Share

Sep 10, 2008

இப்பவும் நான் வீட்டுக்கு போனா ......

பிராந்தி கடை சாதாரண மனிதர்கள் விசித்திர கோலம் கொண்டு வெளியேறும் மாயா ஜால உலகம் . நிஜமாகவே தினம் ஒரு ஆளாவது அடி வாங்காமல் வெளியேற மாட்டான் . ஒரு தடவை பொங்கல் போதைக்காக மேலே பார் வசதி உண்டு என்பதால் மாடி ஏறியவன் இறங்கியவுடன் கரும்பை கடையின் கண்ணாடி அலமாரி மீது வீசி விட்டான் . கடையிலிருந்த ஆட்கள் அவனை ரணகளமாக்கி விட்டார்கள் . இது மாதிரி அடித்தால் மட்டுமே அடங்குவார்கள் என்பதால் நிறைய சம்பவங்கள் .

ஒருவன் குடித்து விட்டு இறங்கி வந்து என்னை பார்த்து ' உங்களை மாதிரி டிரஸ் பண்ண ஸ்ரீவில்லி புத்தூரிலேயே ஆள் கிடையாது . உங்க டிரஸ் சை பாக்கனும்னே நான் தினமும் தேவகி ஓட்டல் கிட்ட காலையில் நிற்பேன் சார் . நான் குடிச்சிட்டு பேசறேன்னு தயவு செய்து நினைக்காதிங்க சார் . போதையில் பேசறேன்னு தயவுசெய்து நினைக்காதீங்க ..இப்பவும் நான் வீட்டுக்கு போனா சோறு தான் திம்பேன் சார் . பீய திங்க மாட்டேன் . நம்புங்க ' என்று ஆரம்பித்தவன் நம்புனா நம்புங்க . ' இப்பவும் நான் வீட்டுக்கு போனா சோத்தை தான் திம்பேன் . பீய திங்கவே மாட்டேன் ' என்ற வாக்கியத்தை நிஜமாக உத்தேசமா நூறு தடவை சொல்லிகொண்டே கடை முன்னே நிற்க ஆரம்பித்தான் .

எவ்வளவு சொல்லியும் நகர மறுத்து உரக்க அந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்து விட்டான் . வேறு வழியே இல்லாமல் நானே அவன் கன்னத்தில் பொறி கலங்க அடித்து காலால் ஓங்கி இடுப்பில் ஒரு எத்து எத்திய அடுத்த நொடி கீழே விழுந்து எழுந்து அதற்கடுத்த நொடியில் சிட்டாக பறந்து விட்டான் . ஓடியே போனான் .

முதல் தடவை பிராந்தி குடிக்க வருபவன் கிட்டத்தட்ட சாந்தி முகூர்த்தத்துக்கு வருகிற பெண் போலவே வருவான் . இறங்கி போகும்போது தோரணையே வேறு .

பக்கத்து கிராமங்களிலிருந்து திருவண்ணாமலை திருவிழாவுக்கு வருகிறவர்களில் ஒரு குழு பிராந்தி கடைக்குள் வரும் .

' ஏலே ஒன்கிட்ட காசு இல்லன்னா கீழே இரு . நாங்க சாப்பிட்டு வாரோம் . ' ஒருத்தனை கீழே விட்டுவிட்டு மூணு பேரு மேலே போன பின்

கீழ உள்ளவன் ' ஏலே எப்படிலே இருக்கு .

' சும்மா கிடயம்லே . இப்ப தான ஆரம்பிச்சிருக்கோம் .'

ஏலே நல்லாருக்காலே '

படியிலிருந்து ஜன்க்னு குதிச்சி ஒருவன் ' ஏலே ஒன்னும் இல்லேலே . சாராயம் மாதிரி தாம்லே இருக்கு .சாராயம் எரிக்கும் . பிராந்தி எரிக்கல . நெஞ்ச இது எரிக்கல .அவ்வளவு தாம்லே .'

ஒரு ரௌண்டு இறங்கின வுடனே கர்ணன் ஆகிடுவான் .' மாபிள்ளே உனக்கு என்னலே வேணும் . ஏங்கிட்ட கேளு ' என்று பணத்தை எடுத்து வீச ஆரம்பித்து விடுவான் .

ஒருத்தன் ' தம்பி , ஒழுக்கம் தாண்டா முக்கியம் . வார்த்தை சுத்தம் வேணும்டா டே ' -- இவன் தான் தர்மர் .

இன்னொருத்தன் குடிச்ச போதையில் பார்த்தவன் காலிலெல்லாம் விழுந்து ' தெய்வமே ' என சரண்டர் ஆவான் .விபீசணன் !

இப்படி தொன்ம பிம்பங்கள் நிறைய ...

2 comments:

  1. சரிங்க சார்.. நீங்க எப்படி?

    - ஜுர்கேன் க்ருகேர்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.