Share

Jan 14, 2019

No commodity card


பொருள் எதுவும் வாங்காத, அடையாளத்துக்கு மட்டுமேயான
N கார்டு தான் என்னுடையது. இந்த கௌரவ ரேசன் கார்டு வைத்திருக்கும் நான் வசதியானவன் அல்ல. சொந்த வீடு கிடையாது. சொத்து கிடையாது. 
ஒரு சிறு சேமிப்பு தொகை கூட கிடையாது. இம்மாநிலத்தில் வெள்ளை கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு நாற்பதாயிரத்துக்கு முன்ன பின்ன இருக்கலாம் என்று அரைகுறையாக அறிய முடிகிறது. புள்ளி விபரம் சரியாகத் தெரியாது.
ஒரு விஷயம் மட்டும் நிச்சய உண்மை. வெள்ளை ரேசன் கார்டு பணக்காரர்களுக்கானது என்றால் இதில் ஒரு மிக சாமான்யனும் இருக்கிறான். இந்த நாற்பதாயிரம் பேரில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் ராஜநாயஹம்தான். ரிட்டயர்மெண்ட், பென்சன், ப்ராவிடண்ட் ஃபண்ட், கிராஜுட்டி வசதியென்றெல்லாம் எதுவும் கிடையாது.
இல்லாமையில் ஒரு விசித்திர அபத்தம். பொருளாதார நிலைக்கு அந்நியமான, சற்றும் பொருந்தாத தன்மை.
என்னிடம் ஸ்கூட்டர் கூட இப்ப கிடையாது. கூத்துப்பட்டறைக்கு தினமும் போக மூணு பஸ், வர மூணு பஸ். இதில் சின்ன மாற்றம் என்னவென்றால் பஸ் கிடைக்காத போது சில நேரங்களில் ஒரு நாளில் ஓரிரு முறை ஷேர் ஆட்டோ.
இங்கே சென்னையில் ஒரு பங்களா, ஒரு ஃப்ளாட், இரண்டு கார், இரண்டு டூவிலர் வைத்திருக்கும் பிரகிருதி ஒருவர் மூன்று வருடத்திற்கு முன்
“என்னப்பா, எனக்கு தெரிஞ்சி நம்ப ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள்ள நீ ஒருத்தன் தான் இப்படி பொருள் எதுவும் வாங்காத வெள்ள ரேஷன் கார்டு வச்சிருக்கிற. நான் வேற யாரையும் பார்த்ததேயில்ல..” உச்சு கொட்டி மூக்கில் விரல் வைத்தார்.
நான் ‘அண்ணே, தயவு செய்து விரல எடுங்க.”
ஆச்சரியத்தில் அவர் மூக்கில் தன் விரலை வைக்க வேண்டியவர், அவசரத்தில் என் மூக்கு நுனியில் வைத்து விட்டார்.
நான் திருச்சியில் குடியிருந்த ஒரு வீட்டின் ஹவுஸ் ஓனர் அம்மா
“ஏன் இப்படி பொருளே வாங்காத ரேசன் கார்டு வச்சிருக்கீங்க. நாங்க உங்க கார்டுலயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் எங்களுக்கு வாங்கிக்க முடியாதபடி பண்ணிட்டீங்களே.” என்று கேட்டதுண்டு. நான்கு வீடு வாடகைக்கு விட்டிருந்தார். தன் வாழ்க்கையில் எங்கள் வெள்ளை கார்டு விளையாடி விட்டதே என்பதை அந்தம்மாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அடிக்கடி குமைந்து மருகி புலம்புவார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.