Share

Nov 30, 2008

கலைந்த ஒப்பனை

அந்த படத்தில் ஏற்கனவே இரண்டு முறை எனக்கு கதாப்பாத்திரம் இயக்குனரால் ஒதுக்கப்பட்டு நான் மேக்கப் முடித்து ஷூட்டிங் ஸ்பாட் போனபின் கடைசி நிமிடத்தில் வேறு நிர்பந்தங்களால் வேறு யாராவது ஒருவர் அதற்கு நடிக்கும்படி யானது .

அப்போதே அந்த யூனிட்டில் R P ராஜநாயஹம் நடிப்பதற்கு ஏன் இப்படி ஏதாவது தடை வருகிறது என பலரும் பேசும் நிலை ஆனது

அதன் பின் ஒரு இன்ஸ்பெக்டர் ரோல் கொஞ்சம் வித்தியாசமான ரோல் . நான்இன்ஸ்பெக்டர் ஆக வந்து கதாநாயக இயக்குனர் , கதாநாயகி , காமெடியன் ஆகியோரிடம் சும்மா சரம் பட்டாசு போல வெடிக்கும் படியாக காட்சி படமாக்கப்பட்டது .

ஷூட்டிங் ஆறு முறை ஒத்திபோடப்பட்டது . ஒரு முறை கிளம்பும்போதே ஒரு அசோசியட் டைரெக்டர் இயக்குனர் கதாநாயகனிடம் " சார்ஒரு நல்ல நடிகர் செய்ய வேண்டிய ரோல் !ராஜநாயஹம் இதை செய்வது கடினம் . ஷூட்டிங் இன்னொரு நாள் ஒரு நல்ல நடிகரை வைத்து செய்தால் என்ன ?" என்று கதாநாயக இயக்குனர் காரில் ஏறும்போது காதை கடித்தான் ."ராஜநாயஹம் செய்வாரு யா ." இயக்குனர் இப்படி சொல்லி காரில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட் போன பின் கூட அன்று நான் காக்கி டிரஸ் போட்டு நடித்து ஒரு ஷாட் எடுத்த பின் கேமரா மேனுக்கு உடம்பு சரியில்லை என்று பேக் அப் ஆனது . அடுத்து ஆறு முறை ஷூட்டிங் கான்செல் ஆனது . ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தால் தடங்கல் ! தடை !

ஒரு வழியா அருணாசலம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் செய்யப்பட்டு நான் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்டது . அன்று ஷூட்டிங் பார்க்க வந்த ஒரு கதாநாயக நடிகரின் தம்பி ( இவர் சினிமாவில் ஸ்ரீதர் ,பாலச்சந்தர் படங்களில் வில்லனாக நடித்தவர் ) என்னிடம் " பிரமாதம் சார் ! நீங்க இப்படி நடிப்பதை மற்றவர் செய்ய முடியாது .ரொம்ப கஷ்டம் .என்னாலே செய்ய முடியாது " என்றார் .

ராஜநாயஹம் சீன் என்றே அதற்கு பெயர் . இன்ஸ்பெக்டர் பேட்ஜ் கூட R.P.Rajanayahemஎன்றே எழுதி காக்கி டிரஸ் இல் குத்தப்பட்டு வசனத்தில் கூட நான் இந்த " இன்ஸ்பெக்டர் R P "ராஜநாயஹம் என்று என்னை குறிப்பிட்டு கதாநாயகனிடம் மிரட்டுவேன் . இரண்டு ஜீப்பில் பன்னிரண்டு கான்ஸ்டேபிள் இரண்டு சப் இன்ஸ்பெக்டர் சகிதம் வந்து நான் செய்யும் ரைட் தான் அந்த காட்சி !

எடிட்டிங் செய்ய போனபோது

'ராஜநாயஹம் சீன் 'மூவியாலாவில் போட்டவுடன் மூவியாலா Out of order!

தடை தடங்கல்!R P ராஜநாயஹம் நடிப்பது தான் தடைபட்டது . எடிட்டிங் கில் கூட தடை வருகிறதே ! எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள் .

எடிட்டிங் முடிந்து டப்பிங் பேச டப்பிங் தியேட்டர் வந்து 'ராஜநாயஹம் சீன் ' புரஜக்டரில் மாட்டப்பட்டவுடன் புரஜெக்டர் Out of order!

எல்லோருக்கும் புல்லரித்து விட்டது ! இது தற்செயல் கிடையாது . எனக்கு மனம் சோர்ந்து போனது . ஒரு வழியாக புரஜெக்டர் சரி செய்து ராஜநாயஹம் சீன் ' ஓடிய போது அசோசியட் இயக்குனர் ரிகார்டிங் அறையிலிருந்து இண்டெர்காமில் தியேட்டரில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படியாக சொன்னான் "ராஜநாயஹம்! நம்ம கதாநாயக இயக்குனருக்கு கூட நேச்சுரல் ஸ்கின் கலர் கிடைக்காது .உங்களுக்கு தான் கிடைச்சிருக்கு . க்ளோஸ் அப் எல்லாம் லட்டு மாதிரி வந்திருக்கு "

அந்த படத்தில் கதாநாயகியின் தந்தை ரோல் பண்ணியவருக்காக டப்பிங் பேச வந்தவர் சொன்னார்." நான் நாற்பத்தைந்து படங்கள் உதவி இயக்குனராய் வேலை பார்த்தவன் . நானூறு தமிழ் படம் பார்த்திருக்கிறேன் . தமிழ்த்திரையில் இன்னைக்கு தான்Young ஆ Smart ஆ ஒரு இன்ஸ்பெக்டர் ஐ நான் பார்க்கிறேன். இவர் யாரோ எனக்கு தெரியாது .இவரை முகஸ்துதி செய்ய எனக்கு அவசியமும் இல்லே . ஆனா நான் உணர்ந்ததை சொல்றேன் "

டப்பிங் தியேட்டரில் லஞ்ச் சாப்பிடும் போது என்னிடம் சௌன்ட் எஞ்சினியர் சொன்னார் " சார் . நான் சாதரணமா சீன்ஸ் ரசிப்பதில்லை . லூப் மாற்றி வாய்ஸ் பதிவது மெக்கானிகல் வொர்க் பாருங்க . ஆனா உங்க ரோலையும் சீனையும் ரொம்ப ரசிச்சேன் . நீங்க நடிகர் முரளி மாதிரி Soft romantic rolesசெய்யலாம் சார் "

ஒருபோலீஸ் டெபுடி கமிசனர்(அப்போது சட்டம் ஒழுங்கு )பெயர் பாஸ்கர் (இவர் மூன்று வருடம் முன் இறந்து விட்டார் )கதாநாயக இயக்குநரிடமே சொன்னார் " 'ராஜநாயஹம் இன்ஸ்பெக்டர் ரோல் தான் நல்லாருக்கு . இன்னொரு ரெண்டு இன்ஸ்பெக்டர் சகிக்கலே . மூணு இன்ஸ்பெக்டர் ரோலும் ராஜநாயஹம் செய்திருக்கணும் .ஒரு ஊர்லே மூணு இன்ஸ்பெக்டர் ஆ ? அது எப்படி ?"

ப்ரிவியூவின் போது பலரும் படத்தில் என் காட்சியை பார்த்து விட்டு பாராட்டினார்கள் .கை கொடுத்தார்கள் . அந்த யூனிட்டில் இருந்த ஒரு ஆள் ' இந்த மாதிரி ஒரு ரோல் எனக்கு கொடுக்கமாட்டாரா டைரக்டர் என்று தான் பன்னிரண்டு வருடமாக இவர் கிட்டே வேலை செய்யறேன் " என்றார் .

இயக்குனரே சொன்னார் ' 'ராஜநாயஹம் மாதிரி ஒரு சீன்லே வந்தாலும் நிக்கணும் யா ! படம் பூரா நிறைய பிரேமுலே மத்த நடிகர் மாதிரி வந்து என்ன புரயோஜனம் ?"

கதாநாயக இயக்குனர் ஏனோ கொஞ்சநாளில்என்னிடம் என் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ' ராஜநாயஹம் ! ரோல் (எதிர்பார்த்த அளவு )நல்லா செய்யலையே ' என்றார் !

கடைசியில் படத்தில் நீளம் காரணமாக அந்த 'ராஜநாயஹம் சீன் ' நீக்கப்பட்டது .

இந்த விஷயம் தீபாவளி ரிலீஸ் போது பலரும் பார்த்துவிட்டு வந்து என்னிடம் நான் நடித்த காட்சி படத்தில் இல்லை என்று சொன்ன போது தான் எனக்கு தெரிந்தது .

இன்றைக்கு பதினாறு வருடம் ஓடி விட்டது !

படத்தின் பெயர் ராசுக்குட்டி ! அந்த கதாநாயக இயக்குனர் கே .பாக்ய ராஜ் .

இப்போதும் படத்தில் டைட்டில் ஓடும்போது 'ராஜநாயஹம்' என்று பெயர் வரும் ! ஆனால் சீன் இருக்காது !!

நான் எவ்வளவோ வாழ்க்கையில் இழந்திருக்கிறேன் . ஆனால் இப்போதும் ஏதேனும் ஓர் சேனலில் அந்த படம் ஓடும்போது மனத்தில் ஒரு வேதனையும் தன்னிரக்கமும் வர தான் செய்கிறது !

Everything for me becomes Allegory .

- Baudelaire


Nov 29, 2008

மும்பை

தாஜ் ஹோட்டல் முன்
என்ன ? ஏன் ? என்று
தவித்து நின்று,நடந்து ,
துடித்து பறந்த அந்த புறாக்கள் .
துப்பாக்கி சூட்டிற்கு இடையில்
பதைத்து படபடத்த அந்த புறாக்கூட்டம் .

ஏ கருணாநிதி


'மாங்கல்யம் ' என்ற படத்தில்
ஏ கருணாநிதி தான் குளித்தலைக்கு செல்லவிருப்பதை வி.எம் ஏழுமலை என்ற நடிகரிடம் இரவு விடை பெறும்போது ஓட்டை இங்கிலீஷில் சொல்வார் :“Good Morning! I am going to ‘ the’ Kulithalai. Good Morning!”

குழந்தைத்தனமான காமடியன்! அந்த விடைத்த மூக்கு அவரது காமடிக்கு மிகவும் கைகொடுத்தது.

பெண் வேடமிட்டு அவர் வந்தால் கொனஷ்டைகள் பிரமாதமாக இருக்கும் .
கதாநாயகி படத்தில் பெண் வேடமிட்டு அவர் சொல்லும் " நாங்கல்லாம் ரொம்ப கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பொம்பளைங்க " கேட்கும்போதே சிரிப்பை நம்மால் அடக்க முடியாது .

வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் பெண் வேடத்தில் அவர் மாட்டுவண்டி யோட்டும் சிவாஜிக்கு பின் உட்கார்ந்து செய்யும் கொனஷ்டைகள் !
அதே படத்தில்
"ஒற்றனாக நான் போகிறேன் அரசே " என்பார் . சிவாஜி " பொடியன் பொருத்தமானவன் "

வெள்ளையர் படையெடுத்து வருவதை தெரிவிக்கும்போது ' நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன் .முடியவில்லை ' - ஏ கருணாநிதி பதட்டத்துடன் சொல்லும்போது வேடிக்கையாயிருக்கும் .

குழந்தை தனமான காமெடி செய்தவர் என்றாலும் 'பாலும் பழமும்' படத்தில் எம்ஜியார் - வி என் ஜானகி திருமணம் பற்றி அரசியல் பேசியவர் .
" ஜானகிக்காக ராமச்சந்திரன் வில்லை ஒடைக்கலயா ?"


மனோரமாவிடம் காதல் பேசிவிட்டு 'வரட்டுமா ' என்று வீட்டின் மேலே பார்ப்பார் .மனோரமா ' ஓடு புதுசா இப்பத்தான் மேலே போட்டுருக்கு . வாசல் வழியா போ ' என்பார் .

மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் கண்டக்டர் நாகேஷ் உடன் சேர்ந்து டிரைவர் ஏ கருணாநிதி அடிக்கும் லூட்டி ..
அதே கண்கள் படத்தில் மலையாளி சமையல்காரராக "யாரு செத்துபோயி " என்று திகிலுடன் கேட்பார் .
'ஆதி பராசக்தி ' படத்தில் ஒ . ஏ .கே .தேவரும் , ஏ .கருணாநிதியும் அசுரர்கள் .தேவர்களை சிறைப்பிடித்துவிடுவார்கள் . தேவகன்னிகைகளை பார்வையிடும்போது தேவர் ஜொள்ளு விட்டு சொல்வார் : தம்பி ! இந்த தேவ கன்னிகைகளை பார்த்தவுடன் தேவப்பயல்கள் மீது இரக்கம் வருகிறது ."
உடனே ஏ .கருணாநிதி அழுத்தமாக சொல்வார் : இயற்கை ! இயற்கை !

முத்து லக்ஷ்மி யுடன் ஜோடியாக இணைந்து நிறைய படங்கள் (கிட்டத்தட்ட நூறு படங்கள் ?அல்லது நூற்றுக்கும் மேல் )நடித்தவர்.

" மாமியா ஓட்டல் " என்ற பெயரில் கடைசி காலத்தில் உணவகம் நடத்தினார் .
எலும்புருக்கி நோயால் இறந்தார்.

.....................................................................

வாழையடி வாழை பதிவு பற்றி நாகார்ஜுனன்

வாழையடி வாழை பதிவு பற்றி நாகார்ஜுனன்


ராஜநாயஹம்

நீங்கள் சொல்லும் ஜடிலைக்கதையை நானும் பாரதத்தில், ஆதிபர்வத்தில் ஜடிலா-கௌதமி கதை என்பதாக வாசித்திருக்கிறேன். இதே கதையை அம்பேத்கர் தம்முடைய Riddles in Hinduism புத்தகத்தில் குறிப்பிடுகிறார், அக்கால பிராமண, க்ஷத்திரியப் பெண்களுக்கு polyandry சர்வ சாதாரணம் என்பதைக் காட்ட!

பாரதத்தில் துருபதர், தம் மகள் திரௌபதி ஐவரை மணப்பது தவறு என்று பேசும்போது அங்கு வரும் வியாசர் இதுகுறித்த உரையாடலை வேண்டுகிறார். குந்தியும் ஐவரும் பங்கிடட்டும் என்ற தம் வாக்கு பலிக்க வேண்டும் என்பதாகப் பேசுகிறார். துருபதன் மகன் திருஷ்டத்யும்னன், திரௌபதி ஐவரை மணப்பதைத் தவறு என்று கருதவில்லை என்கிறார்.

ஆக, உரையாடலின்போது த்ருமர், கௌதம கோத்திரத்தில் வரும் பிராமணப்பெண் ஜடிலா (அப்படியென்றால் சடாமுடிக்காரி எனப்பொருள்) ஏழு ரிஷிகளுடன் வாழ்ந்தார் என்று கூறுவதாக என் வாசிப்பின் நினைவு. வாசித்தது, மகாபாரதம் - வடமொழி-ஹிந்தி மொழியாக்கம், ஆறு தொகுதிகளில், கீதா பிரஸ், கோரக்பூர். பதிப்பின் ஆண்டு மறந்துவிட்டது. இந்தக்கதையை, மற்ற பதிப்புக்களில் கண்டதாக சரியான நினைவில்லை.ஸ்ருயதே ஹி புராணேபி ஜடிலா நாம கௌதமி ரிஷிநயாஸீதவதி சப்த தர்மப்ரதம் வரா.. என்பது தர்மர் கூறும் ஸ்லோகம். நினைவிலிருந்து கூறுகிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

இதில் தர்மர் கூறும் புராணம் எது தெரியவில்லை... அதேபோல திரௌபதி ஹஸ்தினாபுரம் திரும்பும்போது வரவேற்கும் மக்களும் கௌதமி ஏழு ரிஷிகளுடன் இருப்பதைப் போல என்றிருக்கிறது... நிஜத்தில் ஜடிலையைப் போல பாஞ்சாலிக்கும் எழுவர்தான், ஆனால் பாஞ்சாலி க்ஷத்திரியப்பெண் - அவளை நாடியோராக எழுவர் - அதாவது பாண்டவர் ஐவர், அடுத்து விராட பர்வத்தில் கீசகன், நூற்றுவரான கௌரவர் ஏழாமவர் எனக் கொள்ளலாம்.

விராட பர்வத்தில் திரௌபதியான சைரந்தரி தனக்கு ஐந்து கந்தர்வக் கணவனமார் உண்டு என்று ராணி சுதேஷ்ணாவிடம் கூறுகிறாள். சைரந்தரியை விரும்பும் கீசகனை மடப்பள்ளிக்கார பீமன் கொல்கிறான். அப்போது பீமன் பசியோடிருப்பதாகச் சொல்வது கூடலைக் குறிப்புணர்த்துவதாகும்.பிறகு துச்சாதனன் அவளை அவைக்கு இழுத்து வருவதுடன் அவள் கோலம் ஜடிலையாகிறது.யுத்தத்தில் கிட்டும் துச்சாதனன் ரத்தம் தன் கூந்தலில் பூசி சபதம் முடிக்கிறாள். ஆக, ஜடிலையின் கதை, திரௌபதியின் கதையாக மாறுகிறது, அது ஜடிலையின் கதை என உணர்த்தப்பட்டவாறே..

அடுத்து வார்க்க்ஷியின் கதை. ததைவ முனிஜ வார்க்க்ஷி தபோபிர்பவிதாத்மநஹசங்கடாபூத் தாச ப்ராத்ர்னேகனாம்நாஹ ப்ரசேதஸஹஎன்று வார்க்க்ஷி பற்றிக் கூறுவதும் தர்மரே. பிறகுதான் வியாசர் பேசுகிறார்... திரௌபதி, திருமகளின் வடிவம் என்று கூறி ஐந்து இந்திரர்கள் கதையொன்றைச் சொல்கிறார். அதில் ஒரு இந்திரன் சாபம் பெற்று வேறு நான்கு இந்திரர்களைக் கண்டு சாப விமோசனம் பெற வேண்டி நாராயணனின் அருளுடன் முறையே தர்மதேவதை (யமன்), வாயு, இந்திரன், அஸ்வினி சகோதர்களின் புதல்வர்களாக, அதாவது பாண்டவர்களாகப் பிறந்தார்கள், நாராயண அம்சம் கொண்ட இவர்களைத் திருமகளான திரௌபதி ஏற்கலாம் என்கிறார். ஐந்துக்கும் (பாண்டவர்கள்) நூறுக்கும் இடைப்பட்ட பகு எண்ணாக வரும் பத்தில் வார்க்க்ஷியின் கதை நிற்கிறது. இந்தப் பத்து என்ற இடைப்பட்ட நிலைக்கு பாரதமும் வருகிறது. எப்போது, திரௌபதி சூதாட்டத்தில் வைக்கப்படும்போது!

(நாகார்ஜுனன்)
11/29/08



நாகார்ஜுனன் said...
இன்னும் கொஞ்சம் யோசித்ததில், திரௌபதியை நாடுவோரில் கீசகன் தவிர, கர்ணன், ஜெயத்ரதன் ஆகியோரும் உண்டு - இவர் சுயம்வரம் கைகலப்பில் முடிகிறது, பிறகு ஹஸ்தினாபுர வருகை சூதாட்டத்திலும் அவமானத்திலும் அஞ்ஞாத வாசத்திலும் முடிகின்றன, விராட பர்வம் போரில் முடிகின்றன, தூதுசெல்லும் கண்ணன் போர் என்ற சாத்தியத்துக்குச் செல்வதும் திரௌபதியைப் பார்த்த பிறகே..அடுத்து வார்க்க்ஷியின் கதை. எங்கோ நினைவிலிருந்து எழுதுகிறேன். கண்டு முனிவருயும் அவர் தவத்தைக் கலைக்க இந்திரன் அனுப்பிய அப்ஸரஸ் பிரமலோகையும் கூடியபோது உடனிருந்த மரங்கள் (வ்ருக்ஷங்கள்) எடுத்து வளர்த்த பெண்குழ்ந்தைதான் வார்க்க்ஷி. பதின்மரை மணந்த இந்தப்பெண்ணின் ஒரு மகன் தட்சன் - சிவபெருமானின் மாமனார் என்று பாகவத புராணம் கூறுவதாகத் தெரிகிறது.பிரசின்பரி என்ற அரசனின் புதல்வர் பதின்மர். இவர்கள் கடலுக்கடியில் தவம்புரிந்து வெளிவந்த போது தெரிந்த பெரும்மரங்களைக் கோபம்கொண்டு எரித்தார்கள் எனவும்அப்போது சந்திரன் இவர்கள் கோபத்தைத் தணிக்க வார்க்க்ஷியை இவர்களுக்கு மணம் புரிவித்ததாகவும் பாகவதம் கூறுகிறது என்கிறது என் வாசிப்பு நினைவு. வாசித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஓரிரு விபரங்கள் விட்டுப்போயிருக்கலாம்.
Saturday, 29 November, 2008

Nov 28, 2008

பழைய கணக்கு

அப்போது காமராஜர்தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் .ராஜாஜி "காமராஜர் ஆட்சி ஊழல் ஆட்சி" என்றார் .காமராஜர் அப்போது சொன்னார் " இவர் என்ன பெரிய பரசுராமரா?"
"காமராஜர் திட்டம்" பக்தவத்சலத்தை பின் தமிழக முதல்வராக்கியது .
....
1967 ல் காங்கிரசை எதிர்த்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.கவுடன் கூட்டு .
ராஜாஜி சொன்னார் : "பிராமணர்கள் ஒரு கையால் பூணூலை பிடித்து கொண்டு மறுகையால் தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்கள் "
தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. (ஹிந்தி எதிர்ப்பு ,காங்கிரஸ் வெறுப்பு என்று காரணம் யாரும் இங்கே தயவு செய்து சுட்டி காட்ட கிளம்பி விட வேண்டாம்.)
கொஞ்ச நாளில் ராஜாஜி சொன்னார்
" திமுக வுடன் தேனிலவு முடிந்து விட்டது ."
அண்ணாதுரை விடவில்லை " ஆம் தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது "
1971ல் அண்ணா இல்லாத திமுகவை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இணைந்து கருணாநிதியை எதிர்த்து மிக மோசமான படு தோல்வியை தழுவினர் .( பங்களா தேஷ் வெற்றி என்று காரணங்களை அடுக்குவது இரண்டாவது பட்சம் .)

எம்ஜியாரின்  எழுச்சியில் ஸ்தாபன காங்கிரசும் சுதந்திரா கட்சியும் காணாமல் போனது .
எம்ஜியார் இருக்கும் வரை கருணாநிதி பருப்பு வேகவில்லை . எம்ஜியாரின் மரணம் மீண்டும் கருணாநிதிக்கு ஆட்சி கிடைத்து கொஞ்ச நாளில் மீண்டும் இழப்பு .
மூதறிஞர் ராஜாஜி , காலா காந்திகாமராஜர் இருவரையும் தோற்கடித்த கருணாநிதி க்கு 20 வருடத்தில் ஜெயலலிதாவிடம் 1991ல் மிக மோசமான தோல்வி ஏற்பட்டது .(ராஜீவ் கொலை தான் என்ற காரணம் இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை.அது உள்ளங்கை நெல்லிக்கனி .)
கருணாநிதியிடம் மூதறிஞர் ,காலா காந்தி தோல்வி மகத்தான சோகம் . ஜெயலலிதாவிடம் கருணாநிதி தோற்றது கேலி கூத்து .
வரலாற்றின் குரங்குத்தனம் !
“Hegal remarks somewhere that history tends to repeat itself. He forgot to add: the first time as tragedy, the second time as farce”
-Karl Marx

இரண்டு சங்கீத மாமணிகள்

மதுரை மணி ஐயர் , ஜி என் பாலசுப்ரமணியம் இருவருக்குமே ஒரு பத்து வருடமாக ஒரு தர்ம சங்கடம் இருந்தது . மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது மதுரை மணி ஐயருக்கு தான் தனக்கு முன் கொடுக்கப்பட வேண்டும் என்று ஜி என் பி வலியிருத்தினார் . மதுரை மணி ஐயர் தனக்கு முன் ஜி என் பி க்கு தான் 'சங்கீத கலாநிதி ' விருது கிடைக்க வேண்டும் என்று மியூசிக் அகாடமியை வற்புறுத்தினார் .
1958ஆண்டு ஜி என் பி க்கு சங்கீத கலாநிதி விருது கொடுக்கப்பட்டது .
1959 ஆண்டு மதுரை மணி ஐயருக்கு கொடுக்கப்பட்டது .

எனக்கு இருவரில் மதுரை மணி ஐயரை தான் மிகவும் பிடிக்கும் . ஜி என் பியையும் பிடிக்கும் .
INDIVIDUAL CHOICE!

மதுரை மணி ஐயரின் பாட்டு பல படி மேலே !

Identity Crisis

அடையாளச்சிக்கல் !
ஏற்கனவே "தெலுங்கன் கருணாநிதி " என்ற கோஷம் பத்து வருடத்திற்கு மேலாக முன் வைக்கப்படுகிறது . இது வரை தமிழ் தேசிய வாதிகள் , விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ,தலித்கள் இந்த கோஷம் எழுப்பிகொண்டிருந்தார்கள் . இப்போது சுப்ரமணிய சுவாமி " கருணாநிதியின் தந்தையின் முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கர்கள் " என்ற உண்மை (!)யை கண்டறிந்து உலகுக்கு கூறியுள்ளார் . இலங்கை பிரச்னை தீர ஒரு தமிழர் தமிழக முதல்வர் ஆகவேண்டும் என்பது சுப்ரமணிய சுவாமியின் புதிய அபத்த கோஷம் .

இதற்கு நேர் மாறாக ரஜினிக்கு அடையாளச்சிக்கல் தீர்ந்து விட்டது . ரஜினி , அவரது தகப்பனார் ஆகியோர் பிறந்த இடம் தமிழகத்திலுள்ள கிருஷ்ணகிரி அருகிலுள்ள நாச்சி குப்பம் ! தமிழ் அடையாளம் !அங்கிருந்து எழுபது மைல் தூரத்திலுள்ள பெங்களூருக்கு பிழைக்கப்போன குடும்பம் தான் ரஜினியின் குடும்பம் !! இனி எவனும் கர்நாடகாகாரன் என்று ரஜினியை சொல்லமுடியாது .
அத்வானியே இது குறித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து குதூகலம் அடைந்துள்ளார் !!! சகிக்க முடியாத அபத்தம் .

அபத்த அடையாளங்கள் . அபத்த சிக்கல்கள் .

Nov 27, 2008

An Anecdote in “The Outsider”


ஆல்பெர் காம்யுவின்" The Outsider” நாவலில் மெர்சோ சிறையில் செய்தித்தாளில் ஒரு செய்தியை படிக்கிறான் .



"செகொஷ்லோவாகியாவில் ஒரு கிராமம் . அங்கிருந்து ஒரு வாலிபன் பிழைப்பு தேடி வெளியூர் கிளம்புகிறான் .கிராமத்தில் அவன் தாயாரும் தங்கையும் இருக்கிறார்கள் . அங்கே ஒரு சத்திரத்தை நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இவன் இருபத்தைந்து வருடம் கழித்து நிறைய சம்பாதித்துக்கொண்டு ,தன் மனைவி ,குழந்தையுடன் கிராமத்துக்கு திரும்பி வருகிறான் . தன்தாய்க்கும் தங்கைக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி வேறொரு சத்திரத்தில் தன் மனைவி குழந்தையை தங்க வைத்து விட்டு தன் குடும்ப சத்திரத்திற்கு வருகை தருகிறான் . அங்கே அறையொன்றில் தங்குகிறான் . அவன் தாயாருக்கும் தங்கைக்கும் அவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை . மாலை விருந்தில் இவன் அவர்கள் பார்க்கும்படியாக தன்னிடம் உள்ள பெருந்தொகை யை தற்செயலாக காட்டுவது போல் காட்டுகிறான் . இவனுடைய தாயாரும் தங்கையும் அன்றிரவு அந்த பணத்தை கைப்பற்ற வேண்டி இவனை கோடரி யால் அடித்துகொன்று விடுகிறார்கள் . பிணத்தை ஆற்றில் போட்டு விடுகிறார்கள் .
மறு நாள் அங்கே இவனை தேடி அவன் மனைவி குழந்தையுடன் வருகிறாள் . நேற்று வந்து தங்கியவன் உன் பிள்ளை தான் என்று அந்த தாயிடம் சந்தோசமாக சொல்கிறாள் .

அந்த தாய் தூக்கு போட்டு இறக்கிறாள் . தங்கை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள் ."

வாழையடி வாழை

அர்ஜுனனுக்கும் பாஞ்சாலிக்கும் திருமணம் செய்வது பற்றி துருபதன் ஆலோசிக்கிறான் .தர்மரை கேட்கிறான் . தர்மர் " பாஞ்சாலியை நாங்கள் ஐந்து சகோதரர்களுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தாயார் குந்தி உத்தரவு " என்கிறார் . துருபதன் பதட்டமடைந்து வேதனையுடன் " அது எப்படி சாத்தியம் ?'' என்று கேட்கிறான் . வியாசரிடம் " இது முறை கெட்ட செயல் அல்லவா ?" புகாராக துருபதன் முன் வைக்கிறான் .

வியாசர் தேற்றுகிறார் " ஐந்து பேரை பாஞ்சாலி மணப்பது தவறே அல்ல . இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன . ஜடிலை என்ற பெண், சப்த ரிஷிக்களையும் மணந்திருக்கிறாள். வார்க்ஷி என்ற பெண் 'பிரதேசுக்கள்' என்ற பத்து சகோதரர்களை கல்யாணம் செய்திருக்கிறாள் "

மகாபாரதம் என்பது பெரிய சமுத்ரம். பதினைந்து வருடம் முன் மேற்கண்ட விஷயம் அறிய வந்தேன் . ஆனால் மேல் அறிய முடியவில்லை!இது எந்த மகாபாரதம் ?

நான் இதை இங்கு எழுதியதற்கு காரணம். இந்து ஞான மரபின் மீது எனக்குள்ள தேடலும் ,மதிப்பும். சப்தரிஷிகளின் பத்தினி ஜடிலை ,பிரதேசுக்களின் பத்தினி வார்க்ஷி இருவரின் கதையை அறிந்த சான்றோர் யாராவது இருக்கிறார்களா என தேடுவதற்காக .ஹிந்துத்வா வேறு , இந்து ஞான மரபு வேறு என்ற தெளிவு எனக்கு உண்டு .

புதிரான தொன்மங்கள் !

ஜடிலைக்கு ஏழுபேர் ,வார்க்ஷிக்கு பத்து பேர் என்று பாஞ்சாலி கணவர்களை விட அதிகமாக பாஞ்சாலி காலத்திற்கு முன் அந்த இரு ஸ்த்ரிகள் வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள் .

பாஞ்சாலி பற்றி நமக்கு தெரிகிறது . ஜடிலை , வார்க்ஷி என்ற இந்த இரு ஸ்த்ரிகள் யாவர் ? சூழல் ,நிர்ப்பந்தம் யாது ?

Nov 26, 2008

பட்ட மரம்


அந்த பட்ட மரம் தனிப்பட்டு ,தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது
.....................
" ஆமாம் மரம் தான் . ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா ? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது ?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது ? எதற்காக ?

--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
........................................




காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன் .
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன் .
குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை .
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல் படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன் . ஒடுங்கி விட்டேன் . காய்ந்து விட்டேன் .

--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்


Child is the Father of the Man




எல்கேஜி வகுப்பில் சேர்க்கும் போது என் மகன் கீர்த்தி யை பள்ளிக்கு முதல் நாள் அழைத்து சென்றிருந்த போது அங்கே மற்ற பிள்ளைகள் அனைத்தும் கதறி அழுது கொண்டிருந்தன . பெற்றோர் பிள்ளைகளை விட்டு விட்டு கிளம்ப முடியவில்லை . அந்த அளவுக்கு ஏதோ கொலைகளத்துக்கு கொண்டுவரப்பட்டு விட்டது போல குழந்தைகள் கதறி அழுது கொண்டிருந்தன . அந்த பள்ளி மிஸ் நான்கு பேர் தவித்துகொண்டிருந்தார்கள் . பெற்றோரை கிளம்ப சொல்லிகொண்டிருந்தார்கள் .
கீர்த்தியை வகுப்பு வாசலில் நிறுத்தினேன் . அவனுடைய ஸ்கூல் பாக் தோள் மீது . என்னை பார்த்தான் ' நீ போப்பா ' என்றான் . அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு பார்வை பார்த்தான் . நான் நின்று கொண்டிருந்தேன் . மிஸ் ஒருவர் வந்தார் . பையன் பெயர் கேட்டார் . சொன்னேன் . உடனே ' நீ வீட்டுக்கு போப்பா 'என்றான் . மிஸ் ஆச்சரியப்பட்டார் . அழாமல் ஒரு குழந்தை . வகுப்பிற்குள் நுழையும்போது திரும்ப என்னை பார்த்து ' போப்பா ' மறுபடியும் !வகுப்பிற்குள் சென்று மிஸ் சொன்ன இடத்தில் உட்கார்ந்த பின் அழுகின்ற அவனுடைய வகுப்பு தோழர்களை பார்த்தான் . வெளியே ஆர்வத்துடன் நிற்கும் என்னை பார்த்து பார்வையால் 'ஏன் இன்னும் நிற்கிறாய் ?' வினவி, தலையால் 'போப்பா நீ ' சைகை . மிஸ் நான்கு பேரும் வியந்து நின்றார்கள்.
............................................


நான் முதலில் இங்கே திருப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் திருச்சி போய் கீர்த்தியை ( பதினேழு வயது ) இங்கே வேலை பார்க்க அழைத்து வந்தேன் . அப்போது குடும்பம் இன்னும் திருச்சியில் .நான் வேலை பார்த்த இடத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் கீர்த்தி வேலைக்கு சேர வேண்டிய நிறுவனம் . மூன்று பஸ் மாறி செல்ல வேண்டியிருக்கிறது . 'பச்சை பாலகனை வேலைக்கு விட வேண்டியிருக்கிறதே' . நான் வேலை பார்த்த நிறுவனத்தின் மேனேஜர் முதல் வாட்ச்மேன் வரை தலையில் அடித்துகொன்டார்கள்.
பஸ்ஸில் வரும்போது குமுறி அழுகிறேன் . கண்ணீர் வடிய குமுறி அழுகிறேன் .
கோடை விடுமுறை நேரம் . பையன்கள் ஆங்காங்கே கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . திருச்சியில் விடுமுறை தினங்களில் சிறுவர்கள் ,இவன் தோழர்கள் இவனை தேடி கிரிக்கெட் விளையாட கூப்பிட வந்து விடுவார்கள் .'அங்கிள் ! இவன் தான் எங்க டீமுக்கு டெண்டுல்கர் ! விளையாட அனுப்புங்க அங்கிள் ! 'திருச்சியில் அந்த நேரத்தில் செஸ் விளையாட்டிலும் Under 18 district champion!இப்போது வேலை பார்க்க திருப்பூரில்.கீர்த்தி அப்போது பஸ்ஸில் ஜன்னல் ஓரமிருந்து என்னிடம் பேசிய ஒரே வார்த்தை ' கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா 'என் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . வாயில் கர்சிப்ப்பை வைத்து அழுத்திக்கொண்டு அழுகிறேன் .
பைபிள் பழைய ஏற்பாட்டில் ஒரு காட்சி . கடவுள் கேட்டார். அதனால் மகன் ஐசக்கை கொன்று பலி கொடுக்க வேண்டி அழைத்து கொண்டு மலையேறும் ஆப்ரகாம் .
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறங்கி ஒரு முக்கால் கிலோ மீட்டர் நடை . வாய் விட்டு அழுகிறேன் . கீர்த்தி இறுக்கமாக ' அழாதப்பா '
பனியன் கம்பனியில் அவனை ஒப்படைக்கிறேன் . அவனை இருவர் புரடக்சன் பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள் . அவர்கள் அவனிடம் வேலை என்ன என்று விளக்குவதை அலுவலக கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது . அவன் கவனமாக கேட்டுக்கொண்டு தலையாட்டி கொண்டு இயல்பாக உடனே பனியன்களை கணக்கிட ஆரம்பிக்கும் போது அங்கிருந்தே என்னை பார்க்கிறான் . தலையை ஆட்டி என்னை பார்த்து உதடு அசைத்து சொல்வது எனக்கு பார்க்க கிடைக்கிறது.

'நீ போப்பா '

மத்தாயுட பிரார்த்தனா!

ஞான ரதம் பத்திரிகையில் வந்த கவிதைஒன்று . " சைத்தான்" எழுதியது !

ஜி நாகராஜன் எழுதிய நாவல் "நாளை மற்றுமொரு நாளே " இந்தபத்திரிக்கையில் தான் தொடராக வந்தது . சுந்தர ராமசாமியின் பிரபலமான 'சில கெட்ட உறுப்புகள்" ( முலையை மட்டும் வெட்டிடுரெனே.. எந்த முலை?) ஞானரதம் பத்திரிகையில் தான் பிரசுரமானது .

மத்தாயுட பிரார்த்தனா!

எண்ட கர்த்தாவே !
மத்தாயு கள்ளும் குடிக்கும்
பெண்ணும் பிடிக்கும் .
கர்த்தர் ரட்சிக்கனும் .
ரட்சிச்சிலேங்கில் மத்தாயுக்கு மயிரானு ..

- "சைத்தான் "


ஞானரதம் ஜூலை ,1973

Nov 25, 2008

சொர்க்கம் ,கைலாசம்

பத்து வருடம் முன் ராஜபாளையம்மலையடிவாரத்தில் சத்திய மூர்த்தி சுவாமிகள் என்பவரை சந்தித்தேன் .

வள்ளலார் இயற்றி பாடிய "மாண்டு ராக பாடல் " "வானத்தின் மீது மயிலாட கண்டேன் .மயில் குயில் ஆச்சுதடி " பற்றி என்னிடம் வரி வரியாக வெகு சுவாரசியமாக பேசினார் .

எம் எஸ் துவங்கி உன்னி கிருஷ்ணன் வரை பாடி பிரபலமான துக்கடா பாட்டு .

சத்தியமூர்த்தி சுவாமிகள் தொடர்ந்து அப்போது கடவுளை கேட்ட ஒரு கேள்வி : "சோறை குடுக்காத சாமி சொர்க்கத்தை காட்டுமா ?

காசை கொடுக்காத சாமி கைலாசத்தை காட்டுமா ?

இங்கே சோறை கொடு . அப்புறம் நீ சொர்க்கத்தை கொடு . இங்கே எனக்கு காசை கொடு .அப்புறமா ஒன் கைலாசம் !"

"இங்கே பூலோகத்திலே என்னை சித்திரவதை பண்ணி புழுவா துடிக்க விட்டுபுட்டு செத்தா உடனே சொர்க்கம் ,வைகுந்தம் ,கைலாசம்னு காதுலே பூ சுத்தாதே .

சும்மா ஏமாத்தாதே "

எனக்கு நீலமணியின் கவிதைகள் இரண்டு நினைவுக்கு வந்தது

1. "தட்டினால் திறப்பாராம் தாராள கடவுள் !

சாத்தி வைப்பானேன் ?"

2." என்ன வரம்வேண்டும் கேள் என்றார் கடவுள் .

அது தெரியாத நீ என்ன கடவுள்? "

...

தேவ தேவனின் கவிதை கீழே :

" காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய் எழுந்தார்

துயர் குழப்பமிக்க இவ்வுலகில்

தன் கடமை என்னவென்று வெகு

யோசனைக்கு ப்பின் கடவுள் "

...............

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாம் என்றே எண்ணி இரப்பார்

பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம்

பேயுரையாம் என்றிங்கு ஊதடா சங்கம்

- மகா கவி பாரதி

மாரியப்பசுவாமிகள் செலுத்திய காணிக்கை

எஸ் ஜி கிட்டப்பா யாரையும் குறிப்பிட்டு குருவாய் சொல்ல முடியாதவர் .

"ஏக சந்த கிராஹி "என்று அந்த காலத்தில் சொல்வார்கள் .

ரொம்ப ஆச்சரியம் .

தியாகராஜரின் சுத்த சீமந்தினி ராக "ஜானகி ரமணா "கீர்த்தனையை ஒரே தரம் கேட்டு விட்டு உடனே மேடையில் பாடியவர் கிட்டப்பா! இவர் பாடிய நாத சிந்தாமணி 'எவரனி ' பற்றி நான் 'சஹானாவும் தேவாம்ருத வர்ஷிணியும்' என்ற என் ஆகஸ்ட் ஏழாம் தேதி பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் .

அநேக கீர்த்தனைகளை பாடாந்தரமாக கேட்டு கற்றுகொண்டவர் . விளாத்திகுளம் சாமி களின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி . இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று கிட்டப்பா பாடினார் .அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா .

இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி ஒரு முக்கிய தகவல் . வயிற்று வலி வேதனையால் சொல்லொணா துன்பத்தை மாரியப்ப சுவாமிகள் அனுபவித்து துடித்திருக்கிறார் .

கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார் . வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார் .

தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார் !

தன் சங்கீதத்தை ,பாடும் திறனை தியாகம் செய்திருக்கிறார் .

தோடி சீத்தாராமையர் என்று ஒருவர் . விளக்கம் தேவையில்லை .தோடி யை அடகு வைத்து தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று குடும்பம் நடத்தியிருக்கிறார் .அடகில் தோடி இருக்கும்போது கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார் . சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான் . சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார் .

அப்படி ஒரு காலம் ! அப்படிப்பட்ட பிறவிகள் !!

“Child is the Father of the Man” பதிவு பற்றி

செப்டம்பர் மாதம் 27 தேதி பதிவு “Child is the Father of the Man”பற்றி

நான் கார்த்தி said...


//' நீ போப்பா '//

உங்கள் வலைத்தளம் எனக்குப் புதிது ...இதென்ன வார்த்தை நடை?அத்தனையும் பொட்டில் அறைவது போல? மனதைக் கசக்கிப் பிழிவதைப் போல...!!! மனம் கனத்துப் போகிறது இந்தப் பதிவை வாசிக்கும் போது ...கூடவே பொறுப்பான பையனைப் பெற்ற அப்பா என்ற உணர்வும் வரத்தான் செய்கிறது.இனி தொடர்ந்து உங்களது பதிவுகளைப் படிக்க உத்தேசித்திருக்கிறோம் நானும் எனது கணவரும் .


Monday, 24 November, 2008

பகுஜன் சமாஜ் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் வேரூன்றுகிறது .

முதல் முறையாக ஒரு கட்சி எம் எல் ஏ பெரிய ஆவலாதிகள் இல்லாமல் , அதே போல் கட்சித்தலைவரின் பெரிய குற்றச்சாட்டு இல்லாமல் வெளியேறி பகுஜன் சமாஜ் கட்சி யில் இணைந்து விட்டார் ! செல்வபெருந்தகை பகுஜன் சமாஜ் கட்சி யில் .

சிவகாமி ஐ ஏ எஸ் விருப்ப ஒய்வு பெற்று மாயாவதியை போய் சந்தித்திருக்கிறார் . பகுஜன் சமாஜ் கட்சி யில் இணைந்து விட்டார் .நல்லவர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது . அதிலும் ஒரு எழுத்தாளர் அரசியலுக்கு வருவது எந்த அளவுக்கு நல்லது ..சிவகாமி க்கு அரசியல்வாதிகளுடன் ஐ ஏ எஸ் அதிகாரி என்ற அளவில் நிறைய அனுபவங்கள் இருக்கும் . அதனால் ஏதோ' புறா ஒன்று வல்லூறுகளுக்கு இடையே என்ன செய்யபோகிறது' என்ற கவலைஎல்லாம் தேவையில்லை .

மாயாவதியின் 'பிரதமர் பதவி ஆசை ' வெளிப்படையான விஷயம் . ஜெயலலிதா காதில் புகை !

என் நண்பர் காட்டுமன்னார் கோயில் எம் எல் ஏ ரவிகுமார் இப்போதைக்கு என்ன முடிவு எடுப்பார் . செல்வபெருந்தகை யின் விருப்பம் பகுஜன் சமாஜ் கட்சி யில் திருமா வளவனின் விடுதலை சிறுத்தைகள் ஐக்கியமாகி விடவேண்டும் என்பது .

தேசிய கட்சிகள் தமிழகத்தை பொறுத்தவரை சர்பத் ஸ்டால்கள் போல தான் என்பது இதுவரையிலான காட்சிகள் !

கொஞ்ச காலம் முன் பீஹாரி பஸ்வான் கட்சி தமிழகத்தில் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது .... புஸ்வானம் ஆகி விட்டது !பஸ்வானும் ,மாயாவதியும் ஒன்றா ? என்று கோபம் கொண்டு வித்தியாசங்களை விளக்குவார்கள் .

இன்று மாயாவதியின் வாக்குறுதி ஒன்று ."நாங்கள் இந்திய ஆட்சியில் அமர்ந்தால் உயர் ஜாதி ஏழைகளுக்கும் சலுகைகள் உண்டு "

..

மேதமையின் ரகசியம்

"எல்லா சொற்களும் கிட்டத்தட்ட ஒரே பொருளையே குறிக்கின்றன ."

மனதில்வை . யாரிடமும் இதை சொல்ல முனையாதே .

எனக்கு போல் உனக்கொருவன் கிடைத்தாலன்றி .

ஊமைஒன்று ஓர் ஊமை தேடிப்போகும்

சரளமாய் சம்பாஷித்துகொண்டிருக்க .

எவ்வளவு கொடுமையானது ஊமை ஒன்று

உளறுவாயன் இடம் மாட்டிகொள்வது

- "நீயுமொரு கிறுக்கு என்றால் வா " என்ற கவிதையில் தேவ தேவன்

Nov 24, 2008

நாகார்ஜுனன் ப்ளாகில் சட்டக்கல்லூரி மோதல் பற்றி உண்மையறியும் குழு அறிக்கை

சட்டக்கல்லூரி மோதல் ஏற்படுத்தியுள்ள மன உளைச்சல் பற்றி சொல்லி முடியாது . அந்த நிகழ்வு பற்றி ஊடகங்கள் செய்த சில்மிஷம் ,மொன்னையான தகவல்கள் , டெலிசெய்திகளின் பொறுப்பின்மை நெஞ்சை ரணமாக்கியது .
நாகார்ஜுனன் ப்ளாகில் உண்மைஅறியும் குழு அறிக்கை , எமது பார்வை , அதன் மீதான ஜமாலன் , ராஜன் குறை ,நாகார்ஜுனன் கருத்துக்கள் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அவசியம் படித்து பாருங்கள் .

nagarjunan.blogspot.com

ரஞ்சன்

ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .



ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார் .பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார் .
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார் .
ஏரோப்ளேன் ஓட்டுவார் !

இன்றைக்கு வரும் நடிகர்கள் தகுதி என்ன ?

ஏரோப்ளேன் ஓட்டுவது போல நடிக்கும் நடிகர்களை தான் பார்த்திருக்கிறோம் .
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில் வைஜயந்தி மாலாவின் தாயார் வசுந்திரா தேவி யுடன் .
சந்திரலேகா(1948) வில் வில்லன் .
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார் .
அந்த காலத்தில் தமிழ் நவீன இலக்கிய வாசகர் .
ஹிந்தி படங்களில் நடித்தார் .

பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார் .அஞ்சலி தேவி ஜோடி .
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா !தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா " டி எம் எஸ் பாட்டு குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார் .

இன்றைக்கு அறுபது வயதுடையவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சன் னுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்' இது பற்றி எப்போதும் சூடான விவாதம். ஒரு அறுபது வயதுக்காரர் சொன்னார் இதை !

நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில்ரஞ்சன் பேசும் ஒரு வசனம் -
" நீ சொல்றது எப்படி தெரியுமா இருக்கு ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு ! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு !"

காதல் வசனம் !!

கண்ணகி

முப்பது வருசங்களுக்கு முந்தைய மூன்று கவிதைகள் .
....................................................................


பாத சிலம்பால் பதியை இழந்தவள்
பருவச்சிலம்பை திருகி எறிந்தனள் .

- நீலமணி
.....................


சேரன் தம்பி செதுக்கிய சிலையே,
சினந்து நீ சொன்னதே தீ !
பின் முலையை பிய்த்து எறிந்ததேன் ?

- சுப்பு அரங்க நாதன்
.......................

சொற்றிறம்பாக
கற்புக்கரசியின்
ஒற்றை முலை

-  ‘பதி’

Nov 23, 2008

மீரா படமும் பாரத ரத்னா விருதும்


கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் எம் எஸ் சுப்புலக்ஷ்மி நடித்த "மீரா" படத்தின் ப்ரிவியூ பார்த்து விட்டு வெளியே வரும்போது,
சர் டி விஜயராகவாச்சாரியார் கேட்டார் : “ Now do you surrender the title ‘the nightingale of India’?”
சரோஜினி நாயுடு பதில் :“I have already done it.”

"மீரா " படம் பற்றி

இந்த படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி தவிர இன்னொரு பாரத ரத்னா
சின்ன எக்ஸ்ட்ரா ரோலில் நடித்திருக்கிறார். டி எஸ் பாலையா வின் உதவியாளராக தாடி வைத்த இளைஞர் ஒருவர் வருவார். அவர் தான் இன்னொரு பாரத ரத்னா. எம் ஜி யார்!

பாரத ரத்னா அவார்ட் பற்றி

எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின் இரண்டு வருடம் கழித்துத் தான் ஒரு மகத்தான மனிதருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது!
பி ஆர் அம்பேத்கர்!
எம்ஜியாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின்னால், மூன்று வருடம் கழித்துத் தான்
இன்னொருவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது .யார் தெரியுமா ?
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்!

No comments!






செம்பை


செம்பை வைத்யநாத பாகவதர் வாய்ப்பாட்டு அவருடைய Contemporaries மதுரை மணி ஐயர் , ஜி என் பி , அரியக்குடி ,செம்மங்குடி,முசிறி ஆகியோருடன் ஒப்பிட்டால் ரொம்ப கீழே , அவ்வளவு ஏன் இவரை அவர்களோடு ஒப்பிடவே கூடாது . அது மற்றவர்களை கௌரவப்படுத்தாது! கே.ஜெ.யேசுதாஸ் இவருடைய மாணவர் . செம்பையிடம் பெரிய விஷேசத்வம் கிடையாது .வயலின் வாசிக்க தெரிந்தவர் . ஆனால் 'கதன குதூகலம் ' ராகம் ரகு வம்ச சுதா ' பாடல் எங்கே கேட்க வாய்த்தாலும் இவர் ஞாபகம் தான் வரும் .


1966 ஆண்டு
செம்பை வைத்யநாத பாகவதர் ஜிப்பா , வேட்டி ,அங்கவஷ்தரம் அணிந்த நிலையில் கச்சேரி செய்தார் .
அடுத்த 1967 ஆண்டில் செம்பை ஜிப்பா ,வேட்டி அணிந்து கச்சேரி செய்தார் .
1968 - செம்பை கச்சேரி வேட்டி , மேலே அங்க வஸ்த்திரம் மட்டும் . ஜிப்பா மைனஸ் .
1969 … செம்பை கச்சேரிகளில் வெறும் வேட்டி மட்டுமே !

எதிர்கால 1970 செம்பை கச்சேரி பற்றி ரசிகபெருமக்களுக்கு ஒரு பதற்றம் , பயம் , எதிர்ப்பார்ப்பு ,தவிப்பு கூடி விட்டது ! எல்லோரும் நகத்தை கடித்து கொண்டு ..படபடப்புடன் !!

Nov 22, 2008

டவுன் பஸ் கண்ணப்பா

பட்டபடிப்பு முடித்திருந்த நேரம் . கோரிபாளையம் அமெரிக்கன் கல்லூரி முன் உள்ள கடைகளுக்கு முன் எப்போதும் கலகலப்பாக கூடி பேசிகொண்டிருப்போம். என் க்ளாஸ் மேட் அருண் தான் ஒரு புது நண்பன் ஒருவனை காட்டினான் . "மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் " என்ற பாடலை அந்த புது நண்பன் அழகாக பாடினான் . அருண் சொன்னான் ." மாப்பிள்ளை ! இவனோட அப்பா சினிமா நடிகராம்டா " என்றான் . அந்த நண்பனிடம் "யார் உங்க அப்பா ?" -கேட்டேன் .

'என் என் கண்ணப்பா !' - புது நண்பன் பதில்.

"அடடே 'டவுன் பஸ்'கதா நாயகன் . கே சோமு படம் . ஏ பி என் வசனம் எழுதினார் .அஞ்சலி தேவி தான் அதில் உங்க அப்பா கண்ணப்பா வுக்கு ஜோடி . இருவருக்கும் பாட்டு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே . உலகம் இது தானா துயரம் நிலை தானா' "
அந்த நண்பன் முகம் பிரகாசமாகியது .
நான் தொடர்ந்தேன் ." ''தேவகி ' படத்தில் எம் ஜி யார் மனைவி வி என் ஜானகியோடுகதாநாயகனாக கண்ணப்பா நடித்தவர் " என்று ஏனைய நண்பர்களிடமும் சொன்னேன் .
'எஸ் எஸ் ஆர் நடித்த 'தெய்வத்தின் தெய்வம் ' படத்தில் இரண்டாவது கதாநாயகன் . சிவாஜி படம் கப்பலோட்டிய தமிழனில் சிதம்பரனாருக்கு தேசாந்திர தண்டனை கொடுத்தவுடன் பைத்தியமாகி விடும் சிதம்பரனார் தம்பி . ரத்ததிலகத்தில் சாவித்திரி கணவனாக வரும் சீனாக்கார ராணுவ அதிகாரி ' இப்படி நான் அடுக்கி கொண்டே போகும்போது அந்த புது நண்பன் ( பெயர் இப்போது மறந்து விட்டது .) கண்கள் கலங்கி விட்டது .
" இவ்வளவு நாளும் நான் எங்கப்பா சினிமா நடிகர் என்று சொன்னால் யாருக்குமே புரியவில்லை . என்னை ஏளனமாக பார்த்தவர்கள் உண்டு . ' என்னமோ சொல்றான் . யாருன்னே புரியலே ' என்பார்கள் . நீங்கள் தான் சார் எங்க அப்பா பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிறீர்கள் . இப்படி நான் சொன்னவுடன் இவ்வளவு விவரமாக எங்க அப்பா பற்றி நீங்கள் தான் பேசியிருக்கிறீர்கள் ! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது .நம் வயதில் யாருக்குமே என் அப்பா பற்றி எதுவுமே தெரியவில்லை ."
கமல், ரஜினி காலம் .கண்ணப்பா பற்றி யாருக்கு தெரியும்!
அன்று வீட்டில் அவர் அப்பா என் என் கண்ணப்பா விடம் என்னை பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்லியிருக்கிறார் . கண்ணப்பா தன் வீட்டுக்கு என்னை விருந்து சாப்பிட அழைத்திருக்கிறார் . மதுரை கே கே நகரில் வீடு . அதற்கு மறுநாள் மதியம் கண்ணப்பா மகனுடன் அவர் வீட்டுக்கு போனேன் . கண்ணப்பா வுக்கு ஒரு ஆண் , ஒரு பெண் இரண்டு பிள்ளைகள் . பெண் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார் . கண்ணப்பா , அவர் மனைவி இருவரும் என்னை அன்போடு உபசரித்தார்கள் .
பழைய ஆல்பங்களை கண்ணப்பா எடுத்து காட்டினார் . எனக்கு பழைய போட்டோ ஆல்பங்கள் பார்ப்பது என்றால் கொள்ளை விருப்பம் .
ஒரு போட்டோ வில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் கண்ணப்பா , சிவாஜி கணேசனும் பன்னிரண்டு வயது சிறுவர்களாக , அதே புகைப்படத்தில் வேட்டி கட்டிய இளைஞனாக எம் என் நம்பியார் . இன்னும் "சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா "சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் . பல நடிகர்களை பார்த்து அவர்கள் பெயரை குறிப்பிட்டு நானே அடையாளம் காட்டியது கண்ணப்பா வுக்கு திகைப்பு .
கண்ணப்பா அப்போது ஸ்பெஷல் நாடகங்கள் போட்டுகொண்டிருந்தார் .

எஸ் ராஜம் ,எஸ் பாலச்சந்தர் பற்றி நாகார்ஜுனன்

'எஸ் பாலச்சந்தரின் மருமகன் வெங்கடேசன்' என்ற

R P ராஜநாயஹம் பதிவு பற்றி

நாகார்ஜுனன் said...


முன்னாள் மைலாப்பூர் வாசி என்ற முறையில் என்னிடமிருந்து சில -

எஸ். ராஜம் அபூர்வ ராகங்களில் ஸ்பெஷலிஸ்ட். மேளகர்த்தா வரிசையில் அடிக்கடி பாடப்பெறாத 31-36, 67-72 ராகங்களை இவர் பாடியதை வைத்தான் கற்கிறார்கள். இவர் அந்தக்காலத்தில் வானொலியில் பணியாற்றியபோது பாடியவை.இன்னொரு விஷயம், அபாரமான ஓவியர். பல ஆண்டுகளாகக் காவிதான் அணிகிறார். மைலாப்பூர், லஸ் புத்தகக்கடைகளில் அடிக்கடி பார்க்கலாம். சகஜமாகப்பேசுவார்.

என் தந்தையாரும் எஸ். பாலச்சந்தரும் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் சகாக்கள். எஸ். பாலச்சந்தர் கஞ்சிரா அநாயாசமாக வாசிப்பார். இவர் அப்போதே நாடகங்களில் நடித்தவர் என்று என் தந்தையார் சொல்கிறார்.

நாகார்ஜுனன்
Saturday, 22 November, 2008

நினைவில் சில கவிதை வரிகள்

மழை மீண்டும் உண்டு . வானிலை அறிவிப்பு .

மின்னலை காணும்போதெல்லாம் பிரமிளின் படிமக்கவிதை நினைவில் வந்து விடுகிறது .

"ககன பறவை நீட்டும் அலகு

கடலில் வழியும் அமிர்த தாரை "

....

சுடுகாடு போகும்போதெல்லாம் ஆத்மாநாம் கவிதை யை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை .

"இந்த மனிதக்கட்டையை எரிக்க

ஏன் மரக்கட்டையை அடுக்குரீர் ?

அது செய்த பாவம் தான் என்ன ?"

....

இருபத்தைந்து வருடத்திற்கு பின் என் காதலியை பார்த்த போது

அவள் பார்வை சொன்ன கவிதை -கல்யாண்ஜி யுடையது - அபிதா !

"நான் பழுத்திருக்கும் போது வராமல் உளுத்து போன பின் புழுகொத்த

வரும் மனம் கொத்தி நீ !"

Nov 21, 2008

எஸ் பாலச்சந்தரின் மருமகன் வெங்கடேசன்

எஸ் பாலச்சந்தர் பற்றி எல்லோருக்கும் தெரியும் . அவருடைய அண்ணன் எஸ் ராஜம் பற்றி தெரியமா ? வீணை பாலச்சந்தர் உடன் பிறந்த சகோதரர் எஸ் ராஜமும் எஸ் பாலச்சந்தரின் அக்கா எஸ் ஜெயாவும் அந்த காலத்தில் 1933 ல் "சீதா கல்யாணம் " படத்தில் ராமராகவும் சீதையாகவும் நடித்தனர் . 1943 ல் எம் கே தியாக ராஜ பாகவதர் நடித்த "சிவகவி " படத்தில் கட்டிளம் காளை எஸ் ராஜம் முருகனாக வந்து பிரமாதமாக நடித்தார் . எஸ் ராஜம் நடிப்பின் முன் எம் கே டி கூட கொஞ்சம் அமுங்கி தான் தெரிவார் . சும்மா இடைவேளைக்கு மேல் வந்து கலக்குவார் .
திருப்பூரில் எஸ் பாலச்சந்தரின் இன்னொரு சகோதரி மகன் வெங்கடேசன் தொழில் அதிபராய் இருக்கிறார் .தலைமை அரிமா சங்க முன்னாள் தலைவர் ! அரிமா சங்கத்தில் அவரை சந்தித்தேன் . "எஸ் ராஜம் இறந்து எத்தனை வருடம் இருக்கும் ?" என்று கேட்டேன் ." அவர் உயிரோடு தான் இருக்கிறார். நன்றாக இருக்கிறார் ." என்றார் . வெங்கடேசன் சொன்னார் ." என் அம்மாவை தவிர அவரோடு உடன் பிறந்த அனைவருமே சினிமாவில் நடித்தார்கள் !"
எஸ் ராஜம் பற்றி வெங்கடேசன் இன்று சொன்ன சுவாரசியமான தகவல் . "தொண்ணூறு வயதாகிறது .இரண்டு வருடம் முன் வரை டி வி எஸ் 50 ஓட்டுவார் !"
இங்கே கோவை சூலூரில் ஒரு அரிமா உறுப்பினர் வீட்டு திருமண விஷேசம் சென்ற ஆண்டில் சுதந்திர தினத்தன்று நடந்தது . சஜூ டேவிட் என்ற உற்சாகமான அந்த நண்பரின் மகள் திருமணத்தை ஒட்டி ஒரு விருந்து . அதில் கலந்து கொள்ள வெங்கடேசன் அவர்களின் காரில் தான் சென்றேன் .
நான் சீர்காழியின் " தேவன் கோயில் மணியோசை " எஸ் பி பி யின் "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா " சீர்காழியின் மற்றொரு பாடல் " ஓடம் நதியினிலே !ஒருத்தி மட்டும் கரையினிலே " ஆகிய பாடல்களை ஆர்க்க்க்ஸ்ட்ராவில் பாடினேன் .
வெங்கடேசன் " கம்பன் ஏமாந்தான் " பாடலை பாடினார் . "நிலாவே வா நில்லாமல் வா" பாடலையும் பாடினார் .
....
பொதுவாக நான் பி பி ஸ்ரீநிவாஸ் ,கிஷோர் குமார் பாடல்கள் பாடத்தான் மிகவும் விரும்புவேன் .
கல்லூரி காலங்களில் இந்த இருவரின் பாடல்கள் விரும்பி பாடுவேன் .
பி பி எஸ் பாடலில் " காதல் நிலவே !கண்மணி ராதா !!நிம்மதியாக தூங்கு " பாடல் கேட்கும்போது இப்போது கூட என் ஞாபகம் தான் வருவதாக என் நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள் .
கிஷோர் குமார் " கில் தே ஹைன் குள் யாஹான் " சல்தே சல்தே மேரே ஏ கீத் யாக் ரே ஹெனா , கபி அல்விதனா கே ஹே நா " ரூப் தேரா மஸ்தானா " இன்னும் பல பாடல்கள் பாடுவேன் .
பாடுன வாயும் ஆடுன காலும் நிக்காது . இப்பவும் இசைக்குழு இருந்தால் சொந்த பந்தங்கள் விஷேசங்களில் பாடி விடுவேன் !

முயலின் பார்வையில்

ரொம்ப வருடம் முன் கணையாழியில் படித்த தத்துவ கதை !
ஒரு ஆள் தன் வீட்டில் முயல்கள் வளர்க்கிறார் . அதில் துரு துரு முயல் ஒன்றை ஒரு விதமாக பழக்குகிறார் . அது மூன்று குட்டிகரணம் போடவேண்டும் .உடனே இவர் ஒரு காரட் அதற்கு தருவார் . வீட்டில் விருந்தாளி யாராவது வரும்போது அவர்களுக்கு தன் கொல்லையில் வளர்க்கப்படும் முயல்களை காட்டும்போது இந்த குறிப்பிட்ட முயலை கூப்பிட்டு அது இவர் முன் மூன்று குட்டிகரணம் போடுவதை காட்டி விருந்தாளிகள் ஆச்சரியப்ப்படும்போதே குட்டிகரணத்திற்கு ஊக்க போனசாக காரட் கொடுப்பார் .
அந்த முயல் தன் சக முயல்களிடம் சொன்னதாம் " இந்த ஆள் ரொம்ப தமாசான ஆள் . வேடிக்கையை பார் . நான் இப்போ குட்டிகரணம் போடுறேன் .இவன் ஓடி வந்து காரட் கொடுப்பான் பார்."
மூன்று குட்டிகரணம் போட்டது முயல் . ஓடி வந்து அவர் காரட் கொடுத்தார் . ஏனைய முயல்கள் அந்த ஆள் செய்யும் சர்க்கஸை மிகவும் ரசித்து மகிழ்வது வழக்கமாகியது .

Nov 20, 2008

ஸஹஸ்ர ராம ஹிருதய ஏக பரத ஹிருதய நாஸ்தி

ஸஹஸ்ர ராம ஹிருதய

ஏக பரத ஹிருதய நாஸ்தி:

ஒரு லா ச ரா கதை . படித்து ரொம்ப வருஷம் இருக்கும் . எப்படியும் இருபது வருடத்திற்கு மேல் . அந்த கதை சுவாரசியமானது . அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது . என் பாணியில் இதை இங்கே நினைவிலிருந்து எழுதுகிறேன் .

ஸ்ரீ ராமர் , ஹனுமன் இருவரும் அவர்களின் Retired Life ல் பேசிகொள்கிறார்கள்!

Nostalgia !

“It’s very funny you and me ending up here!”

இப்படித்தானே ராமர் ஆரம்பித்திருப்பார் !

பழைய நினைவுகளை அசை போடும் தொன்ம நாயகர்கள் .

ஸ்ரீ ராமர் பெருமூச்சு விட்ட படி சொல்கிறார் : போய்யா ! என்ன பெரிய ராமாவதாரம் . "

அனுமனுக்கு வியப்பு . அமைதியாக ராமனே சொல்லட்டும் என ஏறெடுத்து பார்க்கிறார் .

ஸ்ரீராமன் தொடர்கிறார் " குகன் தான் என்ன அழகாக Declare செய்தான் . பட்டத்தை துறந்து கானகம் சென்ற என்னையும் லக்ஷ்மணனையும் சீதை

யையும் குகன் வரவேற்றான் .

அந்த நேரத்தில் என் தம்பி பரதன் படையோடு வருகிறான் என்றறிய வந்த போது துடித்து ' பட்டத்தை அவனுக்கு விட்டுகொடுத்த அண்ணனை கானகத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் விரட்டி போரிட வருகிறான் பரதன் ' -இப்படி எண்ணி அவனை உண்டு இல்லை என்று பண்ணி விட போவதாக குகன் சவால் விட்டான் . பரதன் வந்து என் காலில் விழுந்து தன் அன்னை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ' நீ தான் மன்னன் . வா நாட்டுக்கு ' என்கிறான் . குகன் அசந்து போய் நின்றான் . நான் தந்தை கட்டளையை மீறாமல் மறுத்ததும் " உன் பாத ரட்சைகளை தா ! அதை சிம்மாசனத்தில் வைத்து கொள்கிறேன் ." கேட்டு வாங்கினான் பரதன் .

அப்போது தான் பரதன் அவன் மேன்மை பண்பால் ஸ்ரீராமாவதாரத்தை அற்பமாக்கி விட்டான் . குகன் தான் தன்னை மறந்து பரவசமாய் Declare செய்தான் .

"ஆயிரம் ராமர் உனக்கு ஈடாவரோ "

போப்பா ! என்ன ராமாவதாரம் . பரதன் தான் தவிடு பொடியாக்கி விட்டானே !!

ஸஹஸ்ர ராம ஹிருதய

ஏக பாரத ஹிருதய நாஸ்தி :

பூர்வ ஜென்ம வாசனை

எங்கோ படித்த நினைவு ! சீதை பற்றி இரண்டு வரிகள் !" சேறு தெளித்த தாமரை போல சீதை பிரகாசமாகவும் இருந்தாள். சோகமாகவும் இருந்தாள் ."
கவிதை தானா இது ? என்ன அழகான சீதை பற்றிய ஓவிய சித்திரம் !வார்த்தைகள் இப்படி சில நேரம் சித்திரமாகின்ற அபூர்வம் நிகழ்வதுண்டு .

....

கோகுலத்தில் யசோதை சோறு ஊட்டி கொண்டு குழந்தைகள் பலராமனுக்கும் ,கிருஷ்ணனுக்கும் ராமாயணம் கதை சொல்லிகொண்டிருக்கிறாள் . பலராமனுக்கு நான்கு வயது . கிருஷ்ணனுக்கு மூன்று வயது . " ராவணன் சீதையை தூக்கி செல்கிறான் . சீதை கதறுகிறாள் ." இப்படி யசோதை சொல்லிகொண்டிருக்கும்போது பாலகிருஷ்ணன் ஆவேசமாக எழுந்து நின்று உணர்ச்சி மேலிட வெடிக்கிறான் !" லக்ஷ்மணா ! என் வில் எங்கே ? அம்பு எங்கே ? "

யசோதை க்கு குழந்தையை சமாதானப்படுத்தி ஆவேசம் குறைய செய்து மீண்டும் சோறூட்ட நீண்ட நேரமாகிறது ..

....

இது கம்ப ராமாயணத்தில் !
அண்ணனுடன் காட்டுக்கு அனுப்பு முன்
" நீ முன்னம் முடி " என சுமித்திரை தான் பெற்ற பிள்ளை லக்ஷ்மணனிடம் சொன்னாளாம் .
'உன் அண்ணனுக்கு உயிராபத்து என்றால் அவன் இறக்கு முன் நீ செத்து விடு '

'ராமன் இறந்தான் என்ற செய்தி வரும் முன் ராமனை காக்கும் போராட்டத்தில் லக்ஷ்மணன் இறந்துவிட்டான் என்ற செய்தி தான் என் காதிற்கு முதலில் வர வேண்டும் .'

லக்ஷ்மனனின் தாய் இப்படி சொல்கிறாள் .

Nov 19, 2008

Something is rotten in the State of Denmark.

Something is rotten in the State of Denmark.
- Shakespeare in Hamlet.
நிறைய விசாரிப்புகள் எனக்கு வருகின்றன . தொலை பேசியிலும் விசாரிப்புகள் .
"சாரு நிவேதிதா வுக்கும் அவர் மனைவிக்கும் என்ன ஆயிற்று ."
நானே சற்று நிம்மதியிழந்து தான் இருந்தேன் .
சென்ற மாதம் முப்பதாம் தேதி திருப்பூரில் வீடு மாற்றினேன் . பொதுவாக வீடு மாற்றும் நேரம் மிகவும் நிலை குழைந்து குன்றி போய் விடுவேன் . இன்னும் நிலைப்படவில்லை .
சாருவின் ப்ளாக் மன உளைச்சலை அதிகமாக்கி விட்டது .
இன்று சாருவிடம் தொலை பேசினேன் .“Take Care” என்றேன் .

பெருவங்கியம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் பெருவங்கியம் என்று ஒரு வாத்தியத்திற்கு பெயர் .
அது தான் நாகஸ்வரம் !
நாகஸ்வரம் ,தவில் இரண்டும் ராட்சச வாத்தியம் .அசாத்திய திறமை யுடன் கையாளவேண்டிய இசைக்கருவிகள் . அனைத்து இசைக்கருவிகளையும் கையாண்ட பிராம்மணர்கள் இதை கேட்டு ரசிக்க மட்டும் செய்தார்கள் . இசை வேளாளர்கள் தான் நாகஸ்வரம் மீது கண் வைத்தார்கள் . காருகுறிச்சி தெற்கே பிறந்த பூ கட்டுகிற பண்டார ஜாதி . ஸ்ரீ ரங்கம் ஷேக் சின்ன மௌலானா முஸ்லீம் . இவர் வீட்டில் இந்து தெய்வங்களின் படங்கள் இருக்கும் .
இளைய ராஜா ஒரு முறை சொன்னார் 'திரைஇசைக்குழுவில் 81இசைக்கருவிகள் உண்டு . ஆனால் அவற்றில் ஒன்று கூட நாகஸ்வரத்துக்கு ஈடாகாது .'
ஷெனாய் பிஷ்மில்லா கான் நாகஸ்வரத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் . நாகஸ்வரத்தில் வாசிக்கக்கூடிய பல ராகங்கள் , சங்கதிகள் ஷெனாய் யில் வாசிக்கவே முடியாது என சொல்வார் .
காரு குறிச்சியின் சகானா வாசிப்பு கேட்கும்போது ஒரு தடவை எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா' என ஒரு நிறைவு ஏற்பட்டது .

நாகஸ்வர மேதை திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை 80வயது வரை வாழ்ந்தவர் . அவரது தொண்ணூறாவது வயது நினைவு நாள் சென்னையில் கொண்டாடப்பட்ட போது , செம்மங்குடி பேசினார் .
" நான் திருவிடை மருதூரில் குருகுலத்தில் இருந்த போது முதல் முதலாக திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை அவர்களை பார்த்தேன் . அப்போது அவருககு ஒரு 16,17 வயதிருக்கும் . ஆண் மோகினி போல் இருப்பார் !"
.........

ஒரு விஷயம் .
நாகஸ்வரம் வாசிப்பவர் முன் நின்று ஊறுகாய் சாப்பிடக்கூடாது .வித்வான் அப்புறம் ரொம்ப சிரமப்படுவார் . சாமி புறப்பாடு ,கல்யாண வீடுகளில் சில குறும்புக்கார சிறுவர்கள் நாகஸ்வர வித்வான் வாசிக்கும் போது அவர் முன் ஊறுகாய் பாக்கெட்டை சப்பிகொண்டு நிற்பார்கள் .

ராகங்கள் மீதான நம்பிக்கைகள் !

ஆஹிர் ராகம் அன்னலக்ஷ்மிக்கு ஆகாத ராகம் . இதை பாடினால் போஜனம் கிடைக்காது என்று பூர்வ கால நம்பிக்கை .
ரஞ்சனி ராகத்தில் பாடினால் குஷ்டம் வரும் . ஆனால் அந்த காலத்தில் ஆணழகன் ஜி என் பி பயப்படாமல் தியாகையரின் துர்மார்கச்சரா அனுபவித்து பாடுவார் .
வராளி ராகம் குருகுல முறையில் பயிலக்கூடாது . குரு சிஷ்ய உறவு முறிந்து விடுமாம் . கா வா வா ...
அமிர்த வர்ஷினி ராகம் பாடினால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம் .
உண்மையென்றால் வானம் பார்த்த கரிசல் பூமியை எல்லாம் விளாத்திகுளம் சுவாமிகள் நஞ்சை நிலமாக்கிஇருப்பார் . கரிசல் கதைகள் என்று தமிழ் இலக்கியம் பார்த்திருக்காது .
ஹிந்தோளம் ராகம் நெஞ்சு வலிக்கு நல்லது . ஆனந்த பைரவி ராகம் ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் .பைரவி மரணப்படுக்கையில் இருப்பவரையும் எழுப்பி விடும் .

You can see a LIE in between Every BeLIEf

Nov 18, 2008

ஒபாமா ஓசான்னா !ஓசான்னா !!

ஒபாமா பற்றி உலகமே ஏதோ ரட்சகரை கண்டடைந்த திருப்தி யில் களிக்கிறது .எல்லோரும் கையில் குருத்து ஏந்தி ஓசான்னாபாடி ஜெயம் கொண்டாடுகிறார்கள் . வருங்காலம் சிலுவையுடன் ஒபாமாவுக்கு காத்திருக்கிறது என்று தான் அர்த்தம் .

'பழைய கருப்பன் கருப்பனே ' இந்த பழமொழி ஞாபகம் வருகிறது . ஒபாமா கறுப்பர் என கிண்டல் செய்கிறேன் என நினைக்க கூடாது . அமெரிக்க அதிபர் பதவியை பற்றி குறிப்பிடுகிறேன். அப்பா புஷ், கிளிண்டன் , பிள்ளை புஷ் எல்லோரும் அமெரிக்க ஜனாதிபதியாக கோலோச்சி " பழைய கருப்பன் கருப்பனே !" என்று அதற்கு முன் வந்த அமெரிக்க அதிபர்களை கௌரவித்து முக்தியடைந்து விட்டார்கள் .

வெற்றி பெற்றவுடன் மகளுக்கு செல்ல நாய் தேடி கண்டு பிடித்து விட்டார் !

ஒபாமா வெற்றி பெற்றவுடன் தன் செல்ல மகளுக்கு நல்லதொரு செல்ல நாய் (மிக உயர்ந்த ஜாதியில் ,உடம்பில் ரோமமே இலாமல் )தேடி கண்டடைந்து விட்டார்!!

ஒசாமா தான் தன் எதிரி என்பதையும் அறிவித்து விட்டார் . நல்ல இருமை எதிர்வு !

ஒபாமா - ஒசாமா !!

அமர்த்தியா சென் மிகவும் மகிழ்ந்து ஒபாமா வெற்றியை கொண்டாடுகிறார் என்பதால் சந்தோசம் .

அமெரிக்க ஏகாதிபத்யம் மீதான வெறுப்பை ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒபாமாவின் வெற்றி பின்னுக்கு தள்ளி விட்டது .பழைய சிவப்பர்களிடமிருந்து தன்னை எப்படி வேறு படுத்தி காட்ட போகிறார் ?

ரத்த உறவு - யூமா வாசுகி


க .நா .சு சொல்வார் " ஷேக்ஸ்பியர் பற்றிய நூலை படிப்பதற்கு பதிலாக ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு காட்சியை படித்து பார்ப்பது தான் மேலானது "
இது தான் இப்போதுள்ள செக்கு மாட்டு விமர்சகங்களுக்கு சரியான சூடு! ஒரு புத்தகம் கிடைத்தால் உடனே ,உடனே அதை விமர்சனம் செய்ய கிளம்பிடுரான்கள் .வள வள வள ......

ஆறு வருடம் முன் படித்த நாவல் "ரத்த உறவு ". Fascism in Family Set-up பற்றி அதிகபட்சமாக இந்த நாவலுக்கு மேல்,இதற்கு மேல் ஒன்றுமில்லை. இந்த நாவலை படிக்கும் போது அடக்க முடியாமல் நான் கண்ணீர் விட்டு அழுதேன்.

யூமா வாசுகி எழுதிய நாவல். அந்த சிறுவன், ( அந்த சிறுவன் யூமா தான் என்பது என் யூகம் )அவனுடைய அம்மா , அக்கா .. இப்போது நினைத்தாலும் அழுகை வருகிறது .
தமிழினி வெளியீடு.

அதில் வருகிற அப்பத்தா கிழவி , அப்பா ....
அப்பப்பா பயங்கரம்!



We keep recreating the same fucked up world with the same fucked up families, wherein to we’re born, never being able to escape “the sins of the fathers."
Family is Fascism.
 


விபரீத முடிச்சுகள் ஆகி கழுத்தை இருக்கும் ரத்த உறவுகள்.

....................

Nov 17, 2008

'அண்டி உறைப்பு' ராஜநாயஹம்

“ Individual Choice ” பதிவு பற்றி

பாரதி மணி said...
சில உண்மைகளையும், தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், ஒரு தைரியம் வேண்டும்.அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு’ உங்களிடம் நிறையவே இருக்கிறது, ராஜநாயஹம்! பாராட்டுக்கள்!பாரதி மணி
Monday, 17 November, 2008

Nov 16, 2008

மக்கள் செல்வாக்கு மிக்க நடிகர்கள் !

எம்ஜியார் ஏழைகளை நேசித்ததில் ஒரு வேஷம் இருந்தது .
வி பி சிந்தன் கத்தி குத்து பட்டு மருத்துவமனையில் இருந்த போது பார்க்க போன
எம்ஜியார் ' நீ எல்லாம் என்ன கம்யூனிஷ்ட் . உன்னை குத்தியிருக்காங்கே . இந்நேரம் நூறு குடிசை எரிந்திருக்க வேண்டாமா ' என்று கேட்டாராம் . சினிமாவில் ' மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா ?' என்று உருக்கமாக பாடியவர் .
இதை சேலத்தில் நான் பேசிய போது தோழர்கள் கேட்டார்கள் . ' அதற்கு சிந்தன் என்ன பதில் சொன்னார் '
சிந்தன் என்ன பதில் சொல்லியிருக்க முடியும் . எம்ஜியார் முன் கல்யாண சுந்தரம் ,பால தண்டாயுத பாணி போன்ற மேல் மூடிகள் அப்போது கை கட்டி நின்றார்கள் .
பால தண்டாயுதபாணி அப்போது ஒரு பொது கூட்டத்தில் எம்ஜியாரை குறிப்பிடும்போது ' புரட்சி தலைவர் ' என்று சொன்னார் .மேடையில் இருந்த ஜெயகாந்தன் வேதனையுடன் பேசினார் .' பாலா , நீயா பேசுவது !யாரை புரட்சி தலைவர் என்கிறாய் . நீ மார்க்சை புரட்சி தலைவர் என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன் . போயும் போயும் இந்த எம்ஜியாரை புரட்சி தலைவர் என்கிறாயே ."

ரஜினி காந்த் தன் வேலைகாரர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என கேள்விபட்டிருக்கிறேன் ."வேலைக்காரன் " படத்தின் நாயகன் . அத்வானி,துக்ளக் சோ சகிதம் ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி தாங்கி கொண்டிருக்கிறார்கள் .

இப்போது ஒரு செய்தி படித்தேன் . இளைய தளபதி விஜய் வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர் வீட்டு வேலைக்காரர்கள் முகத்தில் முழிக்க மாட்டாராம் . அவர்கள் அப்போது ஒளிந்து கொள்ள வேண்டுமாம் .சகுனத்தடை ! இன்றைக்கு ரஜினியை விட விஜய்க்கு செல்வாக்கு அதிகம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது .
இன்று விஜய் ரசிகர்கள் திருப்பூரில் உண்ணாவிரதமோ , போராட்டமோ ..பந்தல் போட்டு உட்க்கார்ந்திருக்கிறார்கள் .'போக்கிரி' அரசியல் முஸ்தீபு !

நேற்று பேப்பரா ,இன்று பேப்பரா தினமலரில் சரத் குமாரின் பேச்சு ஒன்றை கட்டம் கட்டி போட்டிருந்தார்கள் .
"குடும்ப அரசியல் எனக்கு பிடிக்காது .ஆனால் தொண்டர்கள் ரொம்ப வற்புறுத்துவதால் ராதிகாவுக்கு கட்சி பதவி கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன் ."

Every Hero becomes a bore at last!

"விளக்கேற்றியவள்" ஆதித்தன்

நேற்று இரவு ஒன்பது மணிக்கு மேல் திருப்பூர் சென்னை சில்க்ஸ் அருகில் ஒரு கடையில் சின்ன பர்ச்சேஸ் முடித்து விட்டு இறங்கும் போது எதிரே இருந்த சின்ன ஜவுளிகடையில் ரேடியோ பாட்டு கேட்டது .
"கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு " டிஎம் எஸ் பாட்டு . 'விளக்கேற்றியவள் ' படத்தில் ஆதித்யன் என்ற நடிகர் கதாநாயகனாய் நடித்த பாட்டு.
சினிமா என்ற மாய உலகம் சிதைத்த நடிகர்களில் ஆதித்தனும் ஒருவர்.

பதினோரு வருடம் முன் இவர் காரைக்கால் பி எஸ் ஆர் சினிமா கொட்டகையில் டிக்கெட் கிழித்து கொடுத்துகொண்டிருந்தார் . இப்போது என்ன செய்கிறார் . இருக்கிறாரா ?
சிட்டாடல் அறிமுக நடிகர்கள் ஆனந்தன் (பிரகாஷ் ராஜ் மாமனார் ), ஜெய் சங்கர் , ஆதித்தன் ஆகியோர் . ஆனந்தன் படு செயற்கையான மூன்றாந்தர நடிகர் . நல்ல பிரபலமாகி பின்னால் ரொம்ப கஷ்டப்பட்டார் . டிஸ்கோ சாந்தி சம்பாரித்த பின் தான் சாகிற நேரத்தில் வழமை யை பார்த்தார் .
ஜெய் சங்கர் ஏராளமான டப்பா படங்களில் நடித்தே நிறைய சம்பாரித்தவர்.சினிமாப்படம் போரடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படங்களால் தான தெரிய வந்தது! 'குழந்தையும் தெய்வமும் ' 'பட்டணத்தில் பூதம் ' படங்களில் இவர் இருந்தார் . அந்த படங்களின் தரத்திற்கு நாகேஷ் தான் காரணம் .
பெயரும் தெரியாமல் ,காசும் பார்க்காமல் கடைசியில் தியேட் டரில் டிக்கெட் கொடுப்பது , கிழிப்பது , புரொஜெக்டரை ஆபரேட் பண்ணுவது என்று வறுமையை முழுமையாக அனுபவித்தவர் ஆதித்தன் . 'விளக்கேற்றியவள்' 1964படம்ஜோசப் தளியத் படம் . இதில் 'கத்தியை தீட்டாதே , உந்தன் புத்தியை தீட்டு , கண்ணியம் தவறாதே அதிலே கடமையை காட்டு ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு " எம்ஜியார் பாணியில் புத்தி சொல்லி பாடிய ஆதித்யன் அதே 1964 வருடத்தில் வெளி வந்த தேவர் தயாரித்த " தாயும் மகளும் " என்ற படத்திலும் கதாநாயகன் !அடுத்து வில்லனுக்கு அடியாளாக 'காதல் படுத்தும் பாடு ' ,கொஞ்சம் காலம் கழித்து எம்ஜியாரின் படம் 'தனி பிறவி ' படத்தில் சின்ன வேடம் . உணர்ச்சியை காட்ட தெரியாத  நடிகர் ஆதித்தன் ! திரையுலகம் இவருக்கு அன்னியமானத்தில் ஆச்சரியம் ,,வருத்தம் ஒன்றும் இல்லை .

“Dr.Brodie’s Report”

போர்ஹே எழுதிய கதை “Dr.Brodie’s Report”
எஸ் ராமகிருஷ்ணனின் ' பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ' அருமையான சிறுகதை . அதை படிக்கும் போது போர்ஹே யின் டாக்டர் ப்ராடி யின் அறிக்கை கதை ஞாபகம் வந்தது. உடனே நான் எஸ் ராமகிருஷ்ணன் கதை காப்பி என சொல்வதாக நினைக்கவேண்டாம் . Inspiration ஆக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் . ஒரு நல்ல கதையை படிக்கையில் இன்னொரு கதை ஞாபகம் வருவது இயல்பானது .ஏனென்றால் எஸ் ரா வின் கதை உலகத்தரமானது . அற்புதமானது. உயிர்மையில் சென்ற ஆண்டு வெளி வந்த 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ' படிக்காதவர்கள் அவசியம் படிக்கவேண்டும் .

“Dr.Brodie’s Report” கதையில் வரும் யாஹூ இன பழங்குடி மக்கள் பழங்குடிக்கே உரிய நம்பிக்கை பல கொண்டவர்கள் .
பில்லி சூனியக்காரர்கள் விரும்பினால் யாரையும் கடல் ஆமைகளாக , எறும்புகளாக மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் .யாஹூக்கள் உறுதியாக நம்பினார்கள் .
இதை பிராடி நம்ப மறுக்கும் போது ஒருவன்உடனே பரபரப்பாக தேடி அவருக்கு ஒரு எறும்பு புற்றை காட்டுவான். ஏதோ அது தான் பிராடி நம்புவதற்கு ஆதாரம் நிரூபணம் என்பதாக !

போர்ஹே சொற்ப கதைகள் தான் எழுதினார் .ஒரு 24,25 கதைகள் இருக்கலாம் .பெரும்பாலும் பேச்சில் தான் காலத்தை வீணடித்தார் . ஆனால் போர்ஹே யின் எழுத்து சாதனை பற்றி பேசிகொண்டே இருக்கலாம் .போர்ஹே பற்றி எழுதிகொண்டே இருக்கலாம் .

திருப்பாவை உற்சவத்தில் வியாக்யானங்கள்

ஆண்டாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் ஆண்டு தோறும் நடக்கும் . வியாக்யானம் ,கச்சேரி அமர்க்களப்படும் . கல்யாணபுரம் ஆராவமுது அய்யங்கார்தான் மேற்பார்வை .

வ்யாக்யானங்களில் கேட்ட விஷயம் இரண்டு கீழே ;

"வசுதேவர் எட்டாவது குழந்தை கிருஷ்ணனை சிறையிலிருந்து தூக்கி கொண்டு தலையில் ஒரு கூடை யில் வைத்துதுணியால் மூடி யமுனை நதி வழியாக பிருந்தாவனத்திற்கு நந்தகோபன் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார் . நல்ல மழை .வசு தேவர் மிரண்டு விடுகிறார் . கூடையின் மேல் தன் கைகளையும் காபந்தாக வைத்துகொள்கிறார் .மழை மேலும் மேலும் வழுக்கிறது . இவருடைய கழுத்து வரை வெள்ளம் . யமுனையை தாண்டிய நிலையில் கழுத்து வரை வெள்ளம் . இன்னும் பெய்தால் குழந்தை கதி என்னாவது .'பகவானே 'என்று கதறுகிறார் . உடனே குழந்தை கிருஷ்ணன் தன் பாதங்களை துணிக்கு வெளியே கூடையில் நீட்டுகிறான் .' அப்பாடா பாத தரிசனம் கிடைத்து விட்டது !திருப்தி !!' என்று மழை உடனே நின்று விடுகிறது.வெள்ளம் வடிந்து விடுகிறது . குழந்தை பாத தரிசனத்திற்கு வேண்டி தான் மழை கிடந்து தவித்து பொழிந்திருக்கிறது.வெள்ளமும் தவித்திருகிறது "

......

இளைஞன் கிருஷ்ணன் தனித்து நடந்து செல்கிறான். இந்த பிறவியில் அவன் சாதிக்க வேண்டியவை பற்றிய தியானத்துடன் . Angels whisper to a Man when he goes for a walk!

வழியில் ஒரு அபூர்வ அனுபவம் ! அனுமார் தான் சிரஞ்சீவி ஆயிற்றே ! வழியில் பழைய நினைவுகளில் மூழ்கிய நிலையில் அவர் நடந்து வந்து கொண்டிருக்கிறார் . கிருஷ்ணனுக்கு தன் சென்ற பிறவியின் உத்தம தொண்டனை ,அனுமானை பார்த்தவுடன் சிரிப்பு.. அவரிடம் " என்னை கும்பிடு .வணங்கு " என்று சொல்கிறார் . " நான் எதற்கு உம்மை தொழவேண்டும் ." அனுமார் திருப்பி கேட்கிறார் .

'என்ன? என்னை தெரியவில்லையா !'

'கொஞ்சம் தெரிந்த ஆள் போல் தான் தெரிகிறது . ஆனால் உம்மை கும்பிட வேண்டும் என்று நீர் சொல்வது தான் எனக்கு அபத்தமாக தோன்றுகிறது .கும்பிட வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை '

கிருஷ்ணர் பரவசத்துடன் ' நான் தான் சென்ற யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திரன் ! உன் அருமை தலைவனாக அப்போது ராமனாக அவதரித்தவன் !!'

அனுமார் கேட்டாராம் " நீர் தான் என் ஸ்ரீ ராமன் என்றால் வில் எங்கே ? ஜடை எங்கே ?"

மறந்தும் புறம் தொழாத அனுமன் !

Individual Choice

'என்னுடைய பிராமண நேசம் உறுதியானது ' என்ற என் வார்த்தைகள் மீண்டும் பல கோபமான கமன்ட்களுக்கு வழிவகுத்து அரசியலுக்குள் என்னை இழுத்து புரட்டிபார்க்கிறது .

ஆதவனின் ' அன்னை வடிவமடா ' சிறுகதை படித்து பாருங்கள் .

அதோடு ஒரு இனமே கொடூரமானது என்று பாசிசம் பேசுகிற மனிதர்களுடன் நான் என்றும் உடன்படவே மாட்டேன் என்பதைத்தான் என் பிராமண நேசம் மூலம் நான் பகீரங்கமாக பிரகடனப்படுத்துகிறேன். யூத இனத்தின் மீது ஹிட்லர் காட்டிய கொடிய வெறுப்பை தான் ' பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானை முதலில் அடி ' என்று திராவிட சித்தாந்திகள் முன் வைத்தீர்கள் .

தலித்களுக்கு அவமானம் , புறக்கணிப்பு , கொடுமை எல்லாவற்றையும் கடந்த நூறு வருடங்களில் நிகழ்த்தி காட்டியது பிற்படுத்த வகுப்பை சார்ந்த ஜாதி இந்துக்கள் தான் என்பதை அனைவரும் அறிவோம் . இந்த ஜாதி இந்துக்கள் தான் அனைத்து திராவிட கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்தார்கள் .
தோழர் ஜீவா சொன்னார் " பாரதி அமுத இலக்கியம் ! பாரதி தாசன் நச்சு இலக்கியம்!! " ஐம்பது வருடம் முன் அமெரிக்கன் கல்லூரி இலக்கிய கூட்டம் ஒன்றில் !
பாரதி துவங்கி குபரா , பிச்சமூர்த்தி , மௌனி , க நா சு , சிட்டி , சி சு செல்லப்பா , லா ச ரா , தி .ஜானகி ராமன் , கரிச்சான் குஞ்சு ,சுந்தர ராமசாமி , நகுலன் ,அசோக மித்திரன் , இந்திரா பார்த்த சாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள் .
Great writers are the Saints for the godless!

ஒரு வேதனை பாருங்கள் . ராஜாஜி பற்றிய ஒரு Folkloreபதிவு ஜாதி பிரச்சனை யாகி விட்டது . இன துவேச பாசிச ஓநாய்கள் ஊளை தான் இதற்கு காரணம் . ஒற்றை பரிமாணத்தில் பார்க்கும் கொக்குகள் ! கொக்குக்கு ஒரு புத்தி !!

ஒரு முறை திருச்சியில் 'ந .பிச்ச மூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும் ' நூல் பற்றி கருத்தரங்கம் . நான் தான் சுந்தர ராம சாமி எழுதிய இந்த புத்தகம் பற்றி பேசுவதாக ஏற்பாடு.

ஒரு பேராசிரியன் என் உரை ஆரம்பிக்கு முன் ' ந பிச்ச மூர்த்தி நாலாந்தரமான எழுத்தாளர் . புதுமைப்பித்தன் தான் பெரிய எழுத்தாளர் .ந பிச்சமூர்த்திபற்றியெல்லாம் சுந்தர ராமசாமி ஒரு புத்தகம் எழுத வேண்டுமா ?' என்று ஊளை இட்டான் .

இந்த பேச்சில் உள்ள அராஜகம் வெளிப்படையானது . புதுமைப்பித்தன் எழுத்து எனக்கும் மிகவும் மரியாதைக்குரிய விஷயம் . ஆனால் பிச்ச மூர்த்தி என்ற கலைஞனை காரணமே சொல்லாமல் நிர்த்தாட்சண்யமாக பண்டிதன் ஒருவன் பேட்டை ரௌடி போல தூக்கி வீசியதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவனுக்கு குளிர் விட்டு துளிர் விட்டு போகும் .

நான் ஆரம்பித்தேன் " வெங்கட் சாமிநாதன் சொல்வார் -' நான் மதிக்கும் ஒன்றிரெண்டு எழுத்தாளர்களில் ந பிச்ச மூர்த்தி முதலாமவர் . ' இந்த வாக்கியம் மிகவும் சிலாக்கியமானது. மீண்டும் அவரது வார்த்தைகளை அசை போடுங்கள் .
க நா சு எப்போதும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிறுகதை சாதனையாளர்களாக புதுமைப்பித்தன் ,மௌனி , கு .ப .ரா, ந .பிச்சமூர்த்தி நால்வரையும் குறிப்பிடுவார் .
லா. ச .ரா சுபமங்களா பேட்டியில் கேள்வி " உங்களை கவர்ந்த ,பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார் ?
லா.ச .ரா பதில் " அந்த காலத்தில் ஒருத்தர் இருந்தார் .நா . பிச்சமூர்த்தி . ரொம்ப விரும்பி படிச்சேன் .ஆரம்ப காலத்திலிருந்து இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவே இல்லை ! "
நான் சொல்கிறேன் . 'கபோதி' ,' காவல் ' 'அடகு 'போன்ற பிச்ச மூர்த்தி யின் கதைகள் புதுமை பித்தனின் எந்த கதைக்கும் சவாலானவை . தனிப்பட்ட முறையில் எனக்கு ந பிச்ச மூர்த்தியின் மீது புதுமைபித்தனை விட அபிமானம் ,மரியாதை உண்டு " என்றேன் .சில நேரம் அசிங்கமான உளறல்களுக்கு இப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கிறது .

இப்படி நான் சொன்னவுடன் அந்த 'தமிழ் பேராசிறியவன்' கொந்தளித்து எழுந்து 'என்னை அவமானப்படுத்துவதற்காக இவர் திட்டம் போட்டு இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிறார். ' என மீண்டும் மீண்டும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு ன்னு ஆட ஆரம்பித்தான் . நான் பேசியதில் பிச்சமூர்த்தியை தூக்கி பிடித்ததில் இவனுக்கு என்ன அவமானம் . அது தான் பண்டித திமிர் . முறையாக தரவுகளை வைக்க போகிறேன் என்பதை புரிந்து கொண்டவுடன் அவனுடைய பண்டித்யத்துக்கு அவமானம் !

Individual Choice என்று ஒன்று எனக்கு இருக்கிறதல்லவா ? அவன் நிர்த்தாட்சண்யமாக சுந்தர ராமசாமியை அவமானப்படுத்தி ந பிச்சமூர்த்தியை தூக்கி ஒட்டு மொத்தமாக கடாசும்போது ஒரு கலைஞனை நான் தூக்கி பிடிக்க எனக்கு உரிமை இல்லையா ? அதுவும் நான் வசமாக வெங்கட் சாமிநாதனை,க நா சு , லாசரா ஆகியோரை துணைக்கு கூப்பிடவும் அவன் திகைத்து போய் அசிங்கமாக ஆட ஆரம்பித்தான் .

இவனுக்கு கரண்ட் ஷாக் கொடுக்க வேண்டாமா ?அதனால் ..

"உட்கார்ரா சும்ப க்கூதி .. " என்று நாலாந்தரமாக நான் இறங்கி ஒரு சத்தம் பலமாக கொடுத்தேன் .

சிலை மாதிரி அசையாமல் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான் .இது தான் அவனுக்கு உண்மையான அவமானம் என உணர்ந்து அழாத குறையாக உறைந்து போய் உட்கார்ந்து விட்டான் .பௌர்ணமி திடீரென்று அமாவசையானது போல!

இலக்கிய கூட்டம் உடனே ..அந்த நிமிடத்தில் இனிது நிறைவடைந்தது!

Nov 15, 2008

கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள்


ராஜாஜி பற்றிய பதிவு - இப்படியெல்லாம் சில நம்பிக்கைகள் அந்த காலத்தில் இருந்திருக்கின்றன.விசித்திரமான விஷயங்களை சுட்ட தான். சுப்ரமணிய தேசிகரின் புனைவாக கூட இருக்கலாம்.என்றாலும் ஒரு சுவாரசியமான புனைவு.

லத்தீன் அமெரிக்க கதைகளில் இப்படி “Mythology” தொன்மங்கள் இடம் பெறுவதை அறிவீர்கள. மாட்டு காதில் மந்திரம் சொல்வதில் ஒரு கவிதை தன்மை, தன் சகமனிதர்கள் மீதான அவ நம்பிக்கை இதெல்லாம் பதிய வேண்டிய விஷயம்.
நான் இந்து, ஆனால் நாத்திகன். இதை என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் உணர முடியும்.

என்னுடைய "உண்டிங்கு என் ஜாதியெனில் " கட்டுரை ஒரே நேரத்தில் தனி தமிழ் வெறியர்கள், மதவாதிகள், இந்துத்தவா,திராவிட சித்தாந்திகள், ஜாதி அரசியல்வாதிகள் என்று பலர் கண்டனத்திற்கும் உள்ளானது. இதே என் ப்ளாகில் ஜூன் மாத பதிவுகளில் இந்த கட்டுரை உள்ளது .படித்து பார்க்கலாம். அதில் நான் தாமரை இலை தண்ணீராய் இயங்கியிருப்பதை உணர முடியும்.

விளக்கங்கள் கூட தேவையில்லை தான்.ஆனால் படு அபத்தமாக தமிழ் காவலர்கள், திராவிட சித்தாந்திகள் போன்ற மூட நம்பிக்கையாளர்கள் படு ஆவேசமாக ஆரிய எதிர்ப்பை வெளிப்படுத்தி நான் ஏதோ 'பழைமைவாதி', 'ஆரிய அடிவருடி',’மூட நம்பிக்கையை முன் வைப்பவன்’ என கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் .
I cannot suffer fools!

இன்னொரு பக்கம் இதை உண்மை என நம்பும் மதவாதிகளின் பரவச கமெண்ட் வேறு என்னை வேதனைப்பட வைக்கிறது. இதை எழுதுவதில் ஒரு கிண்டல் என் எழுத்தில் தொனிப்பதை கூட இவர்களால் அறிய முடியவில்லை.


என் பிராமண நேசம் உறுதியானது. அதற்கு நான் வெட்கப்படவில்லை.
மென்மையான,மேன்மையான மனிதர்களை நான் வணங்குபவன்.

இருபத்தைந்து வருடம் முன் நான் திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டிலும் உறுப்பினராய் இருந்தவன்.உறுப்பினர் கார்டுகள் இன்னமும் பத்திரமாக என்னிடம் இருக்கின்றன. அந்த நேர என் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய சாட்சிகளாக!
என் மார்க்சீய அபிமானம் காரணமாக 'தோழர் ' என்றபட்ட பெயரும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது .இன்றும் என்னை என் பெயரை சொல்லாமல் ' தோழர் ' என்று குறிப்பிட்டு அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு. சேலம் காம்ரேடுகளோடு மோதல் ஏற்பட்ட போது ஒரு பத்திரிகையில் எழுதிய எதிர்வினைக்கும் இந்த பதிவின் தலைப்பை தான் கொடுத்தேன்.
அரைவேக்காடுகள் உடனே " பச்சோந்தி " பட்டப்பெயர் கொடுத்துகொள்ளலாம்.

சுந்தர ராமசாமி சொன்னதை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன் . அடையாளத்தை நிராகரிக்கும் எந்த இலக்கிய வாதியும் இதை தான் சொல்வான் .
' இலக்கியவாதியாகிய நான் ஒரு மொழிக்கோ, சாதிக்கோ,மதத்திற்கோ இனத்திற்கோ, கட்சிக்கோ, சித்தாந்ததிற்கோ,ஏன் நாட்டிற்கோ கூட விசுவாசமாக இருக்க முடியாது '
'கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள் ' அரற்றி கொண்டே இருக்கலாம் !

Nov 14, 2008

நிகோஸ் கசான்சாகிஸ்

1957ல் அல்பெர்காம்யு நோபெல் பரிசு வாங்கினார் . ஒரு வோட்டு வித்தியாசத்தில் அவரிடம் நோபெல் பரிசை இழந்தவர் நிகோஸ் கசான்சாகிஸ்
( Nikos Kazantzakis) அப்போது அல்பெர் காம்யு பெருந்தன்மையுடன் சொன்னார் .
" என்னை விட கசான்சாகிஸ் இந்த நோபெல் விருதுக்கு நூறு மடங்கு தகுதியானவர் " அந்த வருடமே கசான்சாகிஸ் இறந்து விட்டார் .

கசான்சாகிஸ் பிறகு ஏழு வருடம் கழித்து 1964 ல் அவருடைய நாவல் Zorba the Greekதிரைப்படமாக வெளிவந்த போது தான் உலகிற்கு அவரை அடையாளம் தெரிந்தது .
சோர்பாவாக அந்தோணி குயின் பட்டையை கிளப்பியிருந்தார் .
நாவல் பற்றி ....
பண்டிதன் ஒருவன் தன் படிப்பெல்லாம் சோர்பா வின் யதார்த்த சந்தோஷ வாழ்வின் முன் துச்சமென்று உணர்வான் .சொத்து , புலமை அனைத்தையும் துச்சமாக்கிய படைப்பு சோர்பா த கிரீக்
The virtue of possessing nothing!
சோர்பா படத்தில் பார்த்தாலும் நாவலில் படித்தாலும் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத கதா பாத்திரம் . கதா பாத்திரம் என்று சொல்வது கூட குறைவான வார்த்தை . நம்மோடு அவன் வாழ்ந்து கொண்டே இருப்பான் .
சோர்பா சொல்வான் கதைசொல்லியிடம் . ஆம் கதைசொல்லி தான் தான் அந்த பண்டிதன் .
" பகல் நேரம் என்பது ஒரு ஆண் . இரவு தான் பெண் !"
அதீத யதார்த்தமாக ஷோர்பா பேசுவான் . புராணிகம் , மர்மம் ,கனவு கலந்து ..
" என்னுடைய தாத்தா வெள்ளை தாடியுடன் ரப்பர் பூட்ஸ் போட்டுகொண்டிருப்பார் . ஒரு நாள் எங்கள் வீட்டு கூரை மேலிருந்து குதித்தார் .அவருடைய பாதம் தரையில் பட்டவுடன் பந்து போல எகிறி வீட்டை விட உயரத்திற்கு தாவினார் .மேலும் மேலும் வான் நோக்கி உயர உயர மேலெழுந்து மேகத்திற்குள் சென்று மேகங்களுக்கிடையில் மறைந்தே போனார். இப்படித்தான் என் தாத்தா இறந்தார் "
தன் தாம்பத்தியம் பற்றி ஷோர்பா சொல்வது
"ஒரு முறை நேர்மையாக சம்பிரதாய திருமணம் .அப்புறம் பாதி நேர்மையுடன் இரண்டு திருமணங்கள் ! இவை மிகவும் சீரியஸ் ஆனவை தான் . அப்புறம் ஒரு ஆயிரம் முறை கந்தர்வ திருமணங்கள் கொஞ்சமும் நேர்மையில்லாமல் !"
அவனுடைய ஒவ்வொரு பெண்ணுடனான சரீர சம்பந்தத்தையும் கல்யாணம் என்றே ஷோர்பா குறிப்பிடுகிறான் .

ராஜாஜி யின் ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரம்


ராஜாஜி இந்திய துனைகண்டத்தில் அனுபவிக்காத பதவிகள் கிடையாது . அவர் மஹாத்மாவின் சம்பந்தி . இந்தியாவின் முதல் பாரத ரத்னா .
இவ்வளவிற்கும் காரணம் என்ன தெரியுமா ?

இருபது வருடத்திற்கு முன் எண்பது வயது முதியவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
நல்ல ஆங்கில புலமை !தன்னை தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட தம்பி என அறிமுகம் செய்து கொண்டார் .
அப்போதெல்லாம் தண்டபாணி தேசிகரின் " தாமரை பூத்த தடாகமடி !" பாடல் கேட்காமல் நான் தூங்கியதே இல்லை .

தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட சகோதரர் சுப்ரமணிய தேசிகர் அந்த வயதில் நான்காவது திருமணம் செய்திருந்தார் . அந்த நான்காவது மனைவி ஒரு வேலைக்கார பெண் . அந்த பெண் தன் நான்காவது மனைவி என்ற தேசிகர் தன் முந்தைய மூன்று திருமணம் குறித்தும் என்னிடம் சொன்னார் .

ராஜாஜி எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்ந்ததற்கு காரணம் 'ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரம்' தானாம் . எந்நேரமும் இதை மனதிற்குள் பாராயணம் செய்துகொண்டு தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆயுள் முழுக்க இருந்தார் ,தேசிகர் உறுதியாக சொன்னார் .

வைஷ்ணவர் பாராயாணம் செய்த சைவ மந்திரம்??!!https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimrRnBtZ1oO4Rrqf7oXReulAyduFaH3IYsauTA47DL_mO13u1M1K0UKPbQl2Uk_uFHhx_eUFtKmGVKRsFFrskrilC8PBTd73SQm9wTCNCu3qXEYwelbsWe65IURCw73iDw5QFQZQUK_UA/s640/Swarna_Agarshana_bairavar2.166223028.JPG


 

"ஓம் ஜம் ச்லாம் க்லீம் கலும்
ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம்
ஆபதோத்தாரனாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்சன பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷனாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ"
இது ஸ்வர்ண ஆகர்ஸன பைரவ மந்திரம் !


ஆண்டு அனுபவித்து அந்திம காலத்தில் ராஜாஜி இந்த மந்திரத்தை யாருக்கேனும் உபதேசிக்க வேண்டிய தன் கடமையை எண்ணியிருக்கிறார் .ஆனால் அவருக்கு உபதேசிக்க தகுதியாக யாருமே தென்படவில்லையாம் . மகனுக்கு யோக்யதை இல்லை என முடிவாக நம்பியிருக்கிறார் . அரசியலில் கூட தன் சீடன் என்று தகுதியுள்ள யாரும் இல்லை என வெதும்பி வேதனையுடன் யோசித்தாராம் . சரி . இலக்கிய உலகில் ..ம்ஹூம் ... வேறு துறைகளில் இதை யாருக்காவது உபதேசிக்கலாமா .அப்படி யாருமே ராஜாஜிக்கு நம்பகமாக தோன்றவில்லையாம் .

ஆனால் சாஸ்த்திர படி ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரத்தை அந்திம காலத்தில் கட்டாயம் யார் காதிலாவது உபதேசிக்க வேண்டியது வேத கடமை . என்ன செய்ய . தன்னுடைய தொண்ணூறு வயதில் இது அவருக்கு பிரதான மன அவசமாய் இருந்திருக்கிறது .

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாராம் . மனிதர் யாருக்கும் தன்னிடம் உபதேசம் பெற யோக்யதை இல்லை .

வீட்டு கொல்லைபுறம் மாட்டு தொழுவத்திற்கு போனாராம் . பசு மாடு கன்றை தன் நாக்கால் தடவிகொடுத்து கொண்டு நின்றிருக்கிறது . பசுமாட்டின் காதில் மந்திரத்தை ரகசியமாக சொல்லிவிட்டார் !
விச்ராந்தியாய் ஆச்சாரியார் பெருமூச்சு விட்டாராம் !!