Share

Nov 1, 2008

நாகார்ஜுனன் 'தேசம் நெற் ' பேட்டியில் என் கருத்து

புலம் பெயர்ந்த தமிழர் சார்பாக நடத்தப்படும் தேசம் நெற் இணைய இதழ் நாகார்ஜுனனை பேட்டி கண்டது . அந்த மிக கனமான பேட்டி நாகார்ஜுனன் ப்ளாகில் வெளியாகியுள்ளது . இலங்கை பிரச்சினை பற்றி உண்மையான அக்கறையுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டியது . அந்த பேட்டி குறித்து நான் வெளிப்படுத்திய அபிப்பராயங்கள் கீழே :

ஆர் பி ராஜநாயகம் said...
இங்கே 18 ஆண்டுகளுக்கு முன்னால் பிரமிள் எழுதிய 'ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை' நூலை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? பிரமீள் மேல் உள்ள கோபத்தில் இங்கே யாருமே அதை கன்டுகொள்ளவே இல்லையல்லவா?

அங்கே வரதராஜப்பெருமாள் வடக்கு-கிழக்கு மாநில முதல்வராயிருந்த காலத்தில் இங்கே ஜெயகாந்தன் தூர்தர்ஷனில் இலங்கைப்பிரச்னையை தினமும் பரவசமாகப் புல்லரிப்புடன் பேசி நாறடித்த கதையைத்தான் வேதனையுடன் 'சோகம் சொல்லத் தவறியதும் ஏன்?' என்று நீங்கள்சரியாகக் கேட்கிறீர்கள்.

இன்னொன்று - "இலங்கையிலே எனக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறர்கள். விடுதலைப்புலிகள் எல்லாம் என் எழுத்தைப் படிக்கிறார்கள்" என்று புளகாங்கிதமடையும் காகிதப்புலிகளை நீங்கள் அறிவீர்கள்.

மற்றொன்று - "எழுத்தாளன் என்பவன் கையாலாகாதவன்" என்று தன்னையும் சேர்த்து சுஜாதா ஒருமுறை சொன்னதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

"உணர்வுப்பூர்வமா இல்லாம அறிவுப்பூர்வமா கட்டுரை தமிழ்நாட்டு ஊடகங்களிலே வருமா" என்ற உங்கள் ஆதங்கம் உன்னதமானது. சர்வதேசப்பார்வை, வீச்சு பற்றி நம்முடைய ஊடகங்கள் முழுமுற்றாக முயலவேண்டும் என்பதை உங்கள் பேட்டியின் மூலமாக அறிந்துகொண்டால் நல்ல மாற்றங்கள் சில சாத்தியம்தான்.

இங்கே அரசியல் பிழைப்பவர்கள் எழுத்தாளர்களிடமும் உண்டே என்பதுதான் மகத்தான சோகம்.
20/07/08

ஆர். பி. ராஜநாயஹம் said...
"விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்துக்கான வாய்ப்பை நழுவ விட்டார்கள்" என்று தங்களிடம் ராஜினி சொன்ன விஷயம், "எங்களுடைய அரசியல் மட்டுமல்ல, எங்களை எதிர்ப்பவர்களின் அரசியலும் கைப்பற்றப்பட்டுவிட்டது" என்ற பத்மநாபாவின் வார்த்தைகள் மிகப்பெரிய சதிகள் நடந்திருப்பதை மெய்ப்பிக்கின்றன.

இதில் வேதனை என்னவென்றால் இந்தச்சதிகளில் இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், மற்ற சிங்கள-தமிழ் இயக்கங்கள், தமிழக அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகள் என வெவ்வேறு வழிகளில் பங்கேற்க நேர்ந்திருக்கிறது. இதற்குப் பகடைக்காய் ஆன மக்களுக்கான நீதியை எங்கிருந்து பெற முடியும்...இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வில் தொடரும் சீர்குலைவு விஷயத்தில் எல்லோருமே இன்று மழுங்கிப்போய்விட்டார்கள் என்பதுதானே உச்சபட்ச உண்மை.

நீங்கள் எழுதிவைத்திருக்கும் ஆங்கிலக்கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட தைர்யம் இன்னும் வரவில்லை என்று சொல்கிறீர்கள். இது அதன் 'விஷய கனம்' பற்றிய வாக்குமூலம்தானே?
25/07/08

ஆர் பி ராஜநாயஹம் said...
தமிழ் எழுத்தாளர்கள் வேறுமாநிலத்தில் ஒரு வருடமாவது வாழ்ந்துபார்க்க வேண்டும் என்று சொல்வது மட்டும் விசித்திரமாகத் தெரிகிறது. அப்படி வாழ்ந்துதான் சிறுபான்மைச்சிக்கல்களை எழுத்தாளன் புரிந்துகொள்ள முடியுமென்றால் அவன் என்ன எழுத்தாளன்? எழுத்தாளனுக்கு இந்த அளவுக்குப் பட்டால்தான் புரியும் என்றே சொல்கிறீர்கள். நம்முடைய வட்டத்தில் உள்ள எழுத்தாளர் எவரும் அந்த அளவுக்கு அரைகுறைகள் அல்ல என்கிறேன். 'நம்முடைய வட்டம்' என்பது உங்களுக்கு வித்தியாசமாகத் தெரிகிறதோ என்னமோ?சினிமாக்கலைஞர்களில் கமல்ஹாஸன் மட்டுமே இந்தச்சூழலில் உணர்ச்சிக்கு மதிப்பளிக்காதவர். மற்ற சினிமாக்காரர்கள் அனைவருமே பொறுப்பில்லாமல் பேசி கைதட்டு வாங்க முயல்பவர்கள்தாம்.

பிஜேபி, ஆர்எஸ்எஸ், விஹெச்பி இந்த நாட்டைப் பீடித்துள்ள புற்றுநோய்தானே?

இனப்போராட்டங்களில் தாக்குதல்களுக்குள்ளானவர்கள் அடித்தள மக்களும் கூலிகளும் தாம் என்பதைச் சரியாகச் சுட்டியுள்ளீர்கள்.

தலைப்பு பேட்டியின் இந்தப்பகுதிக்கு மிகப்பொருத்தம்.
27/07/08

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.