Share

Nov 26, 2008

Child is the Father of the Man




எல்கேஜி வகுப்பில் சேர்க்கும் போது என் மகன் கீர்த்தி யை பள்ளிக்கு முதல் நாள் அழைத்து சென்றிருந்த போது அங்கே மற்ற பிள்ளைகள் அனைத்தும் கதறி அழுது கொண்டிருந்தன . பெற்றோர் பிள்ளைகளை விட்டு விட்டு கிளம்ப முடியவில்லை . அந்த அளவுக்கு ஏதோ கொலைகளத்துக்கு கொண்டுவரப்பட்டு விட்டது போல குழந்தைகள் கதறி அழுது கொண்டிருந்தன . அந்த பள்ளி மிஸ் நான்கு பேர் தவித்துகொண்டிருந்தார்கள் . பெற்றோரை கிளம்ப சொல்லிகொண்டிருந்தார்கள் .
கீர்த்தியை வகுப்பு வாசலில் நிறுத்தினேன் . அவனுடைய ஸ்கூல் பாக் தோள் மீது . என்னை பார்த்தான் ' நீ போப்பா ' என்றான் . அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு பார்வை பார்த்தான் . நான் நின்று கொண்டிருந்தேன் . மிஸ் ஒருவர் வந்தார் . பையன் பெயர் கேட்டார் . சொன்னேன் . உடனே ' நீ வீட்டுக்கு போப்பா 'என்றான் . மிஸ் ஆச்சரியப்பட்டார் . அழாமல் ஒரு குழந்தை . வகுப்பிற்குள் நுழையும்போது திரும்ப என்னை பார்த்து ' போப்பா ' மறுபடியும் !வகுப்பிற்குள் சென்று மிஸ் சொன்ன இடத்தில் உட்கார்ந்த பின் அழுகின்ற அவனுடைய வகுப்பு தோழர்களை பார்த்தான் . வெளியே ஆர்வத்துடன் நிற்கும் என்னை பார்த்து பார்வையால் 'ஏன் இன்னும் நிற்கிறாய் ?' வினவி, தலையால் 'போப்பா நீ ' சைகை . மிஸ் நான்கு பேரும் வியந்து நின்றார்கள்.
............................................


நான் முதலில் இங்கே திருப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் திருச்சி போய் கீர்த்தியை ( பதினேழு வயது ) இங்கே வேலை பார்க்க அழைத்து வந்தேன் . அப்போது குடும்பம் இன்னும் திருச்சியில் .நான் வேலை பார்த்த இடத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் கீர்த்தி வேலைக்கு சேர வேண்டிய நிறுவனம் . மூன்று பஸ் மாறி செல்ல வேண்டியிருக்கிறது . 'பச்சை பாலகனை வேலைக்கு விட வேண்டியிருக்கிறதே' . நான் வேலை பார்த்த நிறுவனத்தின் மேனேஜர் முதல் வாட்ச்மேன் வரை தலையில் அடித்துகொன்டார்கள்.
பஸ்ஸில் வரும்போது குமுறி அழுகிறேன் . கண்ணீர் வடிய குமுறி அழுகிறேன் .
கோடை விடுமுறை நேரம் . பையன்கள் ஆங்காங்கே கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . திருச்சியில் விடுமுறை தினங்களில் சிறுவர்கள் ,இவன் தோழர்கள் இவனை தேடி கிரிக்கெட் விளையாட கூப்பிட வந்து விடுவார்கள் .'அங்கிள் ! இவன் தான் எங்க டீமுக்கு டெண்டுல்கர் ! விளையாட அனுப்புங்க அங்கிள் ! 'திருச்சியில் அந்த நேரத்தில் செஸ் விளையாட்டிலும் Under 18 district champion!இப்போது வேலை பார்க்க திருப்பூரில்.கீர்த்தி அப்போது பஸ்ஸில் ஜன்னல் ஓரமிருந்து என்னிடம் பேசிய ஒரே வார்த்தை ' கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா 'என் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . வாயில் கர்சிப்ப்பை வைத்து அழுத்திக்கொண்டு அழுகிறேன் .
பைபிள் பழைய ஏற்பாட்டில் ஒரு காட்சி . கடவுள் கேட்டார். அதனால் மகன் ஐசக்கை கொன்று பலி கொடுக்க வேண்டி அழைத்து கொண்டு மலையேறும் ஆப்ரகாம் .
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறங்கி ஒரு முக்கால் கிலோ மீட்டர் நடை . வாய் விட்டு அழுகிறேன் . கீர்த்தி இறுக்கமாக ' அழாதப்பா '
பனியன் கம்பனியில் அவனை ஒப்படைக்கிறேன் . அவனை இருவர் புரடக்சன் பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள் . அவர்கள் அவனிடம் வேலை என்ன என்று விளக்குவதை அலுவலக கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது . அவன் கவனமாக கேட்டுக்கொண்டு தலையாட்டி கொண்டு இயல்பாக உடனே பனியன்களை கணக்கிட ஆரம்பிக்கும் போது அங்கிருந்தே என்னை பார்க்கிறான் . தலையை ஆட்டி என்னை பார்த்து உதடு அசைத்து சொல்வது எனக்கு பார்க்க கிடைக்கிறது.

'நீ போப்பா '

5 comments:

  1. உங்கள் எழுத்துக்கள் வாசிக்க கிடைத்தன.நல்ல எழுத்து நடையுடன் அனுபவங்களுடன் கூடிய எதார்த்தம்.கிட்டத்தட்ட அனைத்துப் பதிவுகளையும் ஒரே பார்வையில் உட்கார்ந்து வாசித்தவை.

    ReplyDelete
  2. DEAR RPR,

    I HAVE WEPT AFTER READING THIS POST. TIME IS A GREAT HEALER OF ALL WOUNDS. I PRAY TO ALMIGHTY TO GIVE YOUR FAMILY MANY HAPPY MOMENTS TO OVERCOME SUCH INCIDENTS. YOU MUST BE PROUD TO HAVE SUCH A SON WHO TAKES ON THE BURDEN OF LIFE SO EFFORTLESSLY.

    ReplyDelete
  3. மறுமுறை பலமுறை வாசித்தாலும் கண்களில் நீர் எட்டி பார்கிறது.
    Not sympathy sir, நானும் ஒரு தகப்பன்.

    Apocalypto வில் ஆழமான பள்ளத்தில் மாட்டிக்கொண்ட குழந்தை நினைவுக்கு வருகிறது.

    Child is the father of the man. எவ்வளவு பெரிய உண்மை.

    என் மகன் Prekg போகும்போது அழவில்லை. அழும் குழந்தைகளை வினோதமா பார்த்துக்கொண்டே நடந்தான். இப்போது LKG 'நீ போப்பா' என்று சொல்லவில்லை
    'நீ போடா' என்றே

    ReplyDelete
  4. சில உணர்வுகள் சிந்திக்க வைக்கும்.
    நன்றாக உள்ளது

    ReplyDelete
  5. வேதனை என்ன என்பதை இரண்டு வார்த்தைகளில் மிக அழகாக சொல்லி விட்டீர்கள். //”நீ போப்பா””//. படிக்கும் எனக்கே மனசு மிகவும் கனமாக இருக்கின்றதே.. உங்களுக்கு எப்படி இருக்கும்.. நினைக்கவே முடியவில்லை.. இராகவன், நைஜிரியா

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.