Share

Sep 29, 2008

எஜமான் பெற்ற செல்வமே

இங்கே இரண்டு வருடம் முன் திருப்பூர் ஷண்முகானந்தா சபாவில் ராஜேஷ் வைத்யாவின் வீணை கச்சேரி ஏற்பாடு செய்திருந்தது .ஜய்வாபாய் பள்ளியில் .
கச்சேரியில் கடைசியாக நேயர் விருப்பம் ! சீட்டு குவிந்து விட்டது .சினிமா பாடல் கூட வாசிக்க ஆரம்பித்தார் . 'மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு 'வீணையில் வாசித்து விட்டு 'மளிகை கடை லிஸ்ட் போல நிறைய வந்திருக்கிறது . இதை எல்லாம் வாசித்தால் விடிந்து விடும் ' என்றார் .
நான் அதன் பின் ஒரு பாடல் பற்றி சீட்டு அனுப்பினேன் . அவர் வீணை வாசித்து கொண்டே அந்த சீட்டை பார்த்தார் .
G .ராமநாதன் இந்த ராஜேஷ் வைத்யா வுக்கு சொந்த பெரியப்பா . அவர்பெரிய இசையமைப்பாளர்.
பின்னணி பாடலும் பாடியிருக்கிறார் . மற்றொரு இசையமைப்பாளர் இசையில் .
படம் 'அல்லி பெற்ற பிள்ளை'
பாடல் உருக்கம் நிறைந்தது . G .ராமநாதன் குரலில் ஒரு தேம்பல் இருக்கும் .

"எஜமான் பெற்ற செல்வமே . என் சின்ன எசமானே ! பசும் பொன்னே என் கண்ணே அழாதே அழாதே ."- அழுதுகொண்டே குதிரை பாடும் இந்த பாடலை "R.P.ராஜநாயஹம் கேட்ட பாடல்" என்று குறிப்பிட்டு அந்த பாடலை வாசிக்க ஆரம்பித்த ராஜேஷ் சரணம் வீணையில் வாசிக்கும் போது கண்ணை துடைக்க ஆரம்பித்தார் .
'தங்கமே உனக்கு தந்தை இல்லை .
தொண்டன் எனக்கு தலைவன் இல்லை .
அன்புள்ள அன்னைக்கு தீராத தொல்லை .......'
வீணை வாசிப்பதை சற்று நிறுத்தி துணியால் கண்ணை துடைத்துகொண்டே இருந்தார் .
நல்ல கூட்டம் .நான் பின்னால் இருந்தேன் . கண்ணில் எதோ தூசி விழுந்து விட்டது என்றே நினைத்தேன் . சிரமப்பட்டு தொடர்ந்தார் .
கச்சேரி முடிந்தவுடன் டூ வீலர் எடுக்க வரும்போது ஒருவர் ' என்ன சார் ! நீங்க கேட்ட பாடலை வாசிக்கும் போது வீணை வித்வான் அழ ஆரம்பித்து விட்டார் .'
தொடர்ந்து மூன்று பேர் அப்படி சொன்னார்கள் . தலைமை தபால் ஆபிஸ் பக்கம் டூ வீலரில் என்னை ஓவர் டேக் செய்து மீண்டும் ஒருவர் 'என்ன சார் , ராஜேஷ் அழுது விட்டார் . இப்படி செய்து விட்டீர்கள் ' என்று சொல்லி விட்டு போனார் .

1 comment:

  1. ......................
    ('ganatha maunam' endru nerapikollungal)

    Anbun
    Ashok

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.