2016
அது ஞாயிற்றுக்கிழமை
அடையார் முத்தமிழ் பேரவை அரங்கத்தில் பரத நாட்டிய அரங்கேற்றம்.
ந.முத்துசாமி சாருடன் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் உள்ளே நுழைந்தார்.
அவர் முகம் கு.அழகிரிசாமியை நினைவுறுத்தியது. புகைப்படத்தில் பார்த்திருக்கிற அழகிரிசாமியின் முகம். அவருடைய ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’, ’சுயரூபம்’ போன்ற அற்புத கதைகளெல்லாம் வரிசை கட்டி நினைவுக்கு வந்தன.
பரத நாட்டியம் ஆடிய பெண்ணை மேடையேறி வாழ்த்த ந.முத்துசாமி விரும்பினார். சிரமத்துடன் மேடையில் ஏற்றி, நாட்டியமாடிய பெண்ணுக்கு நின்று கொண்டே பரிசு கொடுக்கும் போது அவருடைய பேண்ட் திடீரென எதிர் பாராமல் இடுப்பிலிருந்து கழன்று விழுந்து விட்டது.
பரத நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அழகிரிசாமி தோற்றம் கொண்டவர் வந்து முத்துசாமியை சேவித்தார். அவர் அழகிரிசாமியின் மகனே தான்! மூத்தமகன் ராமச்சந்திரன்.
ராமச்சந்திரனிடம் அவரைப் பார்த்தவுடன் எனக்கு கு.அழகிரிசாமி ஞாபகம் வந்ததைப் பற்றி சொன்னேன்.
கி.ரா பேசும்போது அழகிரிசாமி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார். 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இதை ராமச்சந்திரனிடம் நான் சொன்னபோது அவர் “அப்பா பற்றி இந்த செருப்பு விஷயம் எனக்கே இப்போது தான் தெரிய வருகிறது!”
எனக்கு சந்தோஷம் தான்.
என்னால் அழகிரிசாமி பற்றிய ஒரு சுவாரசியம் அவர் மகனுக்கு இவ்வளவு காலங்கழித்து இப்போது தெரிய வந்திருக்கிறது.
அழகிரிசாமி மகன் ராமச்சந்திரன் ஐ.ஒ.பி.யில் பணிபுரிந்தவராம்?
சமீபத்தில் மறைந்து விட்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.