Share

Jan 31, 2019

முதுமை துயரம்


க்ரியா வெளியிட்ட வெ.ஸ்ரீராம் ஃப்ரஞ்ச் மொழிபெயர்ப்பு “சின்ன சின்ன வாக்கியங்கள்” நாவலில் “முதியோர்களுடன் பிரச்சினை என்னவென்றால், அவர்களுடைய போக்கிலேயே அவர்களை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தி முக்கியத்துவம் அளிக்க இப்போது அவர்களுக்கு அப்பா அம்மா இல்லை என்பது தான்.”
முதுமையின் அவலம் பற்றி அற்புதமான பார்வை. ஃப்ரஞ்ச் பெண் எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியது.

ஏனென்றால் புத்ர பாக்யங்கள் தங்கள் முதிய பெற்றோரின் பிரச்னைகளை அறியும் அளவுக்கு சூழல் கிடையாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பம், புதரம் என்று ஆகி விடும்போது கவனம் திசை மாறி விடுகிறது. இன்னொன்று பிள்ளைகளுக்கு ஐம்பது அறுபது வயது ஆகும் நேரத்தில் பெற்றோருக்கு முதுமையின் தள்ளாமை பிரச்னை வருகிறது. பிள்ளைகள் முதுமையின் இளமை எனப்படும் வயதில் லோகாயுத சிக்கல்களில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் துயர நிலை அப்போது. மீண்டும் குழந்தையாகி விட்ட தங்களின் முதிய பெற்றோரை போஷிப்பது Herculian Task.

பியரெத் ஃப்லுசியோ இன்று சொல்கிற விஷயத்தை விளக்குவது போல எவ்வளவோ வருடங்களுக்கு முன்னரே தி.ஜானகிராமன் “காட்டு வாசம்” சிறுகதையில் தன் பிரத்யேகமான கிண்டல் நையாண்டியுடன் தொட்டுக்காட்டியுள்ளார் : ”இந்த உலகத்தில் அன்பு இருக்கிறதே, அன்பு. அது இறங்கு முகமாகப் போகும். பக்கவாட்டிலே போகும். மேல் நோக்கிப் போகாது.
அப்பனுக்குப் பிள்ளை மேல் ஆசை. அந்தப் பிள்ளைக்கு  அவன் பிள்ளை மேல் ஆசை. இப்படிப் போகுமே ஒழிய, பிள்ளைக்கு அப்பாவிடம் இருக்கிறது என்கிற சாத்தியம் இல்லை. அப்பாவிடம் பயம் தான் இருக்கும். பொண்டாட்டியிடமும் பிள்ளையிடமும் இருக்கிற அன்பும் ஆசையுமா இருக்கும்?
நம் சாஸ்திரங்கள், கவிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஏன் ஐயா? பிள்ளையிடம் அன்பாக இரு. பொண்டாட்டியிடம் ஆசையாக இரு என்று சொல்லக்கூடாதோ? ஆக, இந்த அன்பு போகிற போக்கு இறங்கு முகம் இல்லையா? மேல்நோக்கிப் போகிறது இயற்கைக்கே முரண் என்று ஆகவில்லையா?”
தி.ஜானகிராமன் முதுமையின் குழந்தைமை, தள்ளாமை துயரத்தை “விளையாட்டு பொம்மை” கதையிலும் முதுமையின் வக்கிரத்தை “பாயாசம்” மற்றும் ”அவலும் உமியும்” குறுநாவலிலும் அபூர்வ இலக்கிய நேர்த்தியுடன், ஓவிய பாணியில் வரைந்து காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.