Share

Jun 18, 2019

கெட்ட கெட்ட வார்த்தைகள்


முந்தாநாள் ஜுன் 16ம் தேதி கிருஷ்ணன் நம்பி நினைவு நாள்.
போன மாதம் நம்பியின் “தங்க ஒரு...” சிறுகதையை கூத்துப்பட்டறையில் வாசித்து விளக்கி பேசினேன்.
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை அப்போது கண் கூடாக கண்டேன்.
சென்னையில் வாடகை வீட்டு பிரச்னையின் மீதான அங்கதம் இந்த மாய யதார்த்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
நகுலன் இந்த கதை பற்றி “ ’ தங்க ஒரு...’ இடம் கிடைக்கவில்லை என்பதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது ஸ்விஃப்ட் எழுதிய கலிவரின் யாத்திரையைப் பின்பற்றுகிறது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையை விட சிறப்பாக வந்திருக்கிறது “ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பியின்’விளையாட்டுத் தோழர்கள்’ கதை பற்றி அவருடைய தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம் ஒரு விஷயம் சொன்னார்.
குட்டிப்பையன் சங்கா பள்ளிக்கூட விடுமுறை நாளில் விளையாட தவிப்பான். விளையாண்டு கொண்டிருக்கும் தோழர்களிடம் “ நானும் வடேன்டா” என்று கெஞ்சுவான். 

கிருஷ்ணன் நம்பி இதற்கு ஒரு சிறுவன் சொல்லும் பதிலாக “ போலே தாயோளி, நீ ஒன்னும் வாண்டாம் ” என்று எழுதியிருந்திருக்கிறார். பத்திரிக்கையாசிரியர் ‘போலே தாயோளி’ என்பதை நீக்கி வெளியிட்டாராம். விஜய பாஸ்கரன் ஆசிரியராய் இருந்த ’சரஸ்வதி’ யில் 1961ல் வந்த கதை ’விளையாட்டுத்தோழர்கள்’.
சுந்தர ராமசாமியிடம் “ உங்க கதையில் வர்ற ’முலை’ய மட்டும் வெட்டிடறேனே “ என்று ட்ரங்க் கால் போட்டு சத்தமாக கூப்பாடு போட்டு பேசியவர் விஜய பாஸ்கரனாய் தான் இருக்குமோ? சு.ராவின் கதைகள் சரஸ்வதியில் பிரசுரமாகியிருக்கிறது. அவருடைய நாவல் “ புளிய மரத்தின் கதை” யின் ஆரம்ப அத்தியாயங்கள் கூட ‘சரஸ்வதி’யில் வந்தது.
இப்போது கூட கெட்ட வார்த்தை எழுத்தில் வரக்கூடாது என்கிற கூச்சம் நிறைய பேருக்கு இருக்கிறது.
என்னை முப்பது வருடங்களுக்கு பின் தேடி கண்டு பிடித்த என் காதலியொருவர் என் எழுத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். கெட்ட வார்த்தைகள் எழுதுவதை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

https://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_27.html






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.