Share

Jan 27, 2019

விஜய்காந்த்


அறிமுகமேயில்லாத ஒருவரை எப்போதும் பல கட்டங்களில் பார்க்க நேர்வது. அதிலும் அப்படிப்பட்டவர் ரொம்ப பிரபலமாகி விடும்போது அப்படிப்பட்டவரை சாதாரணமான மனிதராக, பார்த்த, சந்தித்த நினைவுகள் பசுமையானவை.  சம்பந்தப்பட்டவர் நினைவில் நான் கொஞ்சம் கூட நிலைத்து விடவில்லை.
 ஒரு எழுத்தாளனாக எனக்கு அந்த மனிதர் பற்றிய விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.


’இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து முடித்து விட்ட பின் விஜய்காந்த் மதுரையில் “டேய், இவன் சினிமாவில் நடிச்சவன்டா” என்று சத்தமாக சொல்லுமளவுக்கு பிரபலம்.
அப்புறம் ரெண்டு மூனு ஓடாத படங்களில் இரண்டாவது கதாநாயகன். இவருடன் முக்கிய கதாநாயகனாய் நடித்த நடிகனையெல்லாம் பேர் சொல்லி இன்று புரியவைக்கவே முடியாது.
அப்போதெல்லாம் அவர் போட்டிருக்கும் வெள்ளை நிற சர்ட்டில் க்ரேய் டிசைன் செய்திருக்கும். ஒரு க்ரே கலர் பேண்ட். எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. ஒரு பைக் ராஜ்தூத்தாய் இருக்கலாம். அல்லது வேறு பைக்காகவும் இருக்கலாம்.
அடிக்கடி பாண்டி பஜார் ரோகினி இண்டர்நேஷனல் லாட்ஜுக்கு வருவார். நான் லாட்ஜின் முன் பகுதியில் அப்போதைய என் நண்பர்கள் ( மிகவும் முதியவர்கள். பெருமாள் நாயுடு, சுப்ரமண்ய ஐயர் போன்றவர்கள்) புடை சூழ சேரில் அமர்ந்திருப்பேன். விஜய் காந்த்தை நான் பார்க்க நேரும்போதெல்லாம் எப்போதும் என்னை கவனிப்பார். ஒரு பார்வை தீர்க்கமாய். ஒரு தடவை கூட என் மேல் விஜய்காந்த் பார்வை படியாமல் போனதேயில்லை.
கண்ணதாசன் வீட்டிற்கருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.
பின்னால் அவர் படங்களில் மெஷின் கன் தூக்கிக்கொண்டிருப்பதை ரசிக்க முடிந்ததில்லை.
’அகல் விளக்கு’ அன்னக்கிளி செல்வராஜ் படத்தில் ஷோபாவுடன் விஜய்காந்த். ஆஹா அந்தப்பாட்டு “ ஏதோ நினைவுகள், கனவுகள், மனதிலே மலருதே”. அகல் விளக்கு படு மோசமான தோல்விப்படம்.
’நூலறுந்த பட்டம்’ என்று ஒரு படம் அப்போது பூஜை போடப்பட்டது.  விஜய்காந்த் அதில் வில்லனா, இரண்டாவது கதாநாயகனா? சந்திரசேகர் கூட அந்தப்படத்தில் விஜய்காந்த்துக்கு குடை பிடிக்கிற ஒரு அல்லக்கை ரோல் செய்திருந்தார்.
எனக்கும் இன்விட்டேஷன் தரப்பட்டிருந்தது.
நடிகர்கள் லிஸ்டில் இரண்டாவதாக விஜய் காந்த் பெயர் போடப்பட்டிருந்தது.
(படம் ரிலீசான போது விஜய் காந்த் மார்க்கெட்டிற்கு வந்து விட்டதால் டைட்டிலில் முதலாவதாக பெயர் வந்திருந்தது.)
மாடியில் இருந்த என் அறைக்கு கீழ் தான் ’நூலறுந்த பட்டம்’ படம் எடுத்த படக்கம்பெனி ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்தது.

பூஜை நடந்த அன்று அதன் பின் மாலை நேரத்தில் தி.நகர் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே நான் தங்கியிருந்த மேன்சனின் பால்கனியும் அல்லாத மொட்ட மாடியுமல்லாத இடத்தில் ஒரு பத்து பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவர் விஜய்காந்த்.

அரைவட்டமாக அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் விஜய் காந்த் அப்போது ‘பழைய படம் ஒன்றில் லிஃப்ட்டில் ஒரு பாட்டு வரும். நல்ல பாட்டு. அந்த பாட்டு என்னன்னு எவ்வளவு யோசிச்சாலும் ஞாபகம் வர மாட்டேங்குது’ என்று குழம்பினார்.
நான் உடனே “ அந்த படம் ’நிலவே நீ சாட்சி’. எம்.எஸ்.வி பாடியிருந்தார். “நீ நினைத்தால் இன்னேரத்திலே ஏதேதோ நடக்கும்” நான் பாடியே காட்டினேன்.
விஜயகாந்த் முகம் ஆசுவாசத்துடன் மலர்ந்தது. அவருடைய அந்த பிரகாசமான கண்கள் விரிந்தன.. அந்த பிரத்யேக சிரிப்பு. ” இந்த பாட்டு தான் சார். இதே பாட்டு தான். லிஃப்ட்ல ஷூட் பண்ணியிருப்பாங்க.”
இந்த ஒரு சின்ன உரையாடல் தான் எனக்கும் விஜய்காந்த்துக்கும் நடந்த ஒரே interaction.
இயக்குனர் விஜயன் “தூரத்து இடி முழக்கம்” விஜய் காந்திற்கு ஒரு நல்ல படம்.
நான் மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலை ஒட்டிய சவ்வாஸ் ரெடிமேட் கடைக்கு விசிட் செய்வேன். அப்போதெல்லாம் சினிமா நடிகரான பின்பும் விஜய்காந்த் ராதாஸ் கடையில் நின்று கொண்டிருப்பார். சவ்வாஸ் என் நண்பர்கள். ராதாஸ் ஜவுளிக்கடையில் அவருடைய நண்பர்கள். பின்னால் ராதாஸ் அவருடன் கடும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தார்கள் என்று அந்த ஏரியாவில் பரவலாக பேச்சு. அப்படி இல்லையென்றால் தான் அவர்கள் விஜய் காந்த் பட தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு இப்ராஹிம் ராவுத்தர் போல உயர்ந்திருப்பார்களே.
’சட்டம் ஒரு இருட்டறை’ அவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தது. அப்படியும் ஒரு ரவுண்டு வந்த பின் இரண்டு வருடம் சும்மா வாய்ப்பில்லாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. மீண்டும் “ சாட்சி” அடுத்த ரவுண்டை ஆரம்பித்து வைத்தது.
மூன்றாவது ரவுண்டு “ஊமை விழிகள்” படத்தில் ஆரம்பித்தது. அப்புறம் செம டாப்.
விஜய் காந்திற்கு ஒரு ரசிக பட்டாளம் கிராமங்களில் பரவலாக ஏற்பட்டதால் நட்சத்திர அந்தஸ்து.
பெரும் தடைகளை உடைத்துத் தான் மிகுந்த பிரபலத்தை அவர் கண்டடைந்தார்.

வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டையில் பார்க்க விஜய்காந்த் ரொம்ப பிரமாதமாக இருப்பார்.
கேப்டன் பிரபாகரன், ரமணா இரண்டும் அவருடைய மிக வெற்றி பெற்ற படங்கள். அந்த இரு படங்களைக் கூட நான் பார்த்ததில்லை.
கமல் ரசிகனுக்கு விஜய் காந்த் படங்கள் சுவைக்காது.

’விஜய்காந்திற்கு ஒரு போஸ்ட் மேன் வேடம் கூட என் படங்களில் கொடுக்க மாட்டேன்’ என்று மட்டம் தட்டிய பாரதிராஜாவின் ’தமிழ்செல்வன்’ படத்தில் கூட கதாநாயகன்.
அவர் படங்களில் நடித்த வில்லன்கள் மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் பிரபலமானார்கள். பிரபல வில்லன்கள் பலர் அவர் படங்களில் நடித்தார்கள். சரத்குமார் அவர் படத்தின் மூலம் தான் மார்க்கெட்டிற்கு வர முடிந்தது.
’ஏழை ஜாதி’ சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அவரை பார்த்தேன். அங்கு மனோரமாவை பார்க்க நான் போய் இருந்த போது என் மீது ஆர்க் ப்ரூட் லைட் வெளிச்சம் தற்செயலாக திருப்பப்பட்டது. அப்போது விஜய் காந்த் என்னை கவனித்துப் பார்த்தார். நல்ல மார்க்கெட்டில் இருந்த நேரம். என்னை முன்னர் அடிக்கடி பார்த்திருக்கிற பழைய மதுரைக்காரன் என்று அடையாளம் தெரிந்திருக்காது.
விஜய்காந்த் மார்க்கெட் டல்லானவுடன் அரசியலுக்கு வந்த போது அதை நான் சிலாகிக்கவில்லை. அவரை Nigger MGR என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.
மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லாவிட்டாலும்
 அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா தயவில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர முடிந்தது.  மோடியுடன் கூட்டணி போட முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வந்தது. கம்யூனிஸ்ட்கள் கூட அவருக்கு வால் பிடித்தார்கள். வைகோவும், திருமாவளவனும் முதல்வர் வேட்பாளராக விஜய்காந்தை தூக்கிப்பிடித்தார்கள்.

தே.மு.தி.க அரசியல் ஆரோக்கியமானதல்ல. தனித்துவமில்லாதது. மனைவி, மைத்துனர், இப்போது மகன் இவர்களை உள்ளடக்கிய குடும்ப கட்சி. மக்கள் செல்வாக்கேயில்லாத மற்றொரு குடும்ப கட்சி.
ஆண்டவனோடும் மக்களோடும் மட்டும் கூட்டணி என்று சொல்லி விட்டு, பின்னால் அவர் அரசியல் கட்சிகளை தவிக்க விட்டு நடத்திய சந்தர்ப்ப வாத கூட்டணி கண்ணாமூச்சி..

அரசியலில் அவர் பெறப்போகும் சரிவு பற்றி சென்ற 2016 சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் நான் தெளிவாக கணித்திருந்தேன்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

2009ம் ஆண்டு மதுரை டவுன் ஹால் ரோடு தாஜ் ஹோட்டலுக்கு  போய் இருந்தேன். தாஜ் பழைய சிறப்பை இழந்திருந்தது.

அப்போது மொஹிதின் பாய் அங்கே சர்வராய் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருந்தாலும் என்னை பார்த்தவுடன் உற்சாகமாக எனக்கு பரிமாற ஆரம்பித்தார். என்னிடம் கேட்டார். “ஒங்களுக்கு ஞாபகமிருக்கா? நீங்க உங்க ஃப்ரண்ட்ஸோட இந்த டேபிள்ள உட்கார்ந்திருப்பீங்க. விஜய காந்து அவரோட ஃப்ரண்டுங்களோட அந்த டேபிள்ள உக்காந்திருப்பாரே. நினைவிருக்கா?”






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.