Share

Sep 30, 2009

Carnal Thoughts-24

மானபங்கம்

Cattle Class புகழ் சசிதரூர் அவர்களுக்கு சமர்ப்பணம்.

பதினொரு வருடங்களுக்கு முன்

அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்மணி சொன்னார் -
" தினமும் 27Aபஸ்சில் திருவல்லிக்கேணி வரை வர்றேன். எழிலகத்துல க்ளார்க்கா வொர்க் பண்றேன் . பஸ்சில் உரசிட்டு நிக்கிறவனுங்க.....இப்படி கூட்டத்திலே வேணும்னே மோதுரானுங்க.வெட்கத்தை விட்டு சொல்றேன். வீட்டுக்கு போயி புடவையை அவிழ்த்துப் பார்த்தா அங்கங்கே திட்டுத்திட்டா ...காஞ்சி போயி ....அந்த அசிங்கத்தை தொட்டுத் துவைக்கவே கை கூசுது ..........பின்னாலிருந்து தாக்குகிற இந்த வெறி பிடிச்ச மிருகங்களை எங்களுக்கு அடையாளம் தெரியும். தெரிஞ்சு என்ன பண்ணுறது ?"
- ஜூனியர் விகடன் ஆகஸ்ட் 9,1998
............

"ஹரி,ஹரி,ஹரி என்றாள்
அபயம் அபயம் உனக்கு என்றாள்........
நம்பி நின்னடி தொழுதேன் - என்னை
நாணழியாதிங்குக் காத்திடுவாய் ..........
இங்கு நூற்றுவர் கொடுமையைத்
தவிர்த்தருள்வாய்"

பாஞ்சாலிக்கு அவள் வாழ்வில் ஒரு நாள் தான் மானபங்கம்.


Sep 29, 2009

காந்தியார் மரணம் மோகமுள் நாவலில்


மோகமுள் நாவலில் கதைநாயகன் பாபுவும் கதைநாயகி யமுனாவும் காந்தி மரணம் மீதான உணர்வுகளை பேசுகிறார்கள்.


பாபு : மனுஷன் போய் எட்டுமாதமாகி விட்டது... இந்த மனிதன் போய்விட்டார் என்று கேட்டதில் இருந்து வேண்டியவர்களைப் பார்க்கிற போதெல்லாம் அழுகை குமுறி,குமுறி வந்தது . டவுனில் ( சென்னை ) தியாகராஜ ஆராதனை அன்று சாயங்காலம் கச்சேரி நடக்கிறபோது யாரோ ஒரு இளைஞன் வந்தான் . கச்சேரிக்கு நடுவில் ஓடி வந்து முகம் பேயறைந்தாற்போல் கோண , " அண்ணா " என்று வித்வானைப் பார்த்து ஒரு சத்தம் போட்டான் .திடீரென்று வாத்யம் , பாட்டு எல்லாம் நின்று விட்டது . " காந்தி செத்துப் போயிட்டாராம் அண்ணா " என்று விசித்து அழத்தொடங்கி விட்டான் .
"என்னது "
" எப்ப "
" என்னடாது .... ஏய் பாலு .."
" யார்ரா சொன்னா ?"
" ரேடியோவிலே அண்ணா ''
ஒரே கலவரம். வெளியே கடைகளை அவசரமாக அடைத்துக் கொண்டிருந்தார்கள் .பார்க்கிற முகம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது .

யமுனா : ஆமாம் பாபு . நானும் அம்மாவும் திருவையாத்திலே அன்னிக்கு , கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம் .திடீர்னு ஒருத்தர் வந்து சொன்னார் . பந்தல் முழுக்க எழுந்து விட்டது . ஒரே அழுகை. ஒரு போலீஸ்காரன் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதான். அம்மா மூச்சை போட்டு விழுந்துவிட்டாள்.

பாபு : புத்ரா என்று சுகனைப் பார்த்து கூப்பிட்டாராம் வியாசர் . பிரிவு தாங்காமல் மரங்கள் கூட ஓலைமிட்டதாம் . கூலிக்கு விழுந்த அடி மதுரை முழுவதும் விழுந்தது . இந்த உயிரை மரணம் பிடுங்கும்போது ஜீவராசி எல்லாம் நொந்து துடிச்சது.


கல்பித சங்கீதம் - கற்பனா சங்கீதம்

''பேகடா ராகம் கமகங்களும் பாய்ச்சல்களுமாக 'தானே' பாடிக்கொண்டிருந்தது . எத்தனை தினுசுகள்! எத்தனை உயிர்கள்! எத்தனை உருவங்கள்! ...இதையெல்லாம் பாட கச்சேரியில் நேரமேது!மூன்று மணிக்குள் நாலு ராகம் , பத்துப் பாட்டு,நாலு துக்கடா ,ஒரு பல்லவி இப்படி வாரப்பத்திரிக்கை மாதிரி நடக்கற கச்சேரியில் பேகடை ராகம் தன் முழு வடிவத்தையும் வெளியிட நேரம் ஏது "

-தி ஜானகிராமன் " மோகமுள் "

...............

திஜாவின் ஆதங்கத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது . இசைப் பாரம்பரியம் குறித்த பிரக்ஞை தான் காரணம்.

பட்டணம் சுப்ரமணிய அய்யர் பேகடா ராகத்தை மைசூர் அரண்மனையில் பாடியவிதம் :

முதல் நாள் பேகடா ராக ஆலாபனை .

இரண்டாம் நாள் 'தானம் '

'பல்லவியும் ஸ்வரமும் ' மூன்றாம் நாள் !

இப்படி அமர்க்களப்படுத்திய பட்டணம் சுப்ரமணிய அய்யர் அதன் பின் பேகடா சுப்ரமணிய அய்யர் என பெருமைப் படுத்தப்பட்டார் .

தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியிருக்கிறார் .

முதல் நான்கு நாட்கள் அக்ஷிப்திகம் ,ராக வந்தினி என மூழ்கி விட்டார் .அடுத்த நான்கு நாட்கள் ஸ்தாயி ,மகரினீ , பல்லவி !

தியாகய்யர் தேவகாந்தாரி ராகத்தை கொவ்வுர் சுந்தர முதலியார் வீட்டில் ஏழு நாட்கள் பாடியிருக்கிறார் ! அந்த பவித்திர புண்ணிய ஏழு நாட்கள் .

சிதம்பரம் நடராஜர் வைபவத்தில் ஒரே ஒரு ராகம் -உசைனி ராகம் இரவு முழுவதுமே !

..

'சங்கீத சிட்சை ' என்று சொல்வதை விட' அத்யயனம் ' என்று சொல்வது சிறப்பு .'சங்கீத அத்யயனம் '. அத்யயனம் மூலம் கிடைப்பது கல்பித சங்கீதம் .குருவிடம் இருந்து கிடைக்கப்பெறுவது . கற்பனா சங்கீதம் சங்கீத ஞானத்தின் வழி கிடைப்பது . ராக ஆலாபனை , ஸ்வர வரிசை பாடும்போது பாடகர் தன் கற்பனா சங்கீத ஞானத்தை வெளிப்படுத்த முடியும் . நல்ல ரசிக சதஸ் பாடகர் முன் இருப்பது அவசியம்! சுருதி தான் சாமி மாதிரி.வயலின் வித்வான் பாடகருடைய வின்யசங்களை பொறுப்பாக பின் தொடரவேண்டும்.

ஜானகிராமன் இதிலுள்ள Eroticism பற்றி கவனப்படுத்துகிறார் : ''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும் எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."

ஏதாவது ஒன்று கெட்டுப்போகும் என்றால் அது கட்டாயம் கெட்டுப்போகும்.

பரதநாட்டியம் பயின்றவர் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு சிலாக்கியமில்லையாம் .

பரதநாட்டியம் பற்றிதிஜாவின் 'மலர் மஞ்சம் ' நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம் ,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும் ...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும் , இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும் . நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''

Sep 28, 2009

வைகறை

நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்தர் ரைம்போ கவிதைகளில் ஒன்று.
ரைம்போ வைகறையை கனவிலும் கண்டிருக்கிறான்!
'' முத்தமிட்டேன் வேனில் வைகறையை "
சூரியன் உதயமாவதற்கு முன் அந்த அதிகாலை வைகறை.
"இறந்து கிடந்தது நீர் " அப்போது .
'தன் பெயரை இயம்பிய மலர்' பற்றி ரைம்போ குறிப்பிடுகிறான்.
" அவளை(வைகறையை ) சேவலிடம் காட்டிக்கொடுத்தேன் " (அப்புறம் தான் 'அடடே அப்படியா. நல்லவேளை!கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேனே' சுதாரித்து சேவல் கூவியிருக்கும்! "கொக்கரக்கோ")

குழந்தை சேக்ஸ்பியர் ரைம்போ ''கண்விழிக்க ஆனது உச்சிப் பொழுது."

கனவில் வைகறை. யதார்த்தம் உச்சிப் பொழுது. அதனால் தான இருபது வயதை எட்டியவுடன் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டான் போலும் !ரைம்போ தன் பதின்பருவத்தில் மட்டும் தான் கவிதை எழுதினான்.


வைகறையில் இருட்டு பிரிந்து சூரிய உதயம் செய்யும் எழுச்சி விந்தையை பாரதி குயில் பாட்டில் விவரிக்கிறான் :
"புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி
மண்ணைத்தெளிவாக்கி,நீரில் மலர்ச்சி தந்து
( இறந்து கிடந்த நீருக்கு மலர்ச்சி!)
விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதி.. "

பாரதி " வைகறையின் செம்மை இனிது " என்று ரசித்து வசன கவிதையில் சொன்னவன் அல்லவா!


சூரிய வெளிச்சம் இருட்டிய பூமி மீது விழுகிற கணங்களை பிரமிள் தன் படிமங்கள் கொண்டு படம் பிடிக்கிற அழகு அபூர்வமானது.
" பூமித்தோலில் அழகுத் தேமல் "

" பரிதி புணர்ந்து படரும் விந்து "

"கதிர்கள் கமழ்ந்து விரியும் பூ "

" இருளின் சிறகைத் தின்னும் கிருமி "

"வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி "


Sep 26, 2009

பக்தி

பைபிளில் பரம பிதாவை நோக்கி

“O Lord, How long shall I cry
and You will not hear?”
Habakkuk 1: 2

தியாகப் பிரும்மம் காம்போஜி ராகத்தில் விம்முவது

"மறி மறி நின்னே மொரலிட நீ

மனஷுன தயராது "

'திரும்பத் திரும்ப நான் உன்னிடம்

முறையிட்டும் உன் மனதில் தயவு பிறக்கவில்லை '

(காம்போஜி ராக கீர்த்தனையை 'சிந்து பைரவி ' படத்தில் சாருமதி ராகத்தில் மாற்றிப்போட்டிருந்தார் இளையராஜா )

தியாகப் பிரும்மத்தின் சுப பந்துவராளி கீர்த்தனை -"என்னாள்ளு ஊரக்கே?" -' என்னுடைய கோரிக்கையை எப்போ கேட்கப்போறே ராமா ? ' என வினவும்.

"அன்று பாலகனாகி

ஆலிலை மேல் துயின்ற

எம் ஆதியாய் !

என்றும் உன்றனக்கு

எங்கள் மேல்

இரக்கம் எழாதது எம் பாவமே "

-ஆண்டாள் நாச்சியார் மொழி

பக்தி - External Meditationஎன்று தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் .

பக்தி என்பதே ஒரு மனக்கோளாறு தான் என்று மனோதத்துவம் சொல்கிறது.

கடவுளை பண்ணையார் ஆகவும் பக்தனை அடிமையாகவும் உருவகப்படுத்தும் "பக்தி "


When one person suffers from delusion it is called insanity. When many people suffer from a delusion it is called religion.
- Robert M.Pirsig

...

"மண்ணைப் பிடித்தான் கடவுள்

மனிதனாயிற்று

ஆகி , அது என்ன

மூலக்ரத்தில்

உளிச்சத்தம் ?

கடவுளைப் பிடித்துக்கொண்டிருக்கிறது

மண் !"

_ பிரமிளின் கவிதை இது !

Sep 25, 2009

தோரோ வாழ்ந்த வால்டன் ஏரி

'வால்டன் ' சம்பிரதாயமான சுயசரிதை வகையை சேர்ந்ததல்ல .நகரத்தை விட்டு இரண்டு வருடம் தான் வாழ்ந்த வாழ்க்கையை வால்டன் மூலம் பேசுகிறார் தோரோ.
தன்னை சார்ந்திருத்தல் , தனிமை , ஆழ்ந்த அவதானிப்பு . இயற்கையுடன் ஒன்றிய நிலை - இவை தான் வால்டன் ஏரிக்கரையில் தோரோ வின் அனுபவம் .


Thoreau's Walden – Non-fiction,American classic. Walden can be read a hundred times without exhaustion.

குல்சாரி நாவலில் சிங்கிஸ் ஐத்மாத்தவ் "பாதி வாழ்வைக் கனவுகளிலே அல்லவா கழிக்கிறோம் . வாழ்க்கை இத்தனை இனிமையாக இருக்க இது தான் காரணமோ ! நாம் காணும் கனவுகள் எல்லாம் நனவாதில்லை என்பதால் தான் வாழ்க்கை நமக்கு உயிருக்கு உயிரானதாகி விடுகிறதோ?"

ந.சிதம்பர சுப்பிரமணியம் ' என்று வருவானோ ' சிறுகதையில் " கனவு காண்பதும் ,காத்திருத்தலுமே மனிதர்களுடைய வாழ்க்கையை உயர்த்தி ரசமுள்ளதாக செய்கின்றன '

" அவ்வளவு நறுக்கு தெறிச்சாப்பல நம்ம ஜன்மம் அமைஞ்சதுன்னா அப்புறம் பிறவி எடுத்ததுக்கு என்ன தான் அழகு இருக்கு " - " மலர் மஞ்சம் " நாவலில் தி.ஜானகிராமன் கேட்கிறார் .

தோரோ " உன்னுடைய கோட்டையை ஆகாயத்தில் கட்டி விட்டாயா ? உன் வேலைக்கு எந்த இழப்பும் வந்து விடவில்லை . கோட்டை ஆகாயத்தில் இருக்கவேண்டியது தான் . இப்போது அஸ்திவாரத்தை கோட்டையின் கீழ் அமைத்து விடு " என்று சுலபமாக வால்டனின் முடிவில் சொல்கிறார்.
Never stop dreaming.
When you want something,
all the universe conspires in helping you to achieve it.
- Paulo Coelho in 'The Alchemist': A novel about following your dream.

Zen and the art of Motorcycle Maintanance நூலில் வரும் பீட்ரஸ் தன்னோடு எடுத்துச்செல்லும் புத்தகங்களில் 'Walden ' ஒன்று.
பிறந்தபோது இருந்த ஞானம் இப்போது தனக்கு இல்லையே என தோரோ எப்போதும் கவலைப் பட்டுக்கொண்டே தான் இருந்தார் .
However mean your life is, meet it and live it;do not shun it and call it hard names.
இதையே ஜெயகாந்தன் " வாழ்க்கை எவ்வளவு மலிவானதாக இருந்தாலும் அழகானதாகவே இருக்கிறது " - 'லட்சாதிபதிகள் ' கதையில் !
வால்டனில் எக்கானமி சேப்டரில் தோரோ ஒரு நாயைப் பற்றி- அந்த நாய் தன் எஜமானரை காண வரும் ஆடையுடுத்திய அன்னியர்களைப் பார்த்து கண்டபடி குலைக்கும் . ஆனால் நிர்வாணமான திருடன் முன் அமைதியாய் வாலாட்டும் .
வால்டனை எழுதிய ஹென்றி டேவிட் தோரோ என்று அறியப்பட்டவர் என்றாலும் அவருடைய புகழுக்கு அவருடைய பிரபலமான Civil Disobedience கட்டுரை பிரதான காரணம்.அரசாங்க சட்டங்கள் பற்றிய மறுதலிப்பை தோரோ முன் வைத்தார் . மக்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமான சட்டங்களை ஏற்க மறுக்கவேண்டும் என Civil Disobedience கட்டுரையில் குறிப்பிட்டார் .The Rights and Duties of the Individual in relation to Government.In fact the government is primarily an agent of corruption and injustice. Because of this, it's "not too soon for honest men to rebel and revolutionize.
தோரோ தன் மனசாட்சிப் படி நடந்து கொண்டதற்காக ஒரு நாள் சிறையில் கழிக்க நேர்ந்தபோது எமர்சன் அவரைக் காணவந்தார் ." தோரோ! நீ ஏன் இப்படிஇங்கே?" என்று வேதனையுடன் கேட்ட போது தோரோ " எமர்சன் ! நீ ஏன் இங்கே இல்லை?" என்று திருப்பிக் கேட்டார்.
அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிந்ததில் தோரோவின் Civil Disobedienceகட்டுரை பிரதான பங்கு வகித்தது. "I ask for, not at once no government, but at once a better government"
காந்தியார் 'சத்யாக்ரகம்' என்ற போராட்ட கொள்கையை தோரோவின் Civil Disobedience கட்டுரை தலைப்பில் இருந்து எடுத்துக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும் . தோரோ மீது காந்தியார் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் . மார்ட்டின் லூதர்கிங் ஜூனியரும் தான்.
தமிழில் ஒரு சில எழுத்தாளர்கள் ' தாரூ ' என்று தோரோவை குறிப்பிட்டு இருக்கிறார்கள் .
To be a philosopher is not merely to have subtle thoughts,nor even to found a school, but so to love wisdom as to live according to its dictates, a life of simplicity, independence,magnanimity, and trust.
- Thoreau

Sep 24, 2009

யார் நீ?


"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."

- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'


கரு இல்லாத முட்டையில்லே
குரு இல்லாத வித்தையில்லே
என்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது .
நான் யாராய் இருந்தால் உனக்கென்ன ?

Question: Who the hell are you?
My reply : Didn't I ever mention it?!


அடையாளம் , அறிமுகம் , Resume, Bio-data இவற்றிற்கு எதிரான துவேசம் எப்படியெல்லாம் வெளிப்படும் ?ஆத்மாநாம் இந்த துவேசத்தை கவிதையாக்கியது இப்படித்தான் !
"நான் யாராய் இருந்தால் என்ன ?
நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?
அனாவசிய கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்."

Even Eminence requires a luxurious,deluxe frame to make it presentable.

 பெரிய பிரமைகள் தேவையே இல்லை. 
.......................



தத்துவவாதி சோப்பன்ஹீர் யாருடைய துணையும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்தான்.அவனுக்கு துணை ஒரே ஒரு நாய் மட்டுமே . அதற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாக அவன் ' ஆத்மா ' என்று பெயரிட்டிருந்தான் . யார் அந்த நாய் ? 'ஆத்மா' என்பது தான் பதிலாக இருக்கமுடியும் . ஆனால் அந்த நகரத்தில் இருந்த மனிதர்கள் எல்லோருமே அந்த நாயை " குட்டி சோப்பன்ஹீர்" என்று தான் அழைத்தார்கள் .அவன் அந்த நாயின் பெயர் ' ஆத்மா , ஆத்மா , ஆத்மா ' என்று எவ்வளவோ ,எப்படியெல்லாமோ வற்புறத்தி சொல்லிப் பார்த்தும் கூட அந்த முட்டாள் ஜனங்கள் "குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்" என்றே செல்லமாக அந்த நாயை குறிப்பிட்டார்கள்.


அப்படியானால் சோப்பன்ஹீர் என்பவர் யார் ?
அந்த அசந்தர்ப்பமான மனப்போக்குள்ள ஜனங்கள் இந்த தத்துவவாதி சோப்பன்ஹீர் அவர்களை " பெரிய ஆத்மா " என்று கூட சொல்வார்கள் தானே!
அடையாளச்சிக்கல் கர்ணனுக்கு, ஏகலைவனுக்கு மட்டுமில்லை ..ஆத்மா என்ற நாய்க்கு கூடத்தான் இருந்திருக்கிறது என்பதே மகத்தான சோகம்!

Sep 23, 2009

Contempt, disdain,scorn

"குஷ்பு இட்லி" தமிழ்நாட்டு உணவு விடுதிகளில் பிரபலமாய் இருந்தது .

குஷ்பு அப்போது சொன்னாள்:'தமிழ்நாட்டு உணவுகளில் எனக்கு பிடிக்காத ஒரே ஐட்டம் இட்லி தான் . நான் சாப்பிட்டதே இல்லை.'

குஷ்புவின் துவேசம் இட்லி மீது.

..

அடையாளம் , அறிமுகம் , Resume, Bio-data இவற்றிற்கு எதிரான துவேசம் எப்படியெல்லாம் வெளிப்படும் ?ஆத்மாநாம் இந்த துவேசத்தை கவிதையாக்கியது இப்படித்தான் !

"நான் யாராய் இருந்தால் என்ன ?

நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?

அனாவசிய கேள்விகள்

அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்."

ஜெயகாந்தன் தன்னைச்சுற்றி சக மனித நடவடிக்கைகளின் மீதான அருவெறுப்பு ,துவேசத்தை உமிழ கவிஞர் தமிழ் ஒளியின் கவிதையை பயன்படுத்துகிறார் .

" சிக்குப் பிடித்துச் சிரங்கு ,சொறி , கோல் பிடித்து

நக்குப் பொறுக்கிகளாய் நாறுகிறார் -கொக்கர(க்)

'கோ 'வென்று கூவி நிதம் கோழிப் பருக்கைக்கும்

'தா'வென்று தாவுகிறார் ."

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற திருக்குறள் படித்து அதன் படி நடந்து பார்த்து சலித்து எரிச்சலாகி எஸ்.வைத்தீஸ்வரன் எழுதிய கவிதை :

"அப்படியே

மேலும் மேலும்

நன்னயங்கள் செய்து வருகிறேன்

வழக்கமாக.

எவனும்

நாணுகிற வழியாய் காணோம் !

மீண்டும் மீண்டும்

நன்மையே கிட்டட்டுமென்று

இன்னா செய்கிறான் , அயராமல்

இந்நாள் மனிதன் .

வள்ளுவனே , எனக்கொரு

மாற்றுக் குறள் கொடு

இன்று என்னைப் போல் நல்லவர்கள்

தோற்றுப் போகா வகையில் "

வெங்கட் சாமிநாதன் தமிழ் கலாச்சார குழு சூழல் பற்றிய துவேசத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் ? "தமிழ் நாட்டில் எந்த மடத்தனமான நிலைப்பாடும் ,கட்சி சார்பில் , குழு சார்பில் வைக்கப்படுமானால் அது செல்லுபடியாகிறது .பலம் பெறுகிறது .அந்த மடத்தனங்கள் , மடத்தனங்கள் என்று வாதிட்டால் அது பெர்சனல் தாக்குதல் ஆகிவிடுகிறது "

கொடூர மனிதத்தனங்களை கண்டு நொந்து தி.ஜானகி ராமன் காட்டும் மனித துவேசம் - " எந்தக் கைக்குட்டையால் நெஞ்சு ஈரத்தை ஒற்றி எடுத்துக் கொள்கிறார்கள் இந்த மனிதர்கள் ! நரகத்தில் நெய்த கைக்குட்டையா ?!"

தினமலர் அந்துமணி

தினமலர் வாரமலர் அந்துமணியின் பா. கே.ப.,கட்டுரைகளும் கேள்விபதில்களும் தமிழக மக்களுக்கு சுவாரசியமானவை.சமீபத்தில் தினமலர் குற்றாலம் சுற்றுலாவில் வாசகர்கள் இவரைப் பார்க்கவேண்டி தவித்தபோதும் , அந்துமணி அவர்களிடையே இருந்த நிலையிலும் முகம் தெரியாததால் அறிய முடியாமல் போய்விட்டது ! தன்னை முகம் ,அடையாளம் மறைத்து எவ்வளவு வருடங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்!
க.நா.சு மொழிப் பெயர்த்த நார்வே நாவல் " பசி"- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதியது . இந்த நாவலை நான் மீண்டும் பலவருடங்களுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன் ரிவைஸ் செய்துகொண்டிருந்தேன் . அப்போது அதே நேரத்தில் தினமலர் வாரமலரில் நார்வே நாட்டைப் பற்றி அந்துமணி எழுதிய குறிப்புகள் படிக்க கிடைத்தது சுவாரசியமாய் இருந்தது .
சென்ற இரண்டு வார இதழ்களை ஒரு சேர நான் நேற்று தான் படிக்க வாய்த்தது .
13.09.09வாரமலரில் அந்துமணி கட்டுரையில் பெரியசாமி அண்ணாச்சி சொல்லும் ஒரு தகவல் தவறானது .
ஒரு கவிஞர் எழுதியதை வேறொருவர் எழுதியதாக புரிந்துகொள்ள நேர்வது அடிக்கடி நிகழ்கிற விஷயம் தான் . " அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை " என்ற பழைய சினிமாப் பாடல் கவி கா.மு . ஷெரிப் எழுதிய பாடல் என தவறுதலாக கட்டுரையில் அந்துமணியின் நண்பர் பெரியசாமி அண்ணாச்சி குறிப்பிட்டது பதிவாகியுள்ளது . ஆனால் " யானைப் பாகன் " படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் கவிஞர் குமாரதேவன் அவர்கள் எழுதியது .

கவி கா.மு.ஷெரிப் மிகப் பிரபலமான " பாட்டும் நானே ! பாவமும் நானே !'' திருவிளையாடல் பாடலை எழுதியவர்.(ஆனால் கண்ணதாசன் எழுதியதாக படத்தில் இடம்பெற்றது) மிகுந்த பண்பாளர்.
கடந்த சிலவாரங்களுக்கு முன் ரசவடைக்கு பிரபலமான ஓட்டல் வள்ளியூர் சரஸ்வதிபவனை அந்துமணி சரஸ்வதி கபே என்று குறிப்பிட்டு இருந்ததை தவறு என்று சொல்லமுடியாது . ஆனால் கவிஞர் குமார தேவன் எழுதிய பாடலைப் பற்றி சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது .ஏனென்றால் இந்த குமாரதேவனுக்கு அடையாளமே இந்த பழைய பாடல் தான் . பாவம் பேர் சொல்ல ஒரு பாட்டு!இவர் எழுதிய மற்றொரு சினிமா பாட்டு " கண்ணிரெண்டும் வெல்லக்கட்டி , உன் கன்னம் மின்னும் தங்கக்கட்டி "
இந்த 'பதினாறும் நிறையாத பருவமங்கை 'பாடலின் சரணங்கள் ஒன்றின் மூன்றாவது வரி எனக்கு நினைவிலிருந்து நழுவி விட்டது .
" மின்னுகிற பல்வரிசை நட்சத்திரமோ
அது வாவென்று அழைப்பெதென்ன விசித்திரமோ
........ .......... ............... .............. .................
யாரும் மெச்சுகின்ற குணங்களே தான் சொத்து சுகமோ
அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை
காதல் மொழிபேசி வசமாக்கும் ரதியின் தங்கை !

பாரதியின் ' வயது பதினாறிருக்கும் இளவயது நங்கை ' வரியை குமாரதேவன் சுட்டு கொஞ்சம் மாற்றி விட்டார் என்பதும் உண்மை தான். பாரதியை பலர் இப்படி ஆட்டையை போட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே.
திண்டுக்கல் சர்தார் சார் அவர்கள் குமாரதேவன் பாடலின் சரியான சரணவரிகளை பின்னூட்டமிட்டுள்ளார் !
"வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ=அது
வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ
மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ-
யாரும் மெச்சுகின்ற குணங்களேதான் சொத்து சுகமோ"
.......


இந்த கவிஞர் குமாரதேவன் பின்னால் ரொம்ப பல காலம் கழித்து சினிமாப் படம் எடுப்பதாக சொல்லி தேங்காமூடி கம்பெனி ஆரம்பித்து எழுத்தாளர் ராஜேந்திரகுமார் அவர்களின் " நான் ஒரு A"நாவலை படமாக்குவதாக சொல்லி என் நண்பன் ஒருவனை கதாநாயகனாக்கி பூஜை போட்டவர் . ' இந்த படம் வராது . ஷூட்டிங் கூட நடக்காது .எச்சரிக்கையாக இரு . பணம் எதுவும் கொடுத்து விடாதே ' என்று பூஜைக்கு சந்தோசமாய் அந்த நண்பன் போய் விட்டு வந்தவுடனே நான் எச்சரித்தேன் . ஆனால் அந்த நண்பனுக்கு நான் அப்படி சொன்னது தான் அபசகுனமாகப் பட்டுவிட்டது . நான் சொன்னபடி தான் கடைசியில் ஆனது !

Sep 22, 2009

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

கிருஷ்ணா நீ பேகனே பாரோ - இந்த யமுனா கல்யாணி ராக கீர்த்தனை பகவான் கிருஷ்ணனை உடனே,உடனே உடனடியாக வரும்படி இறைஞ்சுகிறது . ஆனால் அழைப்பின் அவசரத்திற்கு நேர் மாறான Slow Tempo வில் பாடப்படுவது இந்த கீர்த்தனையின் விசேஷ அம்சம் .

பாலசரஸ்வதியின் தம்பி டி.விஸ்வநாதனின் சீடன் அமெரிக்கரான ஜான் ஹிக்கின்ஸ் நல்ல வெள்ளை வேட்டி கட்டி,குர்தா அணிந்து தான் உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார் . ஆனால் அவருடைய ரொம்ப வெளுத்த நிறம் வெளிநாட்டவர் என்பதை காட்டிகொடுத்து விட்டது. ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது . பல நூற்றாண்டுகளுக்கு முன் கனகதாசா ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டபோது அதே கோவிலில் எங்கே நிறுத்தப் பட்டாரோ அதே இடத்தில் ஜான் ஹிக்கின்ஸ் நிறுத்தப்பட்டார் .

'கோவில் பூசாரி தெய்வத்துக்கும் அஞ்சான் . பக்திக்கும் பணியான்' - தெரிந்த விஷயம் தான் . ஆனால் உண்மையான பக்தியுள்ள ஜானை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அவருடன் வந்த ஏனைய சாஸ்த்ரீய சங்கீத குழுவினர் உள்ளே செல்ல மறுத்து அவருடனேயே நின்று விட்டார்கள் . அப்போது ஜான் கன்னட மொழியில் அமைந்த இந்த யமுனா கல்யாணி ராக கீர்த்தனையை உருக்கமாக பாட ஆரம்பித்தார் . கூட்டம் கூடிவிட்டது . கோவில் பூசாரிகள் ஆச்சரியப் பட்டு நெகிழ்ந்து போய் ஜான் ஹிக்கின்சை கெஞ்சி கேட்டு கோவிலினுள் வரும்படி வேண்டினார்கள் .தலித் கனகதாசாவுக்கு மறுக்கப்பட்ட அந்த மரியாதை இந்த அமெரிக்கனுக்கு அப்போது கிடைத்தது .

பத்மா சுப்பிரமணியம் பல வருடங்களுக்கு முன் Sun TV பேட்டியொன்றில் தனக்கு வந்த பரிசுகளில் மிகவும் உயர்ந்தது ஆக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார் . கலிபோர்னியாவில் ஒரு நாட்டிய நிகழ்ச்சி ."கிருஷ்ணா நீ பேகனே பாரோ " நாட்டியத்தின் முடிவில் யசோதையாக நடித்த பத்மா கையில் (இல்லாத ) கிருஷ்ணனைத் தோளில் சாத்திக்கொண்டு உள்ளே செல்வதாக அபிநயம் பிடித்தாராம் . நிகழ்ச்சி முடிந்ததும் இவரை பாராட்ட வந்த கன்னட மொழி பேசும் குடும்பம் ஒன்றில் இருந்த மூன்று வயது குழந்தை ' கிருஷ்ணரைத் தூக்கிட்டுப் போனீங்களே , எங்கே அந்த கிருஷ்ணா ?' என்று கேட்டதாம் . தன் அபிநயம் அத்தனை தத்ரூபமாக இருந்ததை அறிந்து சிலிர்த்து , 'அப்போது ஏற்பட்ட சந்தோசத்தைப் போல எப்போதும் ஏற்பட்டதில்லை ' என்றார் பத்மா சுப்பிரமணியம் .

Time spent with cats is never wasted.

பூனைகள் திகில்,மர்மம் இவற்றின் குறியீடு .தோரனையானவை. பூனைகள் நாயுடன் ஒப்பிடப் பட்டு சொல்லப்படும்போது விஷேசமாக கருதப்படுகின்றன.

Dogs have owners, cats have staff.

Dogs believe they are human. Cats believe they are God.

நாயையும் பூனையையும் இந்த ஆங்கில சொலவடைகள் நேர்த்தியாக குணவிளக்கம் செய்து விடுகின்றன .

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் பூனைகள் தெய்வங்களாக வணங்கப் பட்டனவாம் . பூனைகள் இன்னும் கூட இதை மறந்துவிடுவதில்லை என்று சொல்வார்கள் .

லியோனார்டோ டாவின்சி யைப் பொறுத்தவரை அவர் பார்வையில் ஒரு சின்ன குட்டிப்பூனை தானே Masterpiece! வறண்ட வாழ்வில் நமக்கு சிறந்த புகலிடம் இசையும் பூனையும் தான் என ஆல்பெர்ட் சுவைட்சர் நம்பினார் .

நாய்கள் தேவைக்கு மீறிய வளவள "வள் வள்" Outspoken type. பூனைகளிடம் தந்திரமான ஒரு Reticence உண்டு .

மனிதர்கள் பூனையை பற்றி புரிந்துகொண்டதை விட பூனைகள் மிகவும் புத்திசாலிகள் .ஏனென்றால் எந்த குற்றத்தையும் பூனைகளுக்கு கற்றுத்தர முடியும் என்பார் Mark Twain.

'பெண்களும் பூனைகளும் அவர்களுக்கு சந்தோசமான விஷயங்களைத்தான் செய்வார்கள் . ஆண்களும் நாய்களும் விச்ராந்தியாக அதற்கு ஏற்றபடி தங்களை அனுசரிப்பாக பழக்கிகொள்ளவேண்டியது தான் ' - ஒரு பழமொழி .

Hamlet's Cat's Soliloquy! by Shakespeare's Cat!! ஹேம்லெட் வசனங்களை பூனை எப்படி பேசும் ?!

To go out side, and there perchance to stayOr

to remain within: that is the question:

Whether 'tis better for a cat to suffer

The cuffs and buffets of inclement weather

That Nature rains on those who roam abroad,

What cat would bear the household's petty plagues,

The cook's well-practiced kicks,

the butler's broom.............

ந.பிச்சமூர்த்தி ' பூனைக்கண் ' என்ற சிறுகதையில் :" பூனை போகும்போது பார்த்தால் எதையும் கவனிப்பதாகவே தெரிவதில்லை . ஏதோ ஆழ்ந்த லயிப்பில் செல்வது போலவே தோணும் .ஆனால் உண்மையில் -? தெளிந்த வாய்க்கால் நீரின் வழியே பார்த்தால் கெண்டைக் குஞ்சுகள் கும்பல் கும்பலாக நீந்திப் போவது தெரிகிறதல்லவா ?அதைப் போலவே இந்த பூனையின் கண்ணில் தெளிவுக்கடியில் திருட்டு எண்ணங்கள் நீந்திச் செல்வது போலவே எனக்கு தோன்றுகிறது."

பாதலேர் எழுதிய பல பூனை கவிதைகளை நாகார்ஜுனன் நேரடியாக பிரஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்த்து தன் ப்ளாகில் பதிந்திருக்கிறார்.சில வரிகள் கீழே :

மென்தொனி மர்மம்

ஆனால் முனகவும் உறுமவும்

ஆழச் செழிக்கும் குரல்

அடடா,வசீகர மர்மம்!

.....முற்றான வாத்தியமாம்

என் இதயத்தை மிக அதிரும் அதன் தந்தியை

அழகாய் இசைக்க வேறேதுண்டுஅக்குரல் தவிர!...

......அடடா,மர்மப்பூனையேவிசித்திரப்பூனையே!

கந்தர்வநுணுக்கமும் இசைவும்உனதே.

அப்போது நாகார்ஜுனன் ப்ளாகில் எழுதியிருந்த விஷயம் - நாகார்ஜுனனின் துணைவியார் இந்தியாவில் பரோடாவில் தம்முடைய வீட்டில் பார்த்துப் பழகிய கறம்பன் என்ற பெயர் கொண்ட பூனையை லண்டனில் பார்க்க நேர்ந்து அந்த அதே பூனையை நாகார்ஜுனனிடம் காட்டியிருக்கிறார் . அப்படியானால் ஒரே நேரத்தில் ஒரு பூனை இரு வேறு இடத்தில் வாழமுடியும் என்று தானே ஆகிறது !

அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டும் தான் பூனையின்
Friendship கிடைக்குமாம்!

Sep 21, 2009

சப்தஸ்வரங்களும் நாரதரும்

நாரதர் ஒரு நாள் தியாகப் பிரும்மம் முன் தோன்றினார் .'ஸ்வரார்ணவம் ' என்ற சங்கீத இலக்கண நூலை தியாகராஜருக்கு அளித்து விட்டு பின் மறைந்தே போனார். கர்நாடக சங்கீதத்துக்கு நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள் 'ஸ்வரார்ணவம்' கிடைக்கப் பெற்ற தியாகராஜா மூலம் அதன் பின் கொடையாக கிடைத்தன. இது ஐதீகம்.
சங்கீதம் ஐந்தாவது வேதம்.கந்தர்வ வேதம் .சாஸ்திரீய சங்கீதம் நாரதருக்கே கூட அத்தனை எளிதாக கைகூடி விடவில்லை. Not a cakewalk for Him even. Classical Music is not an easy accomplishment. ரொம்ப அவமானப் பட்டிருக்கிறார்.
மிகவும் பெருமையாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார் நாரதர் . பனி சூழ்ந்து வீணையை மீண்டும் எடுக்கவே முடியவில்லை . ஹனுமான் பாடிய ராமகீர்த்தனை தான் பனியை உருகவைத்து வீணையை திரும்பவும் நாரதர் கையில் எடுக்க வகை செய்தது . சங்கீத கலாநிதி நாரதருக்கு சங்கீத ஞானம் அவ்வளவாக இல்லாத ஹனுமான் பாடிய கீர்த்தனை தான் உதவியது என்பது ருசிக்கவில்லை.நாரதருக்கு கொஞ்சம் வருத்தம் தான் .
ஒருமுறை சிவன்,பார்வதியோடு சங்கீத சாம்ராட் நாரதர் ஒரு சின்ன ' வாக் ' போகும்போது எதிரே சப்தஸ்வரங்களும் கை வேறு , கால் வேறு , தலை வேறு பிய்ந்த நிலையில் பார்க்க நேர்ந்து விட்டது . ஏழு ஸ்வரங்களும் தேம்பியழுதவாறு பார்வதியிடம் முறையிட்டன " எங்கள் கதியை பார்த்தீர்களா ? நாரதன் எங்களை அக்கறையின்றி அலட்சியமாக கையாண்டு விட்டதால் இப்படி சின்னா பின்னப் பட்டுபோய் விட்டோம் . தேவி! நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி அருளினால் நாங்கள் முழு உருவம் பெறுவோம் ." பார்வதி நாரதரை முறைத்து " என்ன நாரூ! இதெல்லாம்.. ?" என்று கடிந்து கண்டித்து விட்டு சப்தஸ்வரங்களையும் ஆசீர்வாதித்து ஒவ்வொரு ஸ்வரமும் முழு உருவமாக மீண்டும் வழி வகை செய்தாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் .
தும்புருவுடன் சங்கீத சவாலுக்குப்போனபோது கூட போட்டி என்பதால் நாரதர் சங்கீதத்தை பதற்றத்துடன் கையாள நேர்ந்து விட்டது . அப்போதும் சப்தஸ்வரங்கள் படுகாயப் பட்டு சிதைந்து குற்றுயிரும் குலையுயிரும் ஆகிப் போனதை கண் கூடாக நாரதரே காண வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போனது . அவமானத்தால் குன்றிப் போய்விட்ட நாரதரை மகாவிஷ்ணு தான் " கொஞ்சம் பொறுப்பா பாடனும்ப்பா நாரூ! சரி சரி விடு .இனியாவது சாஸ்த்ரீய சங்கீதத்தை ஒழுங்கா நல்லா பயிற்சி செய்து ஆலாபனையிலிருந்து கவனமா செய்யப் பாருப்பா . "என்று தேற்றினாராம்.
பிறகு நாரதர் மனிதனாகவே பிறக்கிறார்! எங்கே ? பிருந்தாவனத்தில். கிருஷ்ணாவதார யுகம் .கிருஷ்ணனின் கைடன்சில் முறைப்படி முழுமையாக லாங் ட்ரைனிங் மூலம் தான் சாஸ்த்ரீய சங்கீதத்தில் விற்பன்னர் ஆகி அங்கீகாரம் பெற முடிகிறது .

.. ..... .....
ஒரு பிரபல வித்துவான் கச்சேரி நடக்கையில்,திஜாவின் நண்பரும் குபராவின் சிஷ்யர்களில் ஒருவரும் ஆகிய சுவாமிநாத ஆத்ரேயன் அவர்கள் பாபநாசம் சிவன் அருகில் அமர்ந்திருந்தாராம் . சிவன் சொன்னாராம் "கீர்த்தனைகளுக்கும் ஜாதகம் உண்டு "சுவாமிநாத ஆத்ரேயனுக்கு முதலில் புரியவில்லை . பாபநாசம் சிவன் என்ன சொல்லவருகிறார் ? சிவன் தொடர்ந்தாராம் " இந்த கீர்த்தனை எந்த வேளையில் இயற்றப் பட்டதோ பாவம் . இந்த வித்துவான் வாயில் என்ன பாடு படுகிறது பாருங்கள் "
உண்மை தான். ஹம்சத்வனியை இப்போது ஹிம்ச த்வனியில் பாடுகிறவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சுப்புடு சொல்வார் : ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . "உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை " என்பது போல .

ஏ.கே.ராமானுஜன்

A.K.Ramanujan- A transcultural poet!
Modern India's finest English-language poet!


குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாராகியரோ ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும்
நீயும் எவ்வழியறிதும் ?
செம்புலப்பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார்.

What could my mother be to yours?
What kin is my fatherto yours anyway?
And howDid you and I meet ever?
But in love our hearts have mingled
as red earth and pouring rain

Translated by A.K.Ramanujan (Kuruntokai - 40)

ராமானுஜன் 'தமிழர்களுடைய 2000 ஆண்டு இலக்கிய வாழ்வில் சங்கப் பாடல்களுக்கு இணையான எழில் கொண்ட கவிதை ஏதும் அவர்கள் எழுதிவிடவில்லை .உலக இலக்கியத்திலும் சங்கப் பாடல்களுக்கு ஈடான சாதனை ரொம்ப சொற்பமானவை தான் ' என்ற உறுதியான அபிப்பராயம் கொண்டிருந்தார் .

ஏ.கே.ராமானுஜன் 1993ல் தன் 64 வயதில் மறைந்து விட்டார்.சிக்காகோ பல்கலைகழக பேராசிரியர் .தென்னிந்திய மொழிகளில் விற்பன்னர் . மைசூரில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் .தந்தை கணிதப் பேராசிரியர் .வானசாஸ்திரம் ,ஜோதிடசாஸ்த்திரம் இவற்றில் கரைகண்டவர் ராமானுஜனின் தந்தை .
ஏ.கே.ராமானுஜன் ஆங்கிலம் ,கன்னடம் ,தெலுங்கு ,சம்ஸ்கிருதம் ,தமிழ் போன்ற மொழிகளில் கரை கண்டவர். மொழியியல் பேராசிரியராக அமெரிக்காவில் இருந்தபோது சங்கக்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சாதனை படைத்தவர். நாட்டுப்புற கதைகளில் உன்னிப்பான கவனம் கொண்டிருந்தவர்.படைப்புத் திறன் மிக்க கவிஞர். 1976 ல் ராமானுஜனுக்கு இந்திய அரசு 'பத்மஸ்ரீ 'விருது வழங்கி கௌரவித்தது.

இவர் கவிதை 'தற்கொலைக்கு எதிராக ஒன்று , இரண்டு அல்லது மூன்று விவாதங்கள் '

'தற்கொலையை முயற்சிக்காதே !
நீ ஏற்கனவே இறந்திருக்கலாம் !
கொல்வதற்கு ஏதும் மிச்சமில்லாமல் இருக்கலாம் ...
இதை விட மோசம் சம்பிரதாயமாக
இறக்கலாம் - இறந்து
டாக்டர் செர்டிபிகேட்களையும்
மீறி சாசுவதமாக வாழலாம் ...'
...
வாழ்க்கையில் எத்தனையோ பிரபலங்களை எத்தனையோ பேர் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் . அவர்களுடன் புகைப் படம் எடுத்துக்கொண்டு , உற்சாகமாக பிரமுகர்களை இம்ப்ரஸ் செய்வதாக அவர்களுக்கு மாலை , அன்பளிப்பு கொடுத்துக் கொண்டு ..
இந்த பிரமுகர்கள் SELF-CENTRED PERSONS! தாங்கள் விஜயம் செய்யும் அந்தந்த ஊரில் சந்திக்க நேரும் பணக்காரர்களிடம், படித்தவர்களிடம், உத்தியோகஸ்தர்களிடம்,சாமானியர்களிடம் கூட செயற்கையாக சிரித்து பேசி ' போஸ்' கொடுப்பார்கள்.ஆனால் கைகுலுக்கிய அடுத்த நிமிடம் மறந்து விடுபவர்கள் .
ஏ.கே.ராமானுஜன் இந்த விஐபி சந்திப்பு அனுபவத்தில் சிக்கி மீண்டு எழுதிய
Confessionகவிதை. :

ஒரு பிரபலத்தை சந்தித்ததும்

"அவன் நினைவிலிருந்து
கண்ணாடி பிம்பம் போல
விலகப் போகிறேன் ...
பின் ஏன் புத்திசாலித்தனத்தைக்
காட்டிக்கொண்டேன்? "

Sep 19, 2009

ந.சிதம்பர சுப்பிரமணியம்

மணிக்கொடி எழுத்தாளர் ந.சிதம்பர சுப்பிரமணியம் வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தார். மணிக்கொடி கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் கதை இலாக்காவில் வேலை பார்த்தவர் . அடுத்த தலைமுறை அசோகமித்திரனும் கூட கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் இருந்த காலத்தில், அதற்கு பின்னும் அங்கே ஜெமினியிலேயே குமாஸ்தா உத்தியோகம் பார்த்திருக்கிறார் .

எழுத்தாளர் நிறைய சம்பாதிப்பது அபத்தமாக தோன்றலாம். ஆடிட்டிங் வேலை பார்த்த ந.சிதம்பர சுப்பிரமணியம் சம்பாதித்தார் என்று தான் சொல்லவேண்டும். ஒரு எழுத்தாளர் சினிமா தியேட்டர் விலைக்கு வாங்கினார் என்றால் அதிசயம் தானே . அதுவும் மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில் .ஓடியன் தியேட்டரை ந. சிதம்பர சுப்பிரமணியம் வாங்கினார் . ஆனால் அவர் ஓடியன் தியேட்டரை வாங்கிய பின் தான் தெரிந்தது . அதில் நிறைய வில்லங்கம் . ஆமாம். ஏமாந்துவிட்டார். அன்றைக்கே ரியல் எஸ்டேட் பிசினஸ் பிராடு வேலைகள் உச்சத்தில் தான் இருந்திருக்கிறது . ந.சிதம்பர சுப்பிரமணியம் அவருடைய ஆயுட்கால சேமிப்பை தொலைத்தது இப்படித்தான் . அவரே எழுதியது போல " மனம் கோட்டை கட்டிக் கொண்டே வரும். ஆனால் காலம் அவைகளை தகர்த்துக் கொண்டே வரும்."

'சக்ரவாகம்' சிறுகதை தொகுப்பும் 'இதய நாதம் ' நாவலும் அவரை நினைவில் வைக்க உதவுகின்றன . தி.ஜா வின்' சிவப்பு ரிக் ஷா' சிறுகதை தொகுப்புக்கு ஒரு முன்னுரை எழுதினார் .


1978ல் டெல்லியில் இருந்து திஜா வந்திருந்த போது அசோகமித்திரனுடன் இவரை தேடி தி.நகரில் அலைந்திருக்கிறார் . சரோஜினி தெருவில் ந.சி . இருப்பதாக தி.ஜானகிராமன் தான் கேள்விப்பட்டதை வைத்து சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக கதவை தட்ட வேண்டிய நிர்பந்தம் . ஆனால் பலிக்கவில்லை. அன்றே திஜா டெல்லி திரும்பவேண்டிய சூழல் . ரயிலில் ரிசர்வ் செய்த பின் பயணத்தை எப்படி மாற்றமுடியும் . அலைந்த பின் திஜா அன்று மோரும் சாதம் சாப்பிட்டார் என்பதை அசோகமித்திரன் இன்றும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். ஆனால் அப்போது ந.சி. இவர்கள் தேடியலைந்த சரோஜினி தெருவில் குடியிருக்கவில்லை . அடுத்த தெருவில் அதாவது மோதிலால் தெருவில் குடியிருந்த விஷயம் அப்புறம் தான் அசோகமித்திரனுக்கு தெரிய வருகிறது . இவர்கள் தேடியலைந்ததற்குஅடுத்த வாரம் ந.சிதம்பர சுப்பிரமணியன் இறந்து விட்டார்.

"சுவர்க்கம் நம் முன்பாக இருந்தாலும் அதை நாம் அடைவதில்லை . ஏனென்றால் நம்முடைய முயற்சிகள் அதை நரகமாக்குவதிலேயே கழிந்து விடுகின்றன ."

- ந.சிதம்பர சுப்பிரமணியம்.

“Bloody Indians!”

ஏழை எளியவர்களுக்கு கொடுத்து வைக்காத விசயங்களில் ஒன்று 'விமான விபத்து.' இப்படி வறுமையும் ஏழ்மையும் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டங்கள் பல.
இந்த சசி தரூர் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனவுடன் நட்சத்திர ஓட்டலில் பகட்டாக தங்கி இந்திய நாட்டுக்கு உழைத்தவர். மத்திய அரசு எடுத்துள்ள சிக்கன நடவடிக்கைக்கு எதிராக அருளிப் போந்துள்ளதாக பத்திரிகைகள் பிரசுரித்திருப்பது 'சாதாரண வகுப்பில் விமானத்தில் பயணிப்பது , மாட்டு தொழுவத்தில் பயணம் செய்வதற்கு சமம் .விமான சாதாரண வகுப்பு கால்நடைகளுக்கானது .'
சசி தரூரின் தலை இப்போது உருட்டப்படுகிறது .
பொல்லாத நேரம் வந்தா பூழலும் பாம்பாகும்.
சசி தரூர் 'ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடலாமே ' என்று சொன்ன பிரஞ்சு மகாராணி வகையை சேர்ந்தவர் . இன்னொன்று இந்த சசி தரூர் கேரக்டரை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே ரத்தக் கண்ணீர் படத்திலும் , பாகப்பிரிவினை படத்திலும் எம் ஆர் ராதா மிக அருமையாக நடித்துக்காட்டியுள்ளார் . வெளி நாட்டில் வாழ்ந்து இருந்து விட்டு இந்தியா திரும்பி விட்டால் இந்த இந்தியர்களின் 'பப்பள பளபளபள பந்தா' சகிக்க முடியாத அளவுக்கு போய்விடுகிறது . முகம் சுளித்து “Bloody Indians!” என்று தவித்துப்போகிறார்கள்.
Kanchan Gupta asked Shashi Tharoor, “Tell us Minister, next time you travel to Kerala, will it be cattle class?” on twitter.
Tharoor replied, “Absolutely, in cattle class out of solidarity with all our holy cows.”
இந்தியாவின் ஏனைய அரசியல் அசகாய சூரர்களின் சாகசங்களின் முன் சசிதரூரின் இந்த ஜோக் மிக சாதாரணம் தான் . ஆனால் ஒரு காபினெட் அந்தஸ்து இல்லாத இணை அமைச்சரின் ஆரம்ப சூரத்தனம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஆரம்பித்துள்ளது என்பது மிகவும் நெருடுகிறதே! Cattle class என்ற கஞ்சன் குப்தாவின் வார்த்தையை சசி தரூர் ஏன் ஆட்சேபித்திருக்கக்கூடாது?என்று கேட்பவர்கள் கேட்பார்கள்!தன் கட்சித்தலைவியும் தான் அங்கம் வகிக்கும் மந்திரி சபையின் பிரதமரும் முன்மாதிரியாக இருந்து அவர்களே சாதாரண வகுப்பில் விமானத்தில் பயணித்து எடுத்துள்ள சிக்கன நடவடிக்கை பற்றி இப்படி விட்டேற்றியாக ஜோக் அடிக்கலாமா? என்று தானே கேட்பவர்கள் கேட்பார்கள்! லக்சுரி விஷயங்களை குறைக்கவேண்டும் என்ற முடிவு சரத் பவாருக்கும், சசி தரூரின் சுப்பீரியர் கிருஷ்ணாவுக்கும் , சசி தரூருக்கும் அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மத்திய அரசின் சிக்கன நடவடிக்கைக்கெதிராக இவர்களின் முணுமுணுப்பு ஊரறிய தெரிகிறதே!
ராயல் பெர்சன் சசி தரூர் பற்றி விவாதித்து விட்டு அவர் ரேஞ்சுக்கு ராயல் விஷயம் ஏதாவது எழுதுவது தான் சசி தரூருக்கு கெளரவம் . அதனால் இங்கிலாந்து ராஜ குடும்ப செய்திகள் .
பிரின்ஸ் வில்லியம் தன் காதலி கேட் மிடில்டன் உடன் எட்டு வருட ரொமான்ஸ் வாழ்வு நடத்துபவர் . 2011ல் மிடில்டன் தான் இவருடன் திருமண பந்தத்தில் இணையப்போகிறார் . ஆமாம் எதிர்கால இங்கிலாந்து இளவரசி. வில்லியம் முடிவு செய்து விட்டார் .சில தினங்களுக்கு முன் ஹிந்து பத்திரிகையில் படித்தேன் .
இந்த வார குமுதம் நியூஸ் மிக்சர் : டயானாவின் மற்றொரு மகன் ஹாரி பற்றியது .ஹாரி நீண்ட நாட்களாக பிரிந்திருந்த காதலி செல்சி டாவி யுடன் மீண்டும் சேர்ந்து சுற்றத்தொடங்கியுள்ளார் . சிகரட் பழக்கத்தை நிறுத்த மனோதத்துவ வைத்தியம் ஏற்றுகொள்ளவுள்ளார் .
நாளைய செய்தி ஒன்று : நாளைய தினமலர் சண்டே ஸ்பெஷலில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்
" ஆபாசத்துக்கு எதிராக நமீதா போர்க்கொடி ."
கூந்தலை விரிச்சிப்போட்டு, சிலம்பை உடைச்சி, ஒத்தமுலையை பிச்சி வீசி எறியப்போகும் நமீதா. நாளைக்கு ரத்தக்களறி தான். பத்திக்கிட்டு எரியப் போவுது.
இந்த பாட்டாளி மக்கள் கட்சி ஸ்தாபகர் ராமதாஸ் சமீபத்தில் ஷங்கர் படம் " முதல்வன் " பார்த்திருப்பார் போல . அந்த தாக்கம் அதிகமாகி " எங்களிடம் ஓர் ஆண்டு ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் . இந்தியாவிலேயே தமிழ் நாட்டை வழிகாட்டியாகவும் , சிறந்த மாநிலமாகவும் , முன் மாதிரியாகவும் மாற்றிக்காட்டுகிறோம் " என்று தும்பிக்கையை தரையில் ஊன்றி நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமாக சுற்ற ஆரம்பித்து விட்டார் .

Sep 11, 2009

மாவீரன் லல்லுபிரசாத் யாதவ்

லல்லுபிரசாத் யாதவ் இந்திய பிரதமரிடம் சொன்னார் -'' பல வகைகளில் என் திறமையை என்னால் நிரூபிக்க முடியும்.''

ஜெகஜீவன் ராம் இருபத்தைந்தாண்டுகள் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது போல காங்கிரஸில் இருந்து மந்திரி உத்தியோகம் பார்த்தவர். எமெர்ஜென்சி காலத்திலும் மத்திய மந்திரியாய் இருந்து விட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி
'Congress for Democracy ' கட்சி ஆரம்பித்து ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து இந்திரா காந்தியை எதிர்த்தவர் . அப்போது " இந்தியாவின் பிரதமர் ஆவீர்களா?" என நிருபர்கள் கேட்ட போது பவ்யமாய், அடக்கமாய் சொன்னார் : “I never shirk any responsibility this country wants me to shoulder.” இன்றைய பாராளுமன்ற சபாநாயகரின் தந்தை.

அந்த காலத்தில் ஜெகஜீவன் ராம் சொன்ன அந்த வார்த்தைகளையும் ஆங்கிலத்திலேயே லல்லு மனப்பாடம் செய்து பிரதமரிடம் ஒப்பித்தார். :
“I never shirk any responsibility this country wants me to shoulder.”

கேபினெட் மந்திரி பதவி தனக்கு வேண்டும் என்ற தீரா அவா காரணமாக லல்லு மன்மோகன் சிங்கிடம் அடிக்கடி அழுத்தமாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தார். 'தேசத்திற்காக பதவி என்னும் பாரமான சிலுவையை சுமக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.தங்கள் சித்தம் என் பாக்கியம் '

ராகுல் காந்தியிடம் லல்லுவின் இந்த அனத்தலை எப்படி சமாளிப்பது என பிரதமர் கலந்து ஆலோசித்தார் . ராகுல் காந்தி பதில் :'மூன்று போட்டிகளில் லல்லு ஜெயித்தால் நாம் அவரை காபினெட் மினிஸ்டர் ஆக்கி விடலாம். அவர் சாதனை செய்த ரயில்வே துறையையே அவருக்கு தந்து விடலாம். '

போட்டி பிஹாரில் பிஹாரிகள்முன்னிலையில். பிஹாரிகள் லக்ஷக்கணக்கில் கூடிவிட்டனர் . எப்படியாவது லல்லு ஜெயித்து மத்திய மந்திரி ஆகிவிடவேண்டுமே!

மூன்று கூடாரங்கள். மூன்று போட்டி. மூன்றிலும் லல்லு வென்றாக வேண்டும்.

1 .முதல் கூடாரத்தில் ஒரு மது பாட்டில் . காக்டைல் சரக்கு .கடுமையானது . ஒரு மூன்று அவுன்ஸ் குடித்தாலே பயங்கரமாக ஏறிவிடும் . ஆனால் இந்த பாட்டிலில் முப்பது அவுன்ஸ் . விஸ்கி ,ரம் ,பிராந்தி , எல்லாம் கலந்த மது பாட்டில். அந்த மது கலவையை raw ஆக மிச்சம் வைக்காமல் முழுதாக குடித்து விடவேண்டும்.

2. இரண்டாவது கூடாரத்தில் ஒரு சிங்கம் . பல்வலியால் துடிக்கிறது. அதன் சொத்தை பல்லை பிடுங்க வேண்டும்.

3.மூன்றாவது கூடாரத்தில் ஒரு வீராங்கனை . கராத்தேயில் பல மெடல்கள் வாங்கியவள் . அவளுடன் உடலுறவு கொள்ளவேண்டும் . ஆனால் அவள் சம்மதிக்கவே மாட்டாள். எங்கணமாயினும் அந்த பெண்ணை புணர்ந்து விடவேண்டும்.

கவனமாக மூன்று போட்டிகளையும் லல்லு மூளையில் ஏற்றிக்கொண்டார் .

லல்லு முதல் கூடாரத்தில் நுழைந்து முழு பாட்டிலையும் காலி செய்ய இருபது நிமிடங்கள் ஆயிற்று .

கூடாரத்தை விட்டு வெளியே வந்தார் . பிஹாரிகள் ஆரவாரம் விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது. பயங்கர போதையில் சிறுமூளை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கையை அசைத்து பாராட்டுக்களை லல்லு பெற்றுக்கொண்டு இரண்டாவது கூடாரத்திற்குள் தைரியமாக நுழைந்தார் .

சிங்கம் கர்ச்சனை . " டே அயோக்கியா !" கோபமாக சிங்கம் போராடும் சத்தம் .

" என்னை விடுறா " சிங்கத்தின் பயங்கர கூப்பாடு ."கொலை வெறி ஆயிடுவேண்டா " " ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..உங்கொப்பன் மகனே நான் சிங்கம்டா "

பிஹாரிகள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.

'' அவசரத்துலே அன்டாக்குள்ளேயே கை போகாது . சிங்கம் வாய்க்குள்ளே சொத்தைப் பல்லு . நல்ல போதையிலே கவனமா எப்படி புடுங்கப் போறாரோ தெரியலெயே .லல்லுவுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடக்கூடாது கடவுளே! பொல்லாத சிங்கம் அவரை கொன்று விடக்கூடாது.''

கடைசியில் பல நிமிடங்கள் நிசப்தம் . ஒரே சஸ்பென்ஸ்.கூடாரத்தினுள் என்ன ஆயிற்று..?

முப்பது நிமிடம் கடந்தது . லல்லு இரண்டாவது கூடாரத்தில் இருந்து ரொம்ப களைப்பாக தள்ளாடியவாறு வெளியே வந்தார் . பிஹாரிகள் கரகோஷம் மீண்டும் விண்ணைப் பிளந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ!

லல்லு வணங்கிய பாவனையில் தலைகுனிந்து ,கையை கூட்டத்தை நோக்கி ஆட்டி விட்டு குழறியவாறு கேட்டார் " அந்த பல்லு பிடுங்கவேண்டிய பொம்பளை எங்கே ? "

அடடே ! போதையிலே குழம்பிப் போய் ப்ரோக்ராமை மாத்திட்டார் . சிங்கத்தை சோலி பாத்துட்டார்!

மத்திய மந்திரி பதவி கை நழுவி விட்டது .
A slip between the cup and lip!

அறியப் படும் நீதி : குடி போதையில் குழப்பமில்லாமல் முக்கிய காரியங்களை, சவால்களை திட்டமிடுதல் மிகவும் சிரமம் . வெற்றிகரமாக சவால்களை ஜெயிப்பதும் துர்லபம் .

ராகுல் காந்தி ராஜதந்திரி. அதனால் தான் முதல் போட்டியாக மது பாட்டிலை வைத்தார். என்ன ஒரு மாபெரும் திருப்பம் எனில், முதல் கூடாரத்திலேயே லல்லு flat ஆயிடுவார் என்று ராகுல் தப்பு கணக்கு போட்டிருந்தார். ம்ம் .. யானைக்கும் அடி சறுக்கும்.

.....

இந்த' பல்லு புடுங்க வேண்டிய பொம்பளை ' ஜோக் ரொம்ப ரொம்ப பழசு. ஆனால் மறைந்த சுஜாதா சில வருடங்கள் முன் இந்த ஹைதர் காலத்து அரத பழசை பெரிய பத்திரிகையில் எழுதி மகிழ்ந்திருந்தார்.

இப்போது இங்கே என்னால் 'இந்திய அரசியல் சாயம்' பூசப்பட்டு வேற்றுரு கொண்டு விட்டது . Art Buchwald இந்த பாணியில்தான் அமெரிக்க அரசியல் பற்றி எழுதுவார்.

இந்த பழைய ஜோக் இன்னும்,இப்போது கூட பலருக்கும் புரியவில்லை என்பது தெரிய வருகிறது . படு அபத்தமாக புரிந்து கொண்டு சில பாராட்டு பின்னூட்டங்கள் !அதனால் " அந்த பல்லு பிடுங்க வேண்டிய பொம்பிளை எங்கே ? " என்ற வார்த்தைக்கு பின் தேவையே இல்லை எனினும் நிர்பந்தமாக "அடடே ! போதையிலே குழம்பிப் போய் ப்ரோக்ராமை மாத்திட்டார். சிங்கத்தை சோலி பாத்துட்டார்!" என்று இரண்டு வரி கூடுதலாக எழுதி ஜோக்கை அனாவசியமாக விளக்க வேண்டி வந்து விட்டது.

அவமானம் தாங்க முடியாமல் குன்றிப்போய்,தன் கற்பை காப்பாற்ற போராடிய சூழ்நிலையில், லல்லுவை நோக்கி கர்ஜித்த சிங்கத்தின் கோப ஆவேச வசனங்கள் ரீப்ளே :-

" டே அயோக்கியா !"

" என்னை விடுறா "

"கொலை வெறி ஆயிடுவேண்டா "

" ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..உங்கொப்பன் மகனே நான் சிங்கம்டா "

ஹைக்கு

ஹைக்கு கவிதைகளை அந்த காலத்தில் ஆடு புழுக்கை மொத்தமாக போடுவது போல நிறைய பேர் மொத்த மொத்தமாக போட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
பொதுவாகவே கவிதை என்று எப்போதும் ஆடு புழுக்கை போடுவது போல தான் இப்போது கூட மொத்த மொத்தமாக பலரும் போடுகிறார்கள் என்பது வாஸ்தவம் தான். பல கவிதை தொகுப்புகளை பார்க்க நிர்பந்தம் ஏற்படும்போதெல்லாம் 'ஆட்டுபுழுக்கைகள்' ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் ஏனோ சுய தரிசனமாக, சுய விமரிசனமாக 'ஆட்டு புழுக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு கூட இன்று வரை வெளியானதில்லை.
ஹைக்கு சில பல நல்ல படி தேறியிருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் கணையாழியில்( ஆகஸ்ட் 1969) சந்திரலேகாவின் ஹைக்கு கவிதைகள் இரண்டு :
1. தென்னை ஆடுகையில்
தேங்காய்க்குள்ளே
சிற்றலை நெளியுமோ ?
2 . செங்கிரீடம், ராஜ கம்பீரம்
சேவல் ஏறுது குப்பை மேட்டில் .
......
ஆத்மாநாமின் இந்த கவிதை ஹைக்கு தானா ? அல்லது ஹைக்கு நான்கு வரியில் வரக்கூடாதோ?
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின் பற்றாது
வண்ணத்துப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன
..
ராஜ சுந்தரராஜன் ஹைக்கு கவிதை . தலைப்பு 'விட்ட குறை '.
மண் மீது ஒரு பறவைப் பிணம்
மல்லாந்து நோக்குது
வானை .
இவருடைய ' பரஸ்பர ஆதாயம் ' கவிதை
காக்கைகள் கொத்த
எருமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்

Sep 9, 2009

ஊட்டம் தரும் பின்னூட்டங்கள்

R P ராஜநாயஹம் பதிவுகள் பற்றிய அபிப்பராயங்கள்

எஸ்.கிருஷ்ணமூர்த்தி :வாழ்த்துக்கள். நீங்கள் “பதிவு நாயகம்”.மந்திரச்சொல் வேண்டும் என்று பாடினான் பாரதி.உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரவார்த்தை.

ஒவ்வாக்காசு :திருமூலர் வரிகளையும், அசோகமித்திரன் வரிகளையும் படித்தவுடன், கண்கள் குளமாகிவிட்டன சார்.. அற்புதமான write-up sir... இணையத்தில் எளிதில் கிடைக்க இயலாத எழுத்துக்கான கரு மற்றும் எழுத்து நடை உங்களை போன்றவர்களுடையது...

Arumugam : 400 blog entries...

and all of them gems..

great writings on varied subjects....

many an eye opener...

wish you should write

many moresuch outstanding blogs in the coming days..

குவைத் எஸ்.ரவி :""""இணையத்தில் எளிதில் கிடைக்க இயலாத எழுத்துக்கான கரு மற்றும் எழுத்து நடை உங்களை போன்றவர்களுடையது..."""""

Yes I agree. Also I fail to see Good Tamil writings in the Net/books without ‘Egotistical’ writings(Jeymoo?) and Self-blabber’s (agian jeymoo + many)…

You are really Good–one.

Keep-it-up sir..

காலம் காலமாக

ஜெயலலிதா கட்சியிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் சசிகலா பற்றி குற்றச்சாட்டு வாசிக்கிறார்கள் . பதினைந்து வருடங்கள் முன்னரே வலம்புரி ஜான் எழுதினார்." ஜெயலலிதா எம்ஜியார் விசுவாசிகளை பழி வாங்கினார் . சசிகலாவோ ஜெயலலிதா விசுவாசிகளையே பழி வாங்கினார். "

மன்னார்குடி கும்பல் கையில் கட்சி சிக்கிவிட்டது என்ற வார்த்தை
Cliché . An obvious remark. இன்னும் பலவருடங்களுக்கு அதிமுக வைவிட்டு வெளியேறுபவர்கள் இதையே தான் பயன்படுத்துவார்கள் .

இருபது வருடங்களுக்கு முன் சதுரனன் மிஸ்ரா என்ற வலது கம்யுனிஸ்ட் ராஜீவ் காந்தி மீது வைத்த குற்றச்சாட்டு :
It is so hard to approach the Prime Minister,
in the front there are battalions,
at the rear there are Italians.

கடைசியில் முள்ளில் உதிர்ந்த ரோஜாவானார் . ஸ்ரீபெரும்புதூர் மண்ணில் முக்கால் அம்மணமாக, 'காலணி' நீங்கலாக சிதறிய சோகம் .

நா . காமராசன் இரங்கல் கவிதை :

"அவனுடைய உடலின் அடையாளம்

முகத்தில் தொலைக்கப் பட்டு

காலடியில் கண்டுபிடிக்கப்பட்டது ."

பாதுகாப்பு குறைபாடுகள் என்று பொதுமைப்படுத்த முடியவில்லை . அம்மா இந்திராகாந்தியின் துர்மரணம் நிரூபித்த அபத்த உண்மை - "Security is mortal's chiefest enemy."(ஷேக்ஸ்பியர் மாக்பெத்தில்!)

ராகுல் காந்தி தமிழக சுற்றுப் பயணம். " எல்லாம் என் கையில் .கட்சி என் கையில் , இந்தியா என் கையில் , எதிர்காலம் என் கையில் ." பட்டத்து இளவரசன் . “There are two tragedies in life. One is not getting what one wants;
the other is getting it.'' - Oscar Wilde

" நடிகர் விஜய் காங்கிரஸின் அடி மட்டத்தொண்டராய் இருக்கவேண்டியதேவையில்லை . தொண்டராய் இருந்து உழைத்து விட்டு போகட்டும் .'' தன் மகன் அரசியல் எதிர்காலம் பற்றிய கவலையில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் பொருமல் வெளிப்பட்டு இருக்கிறது . நாரதா ! உன்னுடைய வேலை ஆரம்பமாகிவிட்டதா !

ஊர்க்காட்டுப் பீக்கு நாணவந்தான் ( நாணலில் சுற்றித்திரியும் குருவி ) அடிச்சிக்கிட்ட மாதிரி தமிழக காங்கிரஸ் அரசியல் . காலம் காலமாக .

Sep 8, 2009

புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார் .
' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது . அல்லது புல்லுக்கு நகை தருகிறது .பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '. அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண் . என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள் . மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது . காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "

விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."
எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள் !"

மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை
'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'
மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder,lightning or in rain

Sep 7, 2009

Carnal Thoughts -23

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்.
- வைரமுத்து

எட்டுக்கண்ணும் விட்டெரியர மாதிரி ஜபர்தஸ்து பண்ணும் மன்மதன் வீரியம் பற்றி கு.ப.ரா சொல்வார் : "சிவனின் சினம் உபயோகம் இல்லை.எரிக்கப்பட்டவனே உலகத்தை இந்த ஆட்டு ஆட்டுகிறான்."
"பிறவி உறுப்புகள்,பாலுறவு சம்பந்தப்பட்ட பிற அங்கங்கள் பால் பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகவே உடைகள் தோன்றியதாக ஆடைகள் பற்றி ஒரு சித்தாந்தம் உண்டு "- கோபி கிருஷ்ணன் ' ஒவ்வாத உணர்வுகள் ' கதையில் .
இரண்டு ஆபரணங்கள் - இதை வைத்து 'தாபம் பொசுங்கி விட்டது ' என்பதை விளக்கி விடும் ஒரு கவிஞன் - "கண்ணே ! உன் கொலுசு சத்தத்தில் உயிர்த்தேன் .மெட்டி சத்தத்தில் மரித்தேன் "
கரு உருவாக ஆண் பெண் கட்டாயம் தேவை என்பது பொது விதி .
மண்புழு ,நத்தை போன்றவைக்கு
'male female gender' உறுப்புகள் ஒன்றாக உருக்கொண்டிருக்கின்றன .

விரகதாபம் ஏற்பட்டு விடைக்கும் போது ஒரு பொண்ணு வேணும் , ஆம்பிளை வேணும் என்று மண்புழு , நத்தை கவலைப் பட்டு தேடவே வேண்டாம்.தன்னைத்தானே சோலி பார்த்துக்கலாம்.
சொக்கி நல்லா சுகமா சோலி பார்த்து முடிந்ததும் , அப்புறம் இரண்டு பார்ட்னர்களுமே கரு உண்டாகி வயித்தை தள்ளிக்கொண்டு திரிகிற ஜந்துகளும் உண்டு தான் .
பெர்னார்ட் ஷா போல மனித விசித்திரங்களும் உண்டு .இவாள் 41 வயது வரை கட்டை பிரம்மச்சாரி . பிறகு 42 வயதில் தேடித்தேடி தேரையை பிடிச்சகதையாய் சார்வாள் அறிவில் சிறந்த Like-minded பெண்மணி ஷார்லட் (Charlotte ) டை கல்யாணம் செய்துகொண்டார் . மது ,சிகரெட் ,மாமிசம் போன்றவற்றை கையால் தொடாத ஷா தன்னுடைய பிரியசகியையும் அதன் பிறகு சார்வாள் ஒரு 52 வருடங்கள் உயிர் வாழ்ந்தும் கூட தொடவே இல்லை . சோலி பார்க்கவே இல்லையாம்.
ஏடு காணாமப் போயிடுச்சோ? மன்மதன் இந்த ஆளுடைய ஏட்டை தொலைத்து விட்டான் போலும்!
செக்ஸ் பற்றி பெர்னார்ட் ஷா சார்வாள் விளம்பியது :The sex relation is not a personal relation. It can be irresistibly desired and rapturously consummated between persons who could not endure one another for a day in any other relation.
ஒரே ஒரு நாள் கூட மத்த விஷயங்கள்லே ஒருத்தரை ஒருத்தர் சகிச்சுக்கவே முடியாமல் ஒத்து போகவே முடியாத ரெண்டு பேர் மூச்சா பேயரதுலே முத்தா கொடுத்து , இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து பின்னி படர முடியுமாம்!

சரம ஸ்லோகம்

( இந்த பதிவு இந்த ப்ளாகில் நானூறாவது பதிவு )


"ஊரெல்லாம் கூடி,ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூரையங்காட்டிடைக் கொண்டு போய்ச்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்
பொழிந்தார்களே"
-திருமூலர்

எதிர்பாராத எதிர் பார்த்த மரணங்கள் குறித்து நிறைய அஞ்சலி செலுத்தப்படுகிறது. எழுதப்படுகின்றன .இழவு வீடுகளில் அழுபவர்கள் சிரஞ்சீவிகள் அல்ல . இன்றைய பிணத்திற்கு எதிர்கால பிணங்கள் வேதனையையும்,அழுகையையும் , மாலைகளையும் ,அஞ்சலியையும் செலுத்துகின்றன. எழுதுகின்றன.
குபராவுக்கு அற்புதமான அஞ்சலி எழுதிய திஜானகிராமனுக்கு அவர் மறைந்த போது , மறைந்த ஆதவனும் ,சமீபத்தில் மறைந்த சுஜாதாவும் அஞ்சலி எழுதினர் .
ஏன் இன்று நம்மிடையே வாழும் அசோகமித்திரனும் கூடதிஜாவுக்கு அருமையான அஞ்சலி எழுதினார் .அசோகமித்திரன் எழுதிய அஞ்சலிகளையே கூட ஒரு நூலாக கொண்டுவரலாம் . ஆத்மாநாமுக்கு இரங்கல் எழுதியுள்ளார் .சுந்தர ராமசாமிக்கு கூட அஞ்சலி 'இந்தியா டுடே 'பத்திரிகையில் எழுதவேண்டியிருந்தது . டி ஆர் ராஜகுமாரிக்கு.அந்த காலத்தில் கணையாழியில் டிஎஸ் பாலையாவுக்கு எழுதியிருக்கிறார். சமீபத்தில் நாகேஷுக்கு அஞ்சலி.

ஒரு முறை டெல்லியிலிருந்து அப்போது சென்னை வந்திருந்த
தி ஜானகிராமனும் , அசோகமித்திரனும் சேர்ந்து மணிக்கொடி எழுத்தாளர் ந .சிதம்பர சுப்ரமணியனை பார்க்க அவர் வீட்டை தேடி போகிறார்கள். அன்றே டெல்லி திரும்ப வேண்டிய தி.ஜா அவரை சந்திக்க முடியாமல் போய் விடுகிறது . அவர்கள் தேடிய தெருவிற்கு அடுத்த தெருவிலிருந்த சிதம்பர சுப்பிரமணியம் அடுத்த வாரம் மறைந்து விடுகிறார் .

நகுலன் மறைந்தபோது எவ்வளவு அஞ்சலிக்கட்டுரைகள் ! அசோகமித்திரன் எழுதியது உட்பட .


துயரங்கள் பலவகை. தொடர்ந்து அஞ்சலிக்கட்டுரைகளுக்காக நிர்ப்பந்திக்கப்பட்டால் , அதுவும் அந்திமக்காலத்தில் அஞ்சலி எழுதும் அபத்தம் சலிப்பும் ,அலுப்பும் தராமலா இருக்கும் ?

இந்த செப்டம்பர் மாத 'அம்ருதா ' இதழில் அசோகமித்திரன் 'சரம ஸ்லோகம்'எனும் அஞ்சலிக்கட்டுரை பற்றி எழுதியுள்ளார்:
"எந்தப் பெரிய பிரமுகர் காலமானாலும் என் அந்தரங்கத் துக்கத்துடன் ஒரு பயமும் வந்து விடுகிறது .உடனே,மிக நெருங்கிய பத்திரிகை ஆசிரியர்கள் அஞ்சலிக் கட்டுரைகள் கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் வந்து விடுகிறது. எங்கோ யாரோ இறுதி மூச்சை விட்டால், இறுதிநாட்களில் இருக்கும் நான் சொற்களால் கண்ணீர் சிந்தி அழவேண்டுமா?"

Sep 4, 2009

Art is vice

'சாந்தி நிலையம் ' படத்தில் நாகேஷிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி உற்சாகமாக " மகாலிங்கம் புல்லாங்குழல் கேட்டிங்களா '' என்பார் .
நாகேஷ் பதில் :" கேட்டுப்பார்த்தேன் . தரமாட்டேன்னுட்டார் . இப்பல்லாம் யாருக்கும் தர்றதில்லயாம்."

மாலி புல்லாங்குழல் வாசிப்பு பற்றி அந்தகால ரசிகர்கள் சிலாகித்து சொல்வது :
'மாலி 'காத்து '(காற்று ) யாருக்கும் வராது.'

மாலியின் Eccentricity பற்றி பல கதைகள் உண்டு .
மாலி புல்லாங்குழல் எப்போதும் கேட்கும்போது பிரஞ்சு ஓவியன் எட்கர் டிகேஸ் வார்த்தைகள் உடனே ஞாபகம் வரும் .
“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

மௌனி யின் வரிகள் : விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும் . சுருதி ,விலகி நின்று எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமாக வியாபகம் கொள்கிறது"

மாலியின் புல்லாங்குழலில் இப்படி பிரமை ஏற்படவே செய்யும் . ஆழ்ந்து காது கொடுத்த பின் ஒருநீண்ட பெருமூச்சு வெளிப்படும் .

மைக்கேல் ஜாக்சன் பாடுவதும் , ஆடுவதும் பிரஞ்சு ஓவியனின் இந்த வார்த்தைகளுக்கு பொருந்தும் .“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

இருபது வருடங்களுக்கு முன்

'Thriller'
'Bad'
'Dangerous'கேசட்களை கேட்காத நாளே எனக்கு கிடையாது . இன்றைக்கு டி .வி செய்தியில் மைக்கேல் ஜாக்சன் இறுதிச்சடங்கு நடந்தது பற்றி காட்டப்பட்டது .

..



லா .ச .ரா வின் கதையில் அம்மா தயார் செய்யும்
பாயசம் : சமையலறையைக் குங்குமப் பூவின் மனம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும் ,வறுத்த திராட்சை பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா , ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

..


புதுமைப்பித்தன் ஏழையின் குடிசை வீடு பற்றி :'வறுமையின் இருள் அடித்த கர்ப்பக்கிரகம். '


கோபி கிருஷ்ணனின் "இனிமையான வக்கிரம் "கதை எழுத்துக்கலையின் உக்கிரம் . இவருடைய எல்லா எழுத்தும் உக்கிரம் . அலுப்பு என்பதை பதிவு செய்தார் .
" அலுப்பு " ( Ennui )கோபி கிருஷ்ணனை கலைஞன் ஆக்கிவிட்டது .
Art is vice.

கு .ப .ரா .வின் 'சபரியின் பிரேமை ' சிறுகதை பற்றி கோபி கிருஷ்ணன் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது -"சபரியின் பிரேமை இயற்கைக்கு எதிராக இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதனால் ஏற்படும் துயரை எடுத்துச் சொல்கிறது ."
கோபி கிருஷ்ணனின் ' இனிமையான வக்கிரம் ' கதையை படித்தால் அந்த நேர் எதிர் 'Child'(!) பற்றி புரிந்து கொள்ளமுடியும் . கோபியின் Black Humour !

....









Sep 3, 2009

கண்டேன் சீதையை.


10.30 A.M

இந்த ஒரு நாளில் என்னவெல்லாம் நடந்து விட்டது . ஆந்திரப்பிரதேச முதல்வர் Y.S.R.நேற்று காலை மாயமாகி ஒரு நாளாக தேடி இப்போது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் . எந்த நிலையில் ஹெலிகாப்டர் ..? Y.S.R. நிலை ..? இந்த நிமிடம் வரை தெரியவில்லை . No confirmation on CM's safety.

11.30 A.M

The Prime Minister's Office has declared that Andhra Pradesh Chief Minister YS Rajasekhara Reddy died in an air crash.

....

பல மாதங்களாய் நான் மூளையை கசக்கி விடை தெரியாமல்
இரண்டு நாளாய் பரண் மேல் தேடி ஒரு வழியாய்..... கண்டேன் சீதையை .
" சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள் ."

தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி ' சிறுகதையில் சொல்கிறார் .

..

சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று . திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.
" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி
திரிசடை கனவு கண்டாளாம் ''

Sep 2, 2009

மனித மண்டைஓடு

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்!"


Human skull is always smiling!


சுஜாதா இருபது வருடங்களுக்கு முன் எழுதினார் " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால் ."

தொன்ம ரகசியம் ஒன்று - பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர் . அந்த மண்டை ஓடுகள் - அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.



Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை ப்பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool .

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி , சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி யோரிக் கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான் .
A sentimental affection for the deceased jester.

Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life.
..

Sep 1, 2009

நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது!?

கரிச்சான் குஞ்சு எழுதிய "பசித்த மானிடம்" நாவலில்
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேசனில் தனியிடம் பார்த்து அமர்ந்து கணேசன் பணத்தை தன் பையில் இருந்து எடுக்க முயற்சி செய்யும்போது போலீஸ் பசுபதி பார்க்கிறார் . கணேசன் குஷ்டரோகி .
" இந்த ஊருக்கு நான் புதியவன் . பிச்சையெடுத்து சாப்பிட்டு பிச்சைக்காரர்களுடன் கலந்து வாழ முடிவு செய்திருக்கிறேன் " என்கிறான் .
பசுபதி தீவிர ஆன்மீகவாதி ." எவ்வளவு பழுத்த ஞானம் இருந்தால் இந்த முடிவுக்கு வர முடியும் !" புல்லரித்து ,செடியரித்து, மரமரித்து சிலிர்த்துப் போகிறார் .
கணேசன் உள்ளதை உள்ளபடி சொல்கிறான் "அப்படி கிடையாது நான் ஒரு அழுகல் , எச்சிக்கலை நாய் . மலத்தில் மகிழும் பன்றி."
பசுபதி விடுவதாய் இல்லை . மேலும் சிலிர்த்து " நாய் போல் பன்றி போல் , நாணம் இல்லா நக்கனுமாய் , பேய் போல் ,பித்தனைப்போல் பிரம்மவித்து தோன்றிடுவான் !" ஒரு செய்யுள் எடுத்து விட்டு கணேசனை வழிபடுகிறார் .
கணேசன் " நான் உதவாக்கரை . காசுபணம் சுகபோகம் கண்டவன் .பண்ணின பாவத்தால் அழுகிச்சொட்டுகிறது உடம்பு .நான் ரொம்ப நல்லாயிருப்பேன் முன்னெல்லாம் . அந்த உடம்பு செத்துப்போயிடுச்சி ; இது புது உடம்பு " யதார்த்தமாய் இப்படி சொல்வதையும் பசுபதி தத்துவார்த்தமாக எடுத்துக்கொண்டு "கொஞ்சமா பேசினீங்க . ஆனால் நிறைய சொல்லிட்டீங்க . அதிலேயும் ரத்தினச்சுருக்கமா , பழைய உடம்பு செத்துப்போயிடுச்சின்னு சொன்னீங்களே ! இதுவரை எனக்கு புரியாத ஞானங்கள் எல்லாம் புரியுதுங்க !" வியந்து கணேசனை சித்தன் என்றே நம்புகிறார் .
பசுபதி பின்னால் போலீஸ் வேலையிலிருந்து ரிட்டயர் ஆனதும் சேத்ராடனங்களுக்கு சாமி கும்பிட கிளம்பும் முன் " சாமி ! நல்லா பாருங்க என்னை . கண்ணால் வரும் ஞானம் பொன்னாலும் வராது .உங்க கண்பார்வை பட்டதால் நீங்க காட்டிய எல்லா தத்துவங்களும் எனக்கு நல்லா புரியது "
இல்லாத ஒன்றை இருப்பதாக பாவித்து சாதாரண சராசரி அல்லது சராசரிக்கும் கீழானவர்களை மகான் ஆககாட்டும் வறட்டு ஆன்மீகத்தை கரிச்சான் குஞ்சு சத்தமில்லாமல் ,கோஷமே இல்லாமல் பசித்த மானிடத்தில் மட்டுமல்ல
"குச மேட்டு சோதி " சிறுகதையிலும் காட்டுகிறார் .
கோவில் கோபுரத்தடியில் விவாதம் செய்யும் நண்பர்களில் ஒருவன் சொல்கிறான் " இந்த நவீன காலத்திலும் வீண் பிரமைகள் . நம்புவது நல்லது என்றால் நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது " என்று இந்த மூட குருபக்திப் பற்றி சொல்கிறான் . ஒரு வேடிக்கையை அப்போதே நடத்தி காட்டுகிறான் .அங்கே இருக்கிற ஒரு பைத்தியத்தைக் கிளப்பி கடைவாசலில் ஒரு சீப்பு பழம் வாங்கி தருகிறான் .அந்தப் பைத்தியம் பழத்தை தின்னும்போது அதன் வாயிலிருந்து நழுவி விழுவதை பிடிக்க ஏந்துவது போல தன் கையை நீட்டிக்கொண்டே நிற்க ஆரம்பிக்கிறான் . சீப்பு ,சீப்பாக பைத்தியம் சாப்பிடுகிறது . கூட்டம் கூடிவிடுகிறது . " என்ன ? என்ன !"
இவன் சொல்கிறான் " ஒரு துளி எச்சல் கேட்கிறேன் . சாமி தரமாட்டேன்னுது !"
இருபத்தாறு மாதத்தில் குசமேட்டில் அந்த பைத்தியம் விஷேசமான மகானாக ஆக்கப்பட்டு ஆஸ்ரமம் , பூஜை, மேல்நாட்டு வெள்ளைக்கார பக்தர்கள் என்று அமர்க்களப்பட்டு விடுகிறது !
" ஒரு மாதிரியான கூட்டம் " கரிச்சான் குஞ்சுவின் குறுநாவல் . மயிலாப்பூரில் வசிக்கும் ஜெயாவின் 'அப்பா , அம்மா , அக்கா ,தம்பி' இவர்கள் தான் மிக பலகீனமான 'ஒரு மாதிரியான' கூட்டம் . பெரியப்பாவிடம் டெல்லியில் வளரும் பெண் ஜெயா . பெரியப்பா ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர் . ஜெயாவின் பெரியப்பா அவளுடைய அப்பா பற்றி இப்படி சொல்கிறார் :" என் தம்பி ஒரு வெறும் ஆள் ,சுத்த உதவாக்கரை , குதிரை ரேஸ் , சீட்டாட்டம் நு சூதாடியே வீணாப் போனவன் . இப்போ இந்த (காஞ்சி ) பெரியவாள் பைத்தியம் வேற ஏற்பட்டிருக்கு. வெறும் ஆஷாடபூதித்தனம் ,பூஜை ,கீஜை ன்னு வேற கூத்தடிக்கிறான் "
காஞ்சி மடத்தின் மீதான போலி அனுஷ்டான பித்து பற்றி இப்படி ஒரு பிராமண எழுத்தாளர் நாற்பது , ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதி இருக்கிறார் !
மறைந்த மகத்தான எழுத்தாளர் ஆதவன் சொல்வார் :
"தி ஜானகிராமன் கதைகளில் ஆஷாடபூதித்தனத்திற்கும் ,போலி அனுஷ்டானங்களுக்கும் எதிரான ஒரு கோபம் எழுத்தில் இழையோடக்காணலாம் . கரிச்சான் குஞ்சு கதைகளும் அது போலத்தான் "