Share

Jan 8, 2019

காரைக்குடி மணியின் மிருதங்க தனி ஆவர்த்தனம்


திருச்சியில் ரசிக ரஞ்சனி சபா, ராமகான சபா இரண்டிலும் அப்போது நான் மெம்பர்.
மிருதங்கம் காரைக்குடி மணி தனி ஆவர்த்தனம் மிகவும் உன்னதமானது.
ரசிகரஞ்சனி சபாவில் 1999ல் இவருடைய மிருதங்க தனி ஆவர்த்தன நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாத நிகழ்வு.

மிருதங்கம் மட்டும் தனி ஆவர்த்தனம் என்பது சங்கீத உலகில் ஒரு புதுமை. அதை தன் தனித்துவ பாதையாக ராஜநடை நடந்து காட்டியவர் காரைக்குடி மணி.
அன்று கஞ்சீரா ஜி. ஹரி சங்கர் தான் அவருக்கு இணைந்த பக்க வாத்தியம்.
நிகழ்ச்சி ஆரம்பித்த போது காரைக்குடி மணி நிமிர்ந்து சபையை பார்த்தார். ஒரு ஐந்து பேர் தான் உட்கார்ந்திருந்தோம். எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இதை அவர் அவமானமாக எடுத்துக்கொண்டால்…? ஒரு வகையில் அப்படி ஒரு வித்வானுக்கு இது ஒரு மன வேதனையைத் தானே தந்திருக்கும்.

ஆனால் காரைக்குடி மணி எங்கள் ஐவரையும் பார்த்து புன்னகைத்தார். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துப் பார்த்தார். பிறகு சொன்னார்.
 “ இங்கே ஒக்கார்ந்திருக்கவா ஒவ்வொருத்தரும் ஒரு தேவ கணம். ஒவ்வொருத்தரும் ஆயிரம் பேருக்கு சமானம். இவாளுக்காக மிருதங்கம் நான் வாசிப்பது என் பாக்யம். இங்கே ஐயாயிரம் பேர் இருக்காங்கன்னு தான் நம்புறேன்.”
தனி ஆவர்த்தனத்தை ஆரம்பித்தார்.
ஒரு பெருந்திரளுக்கான கச்சேரி போன்று அன்று நான் உணர்ந்தேன்.
அவர் என்னை தேவ கணம் என சொன்னதும் நான் ஒருவன் ஆயிரம் பேருக்கு சமானம் என தீர்க்கமாக கூறியதும் எனக்கு பெரும் ஆசியாக உணர்ந்தேன்.

 கூட்டம் பெரிதல்ல எதிர் காலத்தில் நான் கண்ட மேடைகளில் என்னை கலங்காதிருக்கச் செய்தது. பெரும் ஆன்ம பலத்தை அந்த வினாடியில் எனக்கு தந்தது.
தனி ஆவர்த்தனம் மிக மேன்மையாக, சுகமாக செவியை நிரப்பியது. சொகசுகா மிருதங்க தாளமு. நெஞ்சு விம்மியது. துரித காலப்ரமாண வாசிப்பில் கண் நீரால் நிரம்பி வழிந்தது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு மகத்தான கச்சேரி.
தனி ஆவர்த்தனம் முடிந்த போது பார்த்தேன். இன்னும் ஐந்து பேர் ஆடியன்ஸில் சேர்ந்திருந்தார்கள். மொத்தம் பத்து தேவ கணங்கள். பத்தாயிரம் பேருக்கு சமானம்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.