Share

Jan 30, 2019

வள்ளி நாயகனே


இன்று அதிகாலை ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் ஷண்முகப்ரியா ராகம் தானம் பல்லவி முழுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன். கஞ்ச தலாயதாக்ஷி காமாக்ஷி.
ஒவ்வொரு பெரிய வித்வானுக்கும் ஒரு ராகம் ஸ்பெஷல். செம்மங்குடி சீனிவாசய்யருக்கு கரகரப்ரியாவை சொல்வார்கள். மதுரை சோமு தோடியை கண் முன் கொண்டு வந்து விடுவார். ஜி.என்.பிக்கு ஷண்முகப்ரியா.
30 வருடங்களுக்கு முன் கர்னாடக சங்கீத, ஹிந்துஸ்தானி கேஸட் கலெக்‌ஷன் என்னுடைய தேடலில் முக்கிய இடம் பெற்றிருந்தது. ஜி.என்.பியின் காஸெட் இருபதுக்கு மேல் வைத்திருந்தேன். அவருடைய ஷண்முகப்ரியாவுக்காக எவ்வளவோ தேடியும் கிடைத்ததேயில்லை. ஒரு தடவை மதுரையில் டவுன்ஹால் ரோட்டில் ஒரு கடையில் கிடைத்து விட்டது. ஆஹா அபூர்வ புதையல் கிடைத்து விட்டதே என்று டேப் ரிக்கார்டரில் போட்டால் காஸெட் டேமேஜ் ஆகியிருப்பது தெரிய வந்தது. ஸ்ட்ரக் ஆகி இயங்கவேயில்லை. ஜி.என்.பியின் ஷண்முகப்ரியா கேஸட் கானல் நீர். கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இப்போது டெக்னாலஜி எவ்வளவு வசதியாய் இருக்கிறது. யூட்யூப் புண்ணியத்தில் அந்தக்கால கானல் நீரான விஷயங்களெல்லாம் நனவாகியிருக்கிறது.
இன்று ஜி.என்.பி ஷண்முகப்ரியா கேட்டுக்கொண்டிருந்த போது நினைவில் வந்த ஒரு காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த போது எங்கள் வீட்டிற்கு என் பெற்றோர் வந்திருந்தார்கள். அப்படியான நேரத்தில் என் மனம் மிகுந்த சந்தோஷ நிறைவில் நிரம்பி வழியும்.

அதிகாலை என் அப்பா ஹிண்டு பேப்பரை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பிறகு தான் எப்போதும் நியூஸ் பேப்பரை எனக்கு கொடுப்பார். இரண்டு மணி நேரமாவது செய்திகளில் மூழ்கி விடுவார். வாசித்துக்கொண்டிருக்கும்போதே ரெண்டு,மூணு காஃபி கேட்பார்.
நான் பாலமுரளி பாடிய நான்கு ஷண்முகப்ரியா கீர்த்தனைகள் அடங்கிய கேஸட்டை போட்டு விட்டிருந்தேன்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ( இவர் எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா தெரியுமோ?) கீர்த்தனை வள்ளி நாயகனே பாடலை கணீர் என்று பாலமுரளி ஆரம்பித்த போது என் அப்பா பேப்பரில் இருந்து தலையை தூக்கினார். பாடலை கவனமாக ரசித்து தலையை ஆட்டினார். முகம் பிரகாசித்தது. செய்தியிலிருந்து அப்பா கவனம் ஷண்முகப்ரியாவிற்கு தாவி விட்டது.
எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அப்பாவின் அம்மா பெயர் வள்ளி. வள்ளி நாயகன் யார்? அப்பாவின் அப்பா ராஜநாயஹம் பிள்ளை. அவருடைய அப்பா 1965ல் மறைந்தார். அம்மா 1969ல் மறைந்து விட்டார். என் தாத்தா பாட்டியை நினைவு படுத்தும் கீர்த்தனை. அந்த கீர்த்தனை முடியும் வரை அப்பா செய்தித்தாளை பார்க்கவில்லை.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.