Share

Feb 9, 2019

Inter personal relationship


’உரை நடையென்பது திமிங்கலத்தின் முதுகில் பயணிப்பது போன்றது.’
- யவனிகா ஸ்ரீராம்
என்னுடைய பதிவு “ புகழ் பூட்டு” படித்து விட்டு ஃபேஸ்புக்கில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் போட்டிருந்த கமெண்ட் “ க்ளாசிக்”.
வெற்றிகரமாக திமிங்கலத்தின் முதுகில் நான் பயணிக்கிறேன் என்பது சந்தோஷமாயிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன் பல திரை பிரபலங்கள் கூடியிருந்த நிலையில், ஏ.பி.நாகராஜன்   தனியறைக்கு வரும்படி எம்.ஆர்.ராதாவை அழைத்தாராம்.
ராதா அவருடன் அறையில் நுழைந்திருக்கிறார். தடால் என்று சாஸ்டாங்கமாக ராதா காலில் ஏ.பி.என் விழுந்திருக்கிறார்.
ராதா வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் வெளிப்படையாக உடைத்துச் சொன்னாராம். “அயோக்கிய பய. பிச்சக்காரப்பய. என் கால்ல இவன் விழுகிறத மத்தவங்க பாக்கக்கூடாதுன்னு நினக்கிறான். தனியா அறைக்கு கூட்டிட்டு போய் ரகசியமா கால்ல விழுறான்.”
எனக்கு தெரிந்த மனிதரின் மகன் வெளி நாட்டில் படித்தவன். தன்னுடன் படித்த வெளி நாட்டு வெள்ளைக்கார நண்பர்களுக்கு கல்யாண நிச்சயத்தின் போது ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறான். அதில் இங்கே உள்ள அவனுடைய நண்பன் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறான். வெளி நாட்டில் படித்த அந்த மாப்பிள்ளை கல்யாணமான தன் பால்ய நண்பனை அறிமுகப்படுத்தியிருக்கிறான். பெண்ணும் ஆணுமான அந்த வெளி நாட்டு இளைஞர்கள் இந்த தம்பதியரை பார்த்திருக்கிறார்கள் “So you are already married” பரவசமாய் கண்களை விரித்திருக்கிறார்கள்.
அவனுடைய கல்யாணம் ஆறு மாதத்திற்கு பின்னால் நடந்த போது வெள்ளைக்கார வகுப்பு தோழர்கள் வருவார்கள் தானே? வந்தார்கள். பெண்கள் நம் கலாச்சாரப்படி சேலை. ஆண்கள் வேட்டி சட்டையில். மாப்பிள்ளை உபயம். கல்யாண மாப்பிள்ளையின் பால்ய நண்பன் தன் மனைவியோடு அவர்களை வரவேற்றிருக்கிறான். ஒரு வெள்ளைக்காரன் வரவேற்றவனைப்பார்த்து ஆச்சரியமாக கூவியிருக்கிறான் – “ Are you still married?!”
செய்திகள் பற்றி அன்றாடம் எந்த கவலையும் கிடையாத ஒரு அஞ்ஞானி – டி.வி., செய்தித்தாள் எதுவும் பார்க்கும் வழக்கமில்லாதவர் - செவி வழி செய்தியொன்றை அரைகுறையாக கேட்டு விட்டு ரோட்டில் அன்றைக்கு சத்தமாக அரசியல் பேசினார் “எப்படியோ இன்னைக்கு எவ்வளவு பெரிய தேசிய கட்சிக்கு அழகிரி தலைவராயிட்டாரே. என்னமா தம்பி முகத்தில மாவீரன் கரிய பூசிட்டாரு.”
பிசியான ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஒரு கடை முன் ஒரு Used condom அழுக்காக கிடந்தது. ராத்திரி பரபரப்பு அடங்கியவுடன் சாலையில் எக்ஸ்ப்ரஸ் வேக சரச சல்லாப நிகழ்வு சர்க்கஸ் போல. Rooster Fuck? விடிய, விடிய வாகனங்கள் போய் வருகிற பகுதி.
ஒரு அரசாங்க ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. வாசலில் இருந்த ஒரு செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தேன். இறுக்கமாய் இருந்த அவர் சகஜமானவுடன் என்னிடம் சொன்னார் “நான் ராத்திரி ஷிப்ட் பார்க்கறப்ப இங்க அஞ்சாறு ஆட்டோ ஆஃபிஸ் முன்னாடி நிக்கும். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வருவார். ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் கிட்டயும் பேசுவார். அவங்க பணம் கொடுப்பாங்க. சரி தான். பவர காட்டி ’பவுசு’ வாங்கிக்கறார்னு நெனச்சேன். ஒரு நாள் ஆட்டோக்காரர்ட்ட கேட்டேன். அப்ப தான் தெரிஞ்சது. எஸ்.ஐ தான் அந்த ஆட்டோக்களின் ஓனராம். தினம் கலக்சன் பணம் வாங்கத்தான் வர்றாராம்.”
……………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.