இப்போது Personality Cult பரவசம் என்பது சம்பந்தப்பட்ட பெருந்தலையை தாண்டி அந்த பெருந்தலையின் தாய்தந்தையர், சகோதரர், மன்றத்தலைவர்கள் ஆகியோருக்கும் தொண்டர்கள், ரசிகர்கள் தீவிர பரவச ராஜ மரியாதை காட்டத்துவங்கி விட்டார்கள் .
கொஞ்ச வருடங்களுக்கு முன் திருப்பூரில் ரஜினி ரசிகர்கள் அவர்களின் தலைமை ரசிகர் மன்ற தலைவர் சத்தியநாராயணா அவர்களுக்கு அவர் கலந்து கொள்ளும் திருமண வைபவங்களில் எல்லாம் ரஜினிக்கு கட் அவுட், பேனர் வைக்கின்ற போதெல்லாம் தங்கள் இதய தெய்வம் ரஜினிக்கு வைப்பது போலவே சத்திய நாராயனாவுக்கும் கணக்கில்லாமல் வழி நெடுக பேனர்கள் கட் அவுட் வைக்கின்ற வழக்கம் மேற்கொண்டார்கள் . ஒரு ரஜினி ரசிகரிடம் இது பற்றி அப்போது கேட்ட போது ,எந்த ஊருக்கு சத்திய நாராயணா போனாலும் இப்படித்தான் அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது என புல்லரித்து ,செடியரித்து , மரமரித்து பயபக்தியோடு சொன்னார் . பல ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் விசிட்டிங் கார்டில் ரஜினி படத்தோடு சத்தியநாராயணா படத்தையும் சேர்த்து அச்சிட்டிருக்கிறார்கள்.
அந்த காலத்தில் அகில உலக எம்.ஜி .ஆர் . ரசிகமன்ற தலைவராயிருந்த திருச்சி சௌந்தர் ராஜன், முசிறிப் புத்தன் இந்த மாதிரி ராஜ மரியாதை , கட் அவுட் , பேனர்கள் எல்லாம் பார்த்ததே இல்லை.அகில உலக சிவாஜி ரசிகர் மன்றங்களின் தலைவராயிருந்த சின்ன அண்ணாமலை,தளபதி சண்முகம்,ராஜசேகரன் போன்றவர்கள் கூட இந்த கட் அவுட், பேனர் மரியாதையெல்லாம் அனுபவித்ததேயில்லை.
நேற்று இங்கே ரஜினியின் சொந்த சகோதரர் சத்தியநாராயண ராவ் ஒரு திருமண வைபவத்திற்கு வந்த போது திருப்பூர் நகரம் தாராபுரம் ரோடு , காங்கேயம் ரோடுமுழுக்க பேனர்கள் . அவினாசி ரோடு , பெருமாநல்லூர் ரோடு , முனிசிபாலிடி ரோடு கூட இப்படித்தான் இருந்திருக்கும் . நான் அந்தப் பக்கம் என் ஸ்கூட்டரில் நேற்று போகவில்லை. எனவே இங்கே அந்த ரோடுகளை சேர்க்கவில்லை.
" மன்னனின் அண்ணனே "
"எங்கள் தெய்வத்தின் தொப்புள்கொடி உறவே "
" எங்கள் தலைவனின் ரத்தத்தின் ரத்தமே ''
' ' அவதாரத்துடன் பிறந்த பலராமனே " ( இது என் சரக்கு. ரஜினி ரசிகர் யாருக்காவது இதை தெரியப்படுத்தினால் அடுத்து எந்த ஊரிலாவது சத்திய நாராயண ராவ் அவர்களுக்கு இந்த ' அவதாரத்துடன் பிறந்த பலராமனே ' வாழ்த்துடன் கட் அவுட் இடம் பெறப் போவது சர்வ நிச்சயம்! )
இங்கே இன்னொரு கல்யாண மண்டபத்திற்கு இளைய தளபதி விஜய் யின் தகப்பனார் எஸ் .ஏ . சந்திரசேகர் வந்திருந்தாராம் . அவருக்கு விஜய் ரசிகர்கள் பரவச பேனர் வாழ்த்து '' எங்கள் தந்தையே !" இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொள்ளலாம்.
காந்தியாரின் பெற்றோருக்கு , குஜராத்திலோ , பிற இந்திய மாநிலங்களிலோ சிலைகள் நிறுவி மகிழ்ந்திருக்கிறார்களா? ஒரு தகவலுக்காக கேட்டேன் . ஏனென்றால் தமிழகத்தில் திருநெல்வேலி ராதாபுரத்தில் முத்து வேலர் - அஞ்சுகத்தம்மா இருவருக்கும் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.
திமுக இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்டமான தலைவர்களிலிருந்து , அடி மட்ட தொண்டர்கள் வரை இனி திருநெல்வேலி போனால் ராதாபுரம் அவர்களுக்கு ஜெருசலேம் , மெக்கா மதினா தான். பழனி ,திருப்பதி , குருவாயூர் போல புண்ணிய தலம் ! அவனவன் சூடத்தை கொளுத்தி... தேங்காயை ஒடைச்சி, துண்டப் போட்டு தாண்டி .....
அண்ணா திமுக இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்டமான தலைவர்கள் ஆவேசத்தில் இருக்கிறார்களாம். அம்மா ஆட்சி மீண்டும் வரும்போது (அண்ணாத்துரை சிலை மாடலில்) ' ஆள் காட்டி விரல் மட்டும் காட்டி நிற்கும் சந்தியா ' சிலைகள் தமிழக முக்கிய நகரங்களில் நிறுவி பழிக்கு பழி வாங்க கறுவிக் கொண்டிருக்கிறார்கள் என கேள்வி!