Share

Jun 7, 2019

Continually changing


க்ளோரியா ஸ்டீனெம். அம்மணி அமெரிக்க நியூயார்க் பத்திரிக்கையின் காளம்னிஸ்ட். பெண்ணியவாதி. நிறவெறிக்கு எதிரானவர். ’முதலில் கறுப்பர்களுக்கு அதிகாரம். அப்புறம் தான் பெண் விடுதலை’ என்று முழங்கிய பெண்.

’கல்யாணமெல்லாம் அடிமைத்தனம்’ என்றவர்.
வாழ்க்கை விசித்திரம். தன் அறுபத்தாறு வயதில் அப்போது அறுபது வயதான டேவிட் பேல் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.
வாழ்வில் ஒரே ஒரு திருமணம்.
“நான் ஒன்னும் மாறலை.
Marriage changed. முப்பது வருஷமா திருமண சட்டங்களில் மாற்றங்களுக்காக நான் பாடு பட்டிருக்கிறேன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய வயதில் நான் திருமணம் செய்து கொண்டிருந்தால் அம்பேல். அவ்வளவு தான். நாசமாப்போயிருப்பேன்.”

டேவிட் பேலுக்கு இது மூன்றாவது திருமணம். மூன்றாவது திருமண வாழ்வு மூன்றே வருடம் தான் வாய்த்தது. செத்துப்போய் விட்டார்.
டேவிட் பேல் உடனான திருமணம் க்ளோரியா ஸ்டீனெம் வாழ்க்கையில் இன்னொரு அடையாளத்தை நிர்ப்பந்தமாக தந்தது. கிறிஸ்டியன் பேல் இவருக்கு step son.

கிறிஸ்டோபர் நோலன் படங்களின் நாயகன் கிறிஸ்டியன் பேல். Batman. அந்த பிரமாதமான Prestige.
இவருடைய அப்பா தான் க்ளோரியாவுடன் மூன்று வருடங்கள் வாழ்ந்து மறைந்த டேவிட் பேல். டேவிட் பேலின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல். ’அடேய் தகப்பா, டேய் டேவிட் பேல்’
இப்போது எண்பத்தைந்து வயதிலும் சமூக ஆர்வலராக களப்பணி செய்ய அமெரிக்காவிலிருந்து வெளிநாட்டுக்கெல்லாம் பறந்து கொண்டிருக்கிறார் க்ளோரியா ஸ்டீனெம்.
கல்யாணம் எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நிச்சயம் ஆகியிருந்த சமயம். நான்கு மாதங்களுக்கு முன்னரே நிச்சய தாம்பூலம். நவம்பரில் கல்யாணம்.
ஆகஸ்ட் மாதம். மதுரையிலிருந்து ஃபரூக்குடன் குற்றாலம் போய்க்கொண்டிருந்தேன். கோவில்பட்டியில் அவருக்கு பிசினஸ் கலெக்சன். பஜாரில் அவர் ஒரு கடைக்கு முன் காரை நிறுத்தி விட்டு கடைக்குள் நுழைந்தார். நான் பஜாரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
 கோவில் பட்டி தானே கோணங்கியின் ஊர் என்று எண்ணம் எழுந்த அதே நேரம் கண்ணில் அவன் தட்டுப்பட்டான். Think of the devil.

பார்த்து விட்டான். “யோவ், என்னய்யா”
விஷயத்தை சிம்ப்பிளாக சொன்னேன்.
அப்போது கோவில்பட்டி கோ ஆப்பரேட்டிவ் சொஸைட்டியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
“பிடிக்கவில்லை. ஆனால் சூழ்நிலை நிர்ப்பந்தம்.” தன் பிரத்யேக உடல்மொழியுடன் சொன்னான்.”சீக்கிரம் வெளியே வந்திடுவேன்”
இன்று எண்ணிப்பார்க்கும்போது, அனேகமாக அவன் பார்த்த ஒரே வேலை அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
சிறு பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தான்.
அவனுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘மதினிமார்கள் கதை’ கூட அப்போது வெளியாகியிருக்கவில்லை. ’கல்குதிரை’யெல்லாம் ரொம்ப பின்னால் தான் ஆரம்பித்தான்.
எனக்கு திருமணமாகப்போகிற விஷயத்தை சொன்னேன். புதிய தொழில் (திருமணத்திற்கு முன்னரே நான் பிராந்தி கடையில் மனைவியின் தந்தையுடன் பங்கு தாரர்.) குறித்தும் சொன்னேன்.
கோணங்கியின் பிரியாவிடை பதில் “கல்யாணமாயிட்டா குடும்ப அமைப்புல நீ மூழ்கிடுவ. பிசினஸ் பிரச்னைகள் உன்னை மழுங்கச்செய்து விடும். இனி நீ இலக்கியத்திற்கு அன்னியமாகிடுவ. அவ்வளவு தான்.”
I have yet to hear a man asking for advice on how to combine marriage and carrier.
- Gloria Steinem
திருமண நிகழ்வு மகத்தான விஷயங்கள் அடங்கிய சிறப்பான புத்தகம். என் திருமண வாழ்வு பெரும் வெற்றி. ஒக்க பத்னி.
தொழில் அனுபவங்கள் நூறு நூல்கள் வாசித்த அனுபவம்.
சவால்களும் சிக்கல்களும் புடைத்து பெருத்த சூழலிலும் இலக்கிய வாழ்வும் வாசிப்பு, எழுத்து, தேடல், சங்கீத ரசனை, நடிப்பு, பாட்டு என்று என்னில் கலைகளாக, மாற்றங்களுடன் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

https://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post.htmlNo comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.