அர்ஜுனனுக்கும் பாஞ்சாலிக்கும் திருமணம் செய்வது பற்றி துருபதன் ஆலோசிக்கிறான் .தர்மரை கேட்கிறான் . தர்மர் " பாஞ்சாலியை நாங்கள் ஐந்து சகோதரர்களுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தாயார் குந்தி உத்தரவு " என்கிறார் . துருபதன் பதட்டமடைந்து வேதனையுடன் " அது எப்படி சாத்தியம் ?'' என்று கேட்கிறான் . வியாசரிடம் " இது முறை கெட்ட செயல் அல்லவா ?" புகாராக துருபதன் முன் வைக்கிறான் .
வியாசர் தேற்றுகிறார் " ஐந்து பேரை பாஞ்சாலி மணப்பது தவறே அல்ல . இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன . ஜடிலை என்ற பெண், சப்த ரிஷிக்களையும் மணந்திருக்கிறாள். வார்க்ஷி என்ற பெண் 'பிரதேசுக்கள்' என்ற பத்து சகோதரர்களை கல்யாணம் செய்திருக்கிறாள் "
மகாபாரதம் என்பது பெரிய சமுத்ரம். பதினைந்து வருடம் முன் மேற்கண்ட விஷயம் அறிய வந்தேன் . ஆனால் மேல் அறிய முடியவில்லை!இது எந்த மகாபாரதம் ?
நான் இதை இங்கு எழுதியதற்கு காரணம். இந்து ஞான மரபின் மீது எனக்குள்ள தேடலும் ,மதிப்பும். சப்தரிஷிகளின் பத்தினி ஜடிலை ,பிரதேசுக்களின் பத்தினி வார்க்ஷி இருவரின் கதையை அறிந்த சான்றோர் யாராவது இருக்கிறார்களா என தேடுவதற்காக .ஹிந்துத்வா வேறு , இந்து ஞான மரபு வேறு என்ற தெளிவு எனக்கு உண்டு .
புதிரான தொன்மங்கள் !
ஜடிலைக்கு ஏழுபேர் ,வார்க்ஷிக்கு பத்து பேர் என்று பாஞ்சாலி கணவர்களை விட அதிகமாக பாஞ்சாலி காலத்திற்கு முன் அந்த இரு ஸ்த்ரிகள் வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள் .
பாஞ்சாலி பற்றி நமக்கு தெரிகிறது . ஜடிலை , வார்க்ஷி என்ற இந்த இரு ஸ்த்ரிகள் யாவர் ? சூழல் ,நிர்ப்பந்தம் யாது ?
Which mahabharatam it is available > Mani kr
ReplyDeleteராஜநாயஹம்
ReplyDeleteநீங்கள் சொல்லும் ஜடிலைக்கதையை நானும் பாரதத்தில், ஆதிபர்வத்தில் ஜடிலா-கௌதமி கதை என்பதாக வாசித்திருக்கிறேன். இதே கதையை அம்பேத்கர் தம்முடைய Riddles in Hinduism புத்தகத்தில் குறிப்பிடுகிறார், அக்கால பிராமண, க்ஷத்திரியப் பெண்களுக்கு polyandry சர்வ சாதாரணம் என்பதைக் காட்ட!
பாரதத்தில் துருபதர், தம் மகள் திரௌபதி ஐவரை மணப்பது தவறு என்று பேசும்போது அங்கு வரும் வியாசர் இதுகுறித்த உரையாடலை வேண்டுகிறார். குந்தியும் ஐவரும் பங்கிடட்டும் என்ற தம் வாக்கு பலிக்க வேண்டும் என்பதாகப் பேசுகிறார். துருபதன் மகன் திருஷ்டத்யும்னன், திரௌபதி ஐவரை மணப்பதைத் தவறு என்று கருதவில்லை என்கிறார்.
ஆக, உரையாடலின்போது த்ருமர், கௌதம கோத்திரத்தில் வரும் பிராமணப்பெண் ஜடிலா (அப்படியென்றால் சடாமுடிக்காரி எனப்பொருள்) ஏழு ரிஷிகளுடன் வாழ்ந்தார் என்று கூறுவதாக என் வாசிப்பின் நினைவு. வாசித்தது, மகாபாரதம் - வடமொழி-ஹிந்தி மொழியாக்கம், ஆறு தொகுதிகளில்,
கீதா பிரஸ், கோரக்பூர். பதிப்பின் ஆண்டு மறந்துவிட்டது. இந்தக்கதையை, மற்ற பதிப்புக்களில் கண்டதாக சரியான நினைவில்லை.
ஸ்ருயதே ஹி புராணேபி ஜடிலா நாம கௌதமி
ரிஷிநயாஸீதவதி சப்த தர்மப்ரதம் வரா..
என்பது தர்மர் கூறும் ஸ்லோகம்.
நினைவிலிருந்து கூறுகிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். இதில் தர்மர் கூறும் புராணம் எது தெரியவில்லை... அதேபோல திரௌபதி ஹஸ்தினாபுரம் திரும்பும்போது வரவேற்கும் மக்களும் கௌதமி ஏழு ரிஷிகளுடன் இருப்பதைப் போல என்றிருக்கிறது... நிஜத்தில் ஜடிலையைப் போல பாஞ்சாலிக்கும் எழுவர்தான், ஆனால் பாஞ்சாலி க்ஷத்திரியப்பெண் - அவளை நாடியோராக எழுவர் - அதாவது பாண்டவர் ஐவர், அடுத்து விராட பர்வத்தில் கீசகன், நூற்றுவரான கௌரவர் ஏழாமவர் எனக் கொள்ளலாம்.
விராட பர்வத்தில் திரௌபதியான சைரந்தரி தனக்கு ஐந்து கந்தர்வக் கணவனமார் உண்டு என்று ராணி சுதேஷ்ணாவிடம் கூறுகிறாள். சைரந்தரியை விரும்பும் கீசகனை மடப்பள்ளிக்கார பீமன் கொல்கிறான். அப்போது பீமன் பசியோடிருப்பதாகச் சொல்வது கூடலைக் குறிப்புணர்த்துவதாகும்.
பிறகு துச்சாதனன் அவளை அவைக்கு இழுத்து வருவதுடன் அவள் கோலம் ஜடிலையாகிறது.
யுத்தத்தில் கிட்டும் துச்சாதனன் ரத்தம் தன் கூந்தலில் பூசி சபதம் முடிக்கிறாள். ஆக, ஜடிலையின் கதை, திரௌபதியின் கதையாக மாறுகிறது, அது ஜடிலையின் கதை என உணர்த்தப்பட்டவாறே..
அடுத்து வார்க்க்ஷியின் கதை.
ததைவ முனிஜ வார்க்க்ஷி தபோபிர்பவிதாத்மநஹ
சங்கடாபூத் தாச ப்ராத்ர்னேகனாம்நாஹ ப்ரசேதஸஹ
என்று வார்க்க்ஷி பற்றிக் கூறுவதும் தர்மரே.
பிறகுதான் வியாசர் பேசுகிறார்... திரௌபதி, திருமகளின் வடிவம் என்று கூறி ஐந்து இந்திரர்கள் கதையொன்றைச் சொல்கிறார். அதில் ஒரு இந்திரன் சாபம் பெற்று வேறு நான்கு இந்திரர்களைக் கண்டு சாப விமோசனம் பெற வேண்டி நாராயணனின் அருளுடன் முறையே தர்மதேவதை (யமன்), வாயு, இந்திரன், அஸ்வினி சகோதர்களின் புதல்வர்களாக, அதாவது பாண்டவர்களாகப் பிறந்தார்கள், நாராயண அம்சம் கொண்ட இவர்களைத் திருமகளான திரௌபதி ஏற்கலாம் என்கிறார்.
ஐந்துக்கும் (பாண்டவர்கள்) நூறுக்கும் இடைப்பட்ட பகு எண்ணாக வரும் பத்தில் வார்க்க்ஷியின் கதை நிற்கிறது. இந்தப் பத்து என்ற இடைப்பட்ட நிலைக்கு பாரதமும் வருகிறது. எப்போது, திரௌபதி சூதாட்டத்தில் வைக்கப்படும்போது!
ஒரு நல்ல கோணத்தைத் தொட்டுச் சென்று இருக்கீங்க, ராஜநாயகம் சார்!
ReplyDeleteபெண்ணுக்குக், "கற்பு" என்பது அணிகலன்-ன்னு சொல்லுவாய்ங்க (கற்பினுக்கு அணியை - கம்பன்)
ஆனா, அந்த "அணி கலன்", அவள் விரும்பிச் சூடுவதா இருக்கணுமே அன்றி,
மத்தவங்க அவள் மேல் பூட்டிப் பூட்டிப் பார்ப்பது அல்ல!
கற்பு = உடல் சார்ந்தது அல்ல!
கற்பு = மனம் சார்ந்தது
-----
* ஒரு ஆணுக்குப் பல மனைவிகள் = இந்த 21 CE-இல் கூட, பல பேரு ரொம்ப ஆச்சரியப்பட மாட்டாங்க
* ஆனா, ஒரு பெண்ணுக்குப் பல கணவன்கள் = பலருக்கும் துளியூண்டு ஆச்சரியமாச்சும் தோனும்:) முகச் சுளிப்புக்கள் அப்பறம்:))
ஆனா, இது மகாபாரதப் பாஞ்சாலிக்கும் முன்னரேயே வழக்கத்தில் இருந்தது -ன்னு பல "கலாச்சாரக் காவலர்"களுக்குத் தெரியாது:)
நீங்கள் பதிவில் சொன்ன
1) ஜடிலை 2) வார்க்ஷி மட்டுமல்ல...
3) சூரியை = இரண்டு அஸ்வினி குமாரர்களை மணந்தவள்
4) ரோடஸி (சாதாரணி) = மாருதர்களை மணந்தவள்
5) மாதவி = 4 கணவர்கள்; மகாபாரதித்திலேயே சொல்லப்படும்;
இவ்வளவு ஏன்?
* குந்திக்கும் = 5 கணவர்கள் அல்லவா? (பாண்டுவைத் தவிர்த்து, நிரந்தரமாக இல்லாவிட்டாலும்)
* அவள் மருமகள் = பாஞ்சாலிக்கும் அப்படியே ஆனது (ஆனால் நிரந்தரமாக)
அந்தக் குலத்தின் ஆதிப் பெண் = சத்யவதி
* அவளுக்கு பராசரர் (எ) முனிவர்; அவர் மூலமாக = வியாசர் (எ) குழந்தை
* பின்பு சந்தனு மகாராஜா
-----
"மாதவி" கதையை மட்டும் சொல்லட்டுமா?
ReplyDeleteவிஸ்வாமித்திரன்; அவருக்கு காலவர் (எ) சீடன்!
பாடம் முடிஞ்சி, குரு தட்சிணையாக, 800 சாதிக் குதிரைகள் கேக்குறாரு முன்னாள் சத்ரியர்-இந்நாள் அந்தணராகி விட்ட விஸ்வாமித்திர முனிவர்;
காலவர், மன்னன் யயாதி கிட்ட போய் உதவி கேட்க,
அது போன்ற குதிரைகள் தன்னிடம் இல்லாததால், வந்தவருக்கு ஏதாச்சும் குடுக்கணுமே-ன்னு தன் மகள் "மாதவி"யை அவருக்குக் குடுத்து விடுகிறான்;
காலவர், தன் மனைவி "மாதவி"யை, இன்னும் 4 பேருக்குக் கல்யாணம் செஞ்சிக் குடுக்குறாரு
1. அயோத்தி மன்னன் அர்யஸ்வன்; ஈடாக 200 குதிரை அவன் தருகிறான்;
அவர்களுக்கு வசுப்பிரதா என்னும் பிள்ளை பிறந்த பின்...
2. போஜ மன்னன், உஷிநாராவுக்கு; 200 குதிரை கிடைக்கிறது;
இவர்களுக்குப் பிறந்தவனே சிபிச் சக்கரவர்த்தி; இவன் பிறந்த பின்பு...
3. காசி மன்னன், திவோதசனுக்கு; 200 குதிரை கிடைக்கிறது;
இன்னொரு வாரிசு உருவான பின்...
4. வேறு யாரிடமும் அது போன்ற குதிரை இல்லை; அதனால் இனி எங்கும் செல்ல முடியலை;
தன் குரு விஸ்வாமித்திரனிடமே சென்று, 600 குதிரை சமர்ப்பித்து, மீதி 200 குதிரைக்கு ஈடா, மாதவியையே குடுக்குறான்;
குரு தட்சிணை நிறைவேறியது;
இவர்களுக்குப் பிறந்தவனே அஸ்வமேத யாகம் செய்யும் அஸ்தகன்;
பின்பு, விஸ்வாமித்திரன், மாதவியை, Original கணவரிடமே அனுப்பி விட...
இவளே, பாஞ்சாலிக்கும் முன்னர் பாஞ்சாலி:)
மகாபாரதம் உத்யோக பர்வத்தில் வருகிறது; விஸ்வாமித்ரர் கதையினூடே!
இப்படி,
ReplyDeleteசொத்து / தத்தம் வசதிகள் என்பதற்காக, ஒரே பெண்ணை, பல ஆண்களுக்கு "ஆக்கி வைக்கும்" வழக்கம் உள்ளது;
ஆனா, அது அந்தப் பெண்ணின் சம்மதம்/ இன்பத்தோடு தான் நடந்ததா? -ன்னு பார்த்தால் தான் தெரியும், பெண் உரிமை பழங் காலத்தில் எப்படி என்பது!
இப்படிப் பெண்ணை, "மாடு போல்" பலரிடம் விட்டுச் செல்லும் போக்கு, வடக்கு-ஆரியக் கதைகளில் உண்டு;
----
ஆனா, தமிழ்ப் பண்பாட்டில் = ?
இங்கும், ஒரு பெண் - பல கணவர்கள் உண்டு:))
ஆனா, விற்பனைப் பொருளா இல்லாது,
பெண், தானே விருப்பப் பொருளாய்த் தேர்ந்தெடுப்பது;
அது, தாய் வழிச் சமுதாயம் இருந்த காலம்!
பூர்வ குடிகள் காலம்; (முல்லை ஆயர் - குறிஞ்சி வேடர்)
அப்போ, பெண்ணே, ஒரு இனத்தின் அச்சாணி; அவளைச் சுற்றியே, அந்த நாகரிகம் சுழலும்;
அதுக்காக ஆண் அடிமை அல்ல! அது ஒரு இயைந்த வாழ்வு;
ஆனா, பூர்வ குடிகள் இடையே, குழுக்கள்! அடிக்கடி நடக்கும் போரிலே, ஆநிரை கவர்தலும், வீரர்கள் மாண்டு போதலும், நடுகல்லும்...
இப்படி, ஒரு குழுவில், போர் செய்யும் ஆண்கள் குறைந்து போய், அந்த இனக்குழுவே அழியும் நிலையில்...
தங்கள் குழுக்குள்ளேயே, தங்கள் சின்னஞ் சிறு சொத்தும் சிதறி விடக் கூடாது-ன்னு...
உடன் பிறந்தவர்கள்/ அந்த இனக்குழு ஆண்கள், ஒரே பெண்ணைச் சுற்றித், தங்கள் குடும்பத்தை அமைத்துக் கொள்வதுண்டு;
இது பரவலாக இல்லா விட்டாலும், தேய்ந்து போகும் நிலையில் உள்ள இனக்குழுக்களிடம், இந்தப் போக்கை அதிகம் காணலாம்!
ஆனால் பெண் உடன்பட்டே; அந்தப் பெண்ணே அந்தக் குழுவின் அச்சாணி போல விளங்குவாள்!
நாளடைவில், முல்லை-குறிஞ்சி (காடு/மலை) கடந்து, பெயர்ச்சி ஏற்பட்ட போது, மருத நிலங்கள் தோன்ற, நாகரிகம் வளர, அரசர்கள் தோன்ற...
இனக்குழு/ பூர்வகுடி என்பது விட்டுப் போய், புது நாகரிக வாழ்க்கையில், இந்தப் "பல கணவப் பெண் பழக்கம்", தேவையற்றுப் போய், ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆனது;
------
ஆனா, "அரசர்கள்" -ன்னு ஒரு புது Entity வந்து விட்டது அல்லவா?
Organized War/ அதிகாரம் என்பது வேண்டியிருக்க, ஆண்கள்/ வீரர்கள் -ன்னு வேறு மாதிரியான பண்பாடு பரவ, ஆண் அச்சாணி ஆகிப் போனான்!
இந்த அதிகாரப் போதையில், ஆணுக்கு வேறு ருசிகள் தோன்ற...
மருத நிலம், "பரத்தை" என்றெல்லாம் குழுமம் மாறியது;
அந்த வீட்டுக்குப் போதல் = "ஓரம் போதல்" என்றே codeword; (ஓரம் போகியார் என்றே சிறந்த மருதத் திணைக் கவிஞரும் உண்டு)
ஆனால், "பரத்தை" -ன்னாலே பெண் தான் முடிவு கட்டீற முடியாது;
ஆண் பரத்தைகளும் உண்டு = "பரத்தன்"
http://dosa365.wordpress.com/2012/09/24/47/
எப்போ ஆண் பரத்தன்கள் இருப்பாங்க? பெண்கள் போகக் கூடிய அளவுக்கு இருந்தால் தானே?
அதனால் பெண் உரிமை என்பது ஓரளவுக்காச்சும் இருந்தது சங்க காலத்தில்; (தாய் வழிச் சமூகம் போய் விட்டாலும் கூட)
ஆனால் பிற்பாடு வந்த கடைச் சங்க காலக் கலப்புகள், புராணங்கள்-ன்னு, தமிழ்க் குமுகாயத்தில் கலந்து கலந்து...
"கற்பு" என்பது பெண்ணுக்கு மட்டுமே என்று ஆகிப் போனது:(((
--------
இதனால், "ஆண்-பெண்" என்ற இயைந்த வாழ்வு குலைவு உறுவதைக் கண்டு...
பின்னால் வந்த வள்ளுவரும், என்ன தான் பெண்ணுக்குக் கற்பைப் பாடினாலும், ஆணுக்கும் பிறனில் விழையாமை, பரத்தையரைச் சேராமை -ன்னு பாடினார்;
விலை குடுத்து புணர்வது = செத்த பிணத்தைப் புணர்வது போல-ன்னும் குறளில் காட்டினார்;
இராவணன் குடும்பம் பாத்தீங்க-ன்னா கூட, பெண் வழிச் சமூகமாத் தான் முதலில் இருக்கும்...
ReplyDeleteஅப்பறம் தான் ஆண்-ஆதிக்கம் ன்னு மாறும்;
தாடகை -> கைகசி -> இராவணன் -ன்னு அம்மாக்கள் தான் அடையாளப்படுத்தப்படுவாங்க; அப்பா பேரு ரொம்ப வராது:)
See a Family Tree of Ravana
= http://dosa365.wordpress.com/2012/10/05/58/ravana-family-tree/
----
நீங்கள் பதிவில் சொன்ன ஜடிலை = கெளதம கோத்திரத்தில் பிறந்து, சப்த ரிஷிகளுக்கும் காணிக்கையாகக் குடுக்கப் படுகிறாள்; அவளே தேர்வு செய்யலை;
அதே போல் வார்க்ஷி என்பவளும், மரத்துக்குப் பிறந்தவள் -ன்னு "புராணம்" சொல்லும்;
இவளே தட்சனின் அம்மா; 10 பிரசேதஸ் சகோதரர்களுக்கு மணம் முடிக்கப்படுவாள்;
இதில்லாம, வாலி-சுக்ரீவன் இருவருக்குமே உரியவள் தாரை -ன்னு வால்மீகி காட்டுவார்;
கம்பரே, அதை மாற்றிக் காட்டுவார்!
-----
கண்ணன் கதையிலும், பாஞ்சாலி என்னும் பெண்ணின் வித்தியாசமான மன-ஆசைகளுக்கு, துணை நிற்பது கண்ணனே!
"பல ஆண்களை மணத்தல் பெண்ணுக்குப் பாவமில்லை" -ன்னு கண்ணனே அங்கீகரித்தால், அப்போதைய சமுதாயம் ரொம்ப வாய் பேச முடியாது அல்லவா?
கண்ணனோ, சாஸ்திர/ போலிச் சம்பிரதாயக் கட்டுகளை உடைக்கும் குணம் கொண்டவன்;
இந்திரனுக்குப் பூசையே வேண்டாம்; இயற்கைக்குச் செய்யுங்கள் -ன்னு மாற்றியவன்;
ஒரு திருநங்கையைத், துணிந்து தன் தேரில் ஏற்றியவன்!
இப்படிக் கண்ணன் துணை அமைந்தது, பாஞ்சாலிக்கு அன்று ஒரு பெரிய பக்க பலம் போலும்!
-----
எது எப்படியோ...
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது உலக மகா அநியாயம்;
* கற்பு = உடல் சார்ந்ததே அல்ல
* கற்பு = மனம் சார்ந்தது
"கற்பழிக்கப்பட்டாள்" என்பதே தவறு;
கற்பை யாரும் அழிக்க எல்லாம் முடியாது;
"வன்புணர்ச்சி" -ன்னு வேணும்-ன்னாச் சொல்லலாம்!
"கன்னித்தன்மை"/ Virginity/ Divinity என்பதெல்லாம் சுத்த மோசம்!
யார் தான் இங்கே "Virgin"? மனசால், யாரையுமே நினைக்காமலா இருக்கிறார்கள்? Hero/ Heroine -ன்னு எத்தனை எத்தனை ரசனை? இதுல ஒரு பொண்ணை மட்டும் "கன்னித்தன்மை" -ங்கிற சொல்லே இழுக்கு!
* கற்பு = என்றுமே, மனம் சார்ந்தது!
(குறமகள் பாதம் வருடிய மணவாளா -ன்னு முருகனே அவ காலைப் பிடிக்கிறான்)
பாஞ்சாலி -ன்னு தேடப் போயி, இந்தப் பதிவைப் பாத்தேனா?
ரொம்ப பிடிச்சிப் போயிருச்சி:) அதான் இம்புட்டு பேசிட்டேன்; நன்றி
ஆஹா! கண்ணபிரான்! உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! எத்தகைய அற்புதமான பின்னூட்டங்கள்!
ReplyDeleteஅன்பின் ராஜநாயஹம்
ReplyDeleteஜடிலை & வார்ஷி குறித்து வாலி 'பாண்டவர் பூமி'யில் - http://pic.twitter.com/IFeWjUmaVZ
தரவுகளுக்காக இங்கேயும் பதிகிறேன்.
பிரியமுடன்
வெங்கட்ரமணன்