Share

Nov 20, 2009

பெண்ணியமும் குசும்பனும்

Carnal Thoughts -22 ல் வந்த குசும்பன் என்னைப் பார்க்க வந்தான். வரும்போதே " பெண்ணே உன் கதி இது தானா ? உன் பெண்மை ஆண்மைக்கு பலி தானா ?" என்று உருக்கமாக சிதம்பரம் ஜெயராமன் பாடலை பாடிக்கொண்டே வந்தான். " பெண்ணியவாதியாக மாற முடிவு செய்து விட்டேன். " என்றான் .
" நீ சும்பன் மனைவி ஒத்தப்பட்டி தமன்னா பற்றி ரொம்ப பேசியவனாச்சே.நிசும்பன் கூட என்னிடம் சொன்னானே " - நான்.
"இனி எதையுமே ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கவே மாட்டேன்.
இப்போ ஒத்தப்பட்டி தமன்னா வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில், பல பரிமாணங்களில் அலசிப் பார்க்கிறேன். என் வாழ்வில், என் அறிவில், சிந்தனையில் ,பார்வையில், கண்ணோட்டத்தில் பெரிய transformation நடந்த விஷயம் உனக்கு தெரியாதா ? நிறைய படிக்கிறேன் .நான் பெண்ணியவாதிகளின் ஆதரவாளன் " முகம் சிவக்க சொன்னான் குசும்பன்.
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் பற்றி கடும் அதிருப்தியையும் வெளியிட்டான்.
பெண்ணியவாதிகளுக்கு எதிரான சுன்னியவாதிகளை ஒரு கை பார்க்க சபதம் ஏற்றிருப்பதாக குசும்பன் சொன்னான்.


'இன்று இலக்கியக் கூட்டம் ஒன்றில் பெண்ணியம் சார்பான கருத்துக்கள் பேசப் போகிறேன்.பெண்ணியம் பற்றி பேச சில க்ளூ கொடுக்கமுடியுமா?' என்றான்.
' பெண்ணியம் மீது உனக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டது '
' பெண்ணியம் பேசினால் படிக்காத /படித்த பெண் படைப்பாளிகள் நட்பு கிடைக்குமாமே.என் நட்பு வட்டாரம் வண்ண மயமாகுமே! ' -குசும்பன்.

தொடர்ந்து சொன்னான். 'பெண்கள் எப்படியெல்லாம் நசுக்கப்பட்டார்கள். அடிமைகளாய் கொடுமைப் பட்டார்கள் என்பதற்கு சரித்திரத்தில் இருந்து சில விஷயம் நீ சொன்னால் நான் இன்று இலக்கியக் கூட்டத்தில் பிச்சி உதறி விடுவேன். ராஜாக்கள் அந்தகாலத்தில் எப்படி பெண்களை போகப் பொருள்களாக பயன்படுத்தினார்கள். ஒரு ரெண்டு சரித்திர ஆதாரம் சொல்லு .. சொல்லு .. சொல்லு.. '
நான் தொண்டையை செருமிக் கொண்டு யோசித்தேன் .
'எனக்கு வழி விட்டுப் பிசகி நிற்கிற பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆசையுண்டு' என்று சொல்லும் க.நா. சு. என் நினைவுக்கு வந்தார். என்ன அழகாக எழுத்தாளனின் urge பற்றி சொல்லிவிட்டார்! க நா சு ' வாழ்ந்தவர்கள் கெட்டால் ' நாவலில் சொல்கிற விஷயத்தை அவனுக்கு எடுத்துக் காட்டினேன்."தஞ்சாவூர் மன்னர்களில் கடைசியாக ஆண்டு பிரிட்டிஷார் கையில் நகரையும் ,ராஜ்ஜியத்தையும் ஒப்படைத்து விட்டுப்போன சிவாஜி ராஜாவுக்கு ' மனைவிகள் நூற்றி நாற்பத்தி எட்டுப் பேர்! ஆனால் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை ! ராஜகுடும்பத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த ஓர் உண்மை !''

குசும்பன் முகம் சிவந்து விட்டது . ' அயோக்கியன்! பெண்களை வாழ விடுங்கள்டா டே " ஆணினத்தையே மானசீகமாக கண் முன் நிறுத்தி உணர்ச்சி வசப்பட்டு கத்தினான். அடுத்த நிமிடமே அவன் முகம் பிரகாசமானது !" பிரமாதம்! இன்னொன்று சொல் போதும் "
இந்திரா பார்த்தசாரதி சொன்ன ஒரு விஷயத்தை அவனுக்கு கவனப் படுத்தினேன்.

"டைப்பீரியஸ் என்ற ரோம மன்னனுக்கு ஒரு விசித்திர ஆசை ஏற்பட்டது . இளஞ்சிறுமிகள் கழுத்து நெரிக்கப் பட்டுக் கொல்லப்படுவதை பார்க்கவேண்டும் என்று விருப்பம். ஆனால் அந்தோ! ரோமானிய மதச்சட்டம் கன்னிப்பெண்கள் கொலை செய்யப் படுவதற்கு தடை விதித்து இருந்தது . ரோம மன்னனோ ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பரிசேயன். யோசித்து மன்னன் ஒரு தீர்வு கண்டான். ' இளஞ்சிறுமிகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப் படுவதற்கு முன்னாலே, கற்பழிக்கப் படவேண்டும் என்று கட்டளையிட்டானாம். "

குசும்பன் இன்றைக்கு பெண்ணியம் பேச இரண்டு விஷயம் கிடைத்து விட்டது என்ற குஷியில் ஜாலியாக குதித்து " பெண்ணே ! உன் கதி இது தானா! உன் பெண்மை ஆண்மைக்கு பலி தானா" என ரொம்ப உற்சாகமாக பாடிக்கொண்டே ஓடியே போய் விட்டான்!
எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.