தோழர் ஜீவா அறுபது வருடங்களுக்கு முன் அமெரிக்கன் கல்லூரி மேடையில் பேசும்போது குறிப்பிட்டாராம். “ பாரதி அமுத இலக்கியம். பாரதி தாசன் நச்சு இலக்கியம்.”
அருணாச்சலம் ரோட்டில் முருகாலயா ஸ்டுடியோவில் சினிமா ஷூட்டிங்
நடக்கும். இப்போது இந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் தான் சூரியா ஹாஸ்பிட்டல் இருக்கிறதா?
உறுதியாக தெரியவில்லை.
இந்த முருகாலயா ஸ்டுடியோவில் கவிஞர் கே.டி.சந்தானத்தோடு நான்
பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயம் சொன்னார். “ தோழர் ஜீவா மேடையில் உணர்ச்சி
வேகமாகப் பேசும் போது மைக்கை விட்டு பக்கவாட்டில் நகர்ந்து ஓரமாக போய் விடுவார். மீண்டும்
மைக்கிற்கு வந்து பேசுவார். திரும்பவும் மைக்கை விட்டு ரொம்ப விலகி நகர்ந்து விடுவார்.”
தோழர் ஜீவா பற்றி நினைத்தாலே சுந்தர ராமசாமி எழுதிய “ காற்றில்
கலந்த பேரோசை “ ஞாபகம் வரும். “இப்படி மண்ணாந்தையா போயிட்டோமே”
தோன்றிற் புகழோடு தோன்றுக. எனக்கு பிறக்கும் போதே ஒரு பெருமை
கிடைத்தது. தோழர் ஜீவா பிறந்த ஆகஸ்ட் 21ம் தேதி தான் நானும் பிறந்தேன்.
தொடர்ந்த ஏழ்மைக்கு நேர்மை தான் காரணம்.
எம்.ஆர் ராதா சிறையிலிருந்து வந்த பின் மதுரை மேல மாசி வீதியில்
நாடகம் போட்டார். சரியான கூட்டம். ஆனாலும் அவருடைய முகபாவங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும்
போது தெளிவாக ஏதோ க்ளோசப் போல தெரிந்தது.
மேடையில் ராதாவை பார்ப்பது ஒரு வித்தியாசமான ஒன்று. “டேய்,
நடிப்ப பாருங்க. ரசிங்க. ஆனா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடாதிங்கடா பாவிங்களா”
மேல மாசி வீதியில் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே
முகம் சுண்டி முன் பகுதியை பார்த்து “அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன
அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான்.
கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” இப்படி சொல்லி முடித்து
விட்டு ஒரு இரண்டு செகண்ட் விட்டு “அடி காந்தா.. தேவடியாள் பெற்ற திருமகளே” என்று கதாபாத்திரமாக
பேச ஆரம்பித்தார்.
ஒரு ஐந்து வருடத்திற்கு பின் பெரியகுளம் எக்ஸிபிசனில் எம்.ஆர்.ராதாவின்
அதே ’ரத்தக்கண்ணீர்’ நாடகம் பார்த்தேன். கூட்டமே இல்லை. சொற்பமாக ஜனங்கள். அப்போதும்
ராதா மேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே “ அங்க யார்ரா அவன்? கஜகஜன்னு பேசிக்கிட்டு.. அவன
அடிச்சி தூக்கி வெளிய போடு. நான் இங்க கத்திக்கிட்டிருக்கேன். அவன் அங்க கத்திக்கிட்டிருக்கான்.
கச,கசன்னு. போலீஸ் என்ன பண்றான். அவன அடிச்சி தூக்கி வெளிய போடு.” என்று சத்தமாக கத்தினார்.
ராதாவின் Gimmicks இது.
https://rprajanayahem.blogspot.com/2016/01/blog-post.html
https://www.youtube.com/watch?v=vSdeFZb52Lg&t=116s
https://rprajanayahem.blogspot.com/2012/09/blog-post_16.html
https://rprajanayahem.blogspot.com/2009/11/blog-post_23.html
https://rprajanayahem.blogspot.com/2009/11/blog-post_23.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.