Share

Nov 9, 2008

சந்தம் தப்பாது

அந்த படத்தின் பூஜையோடு பாடல் பதிவு . நான் பாடல் ரெகர்ஸல் நடப்பதை பார்க்கிறேன் . எம் எஸ் விஸ்வநாதன் இசை . ஜானகி பாடலை பாடி பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் . அந்த படத்தில் முதல் நாள் . எனக்கு வாகினி ஸ்டூடியோ புதிது . சினிமா ஸ்டூடியோ அன்று தான் நுழைகிறேன் . உதவி இயக்குனராக .

பாடல் நகல்களை பார்க்கிறேன் . நெருடுகிறது . 'சங்கம் தப்பாது தாளம் தப்பாது' என்ற முதல் வரி .எம் எஸ் வி உற்சாகமாக ஜானகிக்கு ஆர்மோனியம் வாசித்தபடி சொல்லி தருகிறார் . சத்தமாக " சங்கம் தப்பாது ,தாளம் தப்பாது " பாடிக்காட்டுகிறார் . ஜானகி அதை திருப்பி பாடுகிறார் . கண்ணதாசன் பாட்டு .

நான் அசோசியட் இயக்குனரை அழைத்து " முதல் வரி தப்பாயிருக்கிறது .அது 'சங்கம்' இல்லே. அது 'சந்தம்' " என்கிறேன் . அவர் முறைக்கிறார் . 'கண்ணதாசன் பாட்டுப்ப்பா !'

நான் ' நகலெடுக்கும் போது தவறு நடந்திருக்கும்போல '

அவர் கோபமும் நம்பிக்கையின்மையுமாக 'சும்மா இருப்பா '

வந்து முதல் நாளே புத்திசாலித்தனத்தை காட்டாதே என அர்த்தம் .

எம் எஸ் வி 'சங்கம் தப்பாது ' என பாடிக்காட்டி கொண்டிருந்தார் .அவரை குற்றம் சொல்ல முடியாது . கண்ணதாசன் சொல்வார் " தம்பி விசுவநாதன் குழந்தை போல் . ' ஊமை துரை வெள்ளைக்காரனா அண்ணே' ன்னு கேட்பான் .இசை தவிர அவனுக்கு ஜெனரல் நாலேட்ஜ் எல்லாம் தெரியாது ."

நான் கொஞ்சம்தைரியமாக இன்னும் சிலரிடம் அந்த தவறை பிரஸ்தாபித்தேன் .

'சந்தம் தப்பாது , தாளம் தப்பாது என்ற வரி தவறுதலாக சங்கம் என்று எழுதப்பட்டு விட்டது .' இயக்குனர் பயங்கர பிசி . அவருடைய நண்பர் ரமணியிடம் இதை சொன்னேன் .அவர் இயக்குனரிடம் சொன்னார் . தயாரிப்பாளர் ஹிந்து ரங்கராஜன் ! கொஞ்ச நேரத்தில் கண்ணதாசன் வந்தார் .அவர் பதறிபோய் "சந்தம் தப்பாது " என்பதை உறுதிபடுத்தினார் . பின்னர் பாடல் பதிவு நடந்தது .அப்போதுகூட அசோசியேட் இயக்குனர் என்னை முறைத்துகொண்டே தான் தவறை திருத்தினார் .

'சந்தம் தப்பாது ,தாளம் தப்பாது சுகமான இவள் ஆடும் ஆட்டம் ' ஜானகி பாட பதிவானது .

அதே மெட்டு அமைந்த வேறொரு பாடல் எம் எஸ் வி இசையில் பால சந்தர் படம் "வறுமையின் நிறம் சிவப்பு " படத்தில் அதே நேரத்தில் இடம் பெற்று அந்த பாடல் பிரபலமானது .

"ரங்கா ரங்கையா " பாடல் !

1 comment:

  1. நமது புத்திசாலித்தனத்தை , அறிவை இந்த சமூகம் சரியாக பயன் உள்ளதாக பயன் படுத்தி கொள்ள வில்லை என்ற வருத்தம் தங்களுக்கு எப்போதாவது வருவது உண்டா?

    வணிக நிறுவனங்களில் கூட மிகவும் புத்திசாலியாக உள்ள ஊழியரை ஓரம் கட்டி விடுவார்கள்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.