Share

Feb 2, 2019

நுரை குமிழி


தி.மு.க பத்திரிக்கையில் ஒரு காலத்தில் தனித்தமிழ் அக்கறையிருந்திருக்கிறது. சம்கிருத வார்த்தைகளை போடக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது. ராஜாஜி பெயரை ’ராசாசி’ என்று அச்சிட்டவர்கள் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திருத்தம் எதுவும் எம்சியார் என செய்யவில்லை. எஸ்.எஸ்.ஆர் பெயரும் அப்படியே.
இப்போது ’ஆஹ’ என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கும் தி.மு.க. தலைவர் பெயரை பழ.கருப்பையா தனித்தமிழில் ’இசுடாலின்’ என்று குறிப்பிடுகிறார். நக்கீரனில் பார்த்தேன். தனித்தமிழ் வைராக்கியம் இப்படி இருப்பது பற்றி நான் 2008 ஸ்டாலினை இவர்கள் சுடாலின் என்று குறிப்பிடுவார்களா என்று கேட்டிருந்தேன். ’சுடாலின்’ என்பதே தப்பு. அடடா ’இசுடாலின்’ என்பது இன்றல்லவோ புரிகிறது.
இந்திரா பார்த்தசாரதி பேட்டி பிப்ரவரி விகடன் தடத்தில். இந்திரா பார்த்தசாரதியை முழுமையாக படித்தவன் நான். “எந்த தத்துவமும் நிறுவனமயமாகும்போது நீர்த்துப்போகும்” என்பதை ’ஆஹ’ என்ற வார்த்தையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எத்தனை தடவை உச்சரித்தாரோ அத்தனை தடவை இ.பா இந்த ஸ்தாபனமாகும் தத்துவ விஷயத்தை உச்சாடனம் செய்து வந்திருக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரக்கவலை இதுவென்றே குறிப்பிடலாம். இதை நான் என்னுடைய “ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையில் (2002ல்) கூட குறிப்பிட்டேன்.

இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்ட போது திருச்சி வானொலி நிலையத்தில் “ராமானுஜர்” நாடகம் பற்றி நான் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
அவருடைய ’கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவலுக்கு நான் எழுதிய விமர்சனம் எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் விமர்சனம் வந்ததுண்டு.
இந்திரா பார்த்தசாரதி புதுவை பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த காலத்திலும் அதன் பின் இந்திரா மாமி மறைவுக்குப் பின் நான் பார்த்த போதும் அவரிடம் ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன்.
அவருடைய மூக்கிற்கு வெளியே ஒரு வெள்ளை முடி எப்போதும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை சின்ன சிசரால் கட் செய்ய முடியும் என்பது ஏன் அவருக்கு தோன்றவில்லை.
இப்போது தள்ளாத வயதாகி விட்ட அவர் புகைப்படத்தை விகடன் தடம் பத்திரிக்கையில் பார்த்த போது அந்த வெள்ளை முடி மூக்கிற்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறதா என்பதை செக் செய்தேன். அட்டையில் உள்ள புகைப்படத்திலும் உள்ளே பேட்டியின் முதல், இரண்டாவது புகைப்படத்திலும் வெள்ளை முடி காணப்படவில்லை. ஒரு ஆசுவாசம் எனக்கு ஏற்பட்டது. அந்தோ. நான்காவது புகைப்படத்தில் ஒரு வெள்ளை முடி அவருடைய இடது நாசித்துவாரத்தில் நீட்டிக்கொண்டிருக்கிறது..


விகடன் தடத்தில் கவிதையின் கையசைப்பு கட்டுரையில் வாஸ்கோ போபோ என்ற ஒரு செர்பியர் எழுதிய கவிதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ’ஆங்கில மூலத்தால்’ இருந்து தானே?

மௌனியின் ’சாவில் பிறந்த சிருஷ்டி’ எப்போதோ எழுதப்பட்டு விட்டது. அதை படித்து விட்டவர்கள் நாம். இந்த சிறுகதையை பெங்க்வின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக சிறுகதைகளில் சேர்த்திருக்கிறது.
இந்த கவிதையில் பிரமிக்க என்ன இருக்கிறது?

’முன்னொரு காலத்தில் ஒரு கதை இருந்தது
அதன் முடிவு, கதை
தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் தொடக்கம் கதையின் முடிவுக்குப்
பின்பே வந்தது.
தங்கள் சாவிற்குப் பிறகு
கதையின் நாயகர்கள்
கதைக்குள் வந்தார்கள்
தங்கள் பிறப்பிற்குப்
பிறகு வெளியேறிப்போய் விட்டார்கள்.”
இதே முறையில் பல கவிதைகள் எழுதலாம். சலிப்பான கவிதை முறைமை.
’முன்னொரு காலத்தில் ஒரு ஓவியம் இருந்தது
அதன் கடைசி தீற்றல், ஓவியம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் முதல் வரி வடிவம் ஓவியம் முடிக்கப்படுவதற்கு
பின்பே வந்தது.
தாங்கள் அழிக்கப்பட்டதற்கு பிறகு
ஓவியத்தின் நிழல் பிம்பங்கள்
ஓவியத்திற்குள் வந்தன.
பிம்பங்கள் வண்ணத்தில் பிறப்பிக்கப்பட்ட
பிறகு வெளியேறிப் போய் விட்டன.’
இதை இசை, சிற்பம் இவற்றை வைத்தும் எழுதிப்பார்க்கலாம். ஏன் சினிமா பற்றி கூட.

’அந்த திரைப்படம் கடைசி சீனில் கடைசி ஷாட்டுக்கு முன்னரே
தொடங்கி விட்டது.
முதல் ஷாட் ஷுட் பண்ணும்போதே முடிந்து விட்டது’
மண்டையில் மரம் முளைக்காத வரை எழுதிப்பார்க்கலாம். அல்லது மண்டையில் மரம் முளைத்தபின்னும் பிடிவாதமாக எழுதிப்பார்க்கலாம்.
பெண்கள் ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என்று துருக்கி நாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக காதில் சேதி விழுந்தது. இந்த காரசார செய்தி பெண்ணிய கவிதைகளுக்கு வழி வகுக்கலாம்.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.