Share

Sep 4, 2008

வராக அவதாரம்


ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தேன். பாலத்தைத் தாண்டி இடது புறம் திரும்பிய போது ஆற்றின் கரையோரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறிய கூட்டத்தைப் பார்த்து ஸ்கூட்டரை நிறுத்தி உட்கார்ந்தவாறே என்ன காரணமாயிருக்கும் என்று பார்த்தேன். வற்றிப்போன நொய்யலில் புதருக்குள்ளே தப்பிக்க முயன்ற பன்றியைப் பிடிக்க நடக்கும் முயற்சி. அதை வேடிககைப் பார்க்கத்தான் இந்தக் கூட்டம். பன்றிக்கு தெரிந்து விட்டது மரணம் நெருங்குவது. அதன் கதறல் கேட்கிறது. ஆற்றுக்குள்ளே ஐந்தாறுபேர் முற்றுகையை மீறி புதருக்குள் பிடிபடாமல் சமாளிக்கப் பார்க்கிறது. மேலே ஒருவன் அதன் குட்டியை தூக்கிப்பிடித்து பன்றியிடம் காட்டுகிறான். குட்டியும் கதறுகிறது. ஆபத்தை எதிர்கொண்டு போராடும் பன்றி தன் குட்டியின் கதறல் கேட்டவுடன் கவனம் சிதறி ஸ்தம்பித்து நிற்கும் போது மாட்டிக்கொண்டு விட்டது. அதன் தாய்மை உணர்வுதான் எமனாகி விட்டது.


ROALD DAHL எழுதிய 'PIG' கவிதையில் வரும் பன்றி புத்திசாலி. நிறைய படித்து படித்து அதற்கும் 'தேடல்' அதிகமாகி விடுகிறது. 'இந்த வாழ்க்கை எதற்காக. நான் பன்றியாக இந்த பூமியில் பிறந்ததன் நோக்கம் என்ன?' என்று தத்துவக் கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டு பலமாக யோசிக்கிறது.

கவிதையின் இந்தப் பகுதியைப் படிக்கும் போது எனக்கு என்ன தோன்றியதென்றால் 'அந்தப் பன்றி நிறைய புத்தகங்கள் படிக்கிற பழக்கம் உள்ளதாகையால் PAULO COELHO எழுதிய 'THE ALCHEMIST' நாவல் படித்து விட்டு தன்னுடைய 'PERSONAL LEGEND' என்ன என்று 'தேடல்' ஏற்பட்டு விட்டது அதற்கு'.


கவிதையில் சட்டென்று கண்டுபிடிக்கிறது. தன்னைக் கொன்று அறுத்து இறைச்சிக் கடையில் விற்பனை செய்ய பண்ணை முதலாளி முடிவு செய்திருக்கிறான். வாழ்வின் அர்த்தம்! ஒரு நண்பகல் முன்பகுதியில் பண்ணைக்காரன் ஆயுதத்துடன் பன்றியை நெருங்குகிறான். அந்த லண்டன் பன்றி முன்னெச்செரிக்கையாக அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே விழ வைத்து நிதானமாக தலைமுதல் பாதம் வரை தின்று தீர்க்கிறது. அப்புறம் தனக்குள் சொல்லிக் கொள்கிறது. ' எனக்குள் ஒரு HUNCH . இவன் என்னை LUNCH ஆக்க முடிவு செய்திருக்கிறான். நான் முந்திக் கொண்டு இவனைச் சாப்பிட்டு விட்டேன்.
FUNNY POEM !


விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம். பிருத்வி என்ற பூமியை இரண்யாக்ஷன் கடத்திக் கொண்டு போய் கடலுக்கடியில் ஒளிந்து கொள்கிறான். அப்போது தான் விஷ்ணு வராக அவதாரம் எடுத்து சண்டையிடுகிறார். இந்தச் சண்டை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. முடிவில் பிருத்வி என்ற பூமா தேவியை மீட்பதற்காக அவனைக் கொன்று, பின்னர் தான் மீட்ட பூமா தேவியை மணம் புரிந்து கொள்கிறார் விஷ்ணு. அவதாரங்களில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த அவதாரம் வராக அவதாரம்தான் போலும். கிருஷ்ணனின் ஆயுள் நூற்றி இருபது ஆண்டுகள்தான். வராக அவதாரத்தில் கொல்லப்பட்ட இரண்யாக்ஷன் தான் பிரகலாதனின் பெரியப்பா. இரண்யாக்ஷனின் உடன் பிறந்த இரண்யகசிபுவை கொல்வதற்காக விஷ்ணு எடுத்த INSTANT AVATAR நரசிம்மம் சில நிமிடங்களில் முடிவதால் மிகச்சிறிய அவதாரம். வாமன அவதாரம் மிகச்சிறிய உருவ அவதாரம்.


பாரதியின் சிறுகதை ஒன்று. கடவுள் ஏதோ கோபத்தில் ஒரு முனிவரைப் பன்றியாக மாறும் படி சபிக்கிறார். முனிவர் பன்றியாகி விடுகிறார். KAFKA போல பாரதியும் METAMORPHOSIS கதை எழுதியிருக்கிறார். பன்றியாக மாறிய முனிவருக்கு அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. எப்படி ஒரு ஆச்சாரமான வாழ்க்கை வாழ்ந்தவர். தினமும் மூன்று வேளை குளித்து பூஜை புனஸ்காரம் என்று வாழ்ந்து விட்டு இப்போது இப்படி பன்றியாக சகதி சாக்கடை என்று உழன்று கொண்டு மலத்தைத் தின்று கொண்டு ரொம்ப, ரொம்ப சிரமப்பட்டுப் போகிறார். சிலகாலம் கழித்து பகவான் மீண்டும் வந்து 'உமக்குச் சாப விமோசனம். மீண்டும் நீர் முனிவராக மாறிக்கொள்ளலாம்' என்கிறார். முனிவரோ 'என்னை இப்படியே விட்டு விடுங்கள் நான் பன்றியாகவே இருந்து விடுகிறேன். இதுதான் மிகவும் செளஜன்யமாக இருக்கிறது' என்று இறைஞ்சுகிறார். IN THE LONG RUN ONE GETS USED TO ANYTHING.
சாரு நிவேதிதாவின் சிறுகதை 'அவ்வா'. மகன் பி.எஸ்.ஸி. பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டி அவ்வா கடைசி பன்றியை விற்க முடிவு செய்கிறார். 'வேண்டாம் அவ்வா. பொட்டப்பன்னி. குட்டி போட்டா நமக்குத்தானே நல்லது' என்று பட்டப்படிப்பு படிக்கும் மகன் சொல்லும்போது அவ்வாவின் பதில் ' நீ படிச்சுட்டு வேலைக்குப் போனா நாம நூறு பன்னி வாங்கலாம்'
புதுவையில் BEEF, PORK நல்ல ருசியாக சாப்பிடக் கிடைக்கும். நேரு தெருவிலிருந்து பீச் போகும் போது தெருக்குத்தலாக ஒரு வியட் நாமிஸ் ரெஸ்டாரெண்ட் அந்தக் காலத்தில் இருந்தது. PORK அங்கே சுவையாக கிடைக்கும். அதற்காகவே அங்கே அவ்வப்போது சாப்பிடப் போவேன். நான்காவது தடவையோ ஐந்தாவது தடவையோ வழக்கமாக பரிமாறுபவரிடம் யார்? எந்த ஊர்? - பேச்சுக் கொடுத்தேன். புதுவைக்கு தான் வந்த காரணம் ஆன்மீகத் தேடல்தான் என்றார். 'சார்! சென்னையிலேயே ஹோட்டல்களில் சர்வராக ரொம்ப வருடம் இருந்தவன் நான். பாண்டிச்சேரி புண்ணியபூமி சார். எத்தனை மகான்கள், சித்தர்கள் இங்கே அடக்கமாயிருக்கிறார்கள் தெரியுமா? அதனாலேயே சென்னையை விட்டு பாண்டிக்கு வந்து இந்த ரெஸ்டாரெண்டில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். எட்டுமணி நேர வேலை முடிந்ததும் தினமும் ஒரு சமாதிக்குப் போய் விடுவேன். தியானம் செய்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமாதியில் போய் உட்கார்ந்து விடுவேன்.' சுடச்சுட எனக்கு PORK பறிமாறிக்கொண்டே உற்சாகமாகக் கூறினார்.


SIR FRANCIS BACON தனக்கு SHAKESPEARE என்ற புனைபெயரை வைத்துக் கொண்டு நாடகங்கள் எழுதினார் என்று ஒரு தியரி உண்டு.
SIR FRANCIS BACON WROTE SHAKESPEARE PLAYS !
டோனலி, பிரான்சிஸ்கேர், மார்க் ட்வைன் ஏன் நீட்ஷே கூட SHAKESPEARE AUTHORSHIP பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஒரு வேடிக்கையான ஓவியம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. 'ஒரு அறை. சுவரில் ஷேக்ஸ்பியரின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. மேஜையில் SIR.F.BACON என்ற பெயர்ப்பலகை. நாற்காலியில் ஒரு பன்றி அமர்ந்து மேஜையில் உள்ள ஒரு தாளில் எழுதுகோலால் HAMLET என்று சீரியஸாக சிந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறது. ( BACON என்றால் பன்றி இறைச்சி) ஓவியத்தின் கீழே எழுதப்பட்டுள்ளது. 'ஷேக்ஸ்பியரை நம்பாத புலவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்தப் படம் சிறந்த பரிசு. அந்தப் பன்றி 'ஹேம்லட்' என்று தான் எழுதிக் கொண்டிருக்கிறது'.


நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது 'கல்கண்டு' பத்திரிக்கையில் படித்த துணுக்குச் செய்திஒன்று இப்போதும் பசுமையாக நினைவில் நிற்கிறது. 'பத்து புத்திசாலி மிருகங்களில் பன்றியும் ஒன்று'

வாகனங்களுக்கும் பன்றிக்கும் ஏழாம் பொருத்தம் . கார் ,வேன் போன்றவற்றில் பன்றி அடிபட்டு விட்டால் உடனே அந்த வாகனத்தை விற்று விடுவார்கள் .பன்றி மீது மோதிய வாகனம் உறுதியாக பெரிய விபத்துக்குள்ளாகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு .


இஸ்லாமியர்களுக்கு பன்றி மீது உள்ள அருவருப்பு தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. பன்றி சைத்தானின் குறியீடு. 'பன்றி' என்ற வார்த்தையை உச்சரித்தாலே 'ஹர்ராம்'. இஸ்லாமிய உணர்வுகளைக் காயப்படுத்த மசூதிக்குள் 'பன்றி இறைச்சி'யை வீசுகின்ற காட்டுமிராண்டித் தனம் அடிக்கடி நடந்திருக்கிறது.
பெருமாளே பன்றியாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்றாலும் வைஷ்ணவர்களுக்கும் பன்றி மீது ஒரு மதிப்பும் கிடையாது, அசூயைதான். மலம் தின்னும் துஷ்ட மிருகம்!


கவிஞர் முனியப்பராஜின் 'அழகின் மீதான கற்பிதம்' கவிதை வாஞ்சையுடன் இப்படி முடிகிறது.
" உனக்கெனப்பட்ட உணவைத் தேடி
மேய்ந்து கொண்டிருந்தாய் உன் உறவுகளோடு
இறைஞ்சுகின்ற முழு வெளிப்பாட்டுத் தோற்றத்துடன்
கீழிறங்கி உன் மேல் கைகளை வைத்துத் தடவுகிறேன்
பன்றி அழகுதான்
கற்பிதங்களை உலவ விட்ட மனிதர்களை விட "


மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எங்கள் பேராசிரியர் ஆர். நெடுமாறன் (ஆங்கில இலக்கியம்!) அவர்கள் மேற்கோள் காட்டிய தமிழ் புதுக்கவிதை ஒன்று.
“வானத்தில் திரியும் பறவைகளை மட்டும் பாடாதீர்கள்
மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்!”

Pathivukal .com ல் பிரசுரமானது

4 comments:

 1. Dear RP, this article will cure my inner mind allergies. Last 2 lines made me rethink what I thought.
  (k i m e k)

  thank u

  ReplyDelete
 2. பன்றியை பற்றி இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா? :-) ரொம்ப நன்றாக இருக்கு பதிவு. தெரிந்த கதைகள் தான், ஆனால் சொல்லிய விதம் அழகு :)

  amas32

  ReplyDelete
 3. நேற்றிலிருந்து உங்கள் பதிவுகளை படிக்கிறேன். அனைத்தும் அருமை!!..
  'வட்டியும் முதலும்' இராஜுமுருகன் அவர்களின் எழுத்துநடையோயென்றெனக்கு இடையிடையே தோன்றுகிறது!!..வாழ்க்கையின் அனுபவங்களை கற்பனையில்லாமல் உங்கள் சொற்கள் பிரதிபலிக்கின்றன!!..
  வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 4. உங்கள் எழுத்துப் படிக்க படிக்க தெவிட்டாத தேனமுதமாக உள்ளது, இந்த இடுகைக்கு என்னை அழைத்து வந்தமைக்கு நன்றி :-)

  amas32

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.