ராசுக்குட்டி ஷுட்டிங் நடந்துகொண்டிருந்த சமயங்களில்
மேட்டூர் வி.எம். லாட்ஜ்.
ஐந்து மாதங்கள் ராசுக்குட்டி அனுபவம்.
நாளில் மூன்று வேளையும் அசைவம் சாப்பிட வேண்டியிருக்கும்.
ஷூட்டிங் முடிந்து இரவு டின்னர் உதவி இயக்குநராக ஸ்பெஷலாம். மட்டன், மட்டனில் மூளை, தலைக்கறி, சிக்கன், மீன், முட்டை எல்லாம் நிர்ப்பந்தமாக உணவோடு.
வயிறு சரியில்லை. எதிரே கிருஷ்ணா லாட்ஜை ஒட்டி டாக்டர் க்ளினிக்.
இன்ஸ்டரக்ஸன். இஞ்செக்ஸன். ப்ரிஸ்க்ரிப்ஸன்.
" ராஜநாயஹம் நான் ஒங்க டைரக்டருக்கு ஃப்ரண்டு ராஜநாயஹம். ஃபீஸ் வாங்க மாட்டேன் ராஜநாயஹம். மன்னிச்சிக்கங்க'"
" தயவு செஞ்சி ஃபீஸ் வாங்கிக்கங்க
டாக்டர்"
"மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம்,
பாக்யராஜோட ஃப்ரண்டு நான். ஃபீஸ் வாங்க மாட்டேன்"
டாக்டர் பேச்சில் 'Sing Song'
மறக்கவே முடியாத விசித்திர வினோத ராகம்.
இப்போது கூட அப்படியே mimicry செய்து காட்ட முடியும். எழுத்தில் அந்த effect கொண்டு வர முடியாதே.
பணம் வாங்கிக்கொள்ள பிடிவாதமாக வலியுறுத்தி வற்புறுத்தியதற்கும் அதே Sing Song. " நான் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் என்னோட ஃப்ரண்டு ராஜநாயஹம். முடியவே முடியாது ராஜநாயஹம். ஃபீஸ் வாங்க மாட்டேன். நான் பாக்யராஜுக்கு ஃப்ரண்டு"
இரண்டாவது தடவையாக போன போதும் இதே இதே. ஃபுட் பாய்சன். இட்லி, மோர் சாதம். அசைவம் வேண்டாம்.
இப்படி ஃபீஸ் வாங்காமல் மறுக்கிற டாக்டரை அதற்கு முன்னரும் பின்னர் இன்று வரை பார்த்ததேயில்லை.
ஃபரூக் டாக்டரை பார்க்க வருவார். சலுகையை எப்போதும் குஷியாக ஏற்றுக்கொள்வார்.
மூன்றாவது முறை. Trika மாத்திரை மூன்று நாளாக இரவு பயன் படுத்துவதை சொன்னேன். Trika சிபாரிசு ஃபரூக் தான்.
டாக்டர் பதறிப் போனார். "ஃபரூக்குக்கு ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்ஸ், காம்ளிகேஷன்ஸ். அவர் சாப்பிடுகிற மாத்திரையை நீங்க எடுத்துக்கொள்ளக்கூடாது. நிறுத்தி விடுங்கள். நீங்கள் ஹெல்த்தியா இருக்கீங்க. ஃபுட் பாய்சன் தான் சிரமப்படுத்துது."
" ஃபீஸ் வேண்டாம் ராஜநாயஹம். நான் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் சாருக்கு ஃப்ரண்டு ராஜநாயஹம்"
மூன்று தடவை ட்ரீட்மெண்ட்டுக்கான ஃபீஸ் பெரிய தொகையாக அவர் மேஜை மீது வைத்து விட்டு விறு விறு நடையில் க்ளினிக் நீங்கினேன்.
லாட்ஜ் அறைக்கு க்ளினிக் மூடிய பின் கம்பௌண்டர் தேடி வந்து விட்டார்."டாக்டர் நீங்க கொடுத்த பணத்தை உங்களிடமே கொடுக்கச் சொன்னார். டாக்டர் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் ஃப்ரண்டு"
ஃபரூக் இரண்டு வருடங்களில் இறந்து விட்டார். செய்தியை அவருடைய க்ளாஸ் மேட் சண்முகசுந்தரம் போனில் சொன்ன போது மேட்டூர் டாக்டர் ஞாபகம் வந்தது.
அப்போது டைரக்டர் பாக்யராஜிடம் ராஜநாயஹம் இல்லை. சினிமாவிலேயே இல்லை.
டாக்டர் பெயர் இப்போது ஞாபகம் இல்லை.
சவ்வாஸ் ஃபரூக் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் ரெண்டு வருஷம் சீனியர்.
ராஜநாயஹத்திற்கு நவீன தமிழ் இலக்கியத்தை விரிவாக அறிமுகப்படுத்தியவர்.
ஃபரூக் ராசுக்குட்டி க்ளைமாக்ஸில் இன்ஸ்பெக்டராக நடித்தவர். தொழில் அதிபர்.
சண்முகசுந்தரம் சமீபத்தில் ராஜினாமா செய்த முன்னாள் அட்வகேட் ஜெனரல். முன்னாள் ராஜ்யசபா எம்.பி.
ராஜநாயஹத்திற்கு கஸின்.
.....
புகைப்படம்
கையை கட்டியவாறு ராஜநாயஹம்
ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டெண்ட் டைரக்டர்.