Share

Jan 19, 2019

துரத்துகிறார் துரைக்கண்ணு



 ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனம் பிரபலம் காரணமாக சித்ராலயா பெயரில் ஒரு பத்திரிக்கையே நடத்தியிருக்கிறார். அந்த பத்திரிக்கை வடிவம் செய்திப்பத்திரிக்கை போல இருந்தது. ஆனால் சினிமா பத்திரிக்கை தான். தினசரி பத்திரிக்கையல்ல.

தமிழ் சினிமாவோடு இந்தி திரையுலகம் பற்றியும் சுவாரசியமான செய்திகள் அதில் படிக்க முடியும்.
ஷம்மி கபூர் ஒரு தமிழ் பாடலை அடிக்கடி வாய் விட்டு பாடுவாராம். அந்தப்பாடலில் உச்சரிக்க ஒரு விஷேச அம்சம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவர் தமிழ் அறிந்தவர் அல்ல. அந்த பாடல் பாவமன்னிப்பு படத்தில் வரும் ‘ அத்தான் என்னத்தான்” பாடல்.

இந்த செய்தித்துணுக்கு சித்ராலாயா பத்திரிக்கையில் தான் படித்தேன்.


சித்ராலயா கோபு. சினிமாக்காரராக அறியப்படும் கோபு ’ஹரிகதா’ எம்பார் விஜய ராகவாச்சாரியார் வம்ச பரம்பரையில் வந்தவர். எம்பார் இவருக்கு மாமா.


கோபுவின் காதலிக்க நேரமில்லை செல்லப்பா பாத்திரம் நாகேஷால் சிரஞ்சீவித்தன்மை பெற்றது. நாகேஷ் பாலையாவிற்கு கதை சொல்லும் காட்சிக்கு கோபு  பார்த்து ரசித்த தாதாமிராஸி ( புதிய பறவை படத்தை இயக்கியர் இவர் ) தான் ரோல் மாடல்.

ஸ்ரீதரின் பால்ய நண்பர் கோபு என்றாலும் இருவர் நட்பும் ஸ்ரீராமன் – ஹனுமன் நட்பு போல் இருந்திருக்கிறது. கோபுவின் குருபக்தி அளப்பரியது. ஸ்ரீதரின் யூனிட்டில் இருந்த பலரும் அவர் முதுகில் குத்தியவர்கள். கோபு மட்டுமே விசுவாசமான நட்புடன் கடைசி வரை இருந்திருக்கிறார். சினிமாவுலகில் இப்படி ஒரு நட்பு அபூர்வம்.

ஒரு படத்தில் பிரபல இயக்குனரின் அஸிஸ்டண்ட் என்றால் போதும். தனித்து ஒரு படம் இயக்குவது சர்வ சாதாரணம். ஆனால் சித்ராலயாவில் கோபு மிக பிரபலமாயிருந்தும் ஸ்ரீதர் நிழலிலேயே இருந்தார். ’உத்தரவின்றி உள்ளே வா’ படம் கூட என்.சி.சக்ரவர்த்தி தான் இயக்கினார்.

அன்றைய தமிழ் சினிமாவுலகில் பந்துலுவிடம் இருந்த சிங்கமுத்து, ஏ.பி.நாகராஜனிடம் இருந்த கே.கே.சம்பத்குமார், தேவர் பிலிம்ஸில் மாரியப்பன் போன்றோர் இப்படி இயக்குனரின் நிழலிலேயே தான் இருந்திருக்கிறார்கள். தனித்து இயக்குனராகவே இல்லை.


ஏ.வி.எம் காசே தான் கடவுளடா படத்திற்கு கூட முதலில் கோபு சிபாரிசு செய்தது சி.வி.ராஜேந்திரனைத்தான். ஸ்க்ரிப் ஒர்க் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால் ஏ.வி.எம் செட்டியார் தான் அந்தப்படம் கோபுவால் தான் இயக்கப்பட வேண்டும் என்று தீர்மானமாக சொல்லியிருக்கிறார்.

கோபு குமுதத்தில் ஒரு தொடர் எழுதினார்.’துரத்துகிறார் துரைக்கண்ணு’.
ஒரு லோக்கல் ரௌடி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கோபுவை துரத்துவார். அவர் மெட்ராஸ் சல்லி என்பதால் கோபு பயந்து போய் அவரை சமாளிக்க படாத பாடு படுவார். நகைச்சுவையாக எழுதினார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது ஜிகர்தண்டா படத்தின்  கதையை ஞாபகப்படுத்தும் விதமாக அந்த தொடர் இருந்தது. ஆனால் அதைப்பார்த்து இது காப்பி என்பதல்ல. அல்ல. இரண்டும் வேறு தான். மையக்கரு ஒற்றுமை இருக்கிறது. பாபி சிம்ஹா எப்படியெல்லாம் சித்தார்த்தை தன்னை வைத்து படமெடுக்க வற்புறுத்தி துன்புறுத்துகிறார். அது போல தான் கோபுவை ஆக்கிரமித்து துரைக்கண்ணு நச்சரிப்பும். துரைக்கண்ணுவின் வட்டார மெட்ராஸ் பாஷை.

’துரத்துகிறார் துரைக்கண்ணு’ நட்பு வட்டாரத்தில் ஒரு Vocabulary ஆனது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது இந்த 'துரத்துகிறார் துரைக்கண்ணு’வை பிரபலப்படுத்தினேன். அதாவது தர்மசங்கடப்படுத்தப்படும் விதமாக யாராவது அரைவேக்காடு தொடர்ந்து நச்சரித்தால், மிரட்டி ஏதாவது உதவி செய்யும்படி கேட்டால், அவ்வளவாக சிலாக்கியமானவராக இல்லாத ஒருவர் நட்பு நாடி வந்தால், அத்துமீறி ஆக்கிரமித்து உரிமை கோரினால், தொந்தரவு, தொல்லை செய்து கொண்டிருந்தால் இந்த வார்த்தை
‘ துரத்துகிறார் துரைக்கண்ணு’வை மதுரையில் பலரும் பயன்படுத்தும் அளவுக்கு அப்போது பிரபலமானது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.