Share

Jun 30, 2019

குஞ்சலி மாமி


திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன்முதலாக மகளிர் அணி அமைக்கப்பட்ட போது தி.மு.க நிறுவன தலைவரின் மனைவி ராணி அண்ணாத்துரை, பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையின் மனைவி ஆகியோருடன் ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் என்ற குஞ்சலி மாமியும் உறுப்பினர்.
திராவிட நாடு பத்திரிக்கையின் தீவிர வாசகராய் இருந்தவர் குஞ்சலி மாமி.
முத்துசாமியின் திராவிட கொள்கைப்பற்று எல்லோருக்கும் தெரிந்தது தான்.

முத்துசாமி சாரும், குஞ்சலி மாமியும் பள்ளி மாணவப்பருவத்திலேயே காதலர்கள்.
மாமி பிரமாதமான பாடகி. தேவாரப்பண் அற்புதமாக பாடுவார்.
பள்ளியிலேயே பாட்டுப்போட்டிகளில் பரிசு வாங்கியவர்.

ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.
பாரதி தாசன் புதுவையில் உள்ள தன்னுடைய பிராமண நண்பர் ஒருவரின் மகளை முத்துசாமிக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். 
முத்துசாமி சின்னவயதில் இருந்தே தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தப்பெண்ணை நான் பார்க்கவேண்டுமே என்று பாரதி தாசன் சொன்னாராம். பாரதி தாசன் தங்கியிருந்த வீட்டின் அருகே தான் அந்தப்பெண்ணின் வீடு. முத்துசாமி அந்தப்பெண்ணை அழைத்து வந்து காட்டியிருக்கிறார். கறுப்பு சேலையில் சிவப்பு பார்டர் போட்ட சேலையில் வந்தார் அந்தப்பெண்.
அந்தப்பெண் தான் குஞ்சலி என்ற அவயாம்பாள் மாமி.

முத்துசாமி திருமணத்தில் கலந்து கொண்ட ஒரே எழுத்தாளர் லா. ச. ராமாமிர்தம். 'இது என்ன கல்யாணம்?' என்று கேட்டாராம்.

மாநில அரசு அதிகாரியாக பணியாற்றிவர்.
திருமணத்திற்கு பின்னரும் வேலையில்லாமல் இருந்த ந.முத்துசாமிக்கு TAFEயில் வேலை வாங்கிக்கொடுத்தவரே மாமி தான்.
தன் சங்கீதம் பாடும் திறமையை குடும்பத்திற்காக தியாகம் செய்தவர்.
முத்துசாமியின் சிறுகதைகளுக்கும், நாடகங்களுக்கும் முதல் வாசகர் மாமி தான்.
கூத்துப்பட்டறை ஆரம்பித்த போது மாமி தான் ஸ்பான்ஸர்.
41 ஆண்டுகளாக மாமி தான் கூத்துப்பட்டறையில் கணவரின் செயல்பாடுகள் அனைத்திலும் பெரும்பங்கு ஆற்றியவர்.

தன் தந்தையுடன் தோளோடு தோள் நின்று கூத்துப்பட்டறையை வளர்த்தெடுத்த நடேஷின் பணிக்கு மாமியும் துணை நின்றவர்.

குஞ்சலி மாமியின் ஞாபக சக்தி கடைசி வரை மிகவும் அபாரம். அறுபது, எழுபது வருஷ சங்கதிகளை புள்ளி சுத்தமாக சொல்வார்.
அந்த காலத்தில் முத்துசாமியை பார்க்க அசோகமித்திரன் வரும்போதெல்லாம் தன் வீட்டிலிருந்து ஒரு மாங்காய் கொண்டு வருவார். அதனால் அவரைப்பற்றி அடையாளமிட “மாங்காய் பிராமணன்” என்றே சொல்வார்.
முதுமையின் பாதிப்பால் முத்துசாமி சாருக்கு ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்ட போது மாமி தான் அவரை ஒரு குழந்தையாகவே போஷித்தவர். அவருடைய மருத்துவம் மருந்து மாத்திரை எல்லா விபரமும் மாமிக்கு தான் தெரியும்.
ஒரு நாளில் முத்துசாமி குஞ்சலி, குஞ்சலி என்று கூப்பிட்டுக்கொண்டு தான் இருப்பார்.
”குஞ்சலி, ரசம் பிரமாதம்”


தள்ளாமையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மாமி சலிக்காமல் வீட்டு வேலைகளை சமையல் உட்பட தானே தான் கவனிப்பார்.
சின்ன சின்ன உதவி கூட யாரும் செய்ய விடமாட்டார்.
Workaholic.
அவருடைய உலகமே முத்துசாமி சாரும், பிள்ளைகள் நடேஷும் ரவியும் தான்.
மகன்களை ”கொழந்தே” என்றே இருவரும் பாசத்துடன் அழைப்பார்கள்.
நடேஷ் சாரை பார்க்க போனால் மாமி சொல்வார் “ கொழந்த இப்ப தான் சாப்பிட்டுண்டு படுத்தான். அவன் எழுந்தவுடன் நான் சொல்றேன்”
எல்லா முதிய தம்பதிகளைப் போல மாமியும் சாரும் குழந்தைகளாகவே மாறி விட்டார்கள். இருவருக்கும் செல்ல சண்டை எப்போதும் உண்டு. மறு நிமிடமே முகமலர்ந்து முத்துசாமி “ குஞ்சலி” என்று பரவசமாக கூப்பிடுவார்.
மாபெரும் கலைஞனான முத்துசாமிக்கு முதுமையில் வீட்டில் இருக்கும்போது வேறு வழியில்லாமல் பெரும்பாலும் டி.வியின் முன் உட்கார வேண்டிய நிர்ப்பந்தம் தான்.
குழந்தையாகவே மாறி விட்ட முத்துசாமி சீரியல்களை வேடிக்கை பார்ப்பார்.
மாமி டி.வி.சீரியல்கள் சம்பந்தமாக நிறைய விளக்கம் சொல்வார்.
சீரியல் கதாபாத்திரங்கள் பற்றி தினமும் விரிவாக சொல்வார்.
இரண்டு குழந்தைகள் பேசுவது போலவே இருக்கும்.
”இவ ரொம்ப கெட்டவ. இவளால தான் அவ்வளவு பிரச்னையும். நல்லவ தான்னு அவ நம்பிண்டு இருக்கா. பாவம்.”
”இவன் ஒரு அயோக்கியன். இவன இன்னும் போலீஸ் ஜெயில்ல போடாம இருக்காங்களே” இப்படி மாமி சலிக்கும்போது முத்துசாமி சார் அந்த கதா பாத்திரத்தை கெட்ட வார்த்தையால் உரக்க திட்டுவார்.
ஒரு நாள் நான் கூத்துப்பட்டறைக்குள் நுழைகிறேன்.
முத்துசாமி “ அய்யய்யோ” என்று கத்தினார். நான் பதற்றத்துடன் அவரை நெருங்கினேன். சீரியல் சோகம் என்று உடனே தெரிந்தது.
“குஞ்சலி, எதுக்கு குஞ்சலி இந்த அயோக்கிய பயலுக அந்த ரெண்டு பொண்ணுங்களயும் வேனுல வலுக்கட்டாயமா ஏத்துறானுங்க. அய்யய்யோ..“
சமையல் வேலை பாத்துக்கொண்டிருந்த மாமி ஹாலுக்கு வந்து டி.வியை பார்த்து விட்டு சாரிடம் சொன்னார்.” இப்படி நடக்கும்னு நேக்கு நேத்தே தெரியும். இவ பாவம் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிண்டு ஏமாந்து போறா. இவ மன்னி தான் இவ்வளவுக்கும் காரணம். நேருல பாக்கும்போது நல்லவ மாதிரி நடிப்பா. வழிச்சிண்டு சிரிப்பா. நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நுழப்பா. இப்ப என்னாச்சி பாத்தேளா.."

எங்க குஞ்சலி மாமி இப்ப முத்துசாமி சாரிடம் சென்று விட்டார்.

Jun 28, 2019

பேய்யி


ஒரு சின்னதான நகரம். பக்கத்திலேயே ஒரு ஐந்து கிலோ மீட்டரில் ஒரு கிராமம். ஒரே ஸ்ட்ரெய்ட் ரோடு. கிராமத்தில் உள்ள சினிமா தியேட்டரில் ‘கும் நாம்’ இந்திப்படம். கொஞ்சம் பழைய படம் தான் என்றாலும் இந்தி படத்திற்கு அப்போதெல்லாம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நல்ல ரசிகர்கள் அதிகம். அதிலும் திகிழ் படம்.
”டேய் இந்திப்படத்தில பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கும்டா.”
”கலர்ப்படம்னாலே இந்திப்படம் தான்டா ஜோரா இருக்கும், கலர்ல இந்திக்காரன அடிச்சிக்க முடியாதுடா. தமிழ்ல ’சாந்தி நிலையம்’, ’சங்கமம்’ ரெண்டு தான். ரெண்டும் ஜெமினி கணேசன் படம்.”
அந்த சின்ன நகரத்தில் இருந்து ஒரு இருபது பேர் சைக்கிள்ல டபுள்ஸ், சிங்கிள்ஸ்னு கிளம்பி அந்த கிராமத்திற்கு ‘கும் நாம்’ பார்க்க கிளம்பினார்கள். அப்பல்லாம் சைக்கிள் டபுள்ஸ் போனா போலீஸ் கேஸ். சமாளிச்சு பதுங்கி தான் போலீஸ கண்டா சட்டுனு இறங்கி கவனமா தான் ஓட்டனும்.
அதில சிங்கிள்ல போற குருசாமி ஒரு சோடா புட்டி கண்ணாடி. பயங்கர பவரான கண்ணாடி. அந்த கண்ணாடி வழியா குருசாமி கண்ண பாத்தாலே பாக்கறவன் கண்ணு கூசி கண்ணு கலங்கி தண்ணி வந்துடும். குருசாமிக்கும் கண்ணாடிய கழட்டிட்டா முன்னால நிக்கறவன் யாருன்னு அடையாளமே தெரியாது. இதனால அவன் கண்ணாடிய பின்னால நின்னு ஒர்த்தன் இவன் கவனிக்காம கழட்டுவான். முன்னால நிக்கறவன் ‘ நான் யாருன்னு சொல்லு பாப்போம்’ ன்னு குரல மாத்தி கேப்பான். குருசாமி “டேய் என் கண்ணாடிய குடுங்கடா”ன்னு தவிச்சி தக்காளி விப்பான்.
”கும் நாம் பாத்துட்டு நாமல்லாம் கும்முன்னு ஒன்னா வருவம்டா”ன்னு சொல்லிக்கிட்டு தான் சைக்கிள்ள ஏறினார்கள்.
செகண்ட் ஷோ விட ரெண்டு மணியாகிடுச்சி. ”ச்சே.. நியூஸ, விளம்பரத்த போட்டு கொல்றானுகடா. இண்டர்வல் முக்கா மணி நேரம். பன்னு, முறுக்கு, கடலமிட்டாய், டீ, காபி நல்லா விக்கனுமாம். கழுத்தறுக்கறானுங்க. படத்த மட்டும் போட்டு முடிப்பம்னு எந்த தியேட்டர்காரனும் நெனக்கமாட்டங்கறான்.”
தியேட்டர விட்டு வெளிய கொஞ்ச வந்ததும் தான் குருசாமிக்கு ஒன்னுக்கு போகனும்னு தெரிஞ்சுது. உள்ளூர்க்காரங்க சில பேரு ஒக்காந்ததும் தான் இவனுக்கும் டேங்க்க காலி பண்ணிக்குவம்னு தோனுச்சி. ஒன்னுக்கு போயிட்டு பாக்குறான். கூட வந்த இவன் ஊர்க்காரங்க எல்லாம் முன்ன போயிட்டாங்கே. சல்லுன்னு சைக்கிள அழுத்து பறந்திருக்காங்க.
இவன் அந்த நேர் ரோட்டில சைக்கிள மிதிச்சான். இப்படி இருட்டு நேரத்தில யாரும் தனியா இந்த ரோட்டில நடக்கவும் மாட்டாங்கெ. சைக்கிள்ளயும் போக மாட்டாங்கெ.
போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள். அப்பல்லாம் நெறய தற்கொல மரத்துல தொங்கறது தான்.
எந்தெந்த மரத்தில யார் யார் தொங்கினாங்கன்னு எல்லோரையும் போல குருசாமிக்கும் தான் தெரியும். பேயா, ஆவியா அலயறவங்க பேரெல்லாம் கூட தெரியும்.
பயத்தோட இவன் வேகவேகமா சைக்கிள அழுத்திக்கிட்டு முன்னால போறவங்கள பிடிக்கனும்னு பாத்தா முடியல.
திடீர்னு வலது பக்கம் ரொம்ப பக்கத்தில ஒரு வெள்ள உருவம்.

போன வருசம் மரத்தில தொங்குன பேச்சியம்மாளா?
இவன் எட்டாங்கிளாசு படிக்கும் போதே தொங்குன கன்னியம்மாளா?
கன்னியம்மாள கூட்டமா சேந்து சோலி பாத்து கொல பண்ணி மரத்துல தொங்க விட்டுட்டானுங்கன்னு ஒரு வசந்தி ..ச்சீ.. வதந்தி அப்ப இருந்துச்சி.
ரெண்டு வருச முன்ன இவன் தெருக்காரன் வீராச்சாமி இங்கன தான் தூக்கு போட்டுக்கிட்டான்.
அந்த வெள்ள உருவம் யாரு. இவன் கூடவே ரொம்ப ரொம்ப கிட்டக்க முன்னவே வந்துக்கிட்டிருக்கு.
கட்டிப்பிடிச்சிடுச்சின்னா.. Ghost hug! 
You can’t feel it, its there.
இவன் சைக்கிள எவ்வளவு வேகமா மிதிச்சாலும் வெள்ள உருவத்த முந்தவே முடியல.
வேர்த்து விறுவிறுத்து தன்னையே மனசில திட்டித்தீர்த்துக்கொண்டே சைக்கிள அழுத்தினான். ஊர் வந்தாச்சு. காலியா கிடந்த ஊருக்குள்ள வரும் போதும் அந்த வெள்ள உருவம் கிட்டக்கவே முன்னால.
வீட்டுக்கு உள்ள வந்து தன் சோடா புட்டி கண்ணாடிய கழட்டினான்.
வலது கண் கண்ணாடி லென்ஸ் ஃப்ரேம்மில் ஒரு சின்ன வெள்ள நூல் சிக்கியிருந்தது.
......................................

Jun 27, 2019

Smell the Rain





‘மழையின்
பெரிய புத்தகத்தை 
யார் பிரித்துப்படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.’
- தேவதச்சன்

பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு “Rain, rain go away, come again some other day” நர்சரி ரைம் சொல்லிக்கொடுப்பது இன்றைய சூழ்நிலையில் எத்தகைய அபத்தம். Who are we to say it shouldn’t rain?
Is there any life without rain?


நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக இருந்த போது வகுப்பில்
“Raindrops keep falling on my head” பாடுவேன். குழந்தைகள் எப்போதும் சந்தோஷமாக,உற்சாகமாக ஆடுவார்கள்.

திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி.
எட்டயபுரம் தலப்பா கட்டி கவிதை.
(“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 
- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’)


சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.
”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”

கறுத்து கூடிடும் மேகங்களை “ பின்னிய மேகச்சடை” என்பான்
’எட்டயபுரம் தலப்பா கட்டி’.
பின்னிய மேகச்சடை காணக்கிடைத்தும் மழையை காணோமே என்ற தவித்த நிலை நகரத்தில்.
’நெஞ்சில் பால் வார்ப்பது போல’ என்று சொல்வார்கள். அப்படி பெய்தது நேற்றைய சென்னை மழை.

சுகம்.






.

Jun 26, 2019

ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை “ மனஸுலோனி”


தி.ஜானகிராமனுடைய நாவல்கள் அனைத்துமே பிரமாதமானவை. முதல் நாவல் அமிர்தம் மட்டுமே தோல்வியடைந்ததென்று சொல்வேன். தொடராக எழுதப்பட்டதில் சற்றே, மிக சற்றே குறைப்பட்டதென்றால் ‘அன்பே ஆரமுதே’ நாவல்.
மோகமுள், மலர்மஞ்சம், செம்பருத்தி, உயிர்த்தேன், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம் ஆகியவை எல்லாமே மாஸ்டர் பீஸ். தி.ஜானகிராமன் எழுத்தின் விஷேசத்துவத்தை மிஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வரவேண்டும். அவர் எழுத்தின் உன்னத தரம் தனித்துவமானது.

என்னிடம் உள்ள அன்பே ஆரமுதே பிரதி 1965ல் மீனாக்ஷி புத்தக நிலையத்தால் பிரசுரிக்கப்பட்டது. அதை நான் மதுரையில் 1980ல் வாங்கினேன். எத்தனை பிரதிகள் அச்சிட்டார்களோ? கவனியுங்கள். பதினைந்து வருடங்கள் கழித்து நான் வாங்கியிருக்கிறேன்.
ரொம்ப வருடங்கள் கழித்து “அன்பே ஆரமுதே” நாவலை எடுத்தேன்.
இன்று அதை எடுத்தவுடன் அதன் உள்ளே 1994ல் வெளிவந்த தினமலர் கதை மலரில் இருந்து நான் கத்தரித்து எடுத்து பத்திரப்படுத்தியிருந்த ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை கண்ணில் பட்டது. சிலிர்ப்பு ஏற்பட்டது. 

அந்த கதை ’மனஸுலோனி’ தியாகப்ரும்மத்தையே கதாபாத்திரமாக கொண்ட திருவையாற்று உற்சவத்தை பின்புலமாக கொண்ட கதை. இந்த கதையை ஸ்வாமிநாத ஆத்ரேயன் 1944ல் எழுதியிருந்திருக்கிறார். தி.ஜா, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போலவே ஸ்வாமிநாத ஆத்ரேயனும் கூட கு.ப.ராஜகோபாலனின் சிஷ்ய பரம்பரை தான். தி.ஜாவின் நண்பர் ஆத்ரேயன்.
திருவையாறு ஐந்தாம் நாள் உற்சவம். ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் தியாகப்ரும்மத்தின் நவரச கானடா ராக கீர்த்தனையை பாடும் பெண்மணிகள் பாட பரதநாட்டியம் தொடர்கிறது. அந்த சின்னராகம் என்ன ரசமாக பிழியப்படுகிறது. பிழியப்பிழிய இனிப்பு அதிகமாகிறது. 
‘பலுகு கண்ட சக்கரனு நேருரே’
The sweetness of words spoken by Lord Rama would deride the sweetness of sugar candy. 
ஆடும் கணிகையானவள், கல்கண்டை ருசி பார்க்கும் சொகுசை முப்பது விதமாக அபிநயிக்கிறாள்! முப்பது விதமான அபிநயம்.
தியாகராஜஸ்வாமிகள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அனுபல்லவி தாண்டி சரணம் ’சுருல காமினி வருல கானமா?’
மங்கை வார்த்தெடுத்த விக்கிரகம் போல நின்றாள்.
அடுத்த அடி “ச்ருங்கார ரஸ புக்த வார வனிதுலார” மேலும் கீழும் விசிறி பாடப்படுகிறது.
’சுவர்க்கத்திலிருந்து குதித்த தேவ மாது மின்னலைப் போல மறைந்து மறைந்து தோன்றுவது போல ஒரு பிரமையை உண்டாக்கினாள். நடனத்தில் அவ்வளவு வேகம். ச்ருங்கார ரஸ என்ற சொல்லுக்கு அபிநயம். என்ன குலுக்கல்? என்ன மினுக்கல்? என்ன கண் வெட்டு? என்ன கழுத்து நெளிவு? உடல் வளைவு? நிமிர்வு?”
கண்டு கொண்டிருந்த மக்கள் அனைவரும் வெறி பிடித்தவர்கள் போல் ஆகி.. இளைஞர்கள் முகங்களெல்லாம் ரத்தம் பொங்கியது. மாதர்கள் முகமெல்லாம் வெளிரி தலை குனிந்து விட்டனர். திரும்ப திரும்ப பாடப்பட்டு, இப்படியெல்லாம் அபிநயம் வேணுமா?
தியாகப்ரும்மம் வீடு திரும்பிய பின் கனபாடிகளிடம்” ‘ச்ருங்கார ரஸயுக்த வார வனிதுவார’ என்று தானே பாவி பாடினேன். அதற்கு சரியாகத்தானே அவள் அபிநயம் பிடித்தாள். ராமன் தர்பாரில் கேவலச்ருங்கார ரஸமிகுந்த நாட்டியம் நடந்தது என்று சொல்ல நான் துணிந்தேனே. அப்படி ஒரு நாட்டியத்தை என் ராமன் ஆமோதித்து கல்கண்டு போல இனிக்கப் பேசினான் என்று சொல்ல என் நாக்கு கூசவில்லையே! என்ன அபசாரம்?”
தியாகராஜ சுவாமிகள் தன் ஹிந்தோளம் கீர்த்தனை பல்லவியை இயற்றுகிறார்.
”மனசுலோனி மர்முல தெலுசுகோ
மான ரக்ஷகா மரகதாங்க – நா
மனஸுலோனி”
"என் மனதிலுள்ள மர்மத்தை ராகவன் தான் அறிய வேண்டும். இப்படி ஒரு அபசாரத்தை நான் நினைக்கவில்லை. என் மானத்தை அவன் தான் காக்க வேணும்."

இந்த மனஸுலோனி ஹிந்தோள கீர்த்தனையை சுதாரகுநாதன் இப்போது பாடும் நேர்த்தி. பாடலின் புதிர்ப்பாதைகளில் சுதாவின் சஞ்சார அழகு. ( சுதாரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கும், மகளின் காதல் கணவர் மைக்கல் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். திருமண வரவேற்பில் சுதாவின் கணவர் ரகுநாதனுக்கு பிடித்த நாட்டக்குறிஞ்சியும் இடம் பெறட்டும்.)
தியாகப்ரும்மத்தின் நவரஸ கானடா ‘பலுகு கண்ட சக்கரனு நேருரே’ நெடுனேரி கிருஷ்ணமூர்த்தி பாடியது இன்று யூட்யூபில் கேட்க கிடைக்கிறது.







Jun 24, 2019

Pethidine Injection




இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் மிகுந்த பரவசத்துடன் “சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.
சந்திரபாபு பெத்தடின் இஞ்சக்ஸன் போதையில் மூழ்கியிருந்தவர்.
கவிஞர் கண்ணதாசனும் பெத்தடின் அடிக்ஸனில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்.
Addiction is a destructivie disease. Simply devastating.
சந்திரபாபு தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் ரயில்வே ஸ்டேசனில் ஏதோ தகராறில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார். He was a trouble maker.
கவனியுங்கள். அவருடைய சொந்த ஊரில். அவருடைய ஃபெர்ணான்டோ சமூகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் அதிகம். அப்படியிருந்தும் தாக்கப்பட்டார். சந்திரபாபு ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்று தெரிந்து தான் அவரை அடித்தார்கள். ’ஏன்டா நீ பெரிய நடிகன்னா என்னா வேண்ணாலும் செய்வியா?’ என்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். Disgrace.
முகமெல்லாம் வீங்கிப்போய். உதட்டில் கூட காயத்தோடு வந்த சந்திரபாபுவை சென்னையில் பார்த்து விட்டுத் தான், மிகவும் அதிர்ந்து போய் கண்ணதாசன் தன் பெத்தடின் போதைப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டார்.




Jun 23, 2019

Cut and dried monotony


அடையார் ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டில் ஒரு மாணவரின் ப்ராஜெக்ட் மூவியில் நடித்தேன்.
ஆதம்பாக்கத்தில் ஒரு பைலட் மூவியில் இரவு ஷூட்டிங் நடிக்க வேண்டியிருந்தது.
’ப்ரையன் உட்’காகவோ என்னவோ என்று சொல்லி கூத்துப்பட்டறையில் கூட ஷூட் செய்யப்பட்ட ஒரு குறும்படம்.
இன்னொரு குண்டிபென்டண்ட் மூவியோ இன்டிபென்டண்ட் மூவியோ?
எல்லாவற்றிலும் என் கதாபாத்திரத்திற்கு புத்ரசோகம். 
The same dramatic character. Cut and dried monotony.
மகனோ மகளோ தற்கொலையாம்.
Losing an young son or a daughter is the absolute worst thing that can happen to you, and that once it happens you can’t really ever recover.
கதையில் மனைவியாக ஒரு கிழவி. எப்போதும் பார்க்கில் அவளோடு ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் மீண்டும்  இளைய குள்ள இயக்குனரின் வற்புறுத்தல்.
பிள்ளையை பறி கொடுத்த முதிய தம்பதி எப்படி இருப்பார்கள்?
அதீத உற்சாகமாக ரொண்ட்டிக் மூட் காட்டிக்கொண்டு இழைவார்களா?
(புத்திர சோகத்திற்கு ஆளானவர்கள் தசரத சக்ரவர்த்தி, ராவணன், துரோணர், திருதராஷ்ட்ரன் என்று தகப்பனையே புராணங்கள் பேசுகின்றன என்பதை அறிவோம்.)
கேமரா ஆன் பண்ணாலே இன்ஸ்ட்ரக்சன் - ”ரொமான்ஸா ஏதாவது பண்ணிக்கிட்டே இருங்க”
நான் ‘ம்ஹூம்.. மாட்டேன் போ’ 

 பிள்ளையில்லாத வீட்டில் துள்ளி கிழவி விளையாட ரெடி தான்.
தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்துது.
விட்டா இடுப்புக்கு கீழ இருபத்தெட்டு சுத்து பின்னி படர்ந்திடும்.
எதற்கும் தயார். அந்தரத்திலே பறந்து பம்பரத்த போல் சுழன்று ஆடிக்காட்டவா? அதற்கும் தயாரான ஆடலரசி, அபிநய சுந்தரி.
எதிர் பார்த்த ரொமான்ஸ் என்னிடம் இருந்து தான் வரவில்லை என்று இயக்கத்தின் அதிருப்தி.

Ennui - A vital problem.சலிக்க வேண்டியதாகி விட்டது.
“நாய் தான் நடுத்தெருவுல நாலு பேர் பாக்கும்போதே அசிங்கம் பண்ணும்.என்ன ரொமான்ஸ்?You cannot teach your father how to fuck” 

Jun 21, 2019

அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா


எதிரிகள் ஜாக்கிரதை. 1967ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். இதில் ஒரு பாட்டு. லாலா லல்லலல்லா ஒரு நாள் இருந்தேன் தனியாக, ஒரு பெண் நடந்தாள் அருகே, சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக, சிவக்கும் ரோஜா மலரே என்று ஒரு பாடல்.
ஆர்.எஸ்.மனோகர், மணிமாலா, மாஸ்டர் பிரபாகர் இடம்பெற்ற பாடல். அந்த காலத்தில் ரொம்ப ஹிட் ஆன பாடல்.
இதில் மாஸ்டர் பிரபாகருக்கு வரிகள் – அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா.
இந்த குழந்தை குரல் பாடியவர் வசந்தா ராணி.
அந்த காலத்தில் குழந்தை பாடல்கள் பாடியவர் என்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரி தான்.
வசந்தா ராணி பாடிய அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா மறக்க முடியாத குரல்.
வசந்தாராணி ராமண்ணாவின் ”மூன்றெழுத்து” (1968) படத்தில் நடித்தார். நல்ல நகைச்சுவை நடிப்பையும் இவரிடம் காண முடிந்தது. நாகேஷை “டேய் கூத்தாடியத்தான்” என்று கலாட்டா செய்வார். அசட்டு பாத்திரம். அப்பாவாக ஓ.ஏ.கே தேவர் ஐயராக நடித்திருப்பார். ஐயர் பாஷை ஓ.ஏ.கே தேவர் பிரமாதமாக தன் கணீர் குரலில் பேசுவார். ’மதராஸ் டூ பாண்டிச்சேரி’(1966)யில் ஐயர் ஓட்டல் முதலாளியாக விசிறியால் விசிறிக்கொண்டே வருவார்.
மூன்றெழுத்தில் மாடிப்படியேறும் ஓ.ஏ.கே தேவரின் பின்னால் வசந்தா ராணி போய்க்கொண்டு “ மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ” பாடும்போது தேவர் நின்று திரும்பி ’உன்னை போய் பெத்தனே’ என அர்த்தப்படும் படி தன் வயிற்றில் இரண்டு அடி அடித்துக்கொள்வார். திரும்பி மீண்டும் அவர் படியில் நடக்கும்போது “ ஆக மெல்ல நட மெல்ல நட” பாடுவார் கிறுக்குப்பெண்.
வசந்தி, வசந்தா என்று அன்று அறியப்பட்டவர்
வசந்தா ராணி பின்னால் தற்கொலை செய்து கொண்டார்.

.
’அச்சச்சோ’ சித்ரா வசனம் பாலச்சந்தரின் அரங்கேற்றம் (1973).
“இந்த படம் நல்லாருக்காதுன்னு நான் தான் சொன்னேன். ஏன் நல்லால்லேன்னு பாத்துட்டு வந்துடுவோம்னு அம்மா தான் சொன்னா”

வசனம் பேசும் போது ’அச்சச்சோ, அச்சச்சோ சொல்லி பிரபலமான சித்ரா.

நான் அவனில்லை(1974)யிலும் வருவார் அச்சச்சோ சித்ரா.
இந்த நடிகையும் தற்கொலை செய்து இறந்தார்.

Jun 18, 2019

கெட்ட கெட்ட வார்த்தைகள்


முந்தாநாள் ஜுன் 16ம் தேதி கிருஷ்ணன் நம்பி நினைவு நாள்.
போன மாதம் நம்பியின் “தங்க ஒரு...” சிறுகதையை கூத்துப்பட்டறையில் வாசித்து விளக்கி பேசினேன்.
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை அப்போது கண் கூடாக கண்டேன்.
சென்னையில் வாடகை வீட்டு பிரச்னையின் மீதான அங்கதம் இந்த மாய யதார்த்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
நகுலன் இந்த கதை பற்றி “ ’ தங்க ஒரு...’ இடம் கிடைக்கவில்லை என்பதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது ஸ்விஃப்ட் எழுதிய கலிவரின் யாத்திரையைப் பின்பற்றுகிறது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையை விட சிறப்பாக வந்திருக்கிறது “ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பியின்’விளையாட்டுத் தோழர்கள்’ கதை பற்றி அவருடைய தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம் ஒரு விஷயம் சொன்னார்.
குட்டிப்பையன் சங்கா பள்ளிக்கூட விடுமுறை நாளில் விளையாட தவிப்பான். விளையாண்டு கொண்டிருக்கும் தோழர்களிடம் “ நானும் வடேன்டா” என்று கெஞ்சுவான். 

கிருஷ்ணன் நம்பி இதற்கு ஒரு சிறுவன் சொல்லும் பதிலாக “ போலே தாயோளி, நீ ஒன்னும் வாண்டாம் ” என்று எழுதியிருந்திருக்கிறார். பத்திரிக்கையாசிரியர் ‘போலே தாயோளி’ என்பதை நீக்கி வெளியிட்டாராம். விஜய பாஸ்கரன் ஆசிரியராய் இருந்த ’சரஸ்வதி’ யில் 1961ல் வந்த கதை ’விளையாட்டுத்தோழர்கள்’.
சுந்தர ராமசாமியிடம் “ உங்க கதையில் வர்ற ’முலை’ய மட்டும் வெட்டிடறேனே “ என்று ட்ரங்க் கால் போட்டு சத்தமாக கூப்பாடு போட்டு பேசியவர் விஜய பாஸ்கரனாய் தான் இருக்குமோ? சு.ராவின் கதைகள் சரஸ்வதியில் பிரசுரமாகியிருக்கிறது. அவருடைய நாவல் “ புளிய மரத்தின் கதை” யின் ஆரம்ப அத்தியாயங்கள் கூட ‘சரஸ்வதி’யில் வந்தது.
இப்போது கூட கெட்ட வார்த்தை எழுத்தில் வரக்கூடாது என்கிற கூச்சம் நிறைய பேருக்கு இருக்கிறது.
என்னை முப்பது வருடங்களுக்கு பின் தேடி கண்டு பிடித்த என் காதலியொருவர் என் எழுத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். கெட்ட வார்த்தைகள் எழுதுவதை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

https://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_27.html






Jun 17, 2019

நகைச்சுவை மகா கலைஞர்கள்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது ஜெயகாந்தனுக்கு மிகுந்த பிரமிப்பு இருந்திருக்கிறது. ’நல்ல தம்பி’ படம் பார்த்து விட்டு ஒரு ரசிகனாக பாராட்டு கடிதம் கூட எழுதியிருந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவரை சந்திக்க வருவதாக அதில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தோழர் ஜீவாவுடன் என்.எஸ்.கேயை சந்தித்தவர் தான் ஜெயகாந்தன். அதனால் தி.நகர் வெங்கட்ராமய்யர் தெருவில் இருந்த நட்சத்திர நடிகரின் இல்லத்துக்கு போயிருந்திருக்கிறார். அவருக்கு மிகவும் அதிர்ச்சி.

“நடிகர்கள், கலைஞர்கள் ஆகிய இந்தப் பிரபலங்கள் பிறருக்குச் சொல்லுகிற நெறிகளுக்கும் உபதேசங்களுக்கும், தாங்கள் அமைத்துக்கொண்டிருக்கிற சொந்த வாழ்க்கைக்கும் இடையே எவ்வளவு பெரிய இழிந்த இருண்ட பாதாளம் போன்ற இடைவெளியையும் அன்று கண்டேன். அங்கே நான் கண்ட காட்சியை என்னவென்று இங்கு விவரிக்கப்போவதில்லை” என்று ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் சொல்கிறார் ஜெயகாந்தன்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த போது “என்.எஸ்.கே இன்று உயிரோடு இருந்தால் அவரல்லவோ முதலமைச்சர்” என்று பூரிப்புடன் பெருமைப்பட்டார்.

சந்திரபாபுவின் திறமைகளைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவருடைய ஸ்டைல், டான்ஸ், பாடல்கள் evergreen.
நகைச்சுவை நடிகர்களில் பாபு ஒரு peculiar phenomenon.

சந்திரபாபு தன்னை என்ன பாடு படுத்தினார் என்பதை கண்ணதாசனின் ‘மனவாசம்’ விரிவாக கூறுகிறது. சந்திரபாபுவை வைத்து ’கவலையில்லாத மனிதன்’ படம் எடுத்ததற்கு உலகத்தில் உள்ள அவ்வளவு கவலைகளையும் தான் அனுபவித்ததாக கவிஞர் எழுதியிருந்தார்.
சந்திரபாபு தான் என் குருநாதர் ந.முத்துசாமிக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை கலைஞர். அவரிடம் இருந்த தனித்துவத்தை மிகவும் முத்துசாமி சிலாகிப்பார்.

நாகேஷின் ஈடு இணையில்லாத சாதனை.
ஸ்ரீவித்யா முதல் முதலாக ராமண்ணாவின் ’மூன்றெழுத்து’ படத்தில் நடிக்க ஸ்டுடியோவிற்குள் நுழைந்த அன்று நாகேஷ் குடித்து விட்டு செய்த கலாட்டாவைப் பார்த்து மிரண்டு ச்சீ என்று அருவருத்து வெறுக்க நேர்ந்ததாக சொல்லியிருக்கிறார்.
1971ல் அவரை பெரிய இயக்குனர்கள் கைவிட்டார்கள்.
ஸ்ரீதர் அவரை ஓஹோ ப்ரொடக்ஸன்ஸ் செல்லப்பாவாக்கியவர். 1971ல் ’அவளுக்கென்று ஓர் மனம்’ நாகேஷிற்கு இடம் கொடுக்கவில்லை.
’பணமா பாசமா’வில் நாகேஷை தூக்கிப்பிடித்த கே.எஸ்.ஜி. 1971ல் ‘மாலதி’ யில் இடம் தரவில்லை.
திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி என்று என்று அழகு பார்த்த ஏ.பி.என் 1971ல் சுருளிராஜனை வைத்து “கண்காட்சி’’ எடுத்தார்.
எம்.ஜி.ஆரே ரொம்ப முன்னரே நாகேஷை ஒதுக்கி வைத்திருந்தார். தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன் படங்களெல்லாம் நாகேஷ் இல்லாமல் தான். 1971ல் குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும். எதிலும் நாகேஷ் கிடையாது.
நாகேஷ் இயக்குனர் பாலச்சந்தரையே என்ன பாடு படுத்தினார். 1972ல் ’கண்ணா நலமா’வில் நாகேஷ் கிடையாது. எம்.ஆர்.ஆர். வாசு தான். ’வெள்ளி விழா’வில் தேங்காய் சீனிவாசனை நடிக்க அழைத்தார்.
நாகேஷின் கால பிரமாணம் எத்தகைய ஆச்சரியகரமானது. அவருடைய மின்னல் வேகம்.
இன்றும் தமிழ் திரையின் நகைச்சுவைக்கு ஒட்டு மொத்த சாதனை என்றால் நாகேஷ், கவுண்டமணி, வடிவேல் மூவரும் தானே.
எப்பவும் காண்ட்டுலேயே இருக்கும் கவுண்டமணி கலக்கல்.
எத்தனை தடவை நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலும் சலிப்பதேயில்லை.
ஒரு ப்ரொடக்ஸன் அஸிஸ்டண்ட் அரண்டு சொன்ன விஷயம். “அய்யோ கவுண்டமணி தண்ணி போட்டுட்டா மிருகம். உயிர எடுத்துடுவான். கை நீட்டிடுவான். அடிச்சிடுவான்”

ஆர்.சுந்தர் ராஜனுக்கும் கவுண்டமணிக்கும் நிகழ்ந்த மோதல்.


வடிவேலு பற்றி இன்றைய காலத்தில் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அளப்பரிய சாதனை. பிரமிக்கத்தக்க நடிப்பு.
அனைவர் வாழ்விலும் ஒன்றி விட்ட கலைஞன்.
எல்லாருக்கும் vocabulary எவ்வளவு supply செய்து விட்டார் வடிவேலு.
எவ்வளவு சாதாரண படத்திலும் அவருடைய விஸ்வரூபம்.
மார்க்கெட் போய் விட்டதாம். தினமும் வடிவேலு தானே சஞ்சாரம்.
கதாநாயகர்கள் உட்பட இன்று வரை வந்துள்ள மிகப்பெரிய நடிகர்கள் அனைவரையும் நடிப்பில் மிஞ்சிய வடிவேலுவின் ஈடு இணையற்ற ஃபார்ம்.
எம்.ஆர்.ராதா ஒருவர் தான் இன்றும் வடிவேலுவுக்கு சவாலான அமரத்துவ கலைஞர்.

வடிவேலு பற்றி தான் எவ்வளவு பரபரப்பு.
நம்பிராஜன் என்ற சின்னாளப்பட்டிக்கார நடிகர், ஜெயமணி ஆகியோருடன் கைகலப்பு.
சிங்கமுத்து ரியல் எஸ்டேட் வில்லங்கம்.
விஜயகாந்த் வீட்டு இழவு ஒன்றில் காரை எடுக்கச்சொல்லி கலவரம். அடி கூட வடிவேலுக்கு விழுந்ததாமே.
வாழ்வு கொடுத்த ராஜ்கிரணிடம் நன்றி காட்டவில்லை.
ஜி.வி. தற்கொலை செய்து கொண்ட போது அவரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை வடிவேலு பாவப்பட்ட ஜி.வி குடும்பத்திற்கு கொடுக்க மறுத்தது.
தயாரிப்பாளர் ஒருவரிடம் விமானத்தில் போய் வர எட்டு மணி நேரம் ஆனதற்கும் ஒரு கால்ஷீட் கணக்காக்கி ரெட்டை இலக்க இலட்சத்தில் வடிவேலு சம்பளம் கேட்ட விவகாரம்.







...