Share

Feb 26, 2019

பிடில் வாத்தியார் -2


பிடில் வாத்தியார் நல்ல நீலவான நிறத்தில் பளிச்சென்று சட்டை அயர்ன் செய்து அணிந்திருப்பார். கறுப்பு ஃப்ரேம் சின்ன வட்ட சைசில் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். தோளில் ரெண்டாக மடித்த துண்டு ஒரு பகுதியை கழுத்துக்கு அந்தப்புறம் முதுகில் தொங்கும்படி விட்டிருப்பார். தினமும் ஷேவ் செய்திருப்பார். ஒல்லியான உடல் வாகு. நல்ல உயரம். அமிதாப் பச்சனை பற்றி அறிந்திருந்தால் ஒரு வேளை “டேய் உங்க அமிதாப்பை விட நான் ஹைட்டுடா” என்று கட்டை தொண்டையில் சொல்லியிருப்பார். அவருடைய குரல் நிச்சயம் எம்.ஆர் ராதா குரலல்ல என்றாலும் அது விசேஷமான கரகரத்த கணீர் குரல். ரிட்டயர்ட் ஆன பிறகும் பள்ளியில் சில ஆசிரியர்களுக்கு நிர்வாகம் தொடர்ந்து வேலை தருவதுண்டு. அப்படி ஒருவர் தான் பிடிலும்.
’பிடில் மாமா, பிடில் மாமா, பிடில் வாசிங்க,
உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க.’
தமிழ் வாத்தியார் ஒருவர் ரொம்ப அள்ளி விடுவார். அவர் பெயர் அல்ப்பி.
திருச்சியில் ரீல் ஓட்டுனா வட்டார வழக்கு ’அல்ப்பி.’ மதுரையில் கதை விட்டா ’குதாம் குல்ஃபி’.
அல்ப்பி குட்டையாக இருப்பார்.
அல்ப்பியும் பிடிலும் ஒரு வகையான love and hate relationshipபில் எப்போதும் இருப்பார்கள். குட்டையான அல்ப்பியின் தோளில் பிரியத்துடன் கையை போட்டுக்கொண்டு படியில் ஏறி பிடில் வரும் காட்சி கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
அல்ப்பி வகுப்பு நடத்தும்போதே அவருடைய நண்பர்கள் அவரை காண வருவதுண்டு. மாணவர்களும் ரசிக்கட்டும் என்று அவர்களிடம் பேசும் போதே ’கவனிங்கடா’ என்று முகத்தை திருப்பி மாணவர்களை பார்த்து சிரிப்பார். வந்த நண்பர்கள் கிளம்பும் போது “ நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க” என்று நாடகத்தனத்துடன் பாடுவார். நான் இது தான் சாக்கு என்று வகுப்பின் முன் வந்து அந்த பாட்டிற்கு டான்ஸ் ஆடுவேன். வந்தவர்கள் எப்போதும் வெட்கப்பட்டு, முகமெல்லாம் சிவந்து தான் பிரியா விடை பெறும்படி இருக்கும்.
”ஐயா, மல வேதனை, பிரசவ வேதனை, மரண வேதனை இம்மூன்றும் அடக்கவே முடியாது. தாங்க முடியாதது” என்பார். அதனால் அவரிடம் பையன்கள் எப்போதும் வகுப்பில் பாடம் நடத்தும் போது ”ரெண்டுக்கு வருதுய்யா” என்று சொல்லி வெளியேறி சுற்றுவார்கள். வகுப்பு முடியும் வரை வரவே மாட்டார்கள்.
பிடிலுக்கும் அல்ப்பிக்கும் அடிக்கடி மனஸ்தாபம் வந்து விடும். அல்ப்பி தமிழ் வகுப்பில் “ பனை மரம் மாதிரி வளந்தவனுக்கு உடம்பெல்லாம் விஷம். விஷப்பய. அயோக்கிய பயல நம்புனேன். கழுத்தறுத்துட்டான்.”
பிடில் “ டேய் கள்ளன நம்பலாம். ஆனா குள்ளன நம்பக்கூடாது. வாயில வர்றதெல்லாம் பொய் தான்டா. அவன் புழுத்துத்தான் சாவான்.”
இந்த அரசியல் பற்றி விளக்க எந்த கழுகாரும் தேவையேயில்லை.
பசங்க இடைவேளையில் பேசிக்கொள்வோம். “டேய் பிடிலுக்கும் அல்ப்பிக்கும் சண்டடா. அதான் இப்படி திட்டிக்குதுங்க.”
அடுத்த மாதம் பிடில் அல்ப்பியின் தோளிலும், அல்ப்பி அதே சமயம் பிடிலின் இடுப்பிலும் கை போட்டுக்கொண்டு சிரித்து பேசிக்கொண்டே ஃபேகல்ட்டி ரூமில் இருந்து வெளி வருவார்கள்.
பசங்க”டேய், பிடிலும் அல்ப்பியும் மறுபடியும் சேந்துடுச்சிங்கடா”
பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் என்றால் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு மாதத்திற்கு முன்னிருந்து ஆசிரியர்கள் படு சீரியஸ் ஆகி விடுவார்கள். இன்ஸ்பெக்டர் வருகிற தேதியில் இன்று இல்லை. இன்னும் நான்கு நாள் கழித்து வருகிறார் என்று தகவல் வரும். டிரஸ் கோட். வெள்ளை சட்டை, மெரூன் ட்ரவுசர் அயர்ன் செய்து போட்டுக்கொண்டு வரவேண்டும். காலுக்கு ஷாக்ஸ் போட்டு வெள்ளை கான்வாஸ் ஷூ படு சுத்தமாக இருக்க வேண்டும். ப்ளே க்ரவுண்ட்டுக்கு போகிற P.T க்ளாஸ் கூட கேன்சல் ஆகி விடும். இன்ஸ்பெக்டர் வகுப்பறைக்கு தான் வருவார் என்பது வழக்கமாய் இருந்ததாம்.
ஒவ்வொரு சப்ஜெக்ட் டீச்சரும் ரெடிமேடாக சில கேள்வி பதில்களை முதல் தர மாணவர்களை வைத்து தயார் படுத்துவார்கள். இன்ஸ்பெக்டர் வரும்போது வகுப்பறைகளுக்கு வெள்ளையடிக்கப்பட்டு ப்ளாக் போர்ட் கறுப்பு சேர்க்கப்பட்டு பிரமாதமாய் இருக்கும். இன்ஸ்பெக்டர் வந்தால் நடக்க வேண்டிய விதம் பற்றி ரிகர்சல் கூட நடத்தப்படும். தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பாக வந்து ஆசிரியர்களை எச்சரித்துக்கொண்டே இருப்பார். மாணவர்களிடம் கேள்விகள் கேட்பார். இத்தனைக்கும் பள்ளி மிகவும் பெயர் போன பள்ளி. ஒவ்வொரு வருடமும் பொதுத்தேர்வில் நல்ல ரிசல்ட் தரும் பள்ளி.
சரியாக எட்டாம் வகுப்புக்கு பிடில் வாத்தியார் க்ளாசில் தான் இன்ஸ்பெக்டர் வகுப்பறையில் அன்று நுழைந்தார். அவருடன் தலைமையாசிரியர் கூடவே. பையன்கள் அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றார்கள். நான்காவது வரிசையில் ஒரு மாணவன் டெஸ்க்கில் தலை வைத்துப் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தான்.
எல்லோரும் எழுந்து நிற்கும்போது ஒருவன் மட்டும் எழுந்து நிற்கவில்லை. அதோடு தூங்கிக்கொண்டும் இருக்கிறான்.
இன்ஸ்பெக்டர் அவனை கவனித்து விட்டார். தலைமையாசிரியர் அவமானத்துடன் பிடிலை கோபப்பார்வை பார்த்தார். அர்த்தம்: ‘யோவ், என்னய்யா க்ளாஸ் நடத்துற.’
அதற்குள் பல மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்தவனை பெயர் சொல்லி ”எழுந்திருடா டேய்” என்கிறார்கள். இரு பக்கத்தில் இருந்த இரு பையன்கள் அவனை தட்டி எழுப்புகிறார்கள். அவன் பதறிப்போய் எழுகிறான்.
பிடில் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் “ டேய் நீ படு, படுறா” என்கிறார். ”பேசாம படு”
பக்கத்தில் நின்று கொண்டிருந்த தலைமையாசிரியர் மெச்சாடோ திகைப்புடன் பிடிலை பார்க்கிறார். “ஃபாதர், அவனுக்கு ஃபீவர். ஹை ஃபீவர். சூசையிடம் ஒரு ரிக்ஷா கொண்டு வரச்சொல்லியிருக்கிறேன். அவன வீட்டுக்கு அனுப்பனும். இன்ஸ்பெக்ஷன் என்பதால் காய்ச்சலோட ஸ்கூலுக்கு வந்துட்டான் முட்டாப்பய. ஒடம்பு ரொம்ப முடியலன்னா லீவு போட வேண்டியது தானே. இன்ஸ்பெக்ஷன் அன்னக்கி லீவு போடக்கூடாதேன்னு பொறுப்பா வந்திருக்கான். பாவம்”
தலைமையாசிரியர் ஃபாதர் மச்சோடாவுக்கு ஆசுவாசம். பிடில் சமாளிப்பு அவருக்கும் புரிந்தது.
இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார். சில பையன்கள் பதில் சொன்னார்கள். வெரி குட் சொல்லி விட்டு அடுத்த வகுப்பிற்கு கிளம்பினார். தலைமையாசிரியர் ஃபாதர் மெச்சாடோ கிளம்பு முன் தலையை ஆட்டி பிடில் கண்களைப்பார்த்து தன் கண்ணாலேயே நன்றி சொன்னார். நான் நன்றி சொல்வேன் உன் கண்களுக்கு.
தலைமையாசிரியருடன் இன்ஸ்பெக்டர் கிளம்பியவுடன் மாணவர்கள் ஆசுவாசமாக ஆகும்போது பிடிலின் திறனை உணர்ந்து சந்தோசமாக சிரித்தார்கள். பிடில் தன் வலது பக்க நெற்றிப் பொட்டில் கை வைத்து சொன்னார் “ Presence of Mind!”
எல்லா பையன்களும் சிரித்து ரிலாக்ஸ் ஆனோம். நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த அந்த பால் மோகனைப் பார்த்து சிரித்தோம். அவனும் சிரித்தான். ’நான் தான் இன்னக்கி இங்க ஹீரோ’ என்ற தோரணையில் பெருமையாக சிரித்தான். பிடிலைப் பார்த்தும் சிரித்தான். பிடில் “ இங்க வா”. பால் மோகன் தலையை குனிய வைத்து முதுகில் பலமாக சட,சட என அடித்தார். ”நீயுமா சிரிக்கற. நீயும் சிரிக்கற.கொழுப்பு.”  விடவில்லை. அடி வெளுத்து விட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.