எல்கேஜி வகுப்பில் சேர்க்கும் போது என் மகன் கீர்த்தி யை பள்ளிக்கு முதல் நாள் அழைத்து சென்றிருந்த போது அங்கே மற்ற பிள்ளைகள் அனைத்தும் கதறி அழுது கொண்டிருந்தன . பெற்றோர் பிள்ளைகளை விட்டு விட்டு கிளம்ப முடியவில்லை . அந்த அளவுக்கு ஏதோ கொலைகளத்துக்கு கொண்டுவரப்பட்டு விட்டது போல குழந்தைகள் கதறி அழுது கொண்டிருந்தன . அந்த பள்ளி மிஸ் நான்கு பேர் தவித்துகொண்டிருந்தார்கள் . பெற்றோரை கிளம்ப சொல்லிகொண்டிருந்தார்கள் .
கீர்த்தியை வகுப்பு வாசலில் நிறுத்தினேன் . அவனுடைய ஸ்கூல் பாக் தோள் மீது . என்னை பார்த்தான் ' நீ போப்பா ' என்றான் . அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு பார்வை பார்த்தான் . நான் நின்று கொண்டிருந்தேன் . மிஸ் ஒருவர் வந்தார் . பையன் பெயர் கேட்டார் . சொன்னேன் . உடனே ' நீ வீட்டுக்கு போப்பா 'என்றான் . மிஸ் ஆச்சரியப்பட்டார் . அழாமல் ஒரு குழந்தை . வகுப்பிற்குள் நுழையும்போது திரும்ப என்னை பார்த்து ' போப்பா ' மறுபடியும் !
வகுப்பிற்குள் சென்று மிஸ் சொன்ன இடத்தில் உட்கார்ந்த பின் அழுகின்ற அவனுடைய வகுப்பு தோழர்களை பார்த்தான் . வெளியே ஆர்வத்துடன் நிற்கும் என்னை பார்த்து பார்வையால் 'ஏன் இன்னும் நிற்கிறாய் ?' வினவி, தலையால் 'போப்பா நீ ' சைகை . மிஸ் நான்கு பேரும் வியந்து நின்றார்கள் .
...........................................
நான் முதலில் இங்கே திருப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் திருச்சி போய் கீர்த்தியை ( பதினேழு வயது ) இங்கே வேலை பார்க்க அழைத்து வந்தேன் . அப்போது குடும்பம் இன்னும் திருச்சியில் .
நான் வேலை பார்த்த இடத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் கீர்த்தி வேலைக்கு சேர வேண்டிய நிறுவனம் . மூன்று பஸ் மாறி செல்ல வேண்டியிருக்கிறது . 'பச்சை பாலகனை வேலைக்கு விட வேண்டியிருக்கிறதே' . நான் வேலை பார்த்த நிறுவனத்தின் மேனேஜர் முதல் வாட்ச்மேன் வரை தலையில் அடித்துகொன்டார்கள் .
பஸ்ஸில் வரும்போது குமுறி அழுகிறேன் . கண்ணீர் வடிய குமுறி அழுகிறேன் .
கோடை விடுமுறை நேரம் . பையன்கள் ஆங்காங்கே கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . திருச்சியில் விடுமுறை தினங்களில் சிறுவர்கள் ,இவன் தோழர்கள் இவனை தேடி கிரிக்கெட் விளையாட கூப்பிட வந்து விடுவார்கள் .
'அங்கிள் ! இவன் தான் எங்க டீமுக்கு டெண்டுல்கர் ! விளையாட அனுப்புங்க அங்கிள் ! '
திருச்சியில் அந்த நேரத்தில் செஸ் விளையாட்டிலும் Under 18 district champion!
இப்போது வேலை பார்க்க திருப்பூரில்.
கீர்த்தி அப்போது பஸ்ஸில் ஜன்னல் ஓரமிருந்து என்னிடம் பேசிய ஒரே வார்த்தை ' கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா '
என் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . வாயில் கர்சிப்ப்பை வைத்து அழுத்திக்கொண்டு அழுகிறேன் .
பைபிள் பழைய ஏற்பாட்டில் ஒரு காட்சி . கடவுள் கேட்டார். அதனால் மகன் ஐசக்கை கொன்று பலி கொடுக்க வேண்டி அழைத்து கொண்டு மலையேறும் ஆப்ரகாம் .
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறங்கி ஒரு முக்கால் கிலோ மீட்டர் நடை . வாய் விட்டு அழுகிறேன் . கீர்த்தி இறுக்கமாக ' அழாதப்பா '
பனியன் கம்பனியில் அவனை ஒப்படைக்கிறேன் . அவனை இருவர் புரடக்சன் பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள் . அவர்கள் அவனிடம் வேலை என்ன என்று விளக்குவதை அலுவலக கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது . அவன் கவனமாக கேட்டுக்கொண்டு தலையாட்டி கொண்டு இயல்பாக உடனே பனியன்களை கணக்கிட ஆரம்பிக்கும் போது அங்கிருந்தே என்னை பார்க்கிறான் . தலையை ஆட்டி என்னை பார்த்து உதடு அசைத்து சொல்வது எனக்கு பார்க்க கிடைக்கிறது .
'நீ போப்பா '


Suresh Kannan Sir!
Somehow your comment is missing because of technical reasons it seems,
The answer for your question is -
To earn our daily bread.
Poverty!