிறான் .அந்தப் பைத்தியம் பழத்தை தின்னும்போது அதன் வாயிலிருந்து நழுவி விழுவதை பிடிக்க ஏந்துவது போல தன் கையை நீட்டிக்கொண்டே நிற்க ஆரம்பிக்கிறான் . சீப்பு ,சீப்பாக பைத்தியம் சாப்பிடுகிறது . கூட்டம் கூடிவிடுகிறது . " என்ன ? என்ன !"
இவன் சொல்கிறான் " ஒரு துளி எச்சல் கேட்கிறேன் . சாமி தரமாட்டேன்னுது !"
இருபத்தாறு மாதத்தில் குசமேட்டில் அந்த பைத்தியம் விஷேசமான மகானாக ஆக்கப்பட்டு ஆஸ்ரமம் , பூஜை, மேல்நாட்டு வெள்ளைக்கார பக்தர்கள் என்று அமர்க்களப்பட்டு விடுகிறது !
" ஒரு மாதிரியான கூட்டம் " கரிச்சான் குஞ்சுவின் குறுநாவல் . மயிலாப்பூரில் வசிக்கும் ஜெயாவின் 'அப்பா , அம்மா , அக்கா ,தம்பி' இவர்கள் தான் மிக பலகீனமான 'ஒரு மாதிரியான' கூட்டம் . பெரியப்பாவிடம் டெல்லியில் வளரும் பெண் ஜெயா . பெரியப்பா ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர் . ஜெயாவின் பெரியப்பா அவளுடைய அப்பா பற்றி இப்படி சொல்கிறார் :" என் தம்பி ஒரு வெறும் ஆள் ,சுத்த உதவாக்கரை , குதிரை ரேஸ் , சீட்டாட்டம் நு சூதாடியே வீணாப் போனவன் . இப்போ இந்த (காஞ்சி ) பெரியவாள் பைத்தியம் வேற ஏற்பட்டிருக்கு. வெறும் ஆஷாடபூதித்தனம் ,பூஜை ,கீஜை ன்னு வேற கூத்தடிக்கிறான் "
காஞ்சி மடத்தின் மீதான போலி அனுஷ்டான பித்து பற்றி இப்படி ஒரு பிராமண எழுத்தாளர் நாற்பது , ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதி இருக்கிறார் !
மறைந்த மகத்தான எழுத்தாளர் ஆதவன் சொல்வார் :
"தி ஜானகிராமன் கதைகளில் ஆஷாடபூதித்தனத்திற்கும் ,போலி அனுஷ்டானங்களுக்கும் எதிரான ஒரு கோபம் எழுத்தில் இழையோடக்காணலாம் . கரிச்சான் குஞ்சு கதைகளும் அது போலத்தான் "

1 comment:

  1. Sir, this reminds me of Jayakanthan's Gurubeedam short story and R.K. Narayan's Guide. Very interesting post. regards.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.